கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(2013 ஏப்ரல் 3ஆம் நாள் உசிலம்பட்டியில் நடைபெற்ற பெருங்காமநல்லூர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை)

தோழர் முகில்நிலவன் அவர்கள் குற்றப் பரம்பரைச் சட்ட வரலாற்றைப் பல கட்டுரைகளாகத் தொகுத்து குற்றப் பரம்பரை அரசியல் என்ற செறிவான நூல்வடிவில் நமக்குத் தந்துள்ளார். அதேபோல் தோழர் சுந்தரவந்தியத் தேவன் எழுதிய பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் என்ற நூலும் இவ்வரலாற்றைப் பயில்வதற்கும், மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்குமான ஆர்வத்தை எமக்களித்தது.

வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

பெருங்காமநல்லூரின் ஈகம் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையது. இன்றைக்கும் அத்தகைய வீரம் தமிழர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதால் அந்த ஈகியரை நாம் வணங்குகிறோம். இன்றைக்கும் தமிழ்ப் பெண்கள் மாயக்காள் போன்ற வீரப் பெண்களாக இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட வீரப் பெண்களை நாம் வணங்குகிறோம்.

நண்பர்களே! பெருங்காமநல்லூரில் 1920 ஏப்பிரல் 2ஆம் நாள் 93 ஆண்டு முன்பு இதே நாளில் & சுட்டுக் கொல்லப்பட்ட 16 பேரும் & நடையநேரியில் இருந்து வாழ்க்கைப்பட்டு வந்து பெருங்காமநல்லூரில் வதைபட்டு, சுடுபட்டு வீழ்ந்த மாயக்காள் உள்ளிட்ட பதினாறு பேரும் & பிறமலைக் கள்ளர்கள். இவர்கள் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது ஒரு சாதிப் போராட்டம் அல்ல.

1968 திசம்பர் 25ஆம் நாள் கீழவெண்மணியிலே 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட சாதி இந்து இல்லை. அனைவரும் சேரி மக்கள். அதனால் அது ஒரு சாதிப் போராட்டம் ஆகி விடாது. எங்களுக்குப் பெருங்காமநல்லூரும் வெண்மணியும் தமிழ் இனத்தின் இரண்டு ஈகக் களங்கள், வீரக்களங்கள் என்று பார்க்கிறோம்.

தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குண்ட மக்களின் போராட்ட ஒற்றுமையைச் சார்ந்திருக்கிறதே தவிர அவர்களுக்கு இடையேயான மோதலைச் சார்ந்திருக்கவில்லை. அந்த முறையில் தமிழ்த் தேசியத்திற்கான ஒற்றுமையைக் கட்டுவதற்கு பெருங்காமநல்லூரின் ஈகமும் தேவை, வெண்மணியின் ஈகமும் தேவை.

நண்பர்களே! ரேகைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்திய அந்த வீரமிக்க தமிழர்களை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் உவமை காட்டிப் போற்ற முடியும். நம்முடைய தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருக்கின்ற இரண்டு பெரிய சங்கிலிகளில் ஒன்று காலனி ஆதிக்கம்.

மற்றொன்று வர்ண சாதி ஆதிக்கம். காலனி ஆதிக்கத்திற்கும் வர்ண சாதி ஆதிக்கத்திற்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அது மனிதர்களைப் பிறப்பால் வேறுபடுத்திப் பார்ப்பது. குறிப்பிட்ட சிலரைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்ப்பது. இட்லர் ஜிப்சிகளைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார்.

யூதர்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார். அதனால்தான் இரண்டாம் உலகப் போர் தொடங்குகின்ற பொழுது ஐரோப்பாவில் 90 இலட்சம் யூதர்கள் இருந்தார்கள்.

போர் முடிகின்ற பொழுது வெறும் 30 இலட்சம் யூதர்கள்தான் மிச்சப்பட்டார்கள். 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்து விட்டான். இன்றைக்கு வல்லமை பொருந்திய அமெரிக்க வல்லாதிக்கம் ஒருவர் இசுலாமியர் என்றாலே அவரைப் பயங்கரவாதி என்று ஐயுறுகிறது. முசுலீம்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்க்கிறது.

ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கறுப்பின மக்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார்கள். பெருங்காமநல்லூருக்கு இணையான ஒரு வீரமிக்க வரலாற்றைத் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்கள் படைத்தார்கள். அங்கேயும் இதே போன்று கைரேகைச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

ஒரு இனக் குழுவிற்கு எதிராக மட்டுமல்ல, வெள்ளையர் அல்லாத அனைவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்துத்தான் காந்தியார் இங்கிருந்து சென்ற மக்களைத் திரட்டிப் போராடினார். அந்தப் போராட்டத்திலே ஒரு முக்கியத் தன்மை உண்டு.

என்னவென்றால், அந்தப் போராட்டத்திலே தமிழர்கள் இருந்தார்கள், குசராத்தியர்கள் இருந்தார்கள், இந்திக்காரர்கள் இருந்தார்கள், பத்தானியர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வலிமைமிக்க ஆற்றல் தமிழர்கள்தான்.

காந்தியார் அந்தப் போராட்டத்திலே மிகப் பெரிய ஈகப் பெண்ணாகக் குறிப்பிட்டது யாரைத் தெரியுமா? தில்லையாடி வள்ளியம்மையைத்தான். அவர் அந்தப் போராட்டத்திலே சிறைப்பட்டுப் பின் உயிர் நீத்தவர்.

ஆனால் காந்தியார் செல்வதற்கு முன்பு&இத்தகைய அறப் போராட்டங்கள், சத்தியாகிரகங்கள் நடப்பதற்கு முன்பு &தென்னாப்பிரிக்க மக்கள் பழங்குடிகளாகப் பிரிந்து இருந்தார்கள்.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து ஒவ்வொரு பழங்குடியும் போரிட்டது, பிரிந்து கிடக்கின்ற சமூகத்தை அடிமைப்படுத்துவது எளிது என்றாலும் அவர்கள் தனிதனி இனக்குழுக்களாக அணிசேர்ந்து போராடினார்கள்.

கறுப்பின மக்கள் பிரிட்டனின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துக் களங்கண்டு வெற்றி பெற்றது ஒரு புகழார்ந்த வரலாறு. 1879இல் பிரெடெரிக் எங்கெல்சுக்குச் செய்தி ஒன்று கிடைக்கிறது. இன்றைக்கு இருப்பது போல் இணையம், தொலைகாட்சி வசதிகளோ நவீனத் தொடர்பு வசதிகளோ அதிகம் இல்லாத காலம் அது.

சூலு இன மக்கள் தங்கள் மன்னர், அதாவது குலத்தலைவர் செஸ்ட்வாயோவின் தலைமையில் கரந்தடி முறையில் போரிட்டார்கள். வெறும் வேல்கம்பும் ஈட்டியும் வில் அம்பும்தான் அவர்களிடம் இருந்தது. இசாந்திலவானா மலையில் பிரித்தானியப் படையை & பீரங்கிகள், துப்பாக்கிகளோடு வந்த 2000 பேர் கொண்ட அந்தப் படையை & சூலு வீரர்கள் சுற்றி வளைத்துத் தோற்கடித்தார்கள். மலையடியில் வெள்ளைப் படை, உச்சியில் கறுப்புப் படை. கறுப்பர்கள் அணியணியாகப் பாய்ந்து வந்தார்கள்.

ஓரணி வீழ்த்தப்பட்டால் உடனே அடுத்த அணி வரும். இப்படி வரிசையாக வந்து நெருங்கிநின்று. வேல் கம்புகளாலும், ஈட்டிகளாலும் வெள்ளைப் படையினை வீழ்த்தி வெற்றி கண்டார்கள். அந்தப் போர்க் களத்திலே அவர்கள் வெற்றி பெற்ற செய்தியை லண்டனிலிருந்த ஒரு வெள்ளைக்காரர் கேள்விப்பட்டு மகிழ்ந்து கொண்டாடினார். அவர்தான் பிரெடெரிக் எங்கெல்சு.

ஆனால் அடுத்து வந்த போர்க்களங்களில் வெள்ளையர்கள் அவர்களை வீழ்த்தி அடிமைப்படுத்தி விட்டார்கள். காலப்போக்கில் பழங்குடிகளாக இருந்த மக்கள் தென்னாப்பிரிக்கத் தேசிய இனமாக உருப்பெற்றார்கள். ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் மலர்ந்தது. ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்லர்.

இந்தியர்கள், கலப்பினத்தவர்கள், சனநாயக உள்ளங்கொண்ட வெள்ளையர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து தென்ஆப்பிரிக்கத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கண்டார்கள்.

அரசியல் வகையில் ஒப்பிட்டுச் சொன்னால் இசாந்திலவானாவில் சூலுக்கள் போராடியதைப் போன்றது பெருங்காமநல்லூரில் பிறமலைக்கள்ளர்கள் நடத்திய போராட்டம். கொடிய குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து அவர்கள் கலகம் செய்தார்கள் எனலாம். கள்ள நாட்டு ஊர்ப் பெரியவர்கள் கூடி, ரேகை வைக்கக் கூடாது என்றும், இச்சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்ப்பது என்றும் முடிவு செய்தனர். அதற்காக ரேகை எதிர்ப்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

ரேகைப் பதிவிற்கு யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்று ஊர் ஊருக்கு ஓலை விட்டார்கள். இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பி வைத்தனர்.

ஆனால் 1920 ஏப்ரல் 2ஆம் நாள் இரவே சிந்துபட்டி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் படை வந்து குவிந்து விட்டது. ஏப்ரல் 3ஆம் நாள் அதிகாலையில் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்தது.

வட்டாட்சியரும் நீதிபதியும் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். எங்கும் ஒரே ஆரவாரம். கட்டுக்கடங்காத நிலை.

அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். கல், கம்பு, கத்தி, ஈட்டி, வில் அம்பு, வளைதடி போன்ற ஆயுதங்களோடு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் ரேகைப் பதிவிற்கு ஒத்துழைப்புக் கேட்டனர். அதனை ஏற்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர். கூட்டத்திலே விட்டி பெருமாள்தேவன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி, Òஅடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, மரியாதையா ஊரை விட்டு போய் விடுங்கள், இல்லையென்றால் ஒங்களை வெட்டி காத்தாண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்” என்று எச்சரித்தார்.

கள்ளர் கூட்டத்திலே “ஓவாயன்” என்பவரும் இருந்தார். அவர் கைகளைப் பின்னால் கட்டியிருந்தார். இரண்டு கைகளில் ஒரு கையில் கேழ்வரகு ரொட்டி இருந்தது. மறுகையிலே கல் இருந்தது.

அதிகாரிகளை நோக்கி, "சமாதானம் என்றால் இதோ இந்த ரொட்டியை உனக்குத் தருவேன், சமாதானம் இல்லையென்றால் இந்தக் கல்லைக் கொண்டு உன்னுடைய மண்டையைப் பிளந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.

வரலாற்றிலே நம் காலத்தில் உலக அரங்கில் இதே தன்மையான ஒரு சம்பவம் நடந்தது. தோழர்களே! பாலத்தீன மக்களுடைய அன்புத் தலைவர், பாலத்தீன விடுதலை அமைப்பினுடைய தலைவர் யாசர் அராபத் ஐநா பொதுப் பேரவையிலே உரையாற்றச் சென்றார். ஐநாவில் அவர் உரையாற்றக் கூடாது என்பற்காக அமெரிக்கா அவருக்கு விசா தர மறுத்தது.

எனவே ஐநா பொதுப்பேரவைக் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவிற்கு மாற்றப்பட்டது. அங்கே போய் அராபத் பாலத்தீனம் பற்றிப் பேசினார். பேசுகிற போது அவருடைய இடுப்பிலே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. கைத்துப்பாக்கியில் ஒரு கையை வைத்துக்கொண்டு சொன்னார்,

”எங்களைப் பொறுத்த வரை எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற இஸ்ரேலிய யூதர்களுக்குச் சொல்கிறோம். எங்களுடைய ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது, இன்னொரு கையிலே அமைதியின் அடையாளமான ‘ஒலிவ் கிளை’ இருக்கிறது. பகைவனே!

உனக்கு அமைதி வேண்டுமென்றால், இந்த ஒலிவ் இலையைக் கையில் பிடி!. இல்லையென்றால் இந்தத் துப்பாக்கியால் உன்னைச் சந்திப்பேன்!” என்று அய்.நா. மன்றத்திலே நின்று யாசர் அராபத் முழங்கினார். யாசர் அராபத் ஐநா மன்றத்திலே தீப்பிழம்பாய் நின்று இப்படி முழங்கப் போவது பெருங்காமநல்லூர் ஓவாயனுக்குத் தெரியுமா? தெரியாது. பெருங்காமநல்லுரில் ஓவாயன் செய்தது அராபத்துக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஓவாயனுடைய வழியிலே யாசர் அராபத் அன்று முழங்கினார்.

ஓவாயனைப் போல், விட்டி பெருமாத் தேவரைப் போல் மக்களனைவரும் ஓன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. உதவி தாசில்தார் ஜான் அன்பு நாடார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தவிட்டார்.

சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர். சண்டையிட்டவர்களுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த மாயக்காள் என்ற பெண்ணும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவரைச் சுட்டதுமில்லாமல் துப்பாக்கிச் சனியனாலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மொத்தம் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தோழர்களே! எதற்காக இந்த 16 பேரும் கொல்லப்பட்டார்கள்? இவர்கள் மீது ஏன் கைரேகைச் சட்டம் பாய்ந்தது? இவர்கள் உண்மையிலேயே குற்றப் பரம்பரையினர்தானா? ஒரு தலைமுறைக் காலம் முழுவதும் காவல் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு என்னென்ன கொடிய சித்திரவதைகளை இவர்கள் அனுபவித்தார்கள்? இந்தச் சட்டம் யார் யார் மீதெல்லாம் ஏவப்பட்டது?

இம்மக்களுக்காக யாரெல்லாம் போராடினார்கள்? இந்தச் சட்டத்தினால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை? இந்த சட்டத்தின் காலனியத் தேவைதான் என்ன? இந்தச் சட்டம் தமிழ்ச் சமூக அரசியல், பொருளியல், பண்பாட்டில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியது? சமகாலச் சூழலில் இந்தப் போராட்ட வரலாற்றின் தேவை என்ன?

இந்தக்கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.

(தொடரும்)

உரை தொகுப்பு: இருகூர் தேவராசு