கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்களால் கற்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, மானமற்ற மக்களால் நடைமுறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது.

மத சாஸ்திரப்படியாக நான்கு ஜாதிகள் சொல்லப்பட்டாலும், இவற்றுள் மூன்று ஜாதிகள்தான் பிறவியினால் இருப்பதாகச் சொல்லப்படுபவைகளாம். அவை மற்றபடி இரண்டாவது சத்திரிய, மூன்றாவது வைசிய, நான்காவது சூத்திரர்கள் எனப்படுபவையாகும். முதலாவது ஜாதி என்று சொல்லப்படும் பிராமண ஜாதி என்பது பிறவியால் ஏற்பட்டதல்ல என்பதோடு, பிறவியல் பிராமணன் என்பவனும் இல்லை. ஒரு மனிதன் பிராமணன் என்று சொல்லப்படுபவனுக்குப் பிறந்தவன் ஆனாலும் சூத்திரனேயாவான். அந்த சூத்திரன் என்கிற பிள்ளை உபநயனம் என்ற கருமம் செய்யப்பட்டு பூணூல் என்கின்ற முப்புரி நூல் அணியப்பட்ட பின்புதான் பிராமணன் ஆகிறான். அதனால்தான் பார்ப்பனர் தங்களைத் துவிஜர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இரு பிறவியாளர் என்று கூறுகிறார்கள்.

அந்த அப்படிப்பட்ட இரு பிறப்பாளன் ஆன பிராமணன் என்பவனும், மற்ற ஜாதியார்களைப் போல் பிறவி காரணமாகவே எப்போதும் பிராமணனாய் இருப்பவனல்ல அவன் பிராமணன் செய்ய வேண்டிய சில கருமங்களைச் செய்யாததால், பிராமணத் தன்மையை இழந்து விடுகிறான். மற்றும் சில கருமங்கள், காரியங்கள் செய்வதினாலும் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான். இதனால் பிராமணன் என்கின்றவன், சில காரியம், கருமம் செய்யாததனாலும், சில காரியங்கள் செய்வதனாலும் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான் என்கின்ற தத்துவப்படிப் பார்த்தால் உலகில் பிறவிப் பிராமணன் இல்லை என்பதோடு, சில கருமத்தைச் செய்யாததாலும், சில கருமத்தைச் செய்வதாலும் பிராமணன் அல்லாதவனாக, பிராமணத் தன்மையை இழந்தவன் என்பதாக, ஆகிவிடுவதால் உலகத்தில் பிராமணன் என்பவன், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்பதாக எவனும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அன்றியும், இந்தத் தர்மப்படி உலகில் எவனும் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் கண்டிப்பாக பித்தலாட்டக்காரனேயாவான். மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பிழைக்கிற அயோக்கியனே ஆவான்.

ஏன் இதை இவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறேன் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உலகில் நான்கு ஜாதிகள் இருந்தாலும், மத, சாஸ்திர தர்மப்படி இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன.

அதாவது, பிராமணன், சூத்திரன் என்பவர்கள் தான் இருக்கிறார்கள். மற்ற இரண்டு ஜாதியான சத்திரியர், வைசியர் என்று சொல்லப்படும் இரண்டு ஜாதிகளும் கலியுகத்தில் அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மாத்திரமல்லாமல் அவர்கள் சூத்திர மக்களோடேயே சேர்ந்து விட்டார்கள். ஜாதி பிரிவு முறையில் சத்திரிய, வைசிய ஜாதி என்பதற்காக எந்தப் பாகுபாடும் செய்யவில்லை. ஆகவே, நான்கு ஜாதிகளில் இரண்டு ஜாதிகள் ஒழிந்துவிட்டன.

அதாவது, பார்ப்பனர்களால் ஒழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள இரண்டு ஜாதிகளில், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்கிற ஜாதி இல்லாததினால் ஜாதி தத்துவப்படி உலகில் இந்துக்கள் என்பவர்களில் ஒரு ஜாதிதான் இருக்கிறது என்றாலும், அந்த சத்திரிய ஜாதியும், ஜாதி தர்மப்படி நடக்காததனால் அதுவும் (சத்திரிய ஜாதியும்) இல்லாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.

மத, சாஸ்திர, தர்ம ஆதாரம் இல்லாமல் பிரிவினை செய்யப்பட்ட பஞ்சமர் (சண்டாளர்) என்று பிரிவினை செய்யப்பட்ட அய்ந்தாம் ஜாதியும் இன்று ஆட்சியின் பலனாக அழிக்கப்பட்டு விட்டபடியால், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று அந்தக் குறிப்பிட்ட தன்மையும் இல்லாமல் போய் மற்ற ஜாதிகளுடன் சரிசம அந்தஸ்து கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், இன்று பார்ப்பனர் என்னும் வகுப்பார் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களே இது பொருந்துமா? நியாயமா? என்பது சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேசத்தில் காட்டிக் கொள்வதன்மூலம்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

சங்கராச்சாரி என்பவரும் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு நம்மை தொட்டால் ஸ்நானம் செய்யவேண்டும், பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார். வ.வே.சு. அய்யர், சி. விஜயராகவாச்சாரியார் போன்ற பார்ப்பனர் நம்மை தொட்டு விட்டால் நம்ம வீட்டில் சாப்பிட்டு விட்டால் ஸ்நானம் செய்யவேண்டும் பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லி அந்தப்படி நடந்துகொண்டு வந்தார்கள், வருகிறார்கள். மற்றும் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), சதாசிவம் ஆகிய பார்ப்பனர் யார் வீட்டிலும் பஞ்சமர் (சண்டாளர்), ஜாதியார் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். தன் மகளை சூத்திரர்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள்.

தானும் சூத்திர ஜாதிப் பெண், நாடகத்தில் நடித்துக் கொண்டு, பொதுப் பெண்டீர் குலத்தை சார்ந்து இருந்தவரை மணம் செய்து உடல் சம்பந்தம் வைத்துக் கொண்டும் இருந்து, உச்சிக்குடுமி வைத்துக் கொண்டும், பஞ்ச கச்சம் போட்டு உடை உடுத்திக் கொண்டும், தன்னை பிராமணன் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பிராமணருடன் உண்பன, தின்பன, கொடுத்தல், கொள்ளல் காரியங்களையும் செய்துகொண்டு, தன்னை பிராமணனாக நினைத்துக்கொண்டு மற்ற ஜாதியாருக்கு ஆசீர்வாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவை மாத்திரம் அல்லாமல், இப்படிப்பட்டவர்கள் செத்துப் போன பின்பும் அவர்கள் இனத் தலைவர்கள் பிராமண பிரேதம் என்பதற்கு என்ன கர்மங்கள் மந்திரங்கள் உண்டோ அந்த சடங்குகளையும், அந்த ஜாதி சாஸ்திரிகளாலேயே செய்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு மனிதன் தன்னை பிராமணன் என்றும், மற்றவர்களைத் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதி, கீழான ஜாதி என்றும் சொல்லுவதற்கு பார்ப்பனக் கூட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை இழி ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டு இருந்தால் மாத்திரமே போதுமானதாக இருந்து வருகிறது.

இதில் விசேசமான மற்றொரு காரியம் என்னவென்றால், மது அருந்துகிறான், மாமிசம் சாப்பிடுகிறான், கூட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொள்கிறான், பேர் போன விபசாரியை மனைவியாக, போகப் பெண்ணாகக் கொள்கிறான், அனுபவிக்கிறான்; இப்படிப்பட்டவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். பிராமணார்த்தத்திற்குச் சென்று பயன் பெற்று வருகிறான்.

ஆகவே, நாட்டில் பொது மக்களை அயோக்கியர்கள், ஜாதி என்னும் பெயரால் மனதறிந்து பலர் ஏமாற்றி கீழ்மகனாக ஆக்கி சுயநலம் அனுபவித்து வருகிறார்கள்.

---------------------

(தந்தை பெரியார்- "உண்மை", 14.1.1973)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா