(உரை முடிவில் அவையோர் கேட்ட வினாக்களும் தோழர் தியாகு அளித்த விடைகளும்)

periyaar 350 copyவினா: 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார் என்பதற்குக் காரணம் அந்தப் போராட்டம் வன்முறையை நோக்கி வளர்ந்து சென்றதாக இருக்குமா?

விடை: இருக்க முடியாது. ஏனென்றால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பெரியார் எதிர்த்தார். வன்முறை என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் வந்தது. அந்த வன்முறையும் கூட முதலில் காங்கிரசாரிடமிருந்துதான் வந்தது. குறிப்பாக மதுரையில் மாணவர் ஊர்வலத்தின் மீது காங்கிரஸ்காரர்கள் கொடுந்தாக்குதல் தொடுத்ததுதான் வன்முறையின் தொடக்கம். பல ஊர்களிலும் காங்கிரஸ்காரர்கள் இப்படி வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரஸ் வன்முறையைப் பெரியார் கண்டிக்கவில்லை.

1965 சனவரி 26 குடியரசு நாள் - இந்திய அரசமைப்பின் 17ஆம் பகுதியின்படி இந்தி அரியணை ஏறும் நாளைத் துக்க நாள் எனக் குறித்து அந்த நாளில் அவரவர் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுவது திமுக அறிவித்த போராட்டத் திட்டம். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கென்றே காங்கிரசார் ஒரு படை அமைத்தார்கள். அதற்குப் பெயர் சு.கா. படை. அதாவது சுதந்திரம் காக்கும் படை!

இதன் தலைவர் சுப்புராமன் என்று நினைவு. குடியரசு நாளில் கறுப்புக் கொடி ஏற்றிய திமுகவினரின் வீடுகள் மீது சு.கா. படையினர் கல்வீசினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வீடு தாக்கப்பட்டது. திமுக அறப் போராட்டத்துக்கு எதிரான காங்கிரசாரின் இந்த வன்முறையையும் பெரியார் கண்டிக்கவில்லை.

மாணவர்களும் பொதுமக்களும் நடத்திய போராட்டத்தில் வன்முறை என்பது பெரும்பாலும் அரச வன்முறைதான். காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஏவிய அடக்குமுறையின் வன்முறைதான். மாணவர்கள் மக்கள் தரப்பிலிருந்து பெப்ரவரி 10ஆம் நாள் வந்த வன்முறை என்பது ஒப்பளவில் மிகக் குறைவு. அதுவும் அரச வன்முறைக்கு எதிர்வினையாகத் தன்னெழுச்சியாக நிகழ்ந்ததே.

திருப்பூரில் காவல்துறையினர் இருவர் உயிரோடு எரிக்கப்பட்டதே போராட்ட வன்முறையின் உச்சம் எனலாம். இந்த வன்முறை வருந்தத்க்கதுதான். இதைக் கண்டிப்பதிலும் தவறில்லை. ஆனால் அந்த ஒரு நாளில் திருப்பூர், பொள்ளாச்சி, குமாரபாளையம், திருச்செங்கோடு, கோவை, கரூர், வள்ளக்கோயில் உள்ளிட்ட ஊர்களில் அரசப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் தொகைக்கு அரசு சரியான கணக்குத் தரவே இல்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 500க்கு மேற்பட்டவர்கள் அரசின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தில் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் கொண்டுவந்து இறக்கப்பட்டதும் இந்தப் -போராட்டத்தின் போக்கில்தான். போராட்டத்தை நசுக்குவதற்காக பக்தவத்சலத்தின் காட்டாட்சி நடத்திய இந்தக் கொலைகார வன்முறையைக் கண்டிக்காத பெரியார், போராட்ட வன்முறையை மட்டுமே கண்டித்தார்.

மொழிச் சிக்கலில் இந்திய அரசின் பிடிவாதப் போக்கையும் பெரியார் கண்டித்தாரில்லை. இந்தி படிக்கச் சொல்வதில் என்ன தவறு? இந்தியை யார் எங்கே திணித்தார்கள்? என்றெல்லாம் கேட்கவும் செய்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து நடைபெற்றதே தவிர, இந்தி படிப்பது தொடர்பாக அல்ல. இந்தி படிப்பது தொடர்பான 1938 மொழிப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற பெரியார் இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதற்கு எதிரான 1965 மொழிப் போராட்டத்தை எதிர்த்ததை என்னென்பது!

வினா: மொழிக் கொள்கையில் பெரியார் அண்ணாவிடமிருந்து மாறுபட்டாரா? அதனால்தான் போராட்டத்தை எதிர்த்தாரா?

விடை: 1965 போராட்டம் ஆட்சிமொழி தொடர்பானது. போராட்ட அணுகுமுறையில் வேறுபாடு இருந்தாலும் ஆட்சிமொழிக் கொள்கையில் இருவருக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அண்ணாவிடமிருந்து மட்டுமின்றி, இராசகோபாலாச்சாரியாரிடமிருந்தும் பெரியார் மாறுபடவில்லை.

இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வலிந்துரைப்பதுதான் திராவிட இயக்கத்தின் பொது நிலைப்பாடு. எனவேதான் சவகர்லால் நேருவின் மோசடியான உறுதிமொழியை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டார்கள். இந்திதான் ஆட்சி மொழி, இந்தி பேசாத மக்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்பதுதான் அந்த உறுதிமொழி. அதாவது தமிழும் பிற தேசிய மொழிகளும் ஒருநாளும் ஆட்சிமொழியாக முடியாது என்று பொருள். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தை ஏற்க மறுத்தால் மாநில மொழிகள் வந்து விடும் பேராபத்து இருப்பதாக நேருவே சொல்லியிருப்பதற்கு நாம் சான்று கொடுத்துள்ளோம்.

உண்மையில் மாணவர் போராட்டத்தின் உணர்வு இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதன்று. தமிழ் வாழ்க என்பதுதான் போராட்ட முழக்கமே தவிர, ஆங்கிலம் வாழ்க என்பதன்று. ஆனால் ராஜாஜியும் அண்ணாவும் தங்கள் ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டுக்கு இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் பெரியாரின் எதிர்ப்பு இந்தக் காரணத்திற்காக அல்ல.

வினா: பெரியாரின் போராட்டத்தில் வன்முறை இடம்பெற்றதுண்டா?

விடை: இல்லை. பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரும் போராட்டத்தில் வன்முறை கூடாது என்றே கருதினார். நிராயுதபாணியான மக்களை ஆயுதபாணியான அரசுடன் மோத விடுவதால் மக்களுக்கே இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து மக்களைப் பொறுப்புடன் வழிநடத்திய தலைவர்கள் அவர்கள். வன்முறை தவிர்த்த அறப் போராட்டங்களை காந்தியப் போராட்டம் என்று அழைப்பது வாடிக்கையாக உள்ளது. நீங்கள் அவற்றைப் பெரியாரியப் போராட்டங்கள், அம்பேத்கரியப் போராட்டங்கள் என்றும் அழைக்கலாம்.

ஆனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட வன்முறைக்கான பழி அரசையே சாரும். அரசின் பிடிவாதப் போக்கும் கொடிய அடக்குமுறையுமே மக்களின் வன்முறைக்குப் பொறுப்பு.

ஆயுதப் போராட்டமும்கூட உண்மையான மக்கள் போராட்டமாக இருக்குமானால், அந்த வன்முறைக்கும் அரசே பொறுப்பு. வன்முறையைக் காரணங்காட்டி மக்கள் போராட்டங்களைக் காலித்தனம் என்று சாடுவதை ஏற்பதற்கில்லை.

வினா: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர் என்று மாற்றினால் என்ன?

விடை: மாற்றினால் நல்லது என்றே நாமும் கருதுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நேரத்திலும் இப்படிச் சிலர் முன்மொழிந்தனர் என்றும், அது பெரும்பான்மையினரால் ஏற்கப்பட வில்லை என்றும் அறிகிறோம்.

திமுக முதல் பொதுக்குழுவில் திராவிடத்துக்குப் பதில் தமிழகம் என்று பெயரிடுமாறு தான் கேட்டதாகவும், இதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்து விடுவார் என்று சொல்லி அண்ணா மறுத்து விட்டதாகவும் கோவை செழியன் ஒரு முறை என்னிடமே சொன்னார்.

ஆனால் பெரியாரே ஒரு முறை நாம் தமிழர் இயக்க ஆதித்தனாருடன் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமை தொடர்பான போராட்டம் அறிவிக்கும் போது, மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிட நாடு என்பது மோசடி, தமிழ்நாடு என்பதே சரி என்று அறிவித்தார்.

ஈ.வெ.கி. சம்பத் திராவிடத்தைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். பெயரைச் சரியாக வைத்தவர் காலப்போக்கில் உள்ளடக்கத்தில் கோட்டை விட்டு இந்திய தேசியச் சோதியில் கலந்து விட்டார்.

மறுமலர்ச்சி காணப் புறப்பட்ட வைகோவும் தன் கட்சிப் பெயரில் திராவிடத்தைத் தமிழகமாக்கத் தவறி விட்டார். இதைச் சொல்லியே கலைஞர் தங்களை ஒழித்து விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும்.

பெயரை மாற்றிக் கொண்டால் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. மறுபுறம், பெயர் மாற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அதனாலேயே நமக்கு வேண்டாதவர்கள் ஆகி விட மாட்டார்கள்.

வினா: நாம் என்ற தமிழ்த் தேசியப் பண்பாட்டுக்குச் சாதியை ஒழிக்க என்ன வழி?

விடை: சாதியம் என்பது ஒருங்கே பொருளியல் அடித்தளத்திலும் பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம்பெற்றிருப்பது. பொருளாக்கத்திலும், செல்வப் பகிர்விலும் ஒருவரின் பங்கு என்ன, உழைப்பில் என்ன பங்கு, பெருமைக்குரிய உழைப்பா, சிறுமைக்குரிய உழைப்பா என்பதையெல்லாம் சாதி தீர்மானிக்கிறது. இந்த வகையில் சாதி வர்க்கமாக உள்ளது. ஆனால் அது பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ளது.

சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் அகமணமுறைதான் இந்தப் பண்பாட்டின் முதன்மைக் கூறு. சேர்ந்து உண்ணாமை, சாதிப் பட்டம், குலதெய்வ வழிபாடு போன்ற வேறு பல கூறுகளும் உண்டு என்றாலும் அகமணமுறையை இறுக்கமாகக் காப்பதில்தான் சாதியத்தின் வெறித்தனம் ஆகக் கொடூரமாக வெளிப்-படுகிறது.

சாதி ஒழிப்புக்கான திட்டம் இந்தக் கூறுகள் அனைத்தையும், இவற்றுக்கிடையிலான அகத் தொடர்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளியல் அடித்தளத்தை மாற்றுவதற்கு நிலவுடைமைச் சீர்திருத்தம், அனைத்தளாவிய இட ஒதுக்கீடு, முதலாளியச் சுரண்டலைக் கட்டுக்குட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ள அரசதிகாரம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு சமூகநீதி வேலைத்திட்டத்தைச் செயலாக்குவதற்குத் தேசிய விடுதலை தேவைப்படுகிறது. அடிமைப்பட்ட தேசத்தால் தனக்குள்ளான அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ள முடியாது. அரசியல் தளத்தில் இதையே தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்குரிய அடித்-தளமாகிய சமூகநீதிக்குமான இடையுறவாகப் பார்க்கிறோம்.

சமூக நீதி மட்டுமே சாதி ஒழிப்பன்று, ஆனால் சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பு நடவாது. சமூகநீதி அடித்தளத்தின் மீது நிற்கும் போது சாதியப் பண்பாட்டுக்கு எதிராக, குறிப்பாக அகமணமுறைக்கு எதிராகப் போராடுவது எளிதாகிறது.

சுருங்கச் சொன்னால், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்று கட்டங்கள் உண்டு: தீண்டாமை ஒழிப்பு அல்லது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான போராட்டம், அகமணமுறை உள்ளிட்ட சாதியப் பண்பாட்டுக்கு எதிரான போராட்டம். இவை ஒன்றன் பின் ஒன்றாக வரும் கட்டங்கள் அல்ல, ஒருங்கே தொடங்கி ஒன்றுக்கொன்று துணை செய்து, ஒவ்வொன்றாக நிறைவடையும் கட்டங்கள். முதல் கட்டத்தில் சூத்திரர்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் எதிர்நிலையில் இருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தின் ஊடாகத்தான் பஞ்சமரும் சூத்திரரும் ஓரணியில் சேர இயலும். இதைத்தான் பெரியார் ‘பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்றார். தலித்தியம் என்பதும் சாதி ஒழிப்பையே குறிக்கும்.

சமூக நோக்கில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை இல்லாமல் இரண்டாம் கட்டமான சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறாது. இதற்கான அரசியல் புரட்சியின் ஊடாகவே தேசிய விடுதலை மலர்கிறது.

தமிழ்த் தேசிய விடுதலை வழியாகக் கிடைக்கும் அரசதிகாரத்தைக் கொண்டு பொருளியல் அடித்தளத்தில் அடிப்படைச் சீர்த்திருத்தங்கள் செய்து சமூக நீதியை நிறுவவும், சமூகநீதியைத் தளமாகக் கொண்டு நீண்ட பண்பாட்டுப் புரட்சியை நடத்தவுமான வழி பிறக்கும். சாதியத்தின் இறுதி அரணாகிய அகமணமுறை ஒழியும் போதுதான் சாதி ஒழிப்பு நிறைவு பெறும்.

தமிழ்த் தேசியச் சமூகநீதிப் போராட்டத்தின் ஊடாகத்தான் நாம் தமிழர் என்ற தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும். பதிலுக்கு இந்தப் பண்பாடு அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும்.

வினா: சாதியக் கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து அரசியல் நடத்தும் பிற்போக்குக் கட்சிகளை பெரியாரிய வழியில் எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது?

விடை:  அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தை நீங்களும் கண்டிருக்கலாம். பெரியார் கொள்கை நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்று திமுக, அதிமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே குரலில் வாதிட்டார்கள். தேர்தல் அரசியல், பதவி அரசியல் அவர்களை இந்த முடிவுக்குத் தள்ளி விடுகிறது. பெரியாரே வோட்டுப் பொறுக்கிகள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். தம் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் தாமே பாராட்டிய பல தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி இவர்கள் யாரையும் நம்ப முடியாது என்றார்.

தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை இன்றைய நிலைமைக்கேற்ப தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இருமுனைப் போராட்டமாகப் புரிந்துகொண்டு இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களை அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. பணநாயகத் தேர்தல் வழிப்பட்ட நாற்காலி அரசியல், பொய்யதிகாரப் பதவி அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் இதற்குப் பயன்படாது என்ற தெளிவு தேவை.

வினா: இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாதுதானே?

விடை: நாம் அம்பேத்கரிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். இந்து மதத்தை ஒழிப்பது என்றால் என்ன? கோயில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா? இல்லை என்கிறார் அம்பேத்கர். இந்து என்ற சொல்லுக்கு மூன்று பொருள் இருப்பதாக அவர் சொல்கிறார்.

ஒன்று, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள். கார்ல் மார்க்ஸ் கூட இந்தப் பொருளில் இந்துக்கள் என்றார்.

இரண்டு, இந்து என்னும் இறையியல். அதாவது இன்னின்ன கடவுளர்களை இன்னின்ன வடிவில் வழிபடுதல் என்பது. இந்து மதம் என்ற ஒன்று ஆதியில் இருந்ததா, அது எப்படி ஆறுமதக் கூட்டணியாக உருப்பெற்றது, இதில் ஆதிசங்கரரின் பங்கு, இது பற்றி காஞ்சிப் பெரியவர் கூறியது... எல்லாம் தனித் தலைப்பில் பேச வேண்டியவை.

மூன்று, இந்து மதத்துக்குரிய சமூகப் பொருளியல் கட்டமைப்பு, அதாவது வர்ண சாதிக் கட்டமைப்பு. இந்த மூன்றாவது பொருளில்தான் தீண்டப்படாத மக்கள் இந்துக்கள் அல்ல என்றார். அதாவது அவர்கள் நால்வர்ணக் கட்டமைப்புக்குப் புறத்தே வைக்கப்பட்டுள்ள புறச் சாதியினர், பஞ்சமர்கள். இந்தச் சமூகக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியல்தான் பார்ப்பனியம்.

சாதி ஒழிப்புக்கு இந்துச் சமூகக் கட்டமைப்பைக் கலைத்தாக வேண்டும் என்பதே சரியான புரிதல். இதற்கு மாறாக, இந்துக்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களின் சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒழித்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்ற புரிதல் தவறானது. சாதி ஒழிப்புப் போராட்டத்திலிருந்து பெரும்பாலான மக்களை அயன்மைப்படுத்தக் கூடியது. சாதி ஒழிப்புப் போராட்டத்தைக் காலவரம்பின்றி ஒத்திவைக்கக் கூடியது. தேவாலயம் செல்லாத மக்களை மட்டும் வைத்துப் புரட்சி செய்வதென்றால் உருசியாவில் புரட்சியே நடந்திருக்காது.

இந்துச் சமயம் என்பதற்கும் இந்துச் சமூகம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவு தேவை.

Pin It