பிள்ளையார் சதுர்த்தி அல்லது வினாயகர் சதுர்த்தி என்கின்ற பண்டிகை வரப்போகிறது. அதற்காக மதச்சார்பற்ற இந்த சர்க்காரும் விடுமுறை விடப் போகிறார்கள்.

இந்தப் பண்டிகையானது ஒரு மாபெரும் முட்டாள்தனமான பண்டிகையின் தத்துவம். சைவ மதத்திற்குப் பெருத்த இழிவும் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒழுக்கக் கேட்டையும் கீழ்மையையும் கற்பிப்பதாகும். அது மாத்திரமல்லாமல் அப்பண்டிகையைக் கொண்டாடுகிறவர்களையும் மகா மகா மடையர்களாக ஆக்கும் தத்துவம் கொண்டதுமாகும்.

இதை விளக்க வேண்டியதற்காக வினாயக சதுர்த்தி பண்டிகையின் கதையைப் புராணங்களில் உள்ளபடி விளக்குவோம். அதாவது, பார்வதி தனித்த அறையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் சிவன் உள்ளே புகுந்துவிடுவது வழக்கம். துவாரபாலகர்கள் என்கின்ற வாயிற்காப்போர்களுக்குப் பார்வதி எவ்வளவு திட்டம், எச்சரிக்கை செய்து வைத்தாலும், சிவன் அவர்களை மீறிவிட்டு உள்ளே போய்விடுவான்! இதை அனுபவித்த பார்வதி இனி அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமென்று கருதி அவள் ஒரு காவலாளியைச் சிருஷ்டித்தாள்.

எப்படிச் சிருஷ்டித்தாள் என்றால், தனது உடலில் இருக்கும் அழுக்கையெல்லாம் தேய்த்துத் திரட்டி உருண்டையாக்கி, அந்த உருண்டை ஒரு ஆளாக உருவெடுக்க வேண்டுமென்று நினைத்தாள். அந்தப்படியே அந்த அழுக்கு உருண்டை உடனே ஒரு மனித உருவமாகிவிட்டது. பார்வதி அந்த அழுக்கு உருண்டை மனிதனைத் தனது குளியல் அறைக்கு வெளியில் காவலாளியாய் இருக்கும்படி நியமித்து யார் வந்தாலும் உள்ளே விடக்கூடாது என்று கண்டிப்பாய் கூறிவிட்டு உள்ளே இருந்து கொண்டு மீதி அழுக்கையும் தேய்த்துக் குளித்துக் கொண்டு இருந்தாள். அந்த சமயத்தில் சாஷாத் சிவபெருமான் வந்தான்! வழக்கப்படி உள்ளே போக ஆசைப்பட்டான். அழுக்குருண்டை காவல்கார மனிதன், அம்மா குளிக்கிறார்கள்; உள்ளே போகக் கூடாது என்றான். சிவபிரான் நான் போய்த்தான் தீருவேன் என்றார்.

அழுக்கு உருண்டை மனிதன் நான் தடுத்துத்தான் தீருவேன் என்றான். உடனே சிவபெருமானுக்குக் கோபம் வந்து, என் பொண்டாட்டியைப் பார்ப்பதை நீயார் தடுப்பதற்கு? என்று கூறித் தனது கையிலுள்ள வாளாயுதத்தால் அழுக்கு உருண்டை மனிதனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு, உடல் அழுக்கைக் கழுவிக் கொண்டிருக்கும் பார்வதியின் குளியல் அறைக்குள் புகுந்து விட்டான். இதைப் பார்த்ததும் பார்வதிக்குக் கோபம் வந்தது. காவல்காரனைக் கண்டிப்பதற்காக வெளியில் எட்டிப் பார்க்கையில் அழுக்கு உருண்டை மனிதன் தலை வெட்டப்பட்டு வெறும் முண்டம் காணப்பட்டது. இதன் மீது பார்வதிக்கு ஆத்திரம் பொங்கிச் சிவனை மிக மிகக் கடிந்து வைத்தாள். அதன்மீது பரமசிவன் தாழ்ந்து பார்வதியை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, தன்னால் வெட்டிக் கொல்லப்பட்ட காவல்கார அழுக்கு உருண்டை மனிதனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுப்பதாக ஏற்றுக் கொண்டார்.

அதன்படி அழுக்குருண்டை மனிதனை உயிர்ப்பிக்கச் சிவன்தான் வெட்டியெறிந்த தலையைத் தேடினான். அந்தத் தலை காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு காட்டிற்கு ஆள் அனுப்பித் தேடும்படிச் செய்து அங்கும் காணாததால் ஒரு யானை மிருகத்தினுடைய தலையை வெட்டி வரச் செய்து அதைப் பொருத்தி உயிர்ப்பித்துக் கொடுத்தான். அந்த அழுக்கு உருண்டை முண்டம் யானைத் தலையுடனும் மனித உடலுடனும் உயிர்த்தெழுந்தது.

பிறகு இதைப் பார்த்த தனது காவல்காரன் இப்படி ஆனைத் தலைக்காரனாக ஆகிவிட்டதற்கு வருத்தப்பட்டாள். சிவன் அந்த வருத்தத்தைக் கண்டு மனம் இரங்கித் தனது மனைவியைச் சமாதானம் செய்வதற்காக மனைவியைப் பார்த்து, மனைவியே நீ துக்கப்படாதே! இந்த அழுக்கு உருண்டை காவல்காரனை நான் எனது கணங்களுக்குத் (தேவர்களுக்கு) தலைவனாக ஆக்கிவிடுகிறேன் என்று வாக்கு கொடுத்தார். பார்வதி, இது போதாது என்றும், எனது காவலனை இவ்வளவு கொடுமையும் அவமானமும் படுத்தியதற்குப் பிரதிபலனாக அந்த ஆனைமுகத்துடன் இருக்கும் காவலனைப் பொது மக்கள் கடவுளாக எண்ணி வழிபட வேண்டும். வருடந்தோறும் இந்த மாதம் அமாவாசைக்குப் பின் 4 ஆம் நாளில் சதுர்த்தியில் எவன் ஒருவன் இந்த அழுக்கு உருண்டை ஆனைத் தலை மனிதனை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்த சகல பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டும் என்றும் வரம் கேட்டாள். சிவன் உடனே அந்தப்படி கொடுத்துவிட்டான். இதுதான் வினாயக உற்பத்திக்கும், சதுர்த்தி பண்டிகைக்கும் புராண ஆதாரம் – இந்த அழுக்குத் தலை மனிதனை நினைவுறுத்தத் தான் பெரிய அழுக்கு உருண்டையான களி மண்ணில் அந்த உருவம் செய்தும், பிறகு அதை அழித்து விடுவதற்கு ஒப்பாக அதைக் கிணற்றிலோ ஆற்றிலோ குளத்திலோ போட்டு விடுவதுமாக இருக்கிறது போலும்.

இந்தக் கதையினால் சிவனின் யோக்கியதை விளங்குகிறதல்லவா? அதாவது, தனது மனைவி குளிக்கும்போது, அவளைக் குளிப்பு அறையில் நிர்வாணமாகப் பார்ப்பதில் சிவனுக்கு ருசி இருப்பதாகத் தெரிகிறது. பார்வதி இந்தத் தொல்லை பொறுக்கமாட்டாமல் துவார பாலகர்களைக் காவல் வைத்தால் அவர்களை மீறிச் சிவன் உள்ளே புகுந்தான் என்றால் எவ்வளவு சின்னப்புத்தி உடையவன் சிவன் என்பது இதனால் விளங்குகிறதல்லவா? அன்றியும் பார்வதி வேறு ஆள்களிடம் நம்பிக்கை இல்லாமல் தானே ஒரு ஆளைச் சிருஷ்டிக்கு மூலப் பொருளாகப் பார்வதியின் அழுக்கு உருண்டைதானா பயன்பட வேண்டும்?

அப்படியானால் பார்வதி எவ்வளவு அழுக்குப் பிடித்தவளாக இருந்திருக்க வேண்டும்? தினம் குளிப்பவளுக்கு இவ்வளவு அழுக்கு எப்படிச் சேரும்?

கடவுள்களுக்கு உள் மலமே இருக்காது என்பார்கள் பக்தர்கள். ஆனால் பார்வதி என்கின்ற கடவுளுக்கு வெளி மலமே இவ்வளவு இருந்தால், சிவன் எப்படித்தான் இதை சகித்தானோ தெரியவில்லை. இந்த ஆபாசக் கதையை ஒழுக்கமும், பெருமையும் அற்ற கற்பனையை ஒரு சாதனமாகக் கொண்டு இதற்காக ஒரு பண்டிகை கொண்டாடுவது என்றால் கொண்டாடும் மக்களுடைய முட்டாள்தனத்துக்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

இந்தப் பண்டிகையை ஒரு முக்கியமான மதச் சடங்காகக் கொண்டு மதச்சார்பற்ற நமது சர்க்காரில் ஒரு நாள் பொது விடுமுறை விடுவதென்றால் அதுவும் முஸ்லிம், கிருத்தவர், பகுத்தறிவுவாதிகள் யாவருக்குமே விடுமுறை விடுவதென்றால் சர்க்காருக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்? அவரால் எவ்வளவு மானக்கேடு? பண்ட உற்பத்தியில் எவ்வளவு தடை? மற்றும் எவ்வளவு காரியங்கள் கெடும்?

சர்க்கார் மனதாரவே தனது குடிமக்களை முட்டாள்களாக்குவதற்கு இப்படிப்பட்ட மூட நம்பிக்கை, ஆபாசக் கதைகளைப் பிரபலப்படுத்தி நம்பச் செய்கிறார்கள் என்றுதான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்து மதமே! இந்து மதக் கடவுள்களே! உங்கள் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும்! இந்தப் புராணங்களா உங்களுக்கு ஆதாரமாக இருக்க வேண்டும்!

Pin It