மத்தியில் இனிமேல், ஒரு ஆட்சி தேவை தானா? என்றக் கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டேயிருக்கிறது. முன்னேற்ற நல அரசு, என்று தன்னை இந்திய அரசியல் சட்டம் அறிவித்துக் கொண்டுள்ளது. யாருடைய முன்னேற்றம் என்பதற்கு அடித்தள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்று பொருள் கூறப்படுகிறது. அந்த மக்களின் பாதுப்பிற்கான எந்த அதிகாரமும் அரசாங்கத்தின் கையில் இல்லை என்றால், பின் இவ்வாறன ஒரு ஆட்சி இருந்து என்னப் பயன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் அனைத்து விலை ஏற்றத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிற, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 16 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்கு நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் மத்திய அரசு ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது.

விலை உயர்வை குறைக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்பது தான் அந்த பதில். பின் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்றக் கேள்விக்கு கார்பரேட் கம்பெனிகளிடம் தான் இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இதனை வேறுவகையில் கூறவேண்டும் என்றால் விலைகுறைக்கும் அல்லது கூடுதலாக்கும் அதிகாரம் கார்பரேட் கம்பெனிகளிடம் போய்விட்டது. இது உண்மை எனில், பின் ஏன் மத்தியில் ஒரு ஆட்சி என்ற உணர்வுதான் மனதுக்குள் எழுந்து கொண்டேயிருக்கிறது. இது தான் இந்திய மக்களின் கேள்வியும் கூட.

புதிய பொருளாதாரக் கொள்கை, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடமிருக்கும் அதிகாரங்களை கார்பரேட் கம்பெனிகளுக்கு மாற்றிவிட்டது. விலைவாசியைக் குறைக்கும் போராட்டத்தில் விலையை கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்பதை முதன்மையாகக் கொள்ள வேண்டும். இதில் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்வது அவசியமானதாகும்.

பெட்ரோல் டீசல் விலையைப் பொறுத்த வரை, மத்திய மாநில அரசு அதன் மீது விதிக்கும் வரிகள் தான் கூடுதல் விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பலநாடுகளில் இந்தியாவை விட பெட்ரோல் டீசலை, குறைந்த விலைக்கு விற்பதற்கு அங்கு உள்நாட்டில் உள்ள குறைந்த வரியே காரணமாக அமைந்துள்ளது. எனவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரியைக் குறைக்க தனிக்கொள்கை உருவாக்க வேண்டும்.

எது எப்படியிருந்தாலும் எல்லாவற்றிற்குமான பின்புலத்தை வழங்குவது ஏகாதிபத்தியத்தின் உலகமயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It