பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா நிகழ்ச்சி’ ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவை மய்யத்தில் வேலை செய்யும் கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்ற 42 வயது பேர் வழி அய்ன்ஸ்டின், நியுட்டன் கோட்பாடுகள் தவறு; புவி ஈர்ப்பு விசை என்பதும் தவறு என்று பேசியிருக்கிறார். தன்னை ஒரு இயற்பியல் விஞ்ஞானி என்று கூறிக் கொண்ட அவர் “20ஆம் நூற்hறண்டு அய்ன்ஸ்டின் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள்; அடுத்த சில ஆண்டுகளில் அது என்னுடைய நூற்றாண்டாகப் பெயர் மாறப் போகிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டார்.
இவர் இயற்பியல் படித்தவரே அல்ல என்றும் மின்பொருள் துறை படித்த பொறியியல் பட்டதாரி தான் (எலக்டிரிக்கல் என்ஜினியர்) என்றும், ‘இந்து’ ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு வேத பண்டிதர் இயற்பியல் விஞ்ஞானியாகும் பெருமைக்கு உரிமை கோருகிறார் என்று இந்து ஆங்கில நாளேடு கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு இந்திய விஞ்ஞானி கிருஷ்ணனிடம் இது குறித்து உரையாடியபோது, இயல்பியல் குறித்து அவருக்கு எதுவுமே தெரிய வில்லை என்பதைப் புரிந்து கொண்டதாக ‘இந்து’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘நியூ சவுத் வேல்ஸ்’ பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானி கேதரிங் பிரெய்டிங் ‘யாரோ எப்போதோ கூறினார்கள் என்று பேசுவது அறிவியல் அல்ல; (கடவுள் மறுப்பாளரான) ஸ்டீபன் ஹாக்கிங் - அய்ன்ஸ்டீன் கோட்பாட்டைவிட வேதங்களின் கோட்பாடுகள் உயர்ந்தது என்று பேசியதாகக் கூறுவதற்கு என்ன சான்று இருக்கிறது? எங்கே எப்போது ஸ்டீபன் ஹாக்கிங் அப்படி பேசினார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய கருத்துகள் தவறானவை என்பதை சுட்டிக் காட்டி அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக இந்த ஜலந்தர் மாநாட்டில் கண்ணன் பேசியதையும் அவர் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இம்பாலில் நடந்த 105ஆவது விஞ்ஞான மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு கதையை அவிழ்த்து விட்டார். அய்ன்ஸ்டீன் கருத்தியலைவிட வேதம் உயர்ந்தது என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாகக் குறிப்பிட்டு - அப்படி எங்கே கூறினார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்” என்று பேசினார்.
அதை அமைச்சரிடம் நான்தான் கூறினேன் என்றுஇப்போது கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்ற இந்த ‘டுபாக்கூர்’ பேர்வழி மாநாட்டில் பேசியுள்ளார்.
அமைச்சரிடம் தாம் பேசியதற்கு ஆதாரமாக சில படங்களையும் காட்டினார். மின்னஞ்சல் வழியாக சில செய்திகளையும் அனுப்பியுள்ளார். ஆனால் அமைச்சரிடம் அய்ன்ஸ்டின் கோட்பாடு, வேதம் குறித்த ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து பற்றி எந்த உரையாடலையும் அவர் அமைச்சருடன் நடத்தவில்லை என்று அவரது முகநூல் பதிவுகளை ஆராய்ந்து ஆங்கில ‘இந்து’ நாளேடு அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்திய அறிவியல் மாநாடு பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களின் நிதி உதவியோடு நடத்தப்படுகிறது. மோடி ஆட்சிக்குப் பிறகு இந்த அறிவியல் மாநாடுகள் ‘அபத்தங்கள் - உளறல்களாகவே’ மாறி அரசுப் பணம் விரயமாக்கப்பட்டு வருகிறது.
இயற்பியலில் ஒரு பட்டம்கூட பெறாத இவர், ஆஸ்திரேலியாவில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதாகக் கதை விட்டு வருகிறார்.
ஆந்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. நாகேசுவர்ராவ் என்ற ‘அறிவுக் கொழுந்து’ மேலும் நகைச்சுவை விருந்து படைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத் திருக்கிறார்.
மகாபாரத காலத் திலேயே டெஸ்ட் டூயூப் தொழில் நுட்பம் இருந்தது. கவுரவர்கள் 100 பேரும் அப்படி சோதனைக் குழாய் வழியாகப் பிறந்த வர்கள் தான்.
“சார்லஸ் டார்வின் நிறுவிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் முன்னதாகவே நிரூபித்து விட்டன. விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம், இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். அந்த வகையில் இன்றைய ஏவுகணைகள் நிலை நிறுத்தத் தொழில்நுட்பத்திற்கு சுதர்சன சக்கரம்தான் முன்னோடி. இராவணனிடம் ஒரேயொரு புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை; வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 வகையான போர் விமானங்கள் இராவணன் வசம் இருந்தன; அவற்றை இயக்குவதற்காக இலங்கையில் ஏராளமான விமான நிலையங்கள் இருந்தன. இராமனுடன் விமானத்தின் வழியாகவே யுத்தம் நடத்தினான். கவுரவர்களின் தாயான காந்தாரி, எப்படி 100 குழந்தைகளைப் பெற்றிருக்க முடியும்? என்று எல்லோரும் ஆச்சரியப் படுகிறார்கள். யாரும் நம்புவது இல்லை. மனிதனால் இது சாத்தியமா? என்றுதான் கேட்கிறார்கள்.
ஆனால், இது சாத்தியம்தான் என்பதை, இன்றைய சோதனைக் குழாய் தொழில்நுட்பம் நிரூபித்திருக் கிறது. மகாபாரதத்தில், கருவுற்ற 100 முட்டைகள், 100 மண்பாண்டங்களில் போடப்படுகின்றன என்றால், அந்த மண்பாண்டங்கள் சோதனைக் குழாய்கள் அல்லாமல் வேறு என்ன?
ஸ்டெம்செல் ஆராய்ச்சியும், 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இன்று நாம் ஸ்டெம்செல் ஆய்வு குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தக் காலத்திலேயே ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில் நுட்பத்தில் பிறந்தவர்கள்தான் கவுரவர்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது” என்றும் நாகேஸ்வர் ராவ் தனது கதைகளை அவிழ்த்துவிட்டு காதில் பூ சுற்றியிருக்கிறார்.