திராவிடன் இதழ் நிதி நெருக்கடியில் தள்ளாடித் தடுமாறியது. நீதிக்கட்சித் தலைவர்களும் உறுதி அளித்தவாறு நிதிஉதவி செய்ய மறுத்தனர். அறிவையும் ஆற்றலையும் உழைப்பையும் நல்கிய பெரியாருக்குப் பெரும்அளவு பண இழப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், “திராவிடன் பத்திரிகை நடத்தும் போது ஜஸ்டிஸ் கட்சியினர்பத்திரிகை நஷ்டத்திற்கு மாதாமாதம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூடக் கொடுக்கவேயில்லை.

அதனால் சுமார் 20, 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாகும் பத்திரிகையால் ஈ.வெ.ராவும் கை நட்டப்பட வேண்டி வந்தது. அதற்காக ஆதியில் பெருந்தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத் தவிர ஒருவரும் கொடுக்க வில்லை'' என்று குடிஅரசு 29.3.1936 செய்தி வெளியிட்டது. குடியரசு, ரிவோல்ட் ஆகிய பத்திரிகைகளை நிதிநெருக்கடிகாரணமாகச் சென்னையிலிருந்து ஈரோடுக்குக் கொண்டு செல்லவும் பெரியார் முடிவெடுத்தார். இந்நிலையில் திராவிடன் நாளிதழ் பொறுப்பைக் கவனிக்க இயலாத நெருக்கடி ஏற்பட்டது. திராவிடன் மேலாண்மைப் பொறுப்பிலிருந்து பெரியார் நாணயமாக விலகிக் கொண்டார்.

குடிஅரசு இதழ் பெரியாரின் செல்லப்பிள்ளை; சுயமரியாதை இயக்கத்தின் சுவாசக்காற்று. எனவே அதனைக் காப்பாற்றுவதில் பெரியார் பெரும் கவனம் செலுத்தினார். காங்கிரசுக் கட்சியில் பெரியார் பணியாற்றிய போதே தண்டனை அனுபவித்த காலத்திலேயே (1922) குடிஅரசுஇதழைத் துவக்கவும் திட்டமிட்டார். 19.1.1923 அன்று முறைப்படி பதிவு செய்தார். 2.5.1925 அன்று முதல் இதழை வெளியிட்டார். “ஜனநாயகம், என்பது வடமொழிச் சொல், அதை வேண்டாமென்று ஒதுக்கிக் "குடிஅரசு' என்ற பெயரை வைத்தேன்'' என்ற அறிக்கை பெரியாரின் தூய தமிழ்ப் பெயரின் தாக்கத்தை வெளிப்படுத்தியது.

குடிஅரசு இதழின் முதல் இதழின் முகப்பு அட்டையின் மேற்பகுதியில், துறவி ஒருவர் மூன்று மதங்களின் கோவில்கள், இந்தியத்தாய், நெசவு செய்யும் தொழிலாளர், உழவுசெய்யும் உழைப்பாளி, கைராட்டை சுற்றும் பெண், மரத்தச்சுத் தொழிலாளர், மூட்டை சுமக்கும் பட்டாளி ஆகிய படங்களும், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர்இனம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோருமிந் நாட்டு மன்னர்'' என்ற பாரதி பாடலும், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்பாவம், நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்ற பாரதி பாடலும் அச்சிடப்பட்டிருந்தது. இதழின் உள்ளே தலையங்கம் உள்ள பகுதியின் மேற் பகுதியில் கைராட்டையின் படமும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்; ஒழுக்க முடைமை குடிமை, இழுக்க மிழிந்தபிறப்பாய் விடும்; வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடாதெனின் என்ற திருக்குறள் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

மூன்று மாதங்களுக்குப்பின்னர் வெளிவந்த குடிஅரசு இதழில் குறட்பாக்கள் இருந்த பகுதியில், அவைகளுக்குப்பதிலாக, “அனைத்துயிர் ஒன்றெண்ணி, அரும்பசி எவர்க்கும் ஆற்றி, மனத்துளே பேதாபேதும் வஞ்சகம், பொய், களவு, சூது, சினத்தையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே! என்ற பாடல் காணப்படுகிறது. காங்கிரசிலிருந்து வெளியேறிய காலத்திற்குப் பின் வந்த குடி அரசு இதழ்களில் கைராட்டைப்படமும், அனைத்துயிர் ஒன்று எனும் பாடலும் நீக்கப்பட்டதோடு ஆசிரியர் ஈ.வே.ரா. இராமசாமி என்ற பெயரின் சாதிச் சொல்லும் எடுத்தொழிக்கப்பட்டது.

“நமது நாடு அரசியல் பொருளியல் சமூகவியல் ஒழுக்கவியல் முதலிய எல்லா துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்ய வேண்டும். நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் கலைவளர்ச்சிக்காகவும் மொழி வளர்ச்சிக்காகவும் இதன் மூலம் உழைத்து வருவோர், ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து தேசம்தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று மக்களுள் சுயமரியாதையும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் துன்பின் மயமாதல் வேண்டும்.'' என்று தம் குறிக்கோளை கொள்கையை செயல்திட்டத்தைக் குடிஅரசு முதல் இதழிலேயே தந்தை பெரியார் அவர்கள் தெளிவுடன் சுட்டிக்காட்டினார்.

குடிஅரசு தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், "நமது பத்திரிகை' என்ற தலையங்கத்தில் "குடிஅரசு குறிப்பிட்ட கருத்தைப் பிரசுரம்செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வியாபாரப்பத்திரிகை அல்லவாதலின்... பிரதிவாரமும் குடிஅரசு தனது தத்துவத்தை விளக்கும் போது கண்ணீர் கொட்டாமல் இருக்க முடியவில்லை'' என்ற வாசகம், ஏடு நடத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளைப் பறை சாற்றியது. ஆயிரம் சந்தாக்களே குடிஅரசுக்குக் கிட்டியது. “குடிஅரசு ஏற்பட்டு ஆறுமாதகாலமாகியும் இதுவரை ஆயிரத்து சில்லறை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள். அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை, பாமர ஜனங்கள் சரியானபடி குடிஅரசை ஆதரிக்கவில்லையானால், அது தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதன் கடமையே அல்லாமல், வியாபாரத் தோரணையாய் மட்டுமே நடந்துவராது என்று (குடிஅரசு 1.11.1925) ஒளிவு மறைவு இல்லாமல் நிலைமையை விளக்கியதால் அடுத்த ஆறு மாத காலத்தில் சந்தா இரண்டாயிரம் ஆக உயர்ந்தது.

குடிஅரசு மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் “இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருட ஆரம்ப இதழில் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது குடிஅரசுக்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒருவருடத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருடத்தில் 4500 சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமானவரையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று பூரிப்புடன் குறிப்பிட்டார். அதே இதழ் தலையங்கத்தில் “ஆரம்பத்தில் இருந்து இதுவரை முன்னால் குறிப்பிட்ட கொள்கைகளில் ஒரு சிறிதும் தவறாமல் அது ஏற்றுக் கொண்டபடி வந்திருக்கிறது என்பதையும் மெய்பித்து விட்டோம்.

ஆகவே குடிஅரசு குறைந்தது ஒரு 10,000 பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்த 4500 ஐக் கொண்டு நான் சந்தோஷம் அடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை'' என்று குறிப்பிட்டு, அடுத்த இலக்கினை நோக்கி இலட்சியப் பயணத்தைத் தொடர தன் தொண்டர்களைத் தயார் படுத்தினார்.

இந்நிலையில் நமது இயக்கக் கொள்கைகள் அண்டை மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக "ரிவோல்ட்' என்ற ஆங்கில மொழித் திங்கள் இதழை வெளியிடப்போவதாக குடிஅரசு 25.3.1928 இதழ் மூலம் பெரியார் அறிவித்தார். 6.11.28 அன்று சவுந்திர பாண்டியனார் வெளியிட வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் இதழ் தொடர்ந்து வெளிவந்தது. பம்பாயிலிருந்து வெளிவரும் " The Young Liberator ' என்ற ஏடு, பாக்கிஸ்தான் நாட்டில் லாகூரிலிருந்து வெளிவரும் "The Light ' என்ற ஏடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெளிவந்த " Truth Seeker ' என்ற ஏடு முதலானவைகள் எல்லாம் பாராட்டி எழுதும் அளவிற்குப் பெரியாரின் ரிவோல்ட் ஏடு உலகின் பார்வையில் ஈர்க்கப்பட்டது.

ஆங்கிலேயே அரசின்அளவு கடந்த அடக்குமுறை காரணமாக குடிஅரசு இதழை நிறுத்த வேண்டிய கட்டாயச் சூழல் உருவானது. இதனைக்கண்டு அடங்கிப் போய் அமைதி காக்கவில்லை பெரியார். மாறாக “அடுத்த வாரம் குடிஅரசு பத்திரிகை வரத் தவறும்பட்சத்தில் வேறு பத்திரிகை வெளிவரும் என்று 19.11.1933 நாளிட்ட குடிஅரசு இதழிலேயே பிரகடணம் செய்தார். அதற்கேற்ப 26.11.1933 அன்று "புரட்சி' என்ற பெயரில் வார இதழைக் குடிஅரசு வடிவத்திலேயே வெளிவரச் செய்தார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை, குடிஅரசு இதழின்பணிகளைப் புரட்சி ஏடு தொடர்ந்தது.

அரசின் அடக்குமுறையும் தொடர்ந்தது. “இந்த வருடத்தில் மாத்திரம் 3 தடவை பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டதாலும், 2, 3, தடவை ஜாமீன் கட்டும்படி உத்தரவு செய்யப்பட்டதாலும் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டதாலும் எதிர்வழக்காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்கள் ஏற்பட்டன'' என்ற அறிக்கை 9.12.1934 நாளிட்ட "பகுத்தறிவு' வார ஏட்டில் வெளியானது. புரட்சி ஏடு சந்தித்த அளவற்ற அடக்குமுறைகளை விளக்கும் பெரியாரின் அறிக்கைக்கு ஏற்ப 17.6.1934 இதழுடன் நிறுத்தப்பட்டது. அந்த இதழின் பணியைப் "பகுத்தறிவு' தொடர்ந்தது. பகுத்தறிவு இதழை நாளிதழாக நடத்தப் பெரியார் ஈடுபட்டார். ஆனால் தொடங்கிய வேகத்திலேயே 27.5.1934 வெளியான நாளிதழோடு அதனை நிறுத்தி வைக்க வேண்டிய அவலமும் நேரிட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் "பகுத்தறிவு' என்னும் பெயரில் வார இதழினை மீண்டும் பெரியார் 26.8.1934 அன்று வெளியிட்டார். 1.5.1935 முதல் மீண்டும் "பகுத்தறிவு' மாத இதழாக வடிவம் மாறியது. இந்த காலத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிஅரசு வார இதழை 13.1.1935 முதல் மீண்டும் "பகுத்தறிவு குடிஅரசு வார இதழை 13.1.1935 முதல் புதுப் பொலிவுடன் பெரியார் வெளியிட்டார். 1949 ஆம் ஆண்டுடன் குடிஅரசு தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது.

ஆனாலும் 1.6.1935 அன்று முதல் வெளிவந்த விடுதலை நாளிதழ் திராவிடர் இயக்கத்தின் பாசறை முழக்கமாய் நாள்தோறும் ஒலித்து வந்தது. 23.9.1944 முதல் ஜஸ்டிஸ் என்ற ஆங்கிலமொழி வார இதழையும் 4 பக்க அளவில் ஓராண்டுக்கு மேல், திராவிடர் கழக இதழாகத் தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வந்தார்கள். இத்துடன் பெரியார் அவர்கள் துவக்கிய உண்மை இதழும் The Modern Rationalist என்ற ஆங்கில இதழும் இன்றும் தொடர்ந்துவெளி வந்து திராவிட இயக்க இலட்சியங்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

பெரியாரின் திராவிடர்கழகத்தைப் போலவே, அறிஞர் அண்ணாவின் தி.மு.கழகமும் பத்திரிகைகளைப் பரப்புவதில் முழுவீச்சுடன் செயல்பட்டு இரட்டைக்குழல் துப்பாக்கிகளாய் இன எதிரிகளுக்குத் திகைப்பூட்டியது. திராவிட நாடு, காஞ்சி, நம்நாடு, நவயுகம், மாலைமணி, Home Land, Home rule ஆகியஇதழ்களின் ஆசிரியராக இருந்து வியக்க வைக்கும் தம் எழுத்தாற்றலால்,இதழியல் துறையில் பெரும் புரட்சியை அண்ணா உருவாக்கினார்!

திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் தமிழகத்தின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிய போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தோர் பெரும்பாலோர் இதழாசிரியர்களாக இருந்த மாட்சிமையைக்கண்டு உலகமே வியந்து பாராட்டியது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் மன்றம், மக்களாட்சி இதழ்களையும், கலைஞர் மு. கருணாநிதி மறவன்மடல், முரசொலி, வெள்ளிவீதி, முத்தாரம் இதழ்களையும், சத்தியவாணிமுத்து அன்னை இதழையும், கே. ஏ. மதியழகன் தென்னகம் இதழையும் ஆசிரியராகப் பொறுப்பேற்று இதழ் பணியாற்றினார்கள்.

திருவாரூர் கே. தங்கராசு அவர்களின் பகுத்தறிவு, திராவிட ஏடு, வே. ஆனைமுத்து அவர்களின் குறள் முரசு, குறள் மலர், சிந்தனையாளன், Periya Era, சா. குருசாமி அவர்களின் குத்தூசி, சாமிசிதம்பரனாரின் அறிவுக்கொடி, இனமுழக்கம், தமிழ் மன்றம், ஏ.பி. சனார்த்னம் அவர்களின் தோழன், கவிஞர் கண்ணதாசனின் தென்றல், ஈ.வே.கி. சம்பத் அவர்களின் புதுவாழ்வு, விடிவெள்ளி முருகு சுப்பிரமணியம் அவர்களின் பொன்னி, காஞ்சி மணிமொழியாரின் போர்வாள், கா. அப்பாத்துரையாரின் முப்பால் ஒளி, நாஞ்சில் கி.மனோகரனின் முன்னணி, இலக்கியவாதி சுரதா அவர்களின் விண்மீன், க. அன்பழகனின் புதுவாழ்வு, இராசாராம் அவர்களின்திருவிளக்கு, எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் தென்னரசு, பாவலர் பாலசுந்தரத்தின் தென்சேனை, ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் திராவிட சினிமா, தனிஅரசு, டி.கே. சினிவாசனின் தாயகம்,, செ. கந்தப்பனின் செங்கதிரோன், திருக்குறள் சா. முனிசாமியின் குறள் மலர், சி. சிட்டிபாபுவின் கழகக் குரல், பி.எஸ். இளங்கோவனின் கலையாரம், ஆலடி அருணாவின் எண்ணம், இராம அரங்கண்ணலின் அறப்போர் முதலான நூற்றுக்கணக்கான திராவிடர் இயக்க இதழ்கள்ஏற்படுத்திய விழிப்புணர்வை– கருத்துப் பரப்பல்சாதனையை வரலாறு என்றும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்!

Pin It