மார்கழி மாதம்
மாக்கோல வாசல்
மலரில்லா துளசிச்செடி
மாலைநேர வெயில்
மங்காத நிலவொளி
தூணில்லாத வீடு
துணையில்லாத படுக்கை
மனங்கொள்ளாத கனவு
இவையெல்லாம்
இன்னும்
மணங்கொள்ளாத என் நிலைதனை
திரும்பத் திரும்ப உரைத்தாலும்
ரசனையாகத் தான் சென்றது.
என் நாட்களும்
ராசியில்லாதவள் இவள் என்ற
ரகசிய தூற்றலோடு...

இருப்பினும் கேட்கின்றேன்
சொர்க்கத்தில் நிச்சயம்
சொந்த பூமியில் திருமணம்
சொல்லிய பெரியோரெங்கே!

நிச்சயம் நடந்தேரியதோ நானறியேன்,
நிச்சயமாய் திருமதியாவேனோ நானறியேன்
நெடுநாளாய் காத்திருக்கிறேன்
நேர்த்தியான கணவன் வேண்டாம்,
நேர்ந்தவனாவது போதுமென்று;

நேரந்தவறிய காரணத்தால்
நேரத்துடிக்கும் கணவன்
எனைக் காணாமல் அலைகின்றானோ,
இல்லை கண்ணில்லாமல் திரிகின்றானோ!
கன்னி உதிர்ந்து நானும்
முதிர் கன்னி என்றும் பட்டம் பெற்றேன்.
இன்னுமும் காணாததனால்
காரிகையின் நெஞ்சு
கலங்கிப் போய் சிந்திக்கிறது.
கல்யாண கோலத்தோடு
கணவனை சேர்வேனோ.
இல்லை
காலங்கடந்தவள் இவளென்னும்
கண்டவர் தூள்ளலோடு
கருகித்தான் போவேனோவென்று.

Pin It