நம்முடைய இயக்கத்தின் பழைய கால நிகழ்ச்சிகைளைப் பற்றி ஏதாவது எழுதுங்கள் என்று "முரசொலி' ஆசிரியர் கேட்டார். எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொல்லுவதானால் இந்த ஏடு போதாது. எழுபதைக் கடந்து எண்பதைநெருங்கிக் கொண்டிருக்கும் என்னால் இந்தத் தள்ளாத வயதில் அவைகளையெல்லாம் முறையாக நினைவுக்குக் கொண்டு வந்து எழுதவும் இயலாது. எனவே, நானும் பெண்ணிணத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் என்னைப்போலவே இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்டு ஆனால் இப்போது நம்முடன் இல்லாத நமது ஒரே அன்னையரான நாகம்மையார் அவர்களைப் பற்றிச் சில சொல்லலாமென எண்ணுகிறேன்.

1921 ஆம் ஆண்டில் திருச்சியில் காங்கிரசு மாகாணக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நான் மாகாணக் கமிட்டி உறுப்பினர். அந்தக் கூட்டத்தில் திரு.வி.க., டாக்டர் வரதலாஜுலு நாயுடு, தண்டபாணிப் பிள்ளை, ஆச்சாரியார் ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். பெரியாரும் அவரோடு அன்னை நாகம்மையாரும் வந்திருந்தனர். அங்குதான் அம்மையார் அவர்களை முதன்முறையாகப் பார்த்தேன். அது முதல் அவர்கள் மறையும் வரை பெரியாரை விட்டுப் பிரிந்ததையே நான் கண்டதில்லை.

கள்ளுக்கடை மறியல் செய்வதென்று காங்கிரசில் தீர்மானம் அமலுக்கு வந்தபோது அம்மையார் தலைமையாக நின்று மறியலைத் தீவிரமாக நடத்தினார்கள்.மறியல் வெற்றிகரமாக நடந்து வந்ததைக்கண்டு அப்போது வைஸ்ராயாக இருந்த லார்டு இர்வின் பிரபு காந்தியாரை அழைத்து எப்படியாவது அந்த மறியலைக் கைவிட வேண்டுமென்று கேட்டபோது. காந்தியார். "மறியலை நிறுத்தும் அதிகாரம் என்னிடம் இல்லை; அதற்கு ஈரோட்டிலுள்ள ஈ.வே.ரா. நாகம்மையார் அவர்களைத்தான் கேட்கவேண்டும்' என்று கூறினார். அந்த மறியலில் பெரியார், ஆச்சாரியார் எல்லோரும் கலந்து கொண்டனர் என்றாலும் அம்மையாருக்குத்தான் பெருமையளித்தார் காந்தியார்.

பிறகு வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புக்காகச் சத்தியாகிரகம் நடத்தச் செல்லும்போது அம்மையார் என்னையும் அழைத்தார். அதற்கு நான் "இதைப்பற்றி காங்கிரசில் தீர்மானம் ஒன்றும் போடவில்லை. ஆனாலும் உங்களுக்குத் துணையாக வேண்டுமானால் வருகிறேன்' என்றேன். உடனே அவர்கள் "நான் என் கணவர் துணையுடன் செல்கிறேன். வேறு துணை வேண்டியதில்லை' என்று கூறிவிட்டு வைக்கத்துக்குச் சென்றார்கள். போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்.

இன்று நம்முடைய கொள்கைகள் நாடெங்கும் பரவி இதைப்பற்றித் தெரியாதவரே இல்லையென்கிற நிலைமையிருக்கிறது. இயக்கத்தில் பணியாற்றவும் "நீ முந்தி; நான் முந்தி' என்று ஏராளமான தோழர்கள் இன்று நிரம்பியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பகாலத்தில் இயக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இருந்தார்கள். இயக்கத்துக்கென்று நிதியோ, பணவசதியோ கிடையாது. அவரவர்களும் சொந்த வேலைகளை விட்டு இயக்கமே உயிர் என்று முன்வந்தவர்கள், அப்பேர்ப்பட்டவர்களை எப்போதானாலும் அன்போடு வரவேற்று, உபசரித்து, ஆதரித்து வந்தவர்கள் அம்மையர்தான். அம்மையார் மட்டும் இல்லாமலிருந்தால் அப்போது இயக்கத்துக்கு ஆளே கிடைத்திருக்காது. இப்போது இந்த அளவுக்கு வளர்ச்சியும் வந்திருக்காது என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், அழகிரிசாமியை (உள்ளுக்குள்) அய்யாவுக்குப் பிடிக்காது. அழகிரி இல்லையானால் இந்த இயக்கமே இருக்காது என்பது அம்மையாரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் அடிக்கடி அய்யாவுக்கும் அழகிரிக்கும் வருத்தம் உண்டாகும். அம்மாதிரி நேரங்களிலெல்லாம் அம்மையார் அழகிரியை அழைத்து "தந்தை கோவித்தால் தாயிடத்தில் மகன் இருக்க வேண்டியதுதானே முறை' என்று கூறி ஆறுதல் சொல்லுவார்கள். எல்லோரிடத்திலும் இதைப் போலவே இதமான வார்த்தைகளைச் சொல்லிச் சமாதானப்படுத்துவார்கள். அன்று பணியாற்றிய யாவருமே அம்மையாரின் அன்புக்குக் கட்டுப்பட்டுதான் இருந்து வந்தார்கள்.

அந்த காலத்தில் கழகத்திற்கென்று அமைப்பு முறை இல்லை. அதனால் எந்த விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டுமானாலும் இயக்கத்திலுள்ள முக்கியமானவர்கள் ஈரோடு சென்று வரவேண்டும். சொந்தச் செலவில் காங்கிரசுக்கு இருந்ததுபோல் இந்த இயக்கத்துக்கு வெளியார் பணஉதவியும் கிடையாது. ஆகவே இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையிலும் இயக்கம் வளர்ந்ததென்றால் அதற்கு அம்மையாரின் அன்பு கலந்த உற்சாக மூட்டும் மொழிகளைத் தவிர வேறு எதுதான் காரணமாயிருக்க முடியும்! ஆனால் அம்மையார் எந்தக் காலத்திலும் மேடையேறிப் பேசியதுமில்லை; எந்தப் பத்திரிகையிலும் எழுதியதுமில்லை. இயக்கத்தையே வாழ்வாகக் கருதி, அவ்வளவு அக்கறையோடு பணியாற்றி வந்தார்கள்.

ஒரு சமயம் காரைக்குடியில் தோழர் முருகப்பா அவர்கள் முயற்சியால் ஒரு சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அதற்கு மறைந்த தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தன்னுடைய தலைமையுரையில், "தகப்பன் சொத்தில் பெண்களுக்கும் உரிமையிருக்கவேண்டும்'' என்று பேசினார்கள். அத்துடன் அந்த மாநாட்டில் அதே மாதிரி தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றினோம். இவ்வளவு  காலத்துக்குப் பிறகு இப்போது அது சட்டமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கால தாமாதமாக ஆனாலும் இது வெற்றி பெற்றது குறித்து எனக்கு நிரம்ப மகிழ்ச்சி.

அந்த மாநாடு முடிவு பெற்றப்பின் தோழர் முருகப்பா வீட்டில் ஒரு கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான், அன்னை நாகம்மையார், தோழர்கள் அழகிரிசாமி, எஸ்.வி. லிங்கம், ராமநாதன், சிதம்பரனார், குருசாமி ஆகியோர் கலந்து கொண்டோம். இந்தக் கமிட்டியில் அழகிரி பெரியார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் அந்தக் கூட்டத்தில் அம்மையாரும் கலந்து கொள்ளலாமா என்று நான் சந்தேகப்பட்டுக்கொண்டு இருந்தேன். கூட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்மையாரோ, பேசாமல் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார்கள். கடைசியில் அழகிரி எழுந்து "தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா?'' என்று கேட்டவுடன், அம்மையார், "தகப்பன் மீது நம்பிக்கையில்லையென்று சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா?'' என்று வேகமாகக் கேட்டார்கள். உடனே அழகிரி சும்மா இருந்து விட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறவில்லை. ஆனால் காலத்தின் மாற்றம் பிள்ளைகள் மீது நம்பிக்கையில்லை யென்று நம்முடைய தந்தை கூறும்படி நேரிட்டது.

பின்பு, தோழர் குருசாமி அவரிடம் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் (முன்பு) ஒருநாள் பெரியார் என்னிடம் குருசாமிக்கு ஒரு படித்த பெண் வேண்டும்' என்று கேட்டார். நான் "பி.ஏ. படித்த பெண் இருக்கிறது. ஆனால் குருசாமிக்குச் சொத்து ஒன்றுமில்லையே, எதை நம்பி அவருக்குப் பெண் தேடுவேன்'' என்றேன். அப்பொழுது தோழர் எஸ். ராமநாதன் ஆசிரியராகக் கொண்டு பெரியார் "ரிவோல்ட்' என்று ஒரு ஆங்கில வாரப்பத்திரிகை நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகையையும், அதோடு தன் சொத்தில் கொஞ்சமும் குருசாமிக்குத் தருவதாகப் பெரியார் சொன்னதால், நானும் சரியென்று குஞ்சிதத்தை மணம் செய்வித்தேன். ஆனால் அதன் பிறகு கொஞ்ச நாட்களில் குருசாமியை வேலையிலிருந்து விலக்கிவிட்டார் பெரியார். அன்னை நாகம்மையார் எவ்வளவோ சமாதானம் கூறியும் கேட்கவில்லையாம். உடனே அம்மையார் எனக்குத் தெரிவித்தார்கள். நான் சென்று "என்ன இப்படிச் சொன்ன வாக்குத் தவறிவிட்டீர்களே? இப்போது அவர்கள் கதி என்ன ஆவது?'' என்று கேட்டேன். அதனால் போ என்று சொல்லிவிட்டேன்'' என்று சொன்னார்.

"பரவாயில்லை. இரண்டு பேரும் பி.ஏ. படித்தவர்கள். எப்படியும் பிழைக்காமலா போய்விடுவார்கள்!'' என்று கோபமாகக் கூறிவிட்டு நான் ஊருக்கு வந்துவிட்டேன். குருசாமி விலகியது பற்றி அம்மையாருக்கு நிறைய வருத்தம். யார் என்ன செய்ய முடியும்? ஆனால் காலத்தின் மாற்றத்தைப் பாருங்கள் இன்று நான்தான் அய்யாவுக்கு எதிரி. அவர்களோ...?

இப்படித்தான் முன்பு தேவதாசி முறை ஒழிப்பு சம்பந்தமாய் நான் தீவிரமாய்ப் பணியாற்றியதைப் பாராட்டி காந்தியார் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான் அந்தக் கடிதத்தை வைத்து தினந்தோறும் பூசை செய்து வந்தேன். காங்கிரசை விட்டு விலகிய பின்பு அந்தக் கடிதம் என்ன, காந்தியாரே நினைவிலிருந்து நீங்கிவிட்டார். என்ன செய்வது?

அன்னை நாகம்மையார் மறைந்த செய்தி தந்தி மூலம் மாயவரம் தோழர் நடராஜனுக்குக் கிடைத்தது. உடனே அலறிக் கொண்டு என்னிடம் ஓடி வந்தார். இருவரும் தேம்பித் தேம்பி அழுதோம். என்ன பயன்? எங்களைத் தேற்ற அன்னை நாகம்மையாரா இருக்கிறார்கள்?

"ஆயிரம் இராமர் நின்போல் ஆவரோ தேரியேனம்மா'' என்றபடி எத்தனைபேர் சேர்ந்தாலும் ஒரு அன்னை நாகம்மையாருக்கு ஈடாக முடியுமா? அவர்களின் அன்பு தவழும் முகமும் ஆதரவும் வழுவாதிருக்க உதவுமே! அது போதும்

அன்னை நாகம்மையார் புகழ் நீடு வாழ்க!

அவர்கள் தொண்டு வெற்றி பெறுக!

  – முரசொலி,

1956 பொங்கல் மலர், பக், 52, 53, 54

Pin It