srilanka 300ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் ஐநா தீர்மானத்தின்படி அதன் மனித உரிமைப் பேரவை இலங்கை மீது விரிவான பன்னாட்டு விசாரணையை முன்னெடுக்க உள்ளது.

இதற்கு ஒத்துழைக்க வேண்டுமெனச் சென்ற சூன் 10 ஆம் நாள் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் 26ஆவது அமர்வில் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

போரினால் தமிழ் மக்களிடையே ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் அதன் போர் வெற்றியைச் சென்ற மாதம் இலங்கை உற்சாகமாகக் கொண்டாடியதை அவர் அப்போது குறிப்பிட்டார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமது அலுவலகத்தால் நிபுணர்க் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது முழுமையான விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

அவரின் இந்த உரையைத் தொடர்ந்து இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க, விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டாலும், அதன் செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் தொடர்கின்றன.

அதனால் சர்வதேச விசாரணைக்கான நிபுணர் குழுவினருக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது எனத் தெரிவித்தார்.

சென்ற மே 10ஆம் நாள் சப்பான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செய்ஜி கிஹாரா ராசபக்சேவைச் சந்தித்தார். அப்போது ஐநா தீர்மானத்தில் உள்ள அனைத்தையும் நடைமுறைப்படுத்துகிறோம்.

ஆனால், சர்வதேச விசாரணையை மட்டும் ஒப்புக்கொள்ளமாட்டோம். இந்த நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் ஆதரிக்க சப்பான் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிஹாரா “ஐநா தீர்மானம் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதே எங்களின் கருத்து.

அதனால்தான் அது தொடர்பான வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்கவில்லை’’ என்றார். இலங்கைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதால்தான் இந்தியாவும் இத்தீர்மானத்தைப் புறக்கணித்தது என்பதை இங்கு விளங்கிக்கொள்வது எளிது.

பன்னாட்டு விசாரணை கண்டு ராசபக்சே செய்வதறியாது தவிப்பதும், அதைத் தடுக்க சர்வதேச நாடுகளின் தயவை எதிர்பார்த்து நிற்பதும் தமிழர் போராட்டங்களினால் கிடைத்திருக்கும் சிறு வெற்றியே! அதைப் பெரு வெற்றியாக்கத் தாய்த் தமிழகம் வேறுபாடுகள் களைந்து ஒற்றுமையுடன் போராட்டக் களம் அமைக்க அனைவரும் முன்கை எடுப்போம்.

தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!

Pin It