1.

உபயோகப்படுமென்று
நான் கற்ற அனைத்தையும்
என்னிலிருந்து
அப்புறப்படுத்தியது
நீங்கள் முடிவு செய்த
அந்த சுபயோக சுபதினம்..!!
ஒப்பாரியின்
துயரம் தொனிக்கிற
நாதஸ்வரமும்,
இடியின்
மிரட்டல் தொனிக்கிற
தவிலும்,
சேர்ந்து கும்மாளமிட்டு
அடங்கியதற்கு
பிறகான நாட்களில்
என் எழுதுகோலை வீசிவிட்டு
உன் கரண்டியைப் பற்றினேன்
என் தூரிகையைப் போட்டுவிட்டு
உன் துடைப்பத்தைப் பிடித்தேன்.

 2

தரையில் உதைத்தே
என் சதங்கைகளை
உதிர்த்துவிட்டு
உன் கொலுசுகளையும்
மெட்டிகளையும்
அழுதுகொண்டே
அணிந்து கொண்டேன்.
என் விளையாட்டு
ஆடைகளையெல்லாம்
வேகமாகக் களைந்தெறிந்து
உன் புடவைகளுக்குள்
குடியேறினேன்.
என்னை நிமிர்த்துமென்று
நான் கற்ற கல்வி
நம் பிள்ளைகளின் கல்விக்கு
அடியுரமாய் மாறியது.
இவ்வளவிற்குப் பிறகும்
பறிகொடுக்காமல்
நான் பாதுகாத்து வைத்திருக்கும்
என் பாடல்களை
குளியலறையின் தனிமையில்
கண்ணீரோடு சேர்த்து
அவ்வப்போது கரையவிடுகையில்,
அதையும் மறித்து
“போதும் வா!” என்கிறாய்
கணிப்பொறியின் முன் அமர்ந்து..!!!

நன்றி: மல்லிகை மகள்

- ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

செல்பேசி: 94449-56924

Pin It