ஆண்டவனே! கடவுளே! ஈஸ்வரனே! உன்னை எந்தப் பெயரால் அழைத்தாலும் தக்க சமயத்தில் வருவாய் என்பதில் எனக்கு மட்டும் தனி நம்பிக்கையுண்டு.

நீ எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளானாலும் சரி,பலப்பல கடவுள்களானாலும் சரி, உங்களுக்குள்ளே சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதே மனிதப் பிறவிகளான எங்கள் ஆசை,உங்கள் பெயரால்,அதாவது உங்களைச் சார்ந்த மதங்களின் பெயரால், இந்த உலகில், இந்தப் பாரத புண்ணிய பூமியில்கூட, ஓடிய இரத்த ஆறுகள் கொஞ்சமா? இந்த நாட்டுக்கு இன்று வேண்டியது, அவசரமாக வேண்டியது, உணவு; இதற்கு அடுத்தபடியாக உடை,வீடு என்றுகூடச் சொல்ல மாட்டேன்.

கந்தலை உடுத்திக் கொண்டு தெரு ஓரத்தில் அல்லது மரத்தடியில் படுத்திருந்தால்கூடப் பரவாயில்லை.ஆனால் உணவுக்கு அடுத்தபடியாக வேண்டிய தேசிய ஒருமைப்பாடுதான். பயங்கரமான இரு எதிரிகள் எங்களை நோக்கி வாயைத் திறந்து கொண்டு ஓடி வருவது தெரிகிறதா கடவுளே!அல்லா கடவுள்களே!இந்நிலையில் கடவுள்களாகிய உங்களுக்கிடையே கடவுள் ஒருமைப்பாடு வேண்டும்.முஸ்லிம் கடவுள் இந்துக் கடவுள்களை நோக்கிச் சீறி விழுந்து பிடுங்கக்கூடாது!

மேற்கண்ட இருவகைக் கடவுள்களே!உங்களுக்காக உலகமே ஒரு பெரும் போரில் சிக்கிவிடுமோ என்னவோ, பயமாயிருக்கிறதே! இச்சமயத்தில் முஸ்லிம் மத குருமார்களும், இந்துமத குருமார்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியா?சாஸ்திரியும் அயூப்கானும் கூடிப் பேசிச் சாதிக்க முடியாததை மத குருமார்கள் கலந்து பேசிச் சாதிக்கலாமே!

இதோ, பாருங்கள், கத்தோலிக்க மத குருவான போப் பாண்டவரை : 

"தூரக் கிழக்கு, மத்தியக் கிழக்கு, சமீபக் கிழக்கு, காங்கோ, டோமினிகள் குடியரசு – ஆகிய இடங்களில் சமாதானம் நிலவுவதற்காக பிரார்த்தனை செய்வீர்களாக''

இவ்வாறு தம் மத பக்தர்களை நோக்கிப் போப்பாண்டவர் அய்ந்து நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்

இவர் குறிப்பிட்டுள்ள "மூன்று ஜீயர்களும்,வாரியர்களும்,தம்பிரான்களும், மடத்தலைவர்களும் இது சமயம் சும்மாயிருப்பது முறையல்ல.

நம் கடவுள்களை நோக்கி, இந்திய (அதாவது இந்துமத) பக்தர்கள் அனைவரும் "பிரார்த்தனை'' செய்யுமாறு வேண்டுகோளும் கட்டளையும் பிறப்பிக்க வேண்டும்.இவர்களும் நம் கடவுள்களோடு ஒரு வார்த்தை நேரில் பேசி,"இத்தருணம் வந்து எமைக்காப்பீர்''.என்று கேட்க வேண்டும்.

அன்று வைகை வெள்ளத்தை அடைத்துத் தடுத்த ஈசன்;பகீரதன் வேண்டுகோளுகிணங்கிக் கங்கையை வரவழைத்த எம்பிரான்;மாடுகள் நனைவதைப் பொறுக்காது மலையைப் பிடுங்கிக் குடையாகப் பிடித்துக் காப்பாற்றிய ஆண்டவன்–இன்று மட்டும் சும்மாயிருப்பானா?

நாம் கேட்டால்தானே? "பிரார்த்தனை மூலம் இவ்வுலகில் ஆகாத காரியம் கூட இருக்கிறதா? தீராத நோய்களெல்லாம் குணமாவதாகச் சொல்கிறார்களே! மழைகூட வேண்டும்போது பெய்வதாகக் கூறுகிறார்களே!பயிர்கூடப் பிரார்த்தனை மூலம் விரைவில் வளர்கிறதாமே! (எருப்போடாமலும் தண்ணீர் இல்லாமலுமா?)

நம் நாடு கடவுள் வணக்கத்தில் தனி நம்பிக்கை வைத்துள்ள நாடு! தமிழ்க் கவிஞர்கள் கூடக் கடவுளைக் கூப்பிட்டு அவரிடத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் (பாரதிதாசனைத் தவிர)பாடியிருக்கிறார்கள்? ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும், மில்ட்டனும் டென்னிசனும், இன்னபிற இங்கிலீஷ் கவிஞர்களும் இப்படிச் செய்யாதபடியால்தான் அவர்கள் புகழ் மங்கி மறைந்து மடிந்தே போய்விட்டது! இது நிற்க!

உடனடியாக பாகிஸ்தான் –சீனா ஆக்கிரமிப்பு அக்கிரமத்தை நிறுத்திப் பாரத பூமியில் சமாதானம் நிலவுமாறு எல்லா இந்திய மக்களும் உடனடியாக "பிரார்த்தனை''யில் இறங்குவார்களா!

குண்டு துப்பாக்கி உற்பத்தியோ, படைக்கு ஆள் சேர்ப்பதோ, பணம் திரட்டுவதோ கூட அவ்வளவு அவசரமல்ல!

அவசரமாக வேண்டியது பிரார்த்தனையே!

"அறிவுப்பாதை' 27.8.1965

Pin It