தோழர் குத்தூசி அவர்கள் தஞ்சைமாவட்டத்தில், புதுக்கோட்டை வட்டம், குருவிக்கரம்பை கிராமத்தில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக் கல்வியை முடித்துத் திருச்சி தேசியக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

பழுத்த வைதீகராக, கதர் அணியும் தேசிய இளைஞராகக் கல்லூரி மாணவப் பருவத்தைத் தொடங்கிய குருசாமி கல்லூரியை விட்டு வெளியேறும்போது தீவிர புரட்சிக் கருத்துகளை உடையவராகத் திகழ்ந்தார்.

1925 ஆம்ஆண்டு தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த காந்தியைச் தேசிய கல்லூரிக்கு அழைத்துச் சிறப்பிக்கவும் பண முடிப்பு ஒன்று தரவும் குருசாமி விரும்பி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து காந்தியாரும் அழைக்கப்பட்டார்.

காந்தியாருக்குக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு ஒன்று வாசித்து அளித்தனர். கல்லூரி நிர்வாகம் உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டதால் வரவேற்புரை சமற்கிருதத்தில் இருந்தது. காந்தியார் உரையாற்றும் போது தனக்குச் சமற்கிருதத்தில் வரவேற்புரை வாசித்ததை வன்மையாகக் கண்டித்தார். அதோடு “எனக்குப் படித்த வரவேற்புரையை உங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? கை தூக்குங்கள் பார்க்கலாம்.'' என்றார். ஒருவர் மட்டுமே கை தூக்கினார். அந்த ஒருவர் அந்த வரவேற்புரையை எழுதி வாசித்த சமற்கிருதப் பண்டிதரே. இதைக்கண்டு காந்தியார் உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்கள் தாய்மொழியான தமிழில் ஏன் வரவேற்புரையை அளித்திருக்கக்கூடாதா? என்று கேட்டவுடனேயே அருகில் நின்ற குருசாமி ஏஞுச்ணூ ஏஞுச்ணூ (கேளுங்கள், கேளுங்கள்) என்று ஆங்கிலத்தில் உரக்கக் கத்தினார். காந்தியார் குருசாமியை முறைத்துப்பார்த்து "இது அதைவிட மோசமானது'' என்றார். குருசாமிதனது தாய்மொழிப் பற்றைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியதை இதன் மூலம் அறியமுடிகிறது.

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட குருசாமி குடி அரசு பத்திரிகையைத் தொடர்ந்து படித்து வந்தார். சுயமரியாதை கட்சியில் ஈடுபாடுகொண்டு 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியாரைச் சந்தித்தார். பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோட்டிலேயே தங்கி இயக்கப் பணியில் ஈடுபட்டார். படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய காசு பார்த்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கனவு காண்கின்ற இளைஞர்கள் மத்தியில், குருசாமி பெரியாரின் குடிஅரசு பத்திரிகை அலுவலகத்தில் "குடிஅரசு' இதழ் சந்தாதாரர்களுக்கு இதழ்களைத் தபாலில் அனுப்பும் பணியை மேற்கொண்டார் என்பது அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது வைத்திருந்த பற்றைக் காட்டுகிறது. நாளடைவில் குடிஅரசு மற்றும் ரிவோல்ட் ஆங்கில இதழ்களில் கட்டுரை மற்றும் தலையங்கங்கள் எழுதினார். பெரியாருடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“படித்த அழகான கலப்பு மணம் செய்த கொள்ள விரும்பும் பெண் தேவை. விதவையாக இருந்தால் சிறப்பு'' என்று குடிஅரசு இதழில் விளம்பரம் தந்தார். இருப்பினும் பெரியாரின் விருப்பப்படி 1929 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் ஞாயிறு மாலை ஈரோட்டில் பெரியார் மாளிகையில் பெரியார் தலைமையில் தொண்டை மண்டல முதலியார் என்னும் உயர்ந்த குலத்தவர் என்று கருதப்பட்ட குருசாமி அவர்களுக்கும், தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட, இசை வேளாளர் வகுப்பில் பிறந்த குஞ்சிதம் அம்மையாருக்கும் கலப்புத் திருமணம் மட்டுமின்றி வைதீகச் சடங்குகள் இல்லாத சீர்த்திருத்தத் திருமணம் நடைபெற்றது. 83 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் கலப்புத் திருமணம் இதுவே. இத்திருமணத்திற்குப்பின் பல கலப்புத் திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறத் தொடங்கின.

அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பர். ஆனால் குத்தூசி குருசாமி நினைத்ததைச் சொல்வார், சொல்வதை செய்வார், எக்காரணம் கொண்டும் சமரசம் என்பது அவர் வாழ்வில் இல்லை. அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

அவர் எழுதும் கட்டுரைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படும். குறிப்பாக காந்தி, நேரு, இராசாசி, சத்தியமூர்த்தி எனச் சிலரைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை "வருணாசிரமத்தில் நான் நம்பிக்கையுள்ளவன்' என்று காந்தியார் "யங் இந்தியாவில்' எழுதி இருந்ததைக் கண்டித்து குருசாமி 1931 சூலைத் திங்கள் 27 ஆம் நாள் “புதுவைமுரசு' இதழில்

“காந்தியார் கக்கும் நஞ்சு'' என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

“காந்தி சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்பார்

ஆனால் வருணாசிரமம் இருக்க வேண்டுமென்பார்''

“வருணாசிரமம் என்றால் இப்போது இருக்கும் வருணாசிரமம் அல்ல; என்னுடைய வருணாசிரமம் வேறு என்பார்''

“கலப்பு மணம், சமபந்தி போஜனம் செய்யலாம் என்பார்

ஆனால் ஜாதியை ஒழிப்பதற்கு இரண்டுமே அவசியமில்லை என்பார்''

“ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்பார்

ஆனால் என்னுடைய ராமன் வேறு என்பார்''

“இந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பார்

ஆனால் இரண்டு மதக்காரர்களும் அவரவர் மதத்தை காப்பாற்ற வேண்டுமென்பார்''

என்று எழுதிக் காந்தியின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

பெரியாருடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் வெளியேறிய குருசாமி, அமைச்சர் பி.டி. ராசன் அவர்களின் உதவியால் 1931 ஏப்ரல் 20 அன்றுசெம்பியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மாத ஊதியம் ரூ.35/– அரசுப் பணியில் இருந்தாலும் தனது கட்டுரைகளைக் குடிஅரசு, குத்தூசி, புதுவை முரசு, அறிவுப்பாதை ஆகிய இதழில்களில் வெளியிட்டு வந்தார்.

1932 இல் குடிஅரசு இதழில் சுயமரியாதை இயக்கத்தைக் கடுமையாகப் பேசித் தாக்கிவந்த சத்தியமூர்த்தியைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதினார். “அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு''

“முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிடமாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்கைளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையில் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செய்வீர்களாச்சே? எப்படி இருந்த போதிலும் சத்திய மூர்த்தியை அடித்துவிடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்'' என்று எழுதினார்.

அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசும்போது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தேவிட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த குருசாமி “அண்ணா முதுகு எப்படி இருக்கிறது?'' என்று மீண்டும் கிண்டலாக ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் சென்னை செயிண்ட் மேரிஸ் அரங்கில் கத்தோலிக்கர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. சென்னை ஆர்ச் பிசப் தலைமை தாங்கினார். இந்த மாநாடு சுயமரியாதை இயக்கத்தைத் தாக்குவதற்கென்றே கூட்டப்பட்டது. பெரியாரையும் குடிஅரசு பத்திரிகையையும் கடுமையாகத் தாக்கியதோடு மல்லாமல் கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனைக் கண்டித்து 1933 ஏப்ரல் 30 ஆம்நாள் குடி அரசு இதழில் “கத்தோலிக்கர்களின் ஆவேசம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திடமோ அல்லது ஒரு தனி நபரிடமோ எவ்விதமான விரோதமும் கிடையாது. கத்தோலிக்கர்களிடமும் எவ்விதமான சச்சரவும் கிடையாது. ஆனால் சமீபகாலமாகக் கத்தோலிக்கர்கள் மாத்திரம் எங்கு பார்த்தாலும் ஆவேசம் கொண்டு கிளம்புகிறார்களே! அதற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுடைய மதத்திலுள்ள ஊழல்கள் வெளிப்பட்டு விடும் என்ற பயம்தான். சரக்கு நல்ல சரக்கா இருந்தால் செட்டியாருக்குக் கோபம் வரக்காரணமில்லை''. என்றும் மேலும் தோழர் பெட்ரண்ட் ரஸ்ஸல் “நான் ஏன் கிருத்துவனல்ல'' என்று ஒரு சிறு புத்தகம் எழுதி இருக்கிறார். நமது கிறித்துவ தோழர்கள் முக்கியமாக கத்தோலிக்க தோழர்கள், தாங்களே மேதாவிகள் என்பதை மறந்து இந்த நூலைச் “சயித்தான்'' என்று அசட்டுத்தனமாகச் சொல்லிவிடாமல் ஒரு தரமாவது புரட்டிப் பார்க்கும்படி விரும்புகிறேன். அதில் ஒரு இடத்தில் அவர் கூறுகிறார்.

“அறிவியலிலாகட்டும், ஒழுக்கத்திலாகட்டும் கிறிஸ்துவைவிட புத்தரும், சாக்ரடீசும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது என் அபிப்பிராயம். சரித்திர சம்பந்தமாகப் பார்க்கப் போனால், கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்பது முழுச் சந்தேகமாக இருக்கிறது. உலக முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாக இருப்பது கிறிஸ்து மதம்தான் என்பதை நிச்சயமாகக் கூறுவேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைமுறையில் இருக்கும் கத்தோலிக்க மதம் எத்தகையது என்று சுருங்கக் கூற வேண்டுமானால் “இந்து மதத்திலுள்ள ஊழல்களும் கிறித்து மதத்திலுள்ள ஊழல்களும் சேர்த்துத் திரட்டிய பிண்டமே கத்தோலிக்க மதம் என்று சொல்லலாம்'' என்றார்.

மேலும் 1953 ஆம்ஆண்டு சென்னை செயிண்ட் மேரிஸ் அரங்கில் “சாதி ஒழிப்பு மாநாடு'' நடத்திட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுகிறவர்கள் சாதி ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கருதினர். தனது மகளைக் காந்தியார் மகனுக்குக் கலப்பு மணம் செய்து கொடுத்த இராசாசி அவர்களை மாநாட்டுக்குத் தலைமை தாங்கக்கோரிக் கடிதம் எழுதினார். குருசாமியின் அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ஆச்சாரியார் “மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை'' என்று பதில் அனுப்பினார். தோழர் குருசாமி உடனே காமராசர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்கக் கோரினார். காமராசரும் ஒப்புதல் தந்தார், மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தித் தந்தார். அந்த மாநாட்டிற்குப் பிறகு குருசாமி காமராசர் இடையே நட்பு தொடர்ந்ததோடு குருசாமியின் கருத்துக்களைக் காமராசர் முழுக்க முழுக்க ஆதரித்தார். ஆச்சாரியரின் குலக் கல்வித் திட்டத்தைக் காமராசர் எதிர்த்து அதன் மூலம் முதலமைச்சர் ஆனதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் தோழர் குருசாமி அவர்களே.

1963 ஆம்ஆண்டு சூன் 28 ஆம் நாள் மதுரை கோயில் குடமுழுக்கு விழாவில் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள இருந்தார். இதனைக் கண்டித்து “குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன். நாட்டின் அத்தனை கோடி மக்களுக்கும் பொதுவானதொரு பெருந்தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழக்குத் திருப்பணிக்காக வருவதால் இந்து மத நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் போன்ற சரிபாதி மக்கள் மனம் புண்படும்'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தார். அதோடு அதனை மீறிக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சுயமரியாதை இயக்கம் மறியலில் ஈடுபடும் என்று குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதம் கண்டவுடன் குடியரசுத்தலைவர் மதுரைக்கு வருவதை ரத்து செய்தார்.

சமீபத்தில் சென்னை வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பதி கோயிலுக்குச் சென்று பூர்ண கும்ப மரியாதை பெற்று வெங்கடேசப் பெருமாளை வணங்கிச் சென்றதை நாம் அறிவோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனை வரவிடாமல் தடுத்திட அன்று ஒரு குத்தூசி குருசாமி நமக்கு இருந்தார். இன்று பிரணாப் முகர்ஜியைத் தடுத்திட நம்மில் ஒரு குருசாமியும் இல்லையே!

இப்படி வாழ்ந்த குருசாமியிடம் அவர் மகன் கவுதமன் “ஏனப்பா! நீங்கள் அதிகப் பணம் பெருக்கும் வழிகளைக் கொள்கை இலட்சியத்திற்காக ஒதுக்கித் தள்ளி விடுகிறீர்களே, இக்காலத்தில் அறிவிலிகள், அக்கிரமக்காரர்கள் எல்லோரும் பணபலத்தால் எல்லா வசதிகளையும் அடைந்து விடுகிறார்களே, நீங்கள் மட்டும் இப்படி இருக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, “பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் பன்றிக்கும் பகுத்தறிவுமிக்க நமக்கும் என்ன பாகுபாடு? பெரும் பணம் அவசியம் என்றால் நான் இன்று கூடத் திரட்ட எத்தனையோ வழிகள் தெரியும். அதை எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது எனக்குத் தேவையில்லை என்று கருதியே இருக்கிறேன்'' என்றார்.

ஒரு முறை மகள் ரஷியா “ஏனப்பா நீங்கள் ஏன் இப்படி உண்மையைக் கூறி எல்லோரையும் பகைத்துக் கொள்கிறீர்கள். ஏன் நீங்களும் அப்படி நடக்கக்கூடாது'' என்று கேட்டபோது “அப்படி நடப்பதற்குத்தான் பலர் இருக்கிறார்களே, யாரும் வாழ்க்கையில் செய்யத் துணியாத வேலையை நான் செய்கிறேன். உண்மையைக் சொல்வதென்றாலே பகைமை ஏற்படத்தான் செய்யும். அன்றைய சாக்ரடீசிலிருந்து இன்றைய பெரியார் வரையில் பலர் இதற்காகவே பாடுபடவில்லையா?'' என்றார்.

குத்தூசி குருசாமி குஞ்சிதம் இணையர் இப்படியே உண்மை, நீதி, நியாயம் எனக் கடைசி மூச்சு இருக்கும்வரை பேசிப் பேசியே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.

பொதுவாழ்வில் ஈடுபடும் தலைவர்கள் எல்லாம் சொத்து சுகங்களோடு தங்கள் குழந்தைகளின் திருமணம் மட்டுமின்றிப் பேரக் குழந்தைகளின் திருமணங்களையும் முன் நின்று ஆடம்பரமாக நடத்தி அழகு பார்க்கும் இக்காலத்தில் குத்தூசி இணையர் பெற்ற குழந்தைகளின் திருமணத்தைக் கூட நடத்திப் பார்க்க முடியாத ஏமாளிகளாய் மறைந்தனர்.

Pin It