1. பேருந்து, ரயில், போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவோம்.

2. ஓரிரு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வோம்.

3. தனி நபர்களுக்கான வாகனப் பயன்பாட்டை, பைக், கார், ஆகியவற்றின் பயன்பாட்டை முடிந்தளவு குறைத்துக் கொள்வோம். அவற்றைப் பயன்படுத்தும் போது திறன்மிக்க வேகத்தில் ஓட்டுவோம் (economy speed). வாகனங்களை சரியாகப் பராமரித்து எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிப்போம்.

4. மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிகரிப்போம். புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைப்போம். இயன்றால் மின்வாகனங்களை பயன்படுத்துவோம்.

5. விமான டர்பைன் எரிபொருள் பயன்பாடு பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு அதிகரிப்பதால், விமான போக்குவரத்தைக் குறைத்துக் கொள்வோம்.

6. மின் விசிறிகள், அறைக்குளிரூட்டிகள், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அணைத்து வைப்போம். மின்சாதனங்களின் பொத்தான்களை அணைப்பதுடன் மின் செருகிகளையும் (plug) கழட்டி வைப்போம்.

7. யாரும் பார்க்காதபோது தொலைக்காட்சியை ஓட விடுவதையும், கணினிகளில் காணொளிகளை ஓட விடுவதையும் தவிர்ப்போம்.

8. கணினி பயன்பாட்டில் இல்லாதபோது அணைத்து வைப்போம். கணினியை சிறிது நேரமே பயன்படுத்தாமல் இருக்க நேரும்போது திரைக்காப்பை (screen saver) தேர்ந்தெடுக்காது, தூக்கப் பயன்பாட்டு முறையில் (Sleeping mode) வைப்போம்.

9. கணினி, கைபேசிகளின் திரையில் அதிக வெளிச்சத்தில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, கண்ணை உறுத்தாத குறைந்த வெளிச்சத்தில் சிக்கன பயன்பாட்டு முறையில் (Power saving mode) பயன்படுத்துவோம்.

10. மேசைக் கணினிகளை (desktop) விட மடிக்கணினிகள் (laptop) குறைந்த ஆற்றலையே பயன்படுத்துவதால் மேசைக் கணினிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வோம்.

11. கைபேசி, கணினி போன்ற மின்சாதனப் பொருட்களை அடிக்கடி மாற்றாமல் நீடித்தப் பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம்.

12. குறைந்த அளவிற்கு மின்காந்தக் கதிர்வீச்சின் தாக்கம் ஏற்படுத்தும் கைபேசிகளையும், பிற சாதனங்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம். 1.6 வாட்/கிகி அல்லது அதைவிட குறைந்த குறிப்பிட்ட உட்கிரகித்தல் வீதம் (SAR) கொண்ட கைபேசிகள், சாதனங்களையே வாங்குவோம்.

13. அதிக வாட்டேஜ் இல்லாத ஆற்றல் திறமிக்க (energy efficient) விளக்குகளை, ஒளி உமிழும் டையோடு (LED) விளக்குகளைப் பயன்படுத்துவோம்.

14. பகல் நேரங்களில் மின்விளக்குகளின் பயன்பாட்டை முடிந்த அளவிற்குத் தவிர்ப்போம்.

15. இரவில் 10-11 மணிக்குள் அனைத்து விளக்குகளையும் அணைத்து சீக்கிரமே உறங்குவதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

16. காகிதங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்வோம். காகிதங்களைப் பயன்படுத்தும் போது, எழுதுவதற்கும் சரி, அச்சிடுவதற்கும் சரி காகிதங்களின் இருபக்கத்தையுமே பயன்படுத்துவோம்.

17. காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்க மின் ரசீதுகள், மின் கட்டண முறைகளைப் பயன்படுத்துவோம். மின்புத்தகங்களின் பயன்பாட்டை அதிகரிப்போம்.

18. மறுசுழற்சி செய்த காகிதங்களையும், காகிதப் பைகளையும் பயன்படுத்துவோம். அவற்றை மறுபயன்பாட்டிற்கும் உட்படுத்துவோம்.

19. துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், புத்தகங்கள் என அனைத்திலுமே மறுபயன்பாட்டை அதிகப்படுத்துவோம். மீள்பயன்பாட்டுக் கடைகளில் வாங்குவதை வாடிக்கையாக்கிக் கொள்வோம்.

20. மறு சுழற்சி செய்த பொருட்களின் பயன்பாட்டையும் அதிகப்படுத்துவோம்.

21. அருகிலே சந்தைப்படுத்தப்படும் பொருள்களை வாங்குவோம், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைப்போம்.

22. கடைகளில் பொருட்களை வாங்கும் போது நெகிழிப் பைகளைத் அறவே தவிர்ப்போம்.முடிந்த அளவிற்குக் காகிதத்தில் கட்டித் தருமாறு கேட்போம். 

23. நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எப்பொழுதுமே கைகளில் துணிப்பைகள், சணல் பைகளை கொண்டு செல்வோம்.

24. பொருட்களை 5 கிலோ, 10 கிலோ என மொத்தமாக வாங்குவதன் மூலம் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்போம்.

25. பொருட்கள் வாங்கும் போது இருமுறை, மும்முறை (double pack, triple pack, tetra pack) என அதீதமாக பொட்டலமிடப்பட்டிருக்கும் பொருட்களை வாங்குவதை முடிந்த அளவிற்குத் தவிர்ப்போம்.

26. எண்ணெய் வாங்கச் செல்லும்போது வீட்டிலிருந்தே உலோகத் தூக்குவாளி, புட்டி, குடுவைகளைக் கொண்டு செல்வோம்.

27. கடைகளில் தேனீர், காப்பி, பழச்சாறு ஆகிய திரவ உணவுப் பொருட்களை நெகிழிப்பைகளில் வாங்குவதை தவிர்த்து உலோகத் தூக்கிவாளி, வெப்பக் குடுவையை (flask) பயன்படுத்துவோம்.

28. உணவு விடுதிகளில் நெகிழித்தாள்களுக்கு பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்த அறிவுறுத்துவோம்.

29. நெகிழிப்புட்டிகளை (plastic bottles) தவிர்த்து தண்ணீர் குடிப்பதற்கு உலோகப் புட்டி, குடுவைகளைப் பயன்படுத்துவோம்.

30. வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து உரிய முறையில் மறுசுழற்சி செய்ய துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைப்போம். வீட்டில் முடிந்த அளவு மக்கும் குப்பையை உரமாக்கி பயன்படுத்துவதை வழக்கமாக்குவோம்.

31. உடனுக்குடன் பயன்படுத்தித் தூக்கியெறியும் (use and throw) பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து நீடித்தப் பயன்பாடுள்ள (durable) பொருட்களை அதிகம் பயன்படுத்துவோம்.

32. சந்தையில் புதிது, புதிதாக அறிமுகமாகும் பொருட்களை உடனுக்குடன் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையிலிருந்தும், நுகர்வுக் கலாச்சார போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

33. அறை புத்துணர்ச்சியூட்டிகள் (room freshners), துர்நாற்றம் அகற்றிகள் (deodorant), தெளிப்பான்கள் (spray) ஆகியவை அதிகம் பயன்படுத்துவது காற்றின் தரத்தைக் குறைத்து ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவிற்குத் தவிர்ப்போம்.

34. புகைபோக்கி, புகை நீக்கிகளின் மூலம் சமையலறையை காற்றோட்டமாக வைத்துக் கொள்வோம். விறகடுப்புகளின் பயன்பாட்டை முடிந்த அளவிற்குத் தவிர்ப்போம்.

35. உணவுப் பொருட்களை அதிகமாக சமைத்து வீணாக்குவதைத் தவிர்ப்போம்.

36. வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள சோம்பு, வெந்தயம், கடுகு, மல்லி ஆகியவற்றிலிருந்து கூட செடிகளை வளர்க்க முடியும் என்பதால், சிறிய அளவிலாவது நமக்குத் தேவையான செடிகளை வீட்டிலே வளர்த்துப் பயன்படுத்துவோம்.

37. கனிம உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைத் தவிர்த்து உயிரி உரங்களையும், பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்துவோம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம். இயற்கை விவசய விளைபொருட்களை வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

38. வீட்டை விட்டு அதிக நாட்கள் வெளியே இருக்கும் நிலை ஏற்படும் போது குளியலறையில் உள்ள நீரைச் சூடேற்றும் சாதனத்தை (heater) விடுமுறை பயன்முறையில் (vacation mode) வைப்போம்.

39. குளிக்கும் போது தூவாலைக் குழாயை (shower) பயன்படுத்தி நீர் பயன்பாட்டைக் குறைப்போம்.

40. மின் மோட்டார்கள் மூலமாகத் தான் நீர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நீர் பயன்பாடு அதிகரிக்கும் போது நீர் விரயமாவதுடன், மின்சாரம் விரயமாகவும் காரணமாகிறது. ஆகையால் நீர் பயன்பாட்டைக் குறைத்து சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

41. நீர்க் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்வோம்.

42. துணி துவைக்கும் சாதனத்தைப் பயன்படுத்தும் போது ஓரிரு துணிகளுக்காக ஓடவிடாது, அதிகபட்சமாக எவ்வளவு துணிகளைப் போட அறிவுறுத்தப்பட்டுள்ளதோ அதன்படி திறனுள்ள முறையில் பயன்படுத்தி ஆற்றல் விரயத்தைத் தடுப்போம். உலர்த்தியை (dryer) பயன்படுத்துவதற்குப் பதில் துணிகளைக் கொடிகளில் காயப் போடுவோம்.

43. குழந்தைகளுக்கு நெகிழிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கச்சுகளை (diaper) அறவே தவிர்த்து துணியிலான அரைக்கச்சுகளை பயன்படுத்துவோம்.

44. பெண்கள் நெகிழிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கச்சுகளை (sanitary napkins) அறவே தவிர்த்து துணியிலான அரைக்கச்சுகளை பயன்படுத்துவோம்.

45. சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்துவோம். சூரிய அடுப்பு, சூரிய மின்தகடுகளை (Solar panels) பயன்படுத்துவோம்.

46. செடி, கொடி மரங்களை வளர்த்து காற்றின் தரத்தை மேம்படுத்தி சூழலை குளிர்விப்போம்.பறவைகளை வரவேற்போம். செடி, கொடி, மரம், பறவைகளை நண்பர்களாக்கி நம் நட்பு வட்டத்தையும் விரிவுபடுத்துவோம்.

47. புவி நேயர்களாய், சூழலுக்குகந்த இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவோம்.

- சமந்தா

Pin It