உலக நாடுகளை நலிந்த நாடுகள் என்றும், வளர்ந்த நாடுகள் என்றும் வளரும் நாடுகள் என்றும் மூன்றாக வகைப்படுத்தலாம். இந்தியா போன்றவை வளரும் நாடுகள், அமெரிக்கா போன்ற மிகச் சில நாடுகள் வளர்ந்த நாடுகள். வளர்ந்த நாடுகளினுடைய எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கைதான். ஆனால் அந்த குறைந்த எண்ணிக்கையிலே ஜப்பானும் இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பெரிய வியப்பைத் தருகிற செய்தி.

மற்ற நாடுகளெல்லாம் வளர்ந்த நாடுகளாக இருப்பதிலே இல்லாத ஒரு வியப்பு ஜப்பானுக்கு மட்டும் ஏன் என்று நீங்கள் கேட்கலாம் ஜப்பானுடைய நிலவியல் அமைப்பை, ஜப்பான் எதிர்கொள்கிற துன்பங்கள் நாம் கணக்கிட்டுப் பார்த்தால் வளர்ந்த நாடாக ஜப்பான் வந்திருப்பது எவ்வளவு பெரிய செயல் என்று நம்மால் உணர முடியும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கையே ஜப்பானுக்கு எதிராகத்தான் இருக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு  ஆண்டுக்குச் சராசரியாக 1500 முறை நிலநடுக்கம் ஓர் ஆண்டுக்கு வருகிறது என்று சொன்னால் அதை எப்படி நம்புவது என்றும் புரியவில்லை. அந்தஅளவுக்கு ஏதாவது ஒரு பகுதியில் நிலநடுக்கம் வந்துகொண்டே இருக்கிறது.

எரிமலைகளும் ஜப்பானில்தான் மிகுதி. ஏறத்தாழ 145 எரிமலைகள் ஜப்பானில் இருப்பதாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். அதிலும் பாதி எரிமலைகள் இன்னமும் உயிரோடு இருக்கின்றன. எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறுகிற நிலையிலே இருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை என்பதே நிலையற்றதாக இருக்கிறது. ஜப்பானுக்குப் போய்வந்த நண்பர்கள் சொல்லுவார்கள், "அவர்கள் பெரும்பாலும் நிலையாக வீடுகளைக் கட்டிக்கொள்வதில்லை. எந்த நேரத்திலும் அங்கிருந்து இடம் பெயர்ந்து விடுவறத்கு ஏதுவாகத்தான் அவர்களுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நாம் இன்னும் குறித்துக் கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், எரிமலைகளை நினைத்தாலே நாம் அஞ்சுகிறோம். அவர்கள் அதைக் கண்டும்கூட அஞ்சுவதில்லை. எரிமலைகள் வெடிக்கும் என்று தெரியும். வெடித்ததற்குப் பிறகு சில இடங்களிலே அதுவும் கியூஸ் என்கிற இடத்திலே எரிமலைகள் வெடித்துச் சிதறி அடங்கிவிட்டன. அணைந்து விட்டன. அதற்குப் பிறகு இப்போது அந்த நிலத்தைப் பண்படுத்தி அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியவில்லை.

இத்தனை இயற்கையின் எதிர்ப்புகளுக்கிடையிலே, ஒருபக்கம் எரிமலை, இன்னொரு பக்கம் நிலநடுக்கம் என்கிற எதிர்ப்புகளுக்கு இடையிலே ஜப்பான் வளர்ந்தது. எல்லாவற்றையும் தாண்டி உலகில் எந்த நாடும் சந்திக்காத ஒரு மிகப்பெரிய பேரழிவையும் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் சந்தித்து. அமெரிக்கா அணுகுண்டு போட்டது ஜப்பானிலேதான் என்பதை நாம் அறிவோம். 45 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி அந்த அணுகுண்டு உலகத்தில் முதன்முதலாக இந்த பூமியைத் தொட்டது அதனுடைய நேரத்தை எல்லாம் மிகச் சரியாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். 8 மணி, 15 நிமிடம், 17 நொடிகளுக்கு ஜப்பான் நேரப்படி அந்த அணுகுண்டு விழுந்தது. அந்த அணுகுண்டுக்கு அமெரிக்கா வைத்த பெயர் என்ன தெரியுமா? லிட்டில் பாய் என்பது சின்னப்பையன் என்று பெயரிட்டார்கள்.

ஒரு சின்னப்பையன் நாட்டையே அழித்துவிட்டான். அன்றைக்கு அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் அணுகுண்டைப் போடுவதற்கான பச்சைக்கொடியைக் காட்டினார். அதனால் வரலாற்றில் அவருக்கு ஒரு கறை இன்னமும் இருக்கிறது. 6 ஆம் தேதி ஹிரோஷிமா விலும் 9ஆம் தேதி நாகசாகியிலும் இரண்டு குண்டுகளை அமெரிக்கா ஜப்பான் மீது வீசியது. அதனுடைய விளைவுகள், பின் விளைவுகள் என்ன என்று கணக்குப் பார்த்தால் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குத் துயரங்களும், கொடூரங்களும் நடந்து இருக்கின்றன. அந்த அணுகுண்டு வீச்சில் தப்பிப்பிழைத்த ஒருசிலர், பின்னால் அதுப்பற்றி செய்திகளைத் தந்துள்ளனர்.  இன்றைக்கும் அசை பல ஏடுகளில் பதிவாகியிருக்கின்றன.

ஒரு மருத்துவர் சொல்லுகிறார். தன்னிடத்தில் வந்த நோயாளிகளுடைய நிலை என்னவாக இருந்தது என்று சொல்கிறார். அவர்களுடைய சதைகள் எல்லாம் ஈரமாகவும், சொதசொதவென்றும் இருந்தன. பிணங்கள் அகற்றுவதுகூடப் பெரிய காரியமாக இல்லை. ஆனால் உயிரோடு இருந்தவர்கள் எடுத்த வாந்தியையும், அவர்களை அறியாமலேயே அவர்களால் வெளியேற்றப்பட்டுவிட்ட சிறுநீர், மலம் போன்ற கழிவுகளையும் அப்புறப்படுத்துவதுதான் மிகப்பெரிய துன்பமாக இருந்தது என்று சொல்கிறார். நாம் அறியாமலேயே எல்லாக் கழிவுகளும் வெளியேறுகின்றன என்பது மனித வாழ்க்கையினுடைய மிகப் பெரிய அவலம். சிலர் தங்களுடைய குடலைத் தாங்களே கையில் ஏந்திக் கொண்டு ஓடி வந்தார்கள் என்றும் அவர் எழுதுகிறார்.

அன்றைக்குத்தான், அப்போது இறந்தவர்களுக்குத்தான் துன்பம் என்று கருதவேண்டாம். இறந்து போனவர்கள் ஏறத்தாழ 2 லட்சம் பேர் என்று சொல்லுகிறார்கள். இரண்டு லட்சம்பேர் இறந்து போனார்கள் என்பது மட்டுமே அல்ல, அதற்குப் பிறகும் ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளுக்கு அதனுடைய பாதிப்பு இருந்தது. சில குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன. பலருக்குப் புற்றுநோய் வருவது என்பது அங்கு ஒரு இயல்பான நிலை ஆகிவிட்டது. எனவே மிகப்பெரிய பின்விளைவுகளை, இரண்டு தலைமுறைகளுக்கான பின்விளைவுகளை அந்த இரண்டு அணுகுண்டுகளும் ஏற்படுத்தின என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிலநடுக்கம், எரிமலைகள் என்பது ஒரு பக்கத்திலே அமெரிக்காவினுடைய அணுகுண்டுகள் என்பது இன்னொரு பக்கத்திலே... இவ்வளவையும் தாண்டி இன்றைக்கு வளர்ந்த நாடுகளுள் ஒன்றாக ஜப்பான் ஆகி இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் வியப்பா? இல்லையா? அதுவும் எவ்வளவு பெரிய வளர்ந்த நாடாக ஆகியிருக்கிறது தெரியுமா? உலகில் 13 வங்கிகள் உலக வங்கிகளாக இருப்தே ஜப்பானுடைய வங்கிகள்தான். பாங்க் ஆப் டோக்கியோ உள்பட 13 வங்கிகள், ஜப்பானுடைய வங்கிகள் இன்று உலகம் முழுமைக்கும் பரவிக் கிடக்கின்றன. அதுமட்டுமல்ல கணிப்பொறித்துறையில் உலகத்திலே அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திலே இருக்கிறவர்கள் ஜப்பானியர்கள்தான் அமெரிக்காவினுடைய டாலரையும், ஐரோப்பாவினுடைய யூரோவையும்விட ஜப்பான் போட்டிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களாலே தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு ஜப்பானியருடைய நாணயத்தினுடைய மதிப்பு கூடிக் கொண்டிருக்கிறது.

இதை எல்லாம் தாண்டி அவர்கள் கட்டுமானப் பணிகளிலே செய்திருக்கிற சாதனைகளை நினைத்து பார்த்தால், அதுவும் கூட ஒரு வியப்பாக இருக்கிறது. கடலுக்கு அடியிலே ஒரு பெரிய பாலத்தை அவர்கள் அமைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியிலே வேறு நாடுகளுக்கும் பாதைகள் அவர்கள் அமைத்திருக்கிறார்கள். கடலுக்குள் வேறு நாடுகளிலும் பாலங்கள் இருக்கின்றன. இங்கிலிருந்து பிரான்சுக்கு கடலுக்கு அடியிலே Tube Train என்று சொல்லுவார்கள். அதிலே வர முடியும். ஆனால் ஜப்பானில் இருக்கிற அளவுக்கு நீளமான கடலுக்கு அடியில் இருக்கிற பாலம் வேறு எங்கும் இல்லை. 33 மைல் நீளம் நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. இரண்டு தீவுகள் பாலத்தினால் இணைக்கப்படுகின்றன. கடலுக்குக் கீழே பாலம் அமைத்திருக்கிறார்கள். அது 33.5 மைல் நீளம். எனவே இவைகள் எல்லாம் உலகச் சாதனைகளாக இருக்கின்றன.

குள்ளம் குள்ளமாக இருக்கிற மனிதர்கள் உலகத்தில் உயரமான இடத்தை நோக்கி வளர்ந்திருக்கிறார்கள். என்ன காரணம்... வேறொன்றுமில்லை.... ஒரு வரியில் கூட வேண்டாம், ஒரு சொல்லில் சொல்வதானால் உழைப்பு என்பதுதான். தொடர்ந்த உழைப்பு, நம்பிக்கை, விடா முயற்சி தனக்கு வந்த அழிவுகளையும், பேரழிவுகளையும் எதிர்கொண்டு அவைகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் உழைத்துக் கொண்டிருந்த ஒரே காரணம். இன்று ஜப்பானை நலிந்த நாடுகளிலிருந்து வளர்ந்த நாடாக ஆக்கியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் வளர்ந்த நாடாக... இந்திய மட்டுமல்ல, உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு நாடும் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.

Pin It