அடித்தட்டு மக்களை வஞ்சிக்கும் மற்றொரு சூழல் அநீதி

மத்தியில் காங்கிரஸ் அரசு அதிக எண்ணிக்கையிலான எம்.பிகளுடன் அரசை அமைத்தாலும் அமைத்தது, அதற்குப் பிறகு பாகிஸ்தான் கூட்டறிக்கை பேச்சுவார்த்தையில் பணிந்துவிட்டது, அமெரிக்காவின் காலடியில் விழுந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகின்றன. இதே வரிசையில் சற்று அதிகம் கவனிக்கப்படாத மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அது இத்தாலியில் கடந்த மாதம் ஜி 8 நாடுகளின் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நடைபெற்ற, காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையில் "பெரும் பொருளாதார அமைப்பு" எனப்படும் மேஜர் எகனாமிஸ் ஃபாரம் தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டது தவறு என்பதே அது. 

இதை அடுத்து, காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையில் வளர்ந்த நாடுகளின் நெருக்கடிக்கு இந்தியா பணிந்துவிட்டது, இனிமேல் வளர்ச்சியை காவு கொடுத்துவிட்டு, கார்பன் வெளியீட்டை குறைப்பது எப்படி இந்தியா மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. உண்மையில் இந்தியா அடிபணிந்ததா, எதிர்த்து வென்றுள்ளதா என்பது குறித்து சற்று குழப்பம் தோன்றலாம். 

பெரும் பொருளாதார அமைப்பு நாடுகளின் தீர்மானப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை, அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதுதான். முதலாவது இந்தத் தீர்மானம் "கியோட்டோ உடன்படிக்கை"யைப் போன்று கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒன்றல்ல (அது என்ன லட்சணத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது தனிக்கதை). எனவே, பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழந்துவிடவில்லை, யாருக்கும் அடிபணியவும் இல்லை. 

1997 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்ற உடன்பாடான "கியோட்டோ உடன்படிக்கை" கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது. அதன்படி வரலாற்று ரீதியிலும், தற்போதும் அதிகமான கார்பனை வெளியிட்டு வரும் வளர்ந்த நாடுகள், குறிப்பிடத்தக்க அளவு கார்பன் வெளியீட்டைக் குறைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் 2012 ஆம் ஆண்டுடன் காலாவதி ஆகிறது. அதற்குப் பிந்தைய செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோபன்ஹேகனில் நடைபெறும் மாநாட்டில் புதிய முடிவுகள் எடுக்கப்படும். புதிய உடன்படிக்கையை உருவாக்குவதற்கு முன் ஐ.நா. காலநிலை மாற்ற சட்டகப் பேரவையில் கையெழுத்திட்டுள்ள 192 நாடுகள், கட்டுப்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விவாதத்தில் ஈடுபடும். அதற்கான முன்தயாரிப்பே "பெரும் பொருளாதார அமைப்பின்" தீர்மானம். 

இவ்வளவு காலம் "முதலில் வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியீட்டைக் குறைக்கட்டும். வளர்ச்சியை விட்டுக் கொடுத்து நாங்கள் கார்பன் வெளியீட்டை குறைக்க முடியாது" என்று சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியா கூறி வந்தது. இப்பொழுதும் அதன் நிலைப்பாடு மாறவில்லை. ஒரே ஒரு சிறிய மாற்றம். உலக நாடுகளுக்கு இடையே சமமான பங்கீடு, வளர்ந்த நாடுகளின் வரலாற்றுப் பொறுப்பு ஆகிய இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் மேற்கண்ட முடிவை இந்தியா எடுத்திருந்தது. ஆனால் இப்போது, மனித செயல்பாடுகளால் உருவானதாக நம்பப்படும் காலநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா முதன்முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே "பெரும் பொருளாதார அமைப்பு" தீர்மானத்தில் இட்ட கையெழுத்து. இதன் அடிப்படையில் கார்பன் வெளியீட்டைக் குறைக்க கொள்கை ரீதியில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மன்மோகன் சிங், கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தும் இலக்குகளை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரம் புவி வெப்பமடைதல் நடக்கிறதோ, இல்லையோ கார்பன் வெளியீட்டை குறைத்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஏனென்றால், காலநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டுக் குழுவின் கணிப்புப்படி, 2015 ஆம் ஆண்டில் உலக கார்பன் வெளியீடு உச்சத்தைத் தொடும், அப்பொழுது முதல் வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியீட்டை கடுமையாகக் குறைக்க வேண்டிய தேவை ஏற்படும். 

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு தனிநபர் வெளியிடும் சராசரி கார்பன் அளவு 1.2 டன், இது உலகிலேயே மிகக் குறைவு. அதேநேரம் உலக அளவில் ஒரு தனிநபர் வெளியிடும் சராசரி கார்பன் அளவு ஆண்டொன்றுக்கு 4.6 டன். இதில் பெருமளவு, அதிக நுகர்பொருள்களை அனுபவிக்கும் வளர்ந்த நாடுகளுடையது. 

சர்வதேச காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தை அரங்குகளில் விவாதிக்கும்போது, நாங்கள் சூழலுக்கு இணக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம் என்று இந்திய பிரதிநிதிகள் வீராவேசமாக பேசுகிறார்கள். உண்மையில் அவர்கள் இப்படி பேசுவதற்கான சாத்தியத்தை உருவாக்கியது, எந்த வகையிலும் அடிப்படை வசதிகளை அனுபவிக்க முடியாத, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள்தான். இந்தியாவில் அதிகமாக உள்ள அடித்தட்டு மக்களும், கிராம மக்களும் பெருமளவு சூழலுக்கு இணக்கமாகவே செயல்பட்டு வருகின்றனர் (நகர்மயமாக்கம், கிராமத்தினர் இடப்பெயர்வு காரணமாக இதெல்லாமே வேகமாக மாறியும் வருகிறது). ஆனால் நகரங்களில் வாழும் மேல்தட்டு வர்க்கத்தினரும், பெருமளவு நடுத்தர வர்க்கத்தினரும் பெருமளவு சூழலுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றி உலகையும், இதர மக்களையும் சுரண்டிக் கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது தொடங்கி, மின்சாரத்தை எரித்துத் தீர்ப்பதுடன், கார்களில் அராஜகமாக ஊர்வலம் வருவது வரை ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமாகவும் சூழலைக் கெடுக்கிறார்கள். தலையில் கொள்ளிக்கட்டையை சொருகிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உலக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டாலும், கையெழுத்திடாவிட்டாலும் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.  

இன்றைக்கும் நமது நாட்டில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் அவலத்தில் இருக்கிறார்கள். மின்சார வசதி கிடையாது. சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. இவர்களுக்கு இவையெல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், அவற்றை கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டுள்ளவர்களை சரிசெய்ய வேண்டும். 

அதற்கு தனிநபர் அளவிலும், தனியார் நிறுவனங்கள் அளவிலும் சூழல் வரி விதிப்பது, கார்களை கட்டுப்படுத்துவது, மின்சார பயன்பாட்டில் கட்டுப்பாடு உள்ளிட்டவை தேவை. அதற்குப் பிறகு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி திறன்மிக்க பயன்பாடு, காடுகளின் பரப்பை அதிகரித்தல், சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அத்துடன் ஆறுகள், நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும், மின்சார உற்பத்தியில் இருந்து நிலக்கரியின் சார்புத்தன்மையைக் குறைக்க வேண்டும், பொதுச் சுகாதாரத்தையும் தூய்மையையும் பராமரிக்க வேண்டும். நேரடியாக மக்களைச் சார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகளை மட்டும் அனுமதிக்கலாம். 

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் வளர்ந்த நாடுகளுக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்காக மேலை நாடுகளைப் போலவே வளரும் நாடுகள் வளர்ச்சியை கையில் எடுத்துக் கொண்டு, கார்பன் வெளியீட்டை குறைக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது. வளர்ந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்பது அவசியம் (அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது முக்கியமான கேள்வி). அத்துடன் மேலை நாடுகளின் வளர்ச்சி மாதிரி, நம்மை போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஏற்கெனவே, நாம் குறைவாக கார்பனை வெளியிட்டு வருவதற்குக் காரணம், வசதிகள் இருந்து, பயன்படுத்தாமல் இருப்பதல்ல. பெரும்பாலான மக்களுக்கு மாசுபடுத்தும் அளவுக்கு வசதியில்லை என்பதுதான். நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதிப்படுத்த சூழலுக்கு உகந்த முறைகளைக் கண்டறிய வேண்டும். அதேநேரம், மேல்தட்டு வர்க்கத்தினரின் கண்மூடித்தனமான மாசுபாட்டு அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வர கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும். இதுவே தற்போதைய தேவை. 

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

- ஆதி

Pin It