திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்து வேண்டுதல் செய்யலாம் என்று கருதினேன். ஆனால் “தனித் தெலுங்கானா'' போராட்டத்தால் திருப்பதி செல்ல முடியவில்லை. ஆந்திர முதலமைச்சர் கிரன்குமார் ரெட்டி மனது வைத்து திருப்பதி செல்லும் பேருந்துகளுக்கு தடை வேண்டாம் என்று அவர் தனது காவல் துறை அதிகரிகளுக்கு ஆணைபிறப்பித்தால் வழி ஏற்படுத்தலாம். திருப்பதி தேவஸ்தானமும் வருமானம் குறைந்து போகுது என்று கவலைப்படுவதோடு அவர்களும் ஆந்திர முதலமைச்சர் உதவியை நாடத் திட்டமிட்டிருப்பதாக அறிகிறேன். முதலமைச்சர் விரைவில் உதவிட வேண்டும். எல்லாம் வல்ல ஆண்டவனை தரிசிக்கக்கூட முதலமைச்சர்தான் உதவ வேண்டும் என்றால் திருப்பதி ஏழுமலையானின் சக்தி என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுகிறது!.

தப்பு, தப்பு, ஆண்டவனை சந்தேகப்படக்கூடாது!

****

தங்கள் கால் வலிக்கக் காளிக் கோயிலைச் சுற்றி வருகிறார்கள் ஏழைகள். தங்கள் வாய் வலிக்க ஆண்டாவன் நாமத்தைப் பூஜிக்கிறார்கள் பாட்டாளிகள். ஆனால், முடிவு கடன் படுகிறார்கள், கல்லுடைக்கிறார்கள், மூட்டை சுமக்கிறார்கள், வண்டி இழுக்கிறார்கள் ஏன்?

– அறிஞர் அண்ணா.

***

“இந்திய உயர்குல ஆரியன் ஒருவனுக்குத் தன் வகுப்பு என்றால் பெரிய பெருமை. அவன் இந்தக் காட்டுமிராண்டிகளையும் மிலோச்சகர்களையும் இழிவாகக் கருதிவந்தான். குப்தர்கள் தங்களால் வெல்லப்பட்ட ஆரிய இராஜ்யங்களிலும் ஆரிய அரசர்களிடத்திலும் சற்று தாட்சணியத்துடன் நடந்து கொண்டார்கள். ஆனால் ஆரியர் ஆரியரல்லாதவர்களிடம் மிகவும் கடுமை காட்டினார்கள்''.

– ஜவகர்லால் நேரு

இப்போது புரிகிறதா “குப்தர்களின் காலம் பொற்காலம்'' என்று ஏன் அவர்கள் எழுதி வைத்தார்கள் என்று. விவரம் அறியாமல் நாமும் அதை உண்மையெனக் கருதி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம். குப்தர்களின் காலம் அவாளுக்குப் பொற்காலம். நமக்கு...?

Pin It