அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் நவம்பரில் நடந்த வாக்கெடுப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கருக்கலைப்பை உறுதி செய்வதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பின்போது கருக்கலைப்புக்கு ஆதரவான பிரசாரங்களில் ஜனநாயகக் கட்சி­யினருடன் கணிசமான அளவிலான குடியரசுக் கட்சியினரும் இணைந்து கொண்டனர் என்பது வியப்பளிக்கும் விஷயம்!

இந்த வெற்றியைக் கொண்டாடும் மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கும் இதன் தாக்கம் பரவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; செயல்படுகின்றனர்.

குடியரசுக் கட்சி ஆதரவு மாகாணமான ஒஹையோவில் மக்கள் கருக்கலைப்புக்கு ஆதரவாக நிற்கின்றனர். வர்ஜீனியாவிலும் இதே பிரச்சினையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜனநாயகக் கட்சியினர், இதையே தேர்தல் பிரச்சினையாக்கியதன் மூலம் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கென்டகியிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.

ஏற்கெனவே, கலிபோர்னியா, மிச்சிகன், வெர்மான்ட் போன்ற பல மாகாணங்கள் கருக்கலைப்புக்கு ஆதரவான நிலையெடுத்திருக்கின்றன.

ஒஹையோ மாகாணத்தில் மட்டும்தான் இந்த ஆண்டு கருக்கலைப்பு உரிமை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இதேபோன்ற வாக்கெடுப்பு, அதிபர் தேர்தலில் முக்கியப் பங்களிக்கக் கூடிய அரிசோனா, நெவாடா மாகாணங்களிலும் நடைபெறவிருக்கிறது. ஒஹையோவில் குறிப்பிடத் தக்க அளவில் கருக்கலைப்புக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சியினரிடையே பிளவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒஹையோ, வர்ஜீனியா போன்ற மாகாணங்களில் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததும் ஆதரவளித்ததும் 2024 அதிபர் தேர்தலிலும், காங்கிரஸ் உள்பட பிற தேர்தல்களிலும் தங்களுக்கு சாதகமான ஒன்றாக மாறும் என்று ஜனநாயகக் கட்சி­யினர் நம்புகின்றனர்.keep abortion legalஏன்? எதற்காக?

1973-ல் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன், பெண்களுக்குக் கருக்கலைப்பு உரிமையை முதலில் வழங்கிய நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

ஐம்பது ஆண்டுகளாக இருந்த கருக்கலைப்பு உரிமையை பெண்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிவந்த அடிப்படை உரிமைகளில் ஒன்றைப் பறித்து இரத்து செய்வதெனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அமெரிக்க கருக்கலைப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட, கருக்கலைப்பு தொடர்பான அதிகாரங்கள் தற்போது அந்தந்த மாகாணங்களுக்கு மடை மாற்றப்பட்டு விட்டன. பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்குத் தடை விதித்துவிட்டன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. சட்ட வழியிலான போராட்டங்கள் காரணமாக அனைத்து மாநிலங்களாலும் அப்படியே கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த இயலாத நிலை இருக்கிறது (அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர மற்றவை தொடர்பாகத் தங்கள் விருப்பப்படிச் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், அமல்படுத்தலாம்).

தற்போது ஒவ்வொரு மாகாணமாகத் தீர்மானித்து வருகின்றன. பெரும்பான்மையான மக்களின் மனநிலை கருக்கலைப்புக்கு ஆதரவானதாகவே இருக்கிறது. இந்தப் பிரச்சினை விசுவரூபம் கொள்ளும்; அதிபர் தேர்தலில் தீர்மானிக்கும் விஷயமாக மாறும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கருக்கலைப்பு வரலாறு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலுமே கருக்கலைப்பு தடை செய்யப்பட்டிருந்தது அல்லது சட்ட விரோதமென இருந்தது. பிரிட்டன், பிரான்ஸ், போர்த்துகல், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றின் காலனி நாடுகளாகவே எண்ணற்ற நாடுகள் இருந்ததால், அவர்களுடைய சட்டங்கள் அப்படியே பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய நூற்றாண்டுகளிலிருந்தே அதே நடைமுறை பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

1900-&களில் தொடங்கிக் கருக்கலைப்புச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன.

நாகரிக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த புதிய உலகில், கருக்கலைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்த முதல் நாடு, சோவியத் ஒன்றியம்தான்! பெண்ணிய செயற்பாட்டாளரான அலெக்சாண்டரா கொலன்டாய் அவர்களின் முன்முயற்சியில் 1920, அக்டோபரில் பெண்கள் நலன் தொடர்பான கருக்கலைப்புக்கு ஆதரவான சட்டம் இயற்றப்பட்டது.

தற்போது உலகம் முழுவதுமே பொதுவான போக்கு கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் அறுபதுக்கும் அதிகமான நாடுகளில் கருக்கலைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அமெரிக்கா, நிகாரகுவா, எல்சால்வடார், போலந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு தற்போது கருக்கலைப்புக்கு எதிரான நிலையை எடுத்திருக்கின்றன.

2020-&க்குப் பிறகு ஆர்ஜென்டீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கியுள்ளன. தென் கொரியா குற்றமில்லை என்று அறிவித்துள்ளது. நியு சிலாந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆதரவு பெருகிவர, கொலம்பியா சட்டப்படியாக்கியிருக்கிறது. மெக்சிகோவும் குற்றமில்லை என்றிருக்கிறது. அமெரிக்கா, ஹோண்டுராஸ் தவிர பல நாடுகள் கருக்கலைப்புக்கான தளங்களை விரிவுபடுத்திவருகின்றன.

இலத்தீன் அமெரிக்க - கரீபியன் நாடுகளில் கருக்கலைப்பை அனுமதித்த முதல் நாடு கூபா (கியூபா) தான். 1965 முதல் அது நடைமுறையில் இருக்கிறது. 1979- ல் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி, கருவுற்ற பெண்ணின் சம்மதம் இல்லாத கருக்கலைப்பு சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பயணத்தில் இன்று கருக்கலைப்பு, கருத்தடை போன்ற விஷயத்தில் நிறைய ஆறுதலான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இன்னமும் சில நாடுகள் மட்டும் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன.

வலதுசாரிகள் வலுப்பெறும் நேரங்களில் சில நாடுகளில் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும் மாற்றம் பெறுகின்றன. சிலே(சிலி)யில் 1931 முதல் 1989 வரையிலும் கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால், 1989-ல் அலெண்டே அரசைத் தூக்கியெறிந்து ஆட்சியைப் பிடித்த சர்வாதிகாரி பினோசே, கருக்கலைப்பைத் தடை செய்துவிட்டார். 2016- ல் மிச்செல் பேச்லெட்டின் அரசு மீண்டும் சில நிபந்தனைகளுடன் கருக்கலைப்பை மறுபடியும் அனுமதித்தது.

ஆண்டுக்கு 7.3 கோடி கருக்கலைப்புகள்

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 7. 3 கோடி கருக்கலைப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் 61 சதவிகித கருக்கலைப்புகள், எதிர்பாராத, தேவையில்லா கருவுறுதல் காரணமாக நேரிடுகின்றன.

தேவையற்ற தருணங்களில் பெருஞ் சுமையாக மாறி­விடக் கூடிய நிலையில், உலகம் முழுவதுமே தேவையற்ற கருவைக் கலைப்பதற்கான வழிவகைகள் எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னலிலிருந்து பெண்களை விடுவிக்கும் வகையில் கருக்கலைப்புச் சட்டங்கள் நெகிழ்வுத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா உள்பட 60-&க்கும் மேற்பட்ட நாடுகளில் கருக்கலைப்புச் சட்டங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. அயர்லாந்திலிருந்து நேபாளம் வரையிலும் கருக்கலைப்பு உரிமையானது, அடிப்படையான மனித உரிமையாக மாறிக் கொண்டிருக்கிறது.

உலகில் 22 நாடுகளில் மட்டும்தான் இன்னமும் கருக்கலைப்பு உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் ஏதோவொரு வகையில் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. தொழில்மயமான நாடுகளில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றியே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையாலும் பல நாடுகளிலும் பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது அடிப்படை மனித உரிமையென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் 60 சதவிகிதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவான நாடுகளிலும் 40 சதவிகிதம் பேர் கட்டுப்பாடுகள் கொண்ட மற்றும் எதிரான நாடுகளிலும் வாழ்கின்றனர்.

கருக்கலைப்புக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் நாடுகளில் ‘சட்ட விரோதமாக’ கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட நாடுகளிலும்கூட மருத்துவ வசதிக் குறைவு, விழிப்புணர்வின்மை, வறுமை காரணமாக முறையற்ற - பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன.

“பாதுகாப்பற்ற 97 சதவிகித கருக்கலைப்புகள் வளரும் நாடுகளில்தான் நடைபெறுகின்றன. பாதிக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் அனைத்தும் ஆசியாவில், அதிலும் மத்திய, தெற்கு ஆசியாவில்தான் நடைபெறுகின்றன. அதேபோல ஆப்பிரிக்காவில் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி பாதுகாப்பற்ற முறையில்தான் நடைபெறுகின்றன” என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஒரே பாதையில்

பல நாடுகள் கருக்கலைப்பு உரிமைகளைப் பரவலாக்கிவரும் நிலையில்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. பெண் உலகைப் பொருத்தவரை இது மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

இதனால், கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்கு சக்திகள் ஊக்கம் பெறும் எனக் கருதப்பட்டது. அப்படியே நடந்து கொண்டுமிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் கருக்கலைப்பு விஷயத்தில் பழைய காலத்தைத் திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது விளாடிமிர் புடின் தலைமையிலான தற்போதைய இரசிய அரசு.

உலகில் முதன்முதலில் கருக்கலைப்பு உரிமையைப் பெண்களுக்கு வழங்கிப் பெருமை கொண்ட இரசியாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற ஜே. வி. ஸ்டாலின் காலத்தில், 1936-ல், கருக்கலைப்பு சட்ட விரோதமாக்கப்பட்டது.

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இரு ஆண்டுகள் கழித்து, 1953ல் ஆபத்தான சட்ட விரோதக் கருக்கலைப்புகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

1991-ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கெல்லாம் அதிபர் போரிஸ் யெல்த்சின் உதவினார். கருத்தடை சாதனங்கள் தொடர்பாகவும் மருத்துவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். 1990-களின் பிற்பகுதியில் பிற்போக்காளர்களின் எதிர்ப்புக் காரணமாக அரசு உதவிகள் குறைக்கப்பட்டன.

2003-ல் கருக்கலைப்பு செய்துகொள்ளக் கூடுதலான நிபந்தனைகள் / கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. 2011- ல் மேலும் கட்டுப்பாடுகளைப் பிற்போக்கு மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

புரட்சிகர சோவியத் ஒன்றியத்தின் சிதைந்த மிச்சமான தற்போதைய இரசியாவின் அதிபரான விளாடிமிர் புடின் ஆட்சியில் கருக்கலைப்புக்கு அனுமதி இருந்தாலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. 2016-ல் கருக்கலைப்புக்கு எதிராகக் கடுமையான விதிகளுடன் சட்டமியற்ற புடின் அரசு முயன்றபோதிலும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முன்வரைவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனாலும், கருக்கலைப்புக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து, நாடு, பழைய காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இரசியாவில் இப்போதும் கருக்கலைப்பு சட்டப்படியானதே, பரவலாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என்றாலும் அண்மைக்காலமாகப் பிற்போக்கான ஒரு நாட்டைப் போல பல்வேறு நிலைகளில் கருக்கலைப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கருக்கலைப்புக்கு எதிரான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் புகார்கள் செய்யுமாறும் இணையவழி மனுக்களை அளிக்குமாறும், சிறுசிறு ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் செயற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்; என்ற போதிலும் பெரிதாகப் பலன் எதுவுமில்லை.

இரசியாவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கருக்கலைப்புக்கான வசதிகள், வாய்ப்புகள் முடக்கப்படுகின்றன. இப்போதே பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் கருக்கலைப்புகளை நிறுத்திவிட்டன. தேசிய அளவில் கருக்கலைப்புக்கு எதிரான மனநிலையைக் கருவுற்ற பெண்களிடம் உருவாக்குமாறு மருத்துவர்களை நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் புதிய விதிகள் காரணமாக அவசர காலக் கருத்தடைக் கருக்கலைப்பு மருந்துகளுக்குப் பெரும் பற்றாக்குறையும் நேரிடலாம்.

இரசியாவிலும் படிப்படியாகக் கருக்கலைப்பு வசதிகள் இல்லாமலாக்கப்பட்டு விடும் என அஞ்சப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தில் கருத்தடைச் சாதனங்கள் கிடைக்கப் பெறாத நிலையில், சட்டத்திலுள்ள வழிமுறை காரணமாக, பலமுறைகூட பெண்களால் கருக்கலைப்புகள் செய்து கொள்ள முடிந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, திட்டமிட்ட குடும்பம், குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு போன்றவற்றை அரசும் நலவாழ்வுத் துறையும் பிரசாரம் செய்ததால் கருக்கலைப்பு விகிதங்கள் குறைந்தன. அதேவேளை, எந்தவித நிபந்தனையுமின்றி 12 வாரங்கள் வரையிலும், விவாகரத்து, வேலையின்மை, வருவாய்ப் பற்றாக்குறை அல்லது வருவாய் இன்மை போன்ற ‘சமுதாய காரணங்களால்’ 22 வாரங்கள் வரையிலும்கூட கருவைக் கலைத்துக் கொள்ளப் பெண்களைச் சட்டங்கள் அனுமதித்தன.

நிலை மாற்றம்

‘பாரம்பரியமான விழுமியங்களை’ மேம்படுத்துகிற, மக்கள் தொகை பெருக வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இரசிய ஆர்த்தோடாக்ஸ் (பாரம்பரிய) சர்ச்சுடன் வலுவான கூட்டை ஏற்படுத்திக் கொண்ட இரசிய அதிபர் விளாடிமிர் புடின், அதிகாரத்துக்கு வந்த பிறகு நிலைமை மாறத் தொடங்கியது.

குழந்தை பெற்றுக்கொள்வதைவிட, கல்விக்கும் வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்க்கைத் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகப் பெண்களுக்கு இரசிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மிகையீல் முராஷ்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

காத்திருப்புக் காலம், கலந்தாலோசனை, பாதிரியாரின் அங்கீகாரம்

கடந்த இருபதாண்டுகளில் இரசியாவில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை - 1990-ல் 41 இலட்சமாக இருந்தது 2021-ல் 5. 17 இலட்சமாக - வெகுவாகக் குறைந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை காரணமாகக் கருவுற்றிருக்கும்பட்சத்தில் மட்டும் 12 வாரங்களிலிருந்து 22 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கச் சட்டப்படி அனுமதியளிக்கப்படுகிறது. சில பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிடுகின்றன. கருவின் நிலைமையைப் பொருத்து, மருத்துவரைச் சந்தித்த பிறகு இரு நாள்களிலிருந்து ஒரு வாரம் வரையிலும்கூட, அதுவும் மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், கருவைக் கலைக்கக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தவிர, இதனிடையே, கருக்கலைப்பு எண்ணத்தைக் கைவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட மனோரீதியிலான ஆலோசனைகளும் வழங்க முன்வருகின்றனர்.

இந்தக் காத்திருப்புக் காலம் என்பதே கருவுற்றுக் கலைக்க நினைக்கும் பெண்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. கருத்தரித்த பெண்களுக்கான பிரச்சினைகளையெல்லாமும் சந்திக்க நேரிடுகிறது.

இரசியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகள், கருக்கலைப்புக்கு முன்னர் கிறித்துவப் பாதிரியார் ஒருவருடன் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்துகின்றன. விருப்பத்தைப் பொருத்ததே இந்த ஆலோசனை என்று கூறப்பட்டாலும் கருக்கலைப்பை அனுமதித்து பாதிரியாரின் கையெழுத்தைப் பெற வேண்டியதாகத்தான சூழ்நிலை இருக்கிறது.

கருக்கலைப்பு மாத்திரைகளுக்குக் கட்டுப்பாடு

உக்ரைன் போர், நிலையற்ற பொருளாதாரச் சூழல் போன்றவற்றின் காரணமாக மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் இரசியப் பெண்களுக்கு ஆர்வம் இல்லாத தற்போதைய சூழ்நிலையில்தான் கருக்கலைப்புக்கு எதிரான சூழல் உருவாக்கப்படுகிறது.

2022-ல் கருக்கலைப்பு மாத்திரைகளின் விற்பனை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மருந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு 35 சதவிகிதம் குறைந்தாலும் 2022-க்கு முன்னர் இருந்ததை விடவும் அதிகம்தான். கருத்தடை மருந்துகளின் விற்பனையும் 2022-&23-ல் அதிகரித்துள்ளன.

தொடக்க நிலையிலேயே கருவைக் கலைப்பதற்கான கருக்கலைப்பு மாத்திரைகளின் புழக்கத்துக்குக் கடும் கட்டுப்பாடுகளை நலவாழ்வுத் துறை அமைச்சகம் விதித்திருக்கிறது. கருக்கலைப்பு மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட மருந்துகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, இவற்றுக்கான இருப்பு - பயன்பாட்டுக்கான பதிவுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் இதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கியிருக்கின்றனர். ஆனால், இதனால் அவசர காலக் கருத்தடை மாத்திரைகள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். 2024 செப். 1 முதல் இந்த விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும்போது பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகும்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து மருந்தகங்களிலும் கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைக்க முடியாத நிலையேற்படும். உறவுக்குப் பின் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடிய மாத்திரைகள் கிடைக்காத நிலையேற்படும். தேவையானபோது உடனுக்குடன் பயன்படுத்தக் கூடிய வகையில் கருத்தடை மாத்திரைகள் கிடைக்க வேண்டும். இதற்காக, மருத்துவரைச் சந்தித்து பரிந்துரைச் சீட்டுகளைப் பெறுவதென்பதெல்லாம் சிக்கலான நடைமுறையாக மாறிவிடும் என அஞ்சப்படுகிறது.

உறவுக்குப் பின் காலையில் எடுத்துக்கொள்ளக் கூடிய மாத்திரைகளுக்குப் புதிய உத்தரவில் விலக்கு அளிக்கப்படுமா? என்பது பற்றி நலவாழ்வுத் துறை அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த மாத்திரைகளைப் பொருத்தவரை பிரச்சினையில்லை என்று அலுவலர்கள் கூறியிருந்தாலும், ஏற்கெனவே சில மருந்தகங்கள் பரிந்துரைக் கடிதங்கள் இருந்தால் மட்டுமே இந்த மாத்திரைகள் விற்கப்படும் என்று தெரிவிக்கத் தொடங்கி விட்டன.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிட, 2023 ஆகஸ்டு மாதத்தில், அவசரகாலக் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை 71 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. புதிய கட்டுப்பாடுகளால் கருத்தடை மாத்திரைகளின் விலைகளும் உயரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குத் தட்டுப்பாடும்கூட நேரிடலாம்.

தனியார் மருத்துவமனைகளுக்குத் தடை

விரைவில் நாடு தழுவிய அளவில் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்குத் தடை விதித்து சட்டம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 சதவிகித கருக்கலைப்புகள் தனியார் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய தடையொன்றை ஏற்படுத்த இதற்குமுன் கன்சர்வேடிவ் பிரதி­நிதிகளால் இயலவில்லை என்றாலும் தற்போது இதுபற்றிப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக நலவாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்தந்தப் பிராந்திய அரசு நிர்வாகங்கள், தனியார் மருந்தகங்களை அணுகி கருக்கலைப்புகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவருகின்றன.

குழந்தை பெற்றுக்கொள்ள அறிவுரை

மேலும், கருக்கலைப்புக்கு எதிரான முன்னோடித் திட்டமொன்றையும் ஏழு பிராந்தியங்களில் நலவாழ்வுத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. - திட்டத்தின்படி கருக்கலைப்பு எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மகப்பேறு மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை கூறுவார்கள்.

‘குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ள அழகிய வரம்’, ‘கருக்கலைப்பு என்பது உங்கள் உடல்நலனைக் கெடுக்கும், சிக்கல்களை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது’ என்பது போன்று அறிவுரைக்குமாறு உள்ளூர் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இரசியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீமியா பகுதியில் தனியார் மருத்துவமனைகள் தாங்களாகவே முன்வந்து கருக்கலைப்புகளை நிறுத்திக் கொண்டு விட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பெண்கள் விடுதலை பெற்றுவரும் நிலையில், - உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுவரும் நிலையில் - தங்கள் உடல், தங்கள் உரிமை என்பதையெல்லாம் மறுத்துப் பெண்களைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது உலகில் ஒரு காலத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய இரசியா! அடுத்தடுத்து என்னென்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் இரசியப் பெண்கள்!

***

ஆனாலும், உலகம் முழுவதும் சட்டப்படியோ, சட்ட விரோதமாகவோ, உயிரைப் பணயம் வைத்தும்கூட பெண்கள் கருக்கலைப்புகளைச் செய்துகொண்டு தானிருக்கிறார்கள். மூடத்தனமான போதனைகளும், முட்டாள்தனமான கட்டுப்பாடுகளும் கருக்கலைப்பு செய்துகொள்வதிலிருந்து பெண்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கருவைச் சுமப்பதா, வேண்டாமா என்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணைத் தவிர்த்து வேறு யாரோ ஒருவர் எவ்வாறு முடிவு செய்ய இயலும்? பெண், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதையும், வேண்டாம் என நிராகரிப்பதையும் அவளைத் தவிர வேறு யார் முடிவு செய்வது? யார் செயற்படுத்துவது? யாருடைய அடிமை அவள்? அவள் உடல், அவள் உரிமை! அடுத்தவர்களுக்கு அங்கே என்ன வேலை?

- எம்.பாண்டியராஜன்