"அன்பில் தழைக்குமாம் இவ்வையம்" என்றான் பாரதி. வாழ்வுப் பெருநதி பிரபஞ்சப் பெருவெளி முழுதும் நுங்கும் நுரையுமாகப் பிரவகிக்க அன்பே அடிப்படை. வாழ்வை அகம், புறம் எனப் பகுத்து வாழ்ந்தது தமிழ்ச்சமூகம். அகத்திலும் திணை நெறியைத் திரட்டிப் பார்த்தது தமிழியம். அகத்தில் புறமும் புறத்தில் அகமுமாய் அகப்புறக் கலவையும் இதில் உண்டு.

உளவியல் போன்ற புது அறிவுத்துறைகள் கருக்கொள்ளும் முனபே மனித உளப்பாங்கின் ஆழ்வேர்களைக் கண்டு சொன்னவை சங்க இலக்கியங்கள். பார்வைத் தொடங்கிப் பள்ளி வரை மனித உள்ளங்களின் வேதியியல் மாற்றங்களை நுட்பமாகப் பந்தி வைப்பவை தமிழ் அக இலக்கியங்கள். இவை ஒரு வகையில் மனிதர்களை வாசிக்கக் கற்றுத்தருபவை; வாழப் பழக்குபவை; வாழ்விணையின் வலியையும் வலிமையையும், பூரிப்பையும் உணர்த்துபவை. இந்த மரபின் தொடர்ச்சிதான் கடவு மீது காதலாகி கசிந்துருகும் பக்தி இலக்கியங்களாவும் விரிகின்றன மனிதனிடத்தில் இல்லாதையும் மனிதனுக்கு அவசியமானதையும் தானே கடவுளிடத்தில் காண முடியும் போகட்டும் இன்று மனிதன் புறத்தில் பிரமாண்டமாய் உச்சத்தில் வளர்ந்துவிட்டான். ஆனால் அவனது அகம் ரொம்பவும் ”ருங்கிவிட்டது அகத்தை உயிர்ப்பிக்க அன்பை, காதலை மீண்டும் மீண்டும் காதல் குறித்த அனுபவங்கள் அனுமானங்களாகவேணும் தேவைப்படுகிறது கடைசி மனிதன் வரை காதலும் காதல் இலக்கியங்களும் இருந்துதான் ஆக வேண்டும்.

இன்று பெண்கள் தங்கள் உலகின் பூட்டிய அறைகளைத் திறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் மனச்சாளரங்கள் வழியே புழுக்கமும் அனல் தகிப்பும் மிகுந்த ‹ரைக்காற்றாய் மனப்பதிவுகள் உடல் மொழியும் மனவெளியும் @சர்ந்தும் இலக்கியப் பிரதிகளாகின்றன. உக்கிர வெளிப்பாடுகளூடே மென்மையாய் சில தருணங்களும். இவை மென்மை என்ற போதிலும் இதிலும்  ஊடாக கூர் மழுங்கியதன் முணுமுணுப்பும் தன்னின் முழுமையை அறியாததும் அங்கீகரிக்காததுமான தவிப்பும் உள் ஒடுங்கி நிற்பதைக் காணமுடிகிறது.

கவிஞர் அகிலாவின் "நீயில்லாத பொழுதுகள்..." கவிதைத் தொகுதி இந்த உணர்வுகளையே தருகின்றது. எளிமையும், உண்மையும் அழகாய் விரிகின்றன இவரின் கவிதைகளில். எந்த எதிர்பார்ப்புமற்ற பெண் மனதின் ரீங்காரங்களாக இவை.

வாழ்க்கையை வண்ணமயமாக்கும் மனதை இ@லசாக்கும் வல்லமைமிக்கவையாக இக்கவிதைகள். படிமம், குறியீடு, இருண்மை... இன்னபிற இத்தியாதி தொழில்நுட்பங்களைக் கடந்து எளிய மனதின் விருப்பப் பாடல்களாக இவை. "முட்டுவேன் கொல்?" என்ற ஒளவையின் மரபுத் தொடர்ச்சியாய் இவரின் கவிதைகள். "மருந்து பிறிது இல்லை. அவர் மணந்த மார்பே?' என்ற நன்முல்லையும், "மனக்கவல்பு இன்றி, மாழாழ்ந்து எழுந்து' என்ற முடத்தாமக்கண்ணியும் "சிறை ஆடு கடும்புனல் அன்னஎன்' நிறை அடு காமம் நீந்துமாறே என்ற நல்வெள்ளையும் அகிலாவின் நவீன சொற்களில் தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

"அணுக்கள் வரை அங்கலாய்த்து

காதல்மொழி பேசி

மயக்கத்தில் கட்டுண்டு

மௌனித்துக் கிடக்கையில்

தயவு செய்து ஒரு கவிதை என்கிறாய்

இனியொரு முறை

அனுப்பிளப்பு என்பதில்

துளியளவும் சம்மதம் இல்லை

அதற்கான

சாத்தியமும் இல்லை"

மௌன மயக்கம். ஒன்றான நிலை சொற்கள் பயனற்றுப் போகின்றன.

இயற்கை அகத்துக்கு மிகவும் நெருக்கமானது. இயற்கைப் பொருள்கள் அகவாழ்வில் பற்றிப்படர்ந்து வருபவை.

"தனித்த இரவுகளில் என்னுடன்

ஏங்கித் தவிக்கும்  நான்

உடுத்திய தாவணியின்

இழைகளூடே

உறங்குவது போல் நடிக்க

உனக்குப் பிடித்த

ஊதா நிறப் பூக்கள்"

தலைவனுக்குப் பிடித்த ஊதா நிறப்பூக்கள் தலைவனாகவும் கவிதையில் ஆகிவிடுகின்றன.

"பற்றுவதற்கு முன்

பற்றிக்கொண்ட காதலில்

அணைத்த பின்னும்

அணையாமல் தொடர்கிறது

தேகத்தீ"

காதலும், காமமும் அகத்தின் இரு விழிகள். பற்றுதல்  பற்றிக் கொள்ளுதல்; அணைத்தல்  அணைதல்; காமக் கடும்புனலாய் மாறி விடுகின்றன இங்கே வார்த்தைகள்.

"இல்லாததை இருப்பது போலவும்

இருப்பதை இல்லாதது போலவும்

பாவிப்பதுதானே

நம் சிறப்பு."

இதுதான் காதல். நனவுக்கும் கனவுக்கும் அசலுக்கும் நகலுக்கும் நடுவே. இவை காதலில் மட்டும் சாத்தியம். யதார்த்தம் மீறிய கற்பனைகளோடு நெருங்கிய உள்ளங்களின் பரவசம் இது.

"ஒரு முறையேனும்

வீட்டு வாசல்வரை

வந்துபோ

காவல் தெய்வம்

களவு போனதாய்

பிதற்றிக் கொண்டிருக்கிறான்

பூசாரி ஒருவன்"

எனக் காதலின் மகத்துவமும் வீரியமும் சொல்லும் போதும்,

"உன் அழகு கூடிக்கொண்டே போகிறது

மெருகேற்றப் போராடுகிறது  என்

வீட்டுக் கண்ணாடியின்

பின்புறப் பாதரசம்"

எனக் காதலின் எல்லையில்லா அன்பு ஊடுருவலை அதிசயிக்கும் போதும்,

"விதைத்த நினைவுகளை

மீண்டும் மீண்டும்

அறுவடை செய்கிறேன்

நீ இல்லாத நீர்த்த பொழுதுகளில்"

எனக் காதல் நினைவின் நீட்சியாய் வாழ்வின் நடப்புத் துளிகளை அடையாளம் காணும் போதும் அகிலாவின் கவிதை முகம் பிரகாசமாய் ஒளிர்கிறது.

"கவிதைகளை வாசிக்கிறாள்

யாரென்று கேட்கிறாள்

தலைப்பின் விளக்கம் வினவுகிறாள்

மறைக்க முயல்கிறேன்

சினந்து சீறுகிறாள் தோழி

நட்பா? காதலா?

என்ன செய்ய நான்?"

சங்க மரபின் தலைவிதோழி உறவு நிலையை நினைவூட்டும் கவிதை. காலங்கள் மாறினாலும் கவிப்பொருண்மை மாற்றமில்லாமல் தொடர்கின்றது.

"அலைபேசியில் விட்டுவிட்டுக்

கேட்கிறது உன் குரல்

விடாமல் பரிதவித்து வந்து விழுகிறது

என்பதில்...

இப்படித்தான் அணுமானத்தில்

சரி செய்யப்படுகிறது

காதல் அலைவரிசை"

தூது, நேர்ச்சந்திப்பு, மடல், தொலைபேசி இன்று அலைபேசி இணையம்... எனக் காதலின்/ காதலரின் சந்திப்பும் பரிவர்த்தனைகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இப்படி ஏராளம் கவிப்புதுமையும் பார்வைப் புதுமையும் மரபுத் தொடர்ச்சியுமாக தன் கவிதைகளைப் படைத்துள்ளார் அகிலா.

"அனுமானத்தில் சரி செய்யப்படும் காதல் அலைவரிசை" இது இன்றைக்கே சாத்தியம். நவீனத்தின் கவிப்பதிவு இது.

அன்பையும் கருணையையும் தன் சுற்றமாகவும். வாழ்வாகவும் வரித்துக் கொண்ட ஒருவர் தன் வாக்குமூலமாக அன்பையே தர இயலும். அகிலாவின் கவிதைகளின் உயிர் நிலம் இதுதான். தேடுதல் வேட்கை, செய்நேர்த்தி, அறிவூட்டம், பொதுப்புத்தி, அர்ப்பணிப்புணர்வு ஆகிய உயர்குணங்களின் கூட்டு மொத்தமாக விளங்கும் கவிஞர் அகிலா இன்னும் பல படைப்புச் சாதனைகள் செய்வார் என்பதற்கான முன்னறிவிப்பாக "நீயில்லாத பொழுதுகள்...' அமைகின்றது. "எந்தச்சிக்கலும் இல்லாமல் கண்வழியே மனதில் வழிந்து, உணர்வில் பரந்து, ஆன்மாவில் இனிப்பது. பார்வை விசாலப்படும்போது இவர் கவிதை புதிய புதிய உச்சங்களைத் தொடும்" என்ற நாவலாசிரியர் பொன்னீலனின் வார்த்தைகளை வழிமொழியலாம்.

Pin It