7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஆளுநர் அலட்சியத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கா.சு. நாகராசன் தலைமையில் தமிழ்நாடு திராவிடர்கழகம் நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை பொள்ளாச்சியில் பிப்.3 ஆம் தேதி தொடங்கியது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். 8ஆம் தேதி இந்த இயக்கம் புதுவையில் நிறைவடைந்தது. 15 தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்கள் இதில் பங்கேற்றனர். ஈரோடு, மேட்டூர், சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சி, சென்னையில் பூந்தமல்லி, சைதாப் பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் வழியாக ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மக்களை சந்தித்தது இந்தக் குழு. 7ஆம் தேதி மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில் பயணக் குழுவினரை வரவேற்கும் பொதுக் கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

sengkodhi 600கூட்டத்துக்கு சு. பிரகாசு தலைமை தாங்கினார். நாத்திகனின் சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு கூட்டம் தொடங்கியது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. முருகன் காந்தி, தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணித் தலைவர் பொழிலன் ஆகியோர் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். அவர் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தியாவில் எந்த ஒரு வழக்கும் சந்திக்காத தடைகளையும் சட்ட மீறல்கள் முறைகேடுகளையும் சந்தித்த வழக்கு இது. மத்தியில் எதிர் துருவங்களான காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும் சரி, பா.ஜ.க. ஆட்சியிலிருந்தபோதும் சரி இந்த வழக்கில் மட்டும் கைகோர்த்து நின்றன என்றால் அதற்கு ஒரே காரணம், இந்த வழக்கை பார்ப்பனக் கண்ணோட்டத்தோடு இரு ஆட்சிகளுமே பார்த்ததுதான். இந்த வழக்கில் 7 தமிழர்களுக்கு நியாயம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஆளும் பார்ப்பன அதிகார வர்க்கம் உறுதியுடன் செயல்பட்டது. தமிழ்நாட்டில் பெரியார் உருவாக்கிய பார்ப்பனரல்லாத தமிழின உணர்வுக்கு இந்த விடுதலை வலிமை சேர்த்துவிடும் என்று பார்ப்பன அதிகார வர்க்கம் அஞ்சி, அ தன் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி இன்று வரை விடுதலையைத் தடுத்து வருகிறது.

26 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது தடா நீதி மன்றம். உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. 3 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். ஏனையோர் விடுதலை யானார்கள். தூக்குத் தண்டனைக்குள்ளானவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன. 5 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டாலே தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறி தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உருவான பேரெழுச்சி காரணமாக கடந்தகால தீர்ப்புகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மாநில அரசு விரும்பினால் விடுதலை செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சரவையைக் கூட்டி, 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்தார். மத்திய அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சட்டம் கூறியதால் நடுவண் ஆட்சிக்கு 3 நாளில் பதில் தருமாறு கடிதம் எழுதினார். நடுவண் காங்கிரஸ் ஆட்சி, மாநில அரசு கோரிக்கையை அவமதித்து, நேரடியாக உச்சநீதிமன்றத்தில் விடுதலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து விடுதலைக்கு தடை வாங்கியது. வழக்கு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையே இரண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதவிக்கு வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்காமல் இழுத்தடித்தனர். 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கா மாநில அரசுக்கா என்ற குழப்பத்துக்கு தெளிவான வழி காட்டவில்லை. மீண்டும் 3 நீதிபதிகளடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புக்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது. ஆனால் மாநில அமைச்சரவை ஆளுநரிடம் பரிந்துரைத்து தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்ற அரசியல் சட்ட உரிமையை உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏற்றுக் கொண்டன. அதே நேரத்தில் மாநில அரசுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கும் 161ஆவது பிரிவை இந்த குறிப்பிட்ட வழக்கில் பயன்படுத்த முடியுமா என்ற சட்டச் சிக்கல்கள் உருவாக்கப்பட்டன.

இதற்கிடையே தகவல் தொடர்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பயன்படுததி சிறைக் குள்ளிருந்து கொண்டே பேரறிவாளன் இந்த வழக்கில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து சட்டப் போராட்டத்தின் வழியாக வழக்கை முன் நகர்த்தினார். தண்டனைக் குறைப்பு கேட்டு குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் செய்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலே, உள்துறை உச்சநீதி மன்றத்துக்கு தவறாக தகவல் தந்தது என்ற உண்மை அம்பலமானது. குடியரசுத் தலைவர் மனுவை நிராகரித்து விட்டார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை அறிவித்தது.

2010 முதல் 2015 வரை இந்தியா முழுவதும் சிறை வாசிகள் தண்டனைக் குறைப்புக்கு பின்பற்றப்பட்ட நெறிமுறைகள் என்ன என்று பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தில் தகவலைத் தர முடியாது என்று பதில் வந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அப்படி எந்தப் பிரிவும் இல்லை என்று பேரறிவாளன் மீண்டும் மனு செய்தார். வேறு வழியில்லாமல் தகவல் ஆணையர் தகவலைத் தர உத்தரவிட்டார். அதற்குப் பிறகு உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகளில் தண்டனைக் குறைப்பு பெற்றவர் பட்டியலை வெளியிட்டது.

தண்டனைக் குறைப்புக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்பட வில்லை என்ற உண்மையும் வெளியே வந்தது. மாநில ஆளுநருக்கு தண்டனைக் குறைப்புக் கேட்டு தாம் விண்ணப்பித்த மனுவில் விரைந்து முடிவெடுக்கக் கோரி மீண்டும் உச்சநீதிமன்றம் போனார் பேரறிவாளன். இதில் 164ஆவது பிரிவின் கீழ் ஆளுநருக்கு முடிவெடுக்க உரிமை உண்டு என்று கூறியது உச்சநீதிமன்றம். உடனே தமிழக அமைச்சரவை கூடி 7 பேர் விடுதலையை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. மாதங்கள் பல உருண்டோடி விட்டன. தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர். தமிழக ஆளுநருக்கு இப்போது ஒரு கோரிக்கையை வைக்கிறோம். விடுதலை செய்யலாம் என்று ஒப்புதல் வழங்குவது, உங்களது சட்ட ரீதியான கடமை; அப்படி முடியாது என்றால், மனுவை நிராகரித்து திருப்பு அனுப்புங்கள். அப்போது மீண்டும் அமைச்சரவையை கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்தால் அப்போதே 7 பேரையும் விடுதலை செய்தேயாக வேண்டும். தர்மபுரி பேருந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 3 போ விடுதலை இந்த வழியில்தான் சாத்தியமானது.

தமிழக ஆளுநரே! குறைந்தபட்சம் மனுவை யாவது நிராகரித்து திருப்பி அனுப்புங்கள். கிடப்பில்தான் போடுவேன் என்றால் தமிழகத்தை விட்டு திரும்பிப் போ என்று ஆளுநரை எதிர்த்துப் போராடும் நிலைதான் உருவாகும். தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் ஜனவரி 14, 2018 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து இது தொடர்பாக மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்தார். ஒன்று - தமிழக ஆளுநர் 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும்; இரண்டு - அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டி, 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம்; மூன்றாவது - தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி இதை ஒற்றைத் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பலாம். தமிழக முதல்வர் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே கழகத்தின் கோரிக்கை என்று தனது உரையில் குறிப்பிட்டார், விடுதலை இராசேந்திரன்.

Pin It