muthukumar elamபோரும் போராட்டமும் பகையை வெல்வதற்காகவே தவிர, நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கல்ல என்னும் போது, தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தீக்குளிப்பை எப்படிச் சரியான போராட்ட வடிவமாக ஏற்க இயலும்? என்ற கேள்வி எனக்கு எப்போதுமே உண்டு.

பொது நோக்கத்துக்காகத் தீக்குளிப்பவரின் நெஞ்சுறுதியையும் தன்னளிப்பையும் கிஞ்சிற்றும் குறைப்படுத்தாமலே இந்தக் கேள்வியைக் கேட்க இயலும்.

வியத்நாமில் பொதுமையர்களும், தேசிய விடுதலைப் போராளிகளும் அமெரிக்க வல்லாதிக்கத்தையும் அதன் கைப்பாவைகளையும் எதிர்த்து வீரச் சமர் புரிந்தார்கள். சில பௌத்த பிக்குகளோ இந்த நோக்கத்திற்காகத் தீக்குளித்தார்கள்.

இந்த தீக்குளிப்புகள் உலகின் உளச்சான்றைத் தொட்டு விடுதலைப் போருக்குத் துணைசெய்தன. இப்படித் தீக்குளிப்பதை விடுத்து வேறு வகையில் விடுதலைப் போரில் பங்கேற்க அவர்களின் கொல்லாமைக் கருத்தியல் தடை போட்டிருக்கலாம்..

தமிழ்நாட்டில் கீழப்பழூர் சின்னச்சாமியின் தீக்குளிப்பு (1964) வரவிருந்த மொழிப்போருக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்தது. 1965 மொழிப் போராட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாயகம், சாரங்கபாணி போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத் தீயை விசிறி விட்டது.

இந்த இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கழகம் அவர்களை தீக்குளிக்கச் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் ஈகத்தை அக்கட்சித் தலைவர்கள் போற்றினார்கள். தமது அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்தார்கள்.

நாமும் தமிழுக்காகத் தம்மைத் தந்தவர்கள் என்ற முறையில் அவர்களின் ஈகத்தைப் போற்றி வணங்குகிறோம்.. ஆனால் இவர்களின் மொழியுணர்ச்சியைத் தூண்டிய திமுக தலைமையிடம் சரியான மொழிக் கொள்கை கிடையாது. மொழிப் போராட்டத்தை இன விடுதலைப் போராட்டமாக வளர்த்தெடுக்கும் திட்டம் கிடையாது.

இந்தித் திணிப்பை எதிர்ப்பதன் பேரால் ஆங்கிலத் திணிப்பை ஏற்றுக் கொள்வது, மோசடித் திட்டமாகிய நேரு உறுதிமொழியை வலியுறுத்துவது போன்ற குழப்படிகளுக்குப் பஞ்சமில்லை. தேசிய விடுதலைப் போராளிகளாக வளர்ந்திருக்க வேண்டிய இளைஞர்கள் தீக்குளிப்பு என்ற அளவில் முடிந்து போனதற்குப் போராட்டத் தலைமையின் கொள்கைக் குளறுபடியே காரணமாயிற்று.

தி.மு.கழகத்திலிருந்து வைகோ நீக்கப்பட்டதை எதிர்த்து நொச்சிக்குப்பம் தண்டபாணியும் இடிமழை உதயனும் தீக்குளித்த போது, கழகத் தலைமையின் சனநாயக மறுப்புக்கு எதிரான இந்த இளைஞர்களின் உணர்ச்சியை மதித்தோம் என்றாலும், இதற்காகத் தீக்குளிப்பு என்பதை ஏற்க இயலவில்லை.

அந்த நேரம் நாற்காலி இதழில் “என்று ஒழியும் இந்தத் தீச்செயல்?” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன்.

இராசீவ் காந்தி கொலைக்குப் பின், தமிழகத்தில் தமிழீழ ஆதரவு மங்கிக் கிடந்த சூழலில் 1997இல் அப்துல் ரவூப் தீக்குளித்தார். தமிழகத்தில் ஈழ ஆதரவுக்காக நடந்த முதல் தீக்குளிப்பு இதுவே, பெரம்பலூரில் அப்துல் ரவூப் நினைவைப் போற்றி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும் போது இப்படிச் சொன்னேன்:

“தமிழீழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தமிழகத்தில் யாருமில்லை என்ற எண்ணம்தான் அப்துல் ரவூப்பைத் தீக்குளிக்கத் தூண்டியது. அப்துல் ரவூப் தீக்குளிக்கப் போவது முன்கூட்டியே எனக்குத் தெரிந்திருந்தால், தீக்குளிக்க வேணடாம், நாம் சேர்ந்து போராடுவோம், இப்போதைய நிலைமையை மாற்றுவதற்காகப் போராடுவோம் என்று எடுத்துச் சொல்லித் தடுத்திருப்பேன்.”

அப்துல் ரவூப் தீக்குளித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பினும் அவரது ஈகத்தைப் போற்றி தமிழ்த் தேசம் ஏட்டில் எழுதினேன்:

“ஒற்றை மனிதனாய் ஊர்வலம்

அற்றை நாளில்

பெரம்பலூரில்

தீப்பந்த ஊர்வலம்

மனிதனே பந்தம்

ஈழத்தோடு தமிழினப் பந்தம்

எலும்புத் திரியில்

குருதி எண்ணெய்

எரிய நடந்தான்

கருகி விழுந்தான் –

எழுந்தோம் உயிர்த்து.”

தமிழீழ மக்கள் மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தச் செய்வதற்காகத் தமிழகம் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருந்த சூழலில் முத்துக்குமார் தீக்குளித்தார். இந்தச் செய்தி கிடைத்த போது, முதலில் ஏற்பட்ட எண்ணம் “இப்படிச் செய்திருக்கக் கூடாது” என்பதாகவே இருந்தது.

அன்றாடம் வந்து கொண்டிருந்த தமிழின அழிப்புச் செய்திகளால் ஏற்பட்ட துயரம், சிங்கள இன வெறியர்கள் மீதும் அவர்களின் கூட்டாளிகளாகச் செயல்பட்ட இந்திய ஆட்சியாளர்கள் மீதும் ஏற்பட்ட வெறுப்பு, தமிழக ஆளுங்கட்சியும் பிற அரசியல் கட்சிகளும் போரை நிறுத்த உருப்படியாக எதுவும் செய்ய முடியாமை குறித்தான வருத்தம்… இத்தகைய உணர்ச்சிகள் ஒன்றுசேர்ந்து முத்துக்குமாரைத் தூண்டி விட்டதாகவே நினைத்தேன்..

முத்துக்குமாரின் இறுதி மடலைப் படித்த போது, இவர் உணர்ச்சிவயப்பட்டதால் மட்டும் இந்த முடிவுக்கு வரவில்லை என்று தெரிந்தது.

இதற்கு முன் தீக்குளித்தவர்கள் உணர்ச்சிவயப்பட்டுச் செய்ததை முத்துக்குமார் அறிவுவழிப்பட்டுச் செய்திருப்பது புரிந்தது. முத்துக்குமார் சிந்தனைத் தெளிவுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டது நமக்குப் பேரிழப்புதான்.

ஒரு வீரத்தமிழனை மட்டுமல்ல, சீரியதொரு வருங்காலத் தலைவனை -- இளைஞர்களின் வழிகாட்டியை -- நாம் இழந்து விட்டோம். ஆனால் ஒரு தற்கொடைப் போராளி தன்னோடு சேர்த்துப் பகைவனையும் அழிப்பது போல், முத்துக்குமார் தன்னோடு சேர்த்து வேறு பலவற்றையும் அழித்திருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்துக்குமார் எரிந்த போதும், எரிந்து கருகிய உடல் மீண்டும் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட போதும்… பகைவனின் பசப்பு மொழியும் எரிந்தது. இரண்டகத்தின் ஏமாற்றும் மோசடியும் எரிந்தன. நம் சோம்பலும் ஒற்றுமையின்மையும் கூட எரிந்தன.

முத்துக்குமாரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தபோதுதான், தோழர் கலைச்செல்வன் வந்து சேர்ந்தார். இவரைக் காட்டிலும் இன்னும் நெருக்கமாக, இன்னும் முழுமையாக முத்துக்குமாரை அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது என நம்புகிறேன்..

முத்துக்குமார் மொட்டவிழ்ந்து நெருப்பு மலராய் விரிந்த கதையை அவர் சுருக்கமாக வரைந்து கொடுத்தார். முத்துக்குமார் -- நெருப்பாய் வாழ்ந்தவன் என்ற தலைப்பில் அதனை நூலாக்கி தமிழ்த் தேசம் வெளியீடாக்கினோம்.

முத்துக்குமாரின் உள்ளத் துறைந்த உண்மை ஒளிக்குச் சான்றான அவரின் கவிதைகளையும், அவர் ஒப்படைத்துச் சென்ற எழுத்தாயுதமாம் இறுதி மடலையும், அவரைப் பற்றி ஈழப் பாவலர்கள் புதுவை இரத்தினதுரையும் காசி ஆனந்தனும் எழுதிய கவிதைகளையும், அவரது இறுதி மடல் குறித்துத் தோழர் கலைவேலு எழுதிய ஆய்வுரையையும் இணைத்து வெளியிட்டோம்.

முத்துக்குமார் – நெருப்பாய் வாழ்ந்தவன்… இந்நூலின் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

- தியாகு

 

Pin It