இந்திராகாந்தி அம்மையார் மிகப் பெரிய பதவியில் இருந்தார். இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கலாம். வாய்ப்பு உண்டு. அதை அருமைத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தன்னுடை நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அம்மையார் மீது ஈழத் தமிழர்கள் பாசமும் பற்றும் கொண்டிருந்தார்கள். அந்த அம்மையார் அவர்கள் மறைந்த நேரத்தில் இரண்டு விடுதலைப்புலிகள் கருப்புக் கொடியை யாழ்ப்பாணத்தில் பறக்க விடுவதற்காகக் கொடிக்கம்பத்தில் ஏற முயன்றபோது சிங்களர்களால் சுட்டு பிணமாக வீழ்த்தப்பட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு. அந்த நேரத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தலைவர் பிரபாகரன் கூறினார். அந்த அஞ்சலியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிரபாகரன் அவர்கள் வருத்தத்துடன் அறிக்கை விட்டார்.

1984 ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் முயற்சிக்கு இந்தியா தயாராக இருந்தது. விசாகப்பட்டிணத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு தயாராக இருந்தது. கடல்வழியாகவும் விமானம் வழியாகவும் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதியைப் பிரித்துத் தமிழீழத்தை உருவாக்க, திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் என்ன உணர்வோடு உறுதியாக இந்தத் திடடத்தை உருவாக்கி இருந்தார் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் அவர் திட்டமிட்டதை முடித்திருப்பார். அவர் கண்ட கனவை நிறைவேற்றியிருப்பார்.

1983 இல் உரையாற்றிய போது ஆகத்து 18 இல் இந்திரா காந்தி அம்மையார்தான் சொன்னார். இலங்கையில் நடைபெறுவது ஜூனோசைட் – இனவெறிப் படுகொலை நடவடிக்கை என்று சொன்னார். இது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான முதன்மையான கருத்தாகும். இதுவரை யாரும் அங்கு நடைபெற்ற கொடுமையை இனவெறிப் படுகொலை என்று சொன்னதில்லை என்பது தான் எங்களின் துயரமான இன்றைய நிலை.

அந்த அம்மையார் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்கள். எப்பொழுது? ஒரே நாளில் 40000 தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு ஓரிரு நாட்களில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு 1983 இல் அதற்கு முன்பு நடந்த கொலைகளைப் பார்த்துத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலை வைத்தே அப்படிச் சொன்னார்கள். 1983 இலும் அதற்கு முன்பு நடைபெற்ற கொலைகளையும் வைத்தே அதற்கு முன்பு இனவெறி நடவடிக்கைப் பார்த்தே அந்த அம்மையார் இட் ஈஸ் ஜூனோசைட் –இனவெறிப் படுகொலைத் தாக்குதல் என்று சொன்னார். அந்தப் பார்வை தான் அந்தப் பாதைதான் அந்த அணுகுமுறைதான் தமிழீழ மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரத் தூண்டியது. அது இன்றும் இல்லாமல் போனது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

இன்று அய்.நா. மன்றத்தின் அந்த மனித உரிமைக்குழு கொடுத்துள்ள அறிக்கை குறைவான அறிக்கை அல்ல. அந்த மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகள் குறித்த அந்தக் கருத்தை உலகில் முதன் முதல் ஓங்கி ஒலித்தார்கள். நாங்கள் அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அது முழுமையான கருத்து அல்ல. மனித உரிமை மீறல் என்ற அளவிலே தான் ஈழத்தில் நடக்கிற நிகழ்வைப் பார்க்கிறார்கள். அதற்கு முன்பு அய்.நா. வெளியிட்ட அறிக்கையிலும் இனவெறிப் படுகொலை என்று சொல்ல வில்லை. இப்பொழுதும் இந்தத் தீர்மானத்திலும் இந்த இனவெறிப் படுகொலை என்ற சொல் இல்லை. மனித உரிமை மீறல் என்றுதான் உள்ளது.

மனித உரிமை மீறல் என்றால் இலங்கையில் இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று சிங்கள மனிதன்; மற்றொன்று தமிழ் மனிதன். மனிதனுடைய உரிமை இலங்கையில் மீறப்பட்டிருந்தால் சிங்கள மனிதனின் உரிமையும் மீறப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மனிதனுடைய உரிமை மட்டும்தான் மீறப்பட்டுள்ளது? அதிலும் அந்தத் தமிழ் மனிதனுடைய உரிமையை மீறியவன் யார் என்றால் சிங்கள மனிதன். அந்த மண்ணில் வெட்ட வெளிச்சமாக தெட்டத்தெளிவாக நிகழ்ந்து கொண்டிருப்பது ஒரு இனவெறி. அதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்தை ஒரு புது தொடக்கம் என்று கொண்டாலும் இந்தப் பெரிய குறைபாடு அந்தத் தீர்மானத்தில் இருக்கிறது. அமெரிக்கா இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளும் காலம் வரும். அதற்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுகிற காலம் வரும்.

ஒரு பெரிய கொடுமை, இதுவரை இல்லாத கொடுமை அந்தத் தீர்மானத்தில் இருக்கிறது. அதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கையில் 1833 லிருந்த எல்லா அறிக்கையிலும் இலங்கைத் தீவில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அது தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகிறது. அது தாயகம் அப்படிப்பட்ட தாயகம் வடக்கு கிழக்கு ஆனால் முதல் தடவையாக வரலாற்றில் அமெரிக்கா வெளியிட்டிருக்கிற அறிக்கையில் தீர்மானத்தில் வடக்கு என்று சொல்கிறார்கள். வடக்கு கிழக்கை விட்டு விட்டார்கள். முதல் தடவையாக தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு பெரிய மாநிலப் பரப்பு கிழக்கு

மாகாணம் ஒட்டுமொத்தமாக விடப்பட்டு உள்ளது. வடக்கு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தை நடத்தி முடித்துவிட்டு தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிற கொடுமையான சூழல். வடக்கு என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளார்கள். இது ஒரு பெரிய கொடுமை. இந்திய அரசு செயவர்த்தனா அரசோடு செய்து கொண்ட உடன்படிக்கையில்கூட இந்தத் தமிழர்களின் தாயகப் பரப்பு இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. அதுவும் ஒரு பிழையான கருத்துதான். சொற்றோடர்தான். ஏனென்றால் இங்கே என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவில் சென்னை, நெல்லை, மதுரை என்று சொல்லுகிறீர்களா இல்லையா? தமிழ்நாடு என்று தான் சொல்லுகிறீர்கள் இல்லையா? அதைப்போல இந்திய அரசு ஈழத்தில் தமிழர்களின் தாயகம் அதன் பெயர் தமிழீழம், தமிழீழம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று ஒப்புக்கொள்கிற இந்திய அரசு உங்களுடைய நாட்டில் இருக்கிற மாநில மொழி அடிப்படையிலான உரிமையை ஒப்புக்கொள்கிற இந்திய அரசு மாநில உரிமை அந்த அடிப்படையில் பார்த்தால் கூட நீங்கள் தமிழ்நாடு என்று இங்கே சொன்னால் இலங்கையில் உள்ள எங்கள் பகுதியைத் தமிழீழம் என்று சொல்ல வேண்டும் ஏன் சொல்லத் தயங்குகிறீர்கள்? தமிழீழம் என்ற சொல் முன்பு இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் தமிழ்நாடும் சென்னைதான்.

அது மட்டும் அல்ல, சிங்களர்களுக்கும் தனி நாடு இல்லை. ஒரு காலத்தில் கோட்டை ராஜ்யம், கண்டி ராஜ்யம் என்றுதான் இருந்தது. சிறீலங்கா என்ற பெயர் இல்லை. எங்களுக்கு யாழ்ப்பாணம் ராஜ்யம், அது தமிழர்களுடைய நாடு.

தமிழ்நாட்டில் சேரநாடு இருந்தது, சோழ நாடு இருந்தது. பாண்டிய நாடு இருந்தது. ஆனால் தமிழ்நாடு என்று இல்லை. அதுபோல தமிழீழம் என்ற சொல்லை இந்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். ஈழத்தைத் தமிழர்களின் தாயகம் என்று அரசியல் அமைப்பு ஒப்புக்கொள்கிற வரையில் எங்கள் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்திக் கொள்ள மாட்டோம்

(13.4.2012 அன்று சென்னையில் நடைபெற்ற “பிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர். காசி ஆனந்தன் உரை)

Pin It