கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில் சென்ற ஆகஸ்டு 7ஆம் நாள் இரவு பெய்த பெருமழையினால் மலையிடிந்து பாறைகள் உருண்டு மண் சரிந்ததில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அனைவர்க்கும் அதிர்ச்சியளித்தது. மண்ணில் புதையுண்டவர்களில் மூவர் மட்டுமே அதிசயமாகத் தப்பித்து வந்து தகவல் தெரிவித்ததன் பேரில் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்தத் தொழிலாளர்கள் பல்லாண்டு முன்பு கேரளத்துக்கு வேலை தேடிச்சென்று அங்கேயே குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அங்கே தேயிலைத் தோட்டத்திலேயே ராஜமலையை ஒட்டிய மலைச்சரிவுக்குக் கீழே இருந்தன. இவர்களைப் போன்ற ஏராளமானோர் தமிழ்நாட்டின் நெல்லை தூத்துக்குடி விருதுநகர் மாவட்டச் சிற்றூர்களிலிருந்து புலம்பெயர்ந்து கேரளம் சென்றவர்கள். இடுக்கி மாவட்டத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 விழுக்காட்டு மேல் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 11/08 வரை 52 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இனி யாரும் உயிரோடு மீட்கப்படும் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்றிருந்தால் மேலும் சிலரையாவது உயிரோடு மீட்டிருக்க முடியும். முதலில் மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் மன்றாடிக்கேட்டும் அவர்களிடம் ஒப்படைக்காமல் ஒரே குழிக்குள் புதைத்த கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது..
இது வரை தமிழக அரசு பெட்டிமுடிப் பெருந்துயரம் குறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் குறித்துத் தமிழக அரசு தனக்குள்ள அறப்பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர்க்குக் கேரள அரசு போலவே தமிழக அரசும் இழப்பீடு தர வேண்டும் எனக் கோருகிறோம். பெருந்தொற்றுக்கான ஊரடங்கு முடக்கத்தின் போது வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் சிக்கிக் கொண்ட தமிழர்கள்பால் தமிழக அரசு காட்டிய அதே அலட்சியப் போக்குதான் தொடர்கிறது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளும் வாழ்க்கை நிலைமைகளும் எவ்வளவு அவலமய் உள்ளன எனபதை பெட்டிமடித் துயரம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலைமைகள் அடியோடு மாற்றியமைக்கப்பட வேண்டும். டாடா போன்ற சுரண்டல் பெருங்குழுமங்களின் கையிலிருக்கும் இந்தத் தோட்டங்களை நாட்டுடைமையாக்கித் தொழிலாளர் கூட்டுறவுகளைக் கொண்டு நடத்த வேண்டும்.
நம் கோரிக்கைகள்:
1. மூணாறு பெட்டிமுடி மண்சரிவில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் கேரள அரசு ரூ.20 இலட்சமும் தமிழக அரசு ரூ.15 இலட்சமும் டாடா நிறுவனம் ரூ.15 இலட்சமும், மொத்தம் 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
2. கேரளத்தில் காடுகள் அழிப்பினாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் பருவமழை மாற்றத்தாலும் அடிக்கடி ஏற்படும் கொடுநேர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளைப் பாதுகாப்பான முறையில் அமைத்துத் தர வேண்டும்.
3. தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளும் வீட்டுவசதி உள்ளிட்ட வாழ்க்கை நிலைமைகளும் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும். மீண்டும் ஒரு பெட்டிமுடி நிகழாமல் தடுப்பது இந்திய, கேரள அரசுகளின் கடமையாகும்.
4. தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு அவர்களது நலனில் எவ்வித அக்கறையும் காட்டாத டாடா போன்ற தனியார் குழுமங்களிடமிருந்து தேயிலைத் தோட்டங்களையும் பிறவகைத் தோட்டங்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக மூணாறு மண்சரிவு நிகழ்ந்த தேயிலைத் தோட்டத்தை உடனே நாட்டுடைமையாக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.
5. தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழர்களின் நலனைக் கவனித்துக் கொள்வதற்கென தமிழக அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அதன் முதல் பணியாக இத்தமிழர்களின் பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும்.
6. தேயிலை, காபி உள்ளிட்ட தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலவுரிமைகளுக்காக இந்திய அரசும் மாநில அரசுகளும் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்