அவமானப்படுத்தப்படும் பேராசான் மார்க்ஸ்

மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும். - வி.இ.லெனின்.

1

நான் அதிகம் தேடலுடன் என்னை பிணைத்திருந்த காலத்தில்தான் லெனினின் மேற்படி வாசகத்தை படிக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் மார்க்சியம் தொடர்பான நூல்களைத்தான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. அந்த நேரங்களில் அவ்வாறு படிப்பதில் ஒரு இனம்புரியாத பெருமிதமும், பூரிப்பும் இருந்ததும் உண்மை. மார்க்சியம், புரட்சிகர அரசியல் இப்படியெல்லாம் எவரேனும் பேசினாலே போதும், உடனே மனதை ஒருவகை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அப்போது இணைய வசதி இந்தளவிற்கு விரிவடைந்திருக்கவில்லை. எப்படியாவது பேராசானின் படம் ஒன்றை எடுக்க வேண்டும், ஆனால் எப்படி எடுப்பது? இறுதியில் வேறு வழியில்லாமல் திருகோணமலை நூல்நிலையத்தின் புத்தகமொன்றிலிருந்த படத்தைக் கிழித்து பிறேம் பண்ணி மேசையில் வைத்திருந்திருக்கிறேன். இந்த வகையான எனது செயற்பாடுகளைப் பார்த்த, பக்கத்து வீட்டுப் பிள்ளையொன்று என்னை ஒரு சன்னியாசிமாதிரிப் பார்த்தது வேறு கதை.

இப்படியான சூழலில்தான் ஹென்றி வோல்கவின் மார்க்ஸ் பிறந்தார் (Birth of A Genius) என்னும் நூலை ஆவலுடன் புரட்டிய போது அதன் முகப்பில் அச்சுறுத்தும் வகையில் லெனினின் மேற்படி வாசகத்தைப் படிக்க நேர்ந்தது. அன்றிலிருந்து இந்த மார்க்சியம், கம்யூனிசம், இடதுசாரி என்ற சொற்களைக் கேட்க நேர்ந்தாலோ அல்லது அது குறித்து ஆர்வம் ஏற்பட்டாலோ உடனே அந்த வாசகத்தையே நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வகையில் இப்போதெல்லாம் இவ்வாறான சொற்களைக் கேட்க நேர்ந்தால் அச்சம்தான் மேலிடுகிறது அத்துடன் கூடவே ஒரு  கேள்வி உலுப்பியெடுக்கிறது. இதனை உச்சரிப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உனது வாழ்க்கை முறை என்ன?

இப்படியான கேள்விகள் என்னை அலைக்கழிக்கும் போதெல்லாம் நமது சூழலை நினைத்து என்னை நானே ஆசுவாசுப்படுத்திக் கொள்வதுண்டு. நமது புலமைத்துவ சூழலில் ஒரு மார்க்சிஸ்ட் ஆகுவதற்கான தகுதிநிலைகள் பின்வருவனவற்றுள் ஒன்று என்பதை அறிந்த போது எனது மகிழ்சியை அடக்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலை நான் பெற்றிருக்கவில்லை. இறுதியில் நாலைந்து தட‌வைகள் சுவரில் தலையை முட்டி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். முன்னைய காலங்களில் சண்முகதாசனின் இரண்டு அரசியல் வகுப்பிற்குப் போயிருத்தல், மொஸ்கோவிலிருந்து வந்த இரண்டு சிகப்பு நிற அட்டைப் புத்தகங்களை வாசித்திருத்தல், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் என்ற பெயரில் இயங்கும் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் வகித்திருத்தல், சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டிருத்தல். இதில் ஒன்றைக் கூட அடைய முடியாத அபாக்கியசாலிகள் கவலைப்படத் தேவையில்லை. கியூபாவிற்கு ஆதரவாகவும் அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒரு கட்டுரை எழுதினால் போதும் அவர் மாபெரும் மார்க்சிஸ்ட் ஆகிவிடலாம் இல்லாவிட்டால் இந்தியாவிற்கு எதிராக சில சுலோகங்களை எழுதினால் போதும் அவர் (மாவோயிச) மார்க்சிஸ்ட் ஆகிவிடலாம். நமது ஈழத்துத் தமிழ்ச் சூழலில் எல்லாமே மலினப் படுத்தப்பட்டுவிட்டது அல்லது மலினப்படுத்தப்படுகிறது.

இங்கு மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளுதல் - என்ற கருத்தின் அடிப்படையை நமது மார்க்சிய அறிவு ஜீவிகள் சிறிதளவாவது விளங்கிக் கொள்ள முயற்சித்திருக்கிறார்களா என்பது சந்தேகமே! எல்லாமே இங்கு மிகவும் இலகுவாக இருக்கிறது. எந்தவொரு அர்ப்பணிப்பும் இல்லாமல் ஒன்றை அடைந்துவிட முடியுமென்பது ஒரு நிலப்பிரபுத்துவ மனோபாவம். அங்கு எல்லாவற்றுக்குமே ஒரு விலையுண்டு. ஒரு வகையில் நமது ஈழத்து மார்க்சியர்கள் என்போரின் மனோநிலையும் இத்தகையதுதான். எந்த இழப்பும் இல்லாமல் ஒரு மார்க்சியவாதி ஆகுவது எவ்வாறு என்பதுதான் எங்கள் மத்தியில் இருக்கும் மார்க்சிய உரையாடல்களின் சாரம். 

ஒருவர் கம்யூனிஸ்டாக இருப்பதென்பது அவர் தனது வாழ்நாள் முழுவதும் அது குறித்த தேடலுடன் இருக்க வேண்டும் என்பதாகும். இதனைத்தான் லெனின் வாதம் - மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று  வளப்படுத்துதல், என்று சுட்டுகிறது. மனிதகுலம் படைத்தளித்திருக்கும் அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு போதுமே படித்து முடிக்க முடியாது. ஆனால் அவர் தனது காலத்தில் தன்னால் இயன்றவரை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இயங்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்பதே இங்கு அடிக்கோடிடப்படும் விடயமாகும். அடிப்படையில் கம்யூனிசம், மார்க்சிஸ்ட் என்பதெல்லாம் ஒரு வாழ்க்கை முறையினூடாகவே சாத்தியப்பட முடியும், அவ்வாறில்லாது தனது வாழ்க்கைக்கு வெளியில் இவற்றைப் பார்க்கும் போது, அங்கு மார்க்சிசம் என்பது வெறுமனே ஒருவகை வாய்ப்பாட்டு வாதமாகவே இருக்க முடியும் அல்லது ரெஜிராப்கே சொன்னது போன்று சூத்திரங்களில் சுகம் காணுவதாகவே இருக்கும். நமது சூழலில் நான் மார்க்சிஸ்ட், நான் இடதுசாரி என்று குறிப்பிட்டுக் கொள்வது ஒரு வகையில் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கான அடையாள மோகத்தின் வெளிப்பாடாகும். இன்று ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலிருந்தும் எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் மார்க்சிசம் பேசும் ஒரு சிலர், இந்த அடையாளமோக வியாதித் தொற்றுக்கு உள்ளானவர்களே! தங்களின் எல்லை எது என்பதை விளங்கிக் கொண்டு இயங்குபவர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

2

நான் எனது பாடசாலைக் காலத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கியதால் இவ்வாறான சிந்தனைகளின் பக்கமாக நகர நேர்ந்தது. நான் எந்தவொரு இடதுசாரி சுலோகம் கொண்ட கட்சியிலும் அங்கத்தவராக இருந்ததில்லை. எனது காலத்தில் அப்படியொரு ஈர்க்கும் தகுதிநிலையில் எந்தவொரு கட்சியும் இருந்ததுமில்லை. எல்லாமே சுய ஈடுபாட்டினால் சாத்தியப்பட்டவைகளே. எம்.எஸ் உதயமூர்த்தி, பி.சி.கனேசன் போன்றவர்களின் சுயமுன்னேற்ற நூல்களில் தொடங்கி, பெரியார், இங்கர்சால் என்று தளம் மாறிய வாசிப்பு, இறுதியில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என்று விரிவு கொண்டது. இவற்றுடன் நின்றுவிடாமல் லத்தின் அமெரிக்க, ஆப்பிரிக்க வகை மார்க்சிய அனுபவங்கள் மற்றும் மேற்கின் கருத்தியல் விவாதங்கள் என்றும் விரிந்து சென்றது. பிற்காலங்களில் எனக்கு அறிமுகமான நண்பர்கள் சிலர் மூலமே இவ்வாறான அறிமுகங்கள் வாய்க்கப்பெற்றன. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும் போது எங்கும் வெறுமை மட்டுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. நாம் படித்திருக்கிறோம், நான் படித்திருக்கிறேன் என்னும் தற்பெருமை வாதங்களைத் தாண்டி எதுவுமே நம்மிடமில்லை. இதிலுள்ள பெரும் சோகம் என்னவென்றால் இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் கூட நமது தற்பெருமைகளை விட்டுவிட்டு நம்மால் கீழிறங்க முடியாமல் இருப்பதுதான். 

நான் எனது வாசிப்பின் ஆரம்ப காலங்களில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தனது சொத்துக்களை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதி வைத்தார் என்று அறிந்தபோது, அதிர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் என்றால் பொதுவாகவே தான், தாங்கள் என்று யோசிக்காத பெருந்தகைகள், அவர்கள் சதா வீழ்ந்து கிடக்கும் மானிடர்கள் மீதே கரிசனை கொண்டிருப்பர் என்றெல்லாம் சிந்தித்து பூரித்துப் போன சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால் நமது ஈழத்து அனுபவங்களில் அது வேறொன்றாக இருந்ததை பார்த்தபோது கவலைப்படுவதைத் தவிர என் போன்றவர்களால் என்ன செய்ய முடியும். இப்போது என்னால் மிகத் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது அப்படி எவராலும் இருக்க முடியாது என்பதை. ஆனால் முடிந்தவரை இருக்க முயற்சிக்கலாம்.

இன்றைய உலகமய அரசியல் சூழலில் அரசியல் என்பது விடுதலைசார்ந்து அல்லாமல் நலன் சார்ந்து சுருங்கிவிட்டது. இனிவரும் காலங்களில் விடுதலை அரசியல் என்ற அர்த்தத்தில் எவரும் எவரையும் ஆதரிக்கப் போவதில்லை. அப்படி ஆதரிப்பதாக நம்மை காட்டிக் கொள்வதும் ஒருவகை அடையாள மோகம்தான். நமக்கு ஒதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேவைப்படுகின்றது பறவைகள் போல். நன்பர் யமுனா ராஜேந்திரன் சொல்வது போன்று அரசுகளை கருத்தியல் வழிநடத்திய காலம் முடிந்துவிட்டது, இப்போது அரசுகளை அவற்றின் நலன்கள் மட்டுமே வழிநடத்துகின்றன. எனவே இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், இடதுசாரி என்றெல்லாம் ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒரு கருத்தியல் நிலைப்பாட்டுக்குரியதே தவிர வேறொன்றுமில்லை.

3

சில நேரங்களில் சில விடயங்கள்; சற்று காலம் கடந்தே நமக்குப் புரிகின்றன. மப்பும் மந்தாரமுமான சூழலில் வானத்தின் தூய நீலம் விளங்குவதில்லை. புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலமது. அப்போது கனடாவில் இருந்து எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர் சக்கரவர்த்தி ‘போங்கடா டேய்’ என்ற தலைப்பில் கதையொன்றை எழுதியிருந்தார். அது அப்போது கொழும்பில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த ஒரேயொரு மாற்றுப் பத்திரிகையான சரிநிகரில் வெளியாகியிருந்தது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ‘வெளிநாடுகளில் இருந்து கொண்டு எங்கட பொடியள் அடிப்பாங்கள், விடமாட்டாங்கள் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கின்ற இந்த தேசியவாதிகள் தங்களின்ர பேரப் பிள்ளையளக் கூட இந்த போராட்டத்திற்குக் கொடுக்கத் தயாராக இல்லை;’ - இதை அந்த நேரத்தில் படிக்கும் போது நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன். அதுவும் சாதாரணமான ஆதரவாளனல்ல. இதனை எவ்வாறு என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். பின்னர் இருக்கிறதே நம்மிடமொரு மந்திர வார்த்தை – இவன் சக்ரவர்த்தி ஒரு புலி எதிர்ப்பாளன் - ஓரு துரோகி. இதற்கு மேல் விவாதங்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் மே18-2009 இற்குப் பின்னர் புலம்பெயர் சூழலில் இருந்து அரசியல் பண்ணியோரை பார்த்தபோது இந்த வரிகளே என் நினைவுக்கு வந்தது.

இன்று புலம்பெயர் சூழலில் வாழும் எவருமே மீண்டும் ஈழத்திற்கு வரப் போவதில்லை. அவர்களால் வரவும் முடியாது. அவர்கள் புலி ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி. வேண்டுமானால் உல்லாசப் பயணிகளாக வந்துவிட்டுப் போகலாம். எனது நண்பர் ஒருவர் சொன்னார் பல யாழ்பாணத்து ஆட்கள் பம்பலப்பிட்டியில் பஸ் எடுத்தால் யாழ்ப்பாணத்தில் இறங்கீனம் - இடையில் போராட்டத்தின் பேரால் உருக்குலைந்து போய் கிடக்கும் ஏழை மக்களைத் திரும்பிப் பார்க்கும் மனோநிலை கூட அவர்களிடம் இல்லை. நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு ஒரு வேளை புலிகள் வென்று தமிழ் ஈழம் உருவாக்கியிருந்தால் இன்று தலைவர் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சிலர் அமைச்சு பதவிகளுக்காகவும் செயலாளர் பதவிகளுக்காகவும் வந்திருக்கலாம். உண்மையில் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரித்ததே இந்த அடிப்படையில்தான். (இதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இயங்கியவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்தனர், இருக்கின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை)

4

கருத்துக்களில் இதுதான் நிர்திடமானது சத்தியமானது என்று ஒன்றுமில்லை. ஏனெனில் கருத்தியலில் ஒன்றுமில்லை அனைத்துமே அதனைக் கையாளும் மனிதர்களில்தான் தங்கியிருக்கின்றது. மனிதர்களோ நலன்களின் வழி இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வகை நலன்கள் என்பன, குடும்பம், அரசு, கட்சி, அமைப்புக்கள் என்று பரந்திருக்கின்றது. எங்குமே நலன்களை விலக்கிச் செயலாற்றும் துறவுநிலை அரசியல் கிடையாது. அப்படியொன்று இருப்பதாக எவரேனும் ஒருவர் எண்ணுவாராயின் அவர் பகல் கனவில் சஞ்சரிப்பவராகவே இருக்க முடியும். எனவே இங்கு மனிதத் தன்னிலை விருப்பங்களும் கொள்கைசார் விருப்பங்களும் சதா முரண்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த முரண்பாட்டில் தன்னிலைசார் விருப்பங்களே வெற்றி பெறுகின்றன‌. கொள்கைசார் விருப்பங்கள் பின்தள்ளப்படுகின்றன. ஸ்டாலின் காலத்திலிருந்து இருந்து புலிகள் காலம் வரையான விடுதலை அரசியல் அனுபவங்கள் இதனைத்தான் நமக்கு துலாம்பரமாக்கின்றன. மக்களின் தேவையோ நெகிழ்வான அரசியல் அணுகுமுறையை வேண்டி நிற்கும்போது தலைவர்கள் என்போரோ, தான் தனது கௌரவம் என்னும் தன்னிலை விருப்பங்களின் வழியாக சிந்திக்க முயல்வதை நாம் எவ்வாறு மார்க்சிய வழி விளக்க முடியும் அல்லது வேறு ஏதேனும் கொள்கை வழியாக தெளிவுபடுத்த முடியும்?

இதன் காரணமாகவே மனிதர்கள் தங்களை எப்போதும் மற்றவர்களின் வேதனை வழி உணர முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனை மிகவும் துல்லியமாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஈழத்துச் சூழலில் நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு புறம் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னொரு புறம் நல்லூர் கந்தனுக்கு முண்டியடித்துக் கொண்டு அரோகரா போடும் மக்கள் கூட்டம், இன்னொருபுறம் அடுத்த வேளை உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களைப் புறந்தள்ளிக் கொண்டு முன்னகரும் அரசியல் உரையாடல்கள், வசதிப்படைத்தவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் உறவுகளையும் வெளிநாடுகளுக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அதுவும் பாதிக்கப்பட்ட மக்களின் பேரால் சேகரிக்கப்பட்ட பணத்தில். உண்மையில் இன்று வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்னும் ஆர்வம் ஒரு பாதிக்கப்பட்ட தமிழருக்கு இல்லையென்றால் அவருக்கு அதற்குரிய வசதி இல்லாமல் இருக்கிறது என்பதே உண்மை. வசதியுள்ள ஒவ்வொருவரும் எப்படியாவது இங்கிருந்து வெளியேறிவிடவே விரும்புகின்றனர்.

ரஜனி திரணகம முறிந்தபனையில் குறிப்பிட்டது போன்று புத்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் எரிகிற இந்த தேசத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான். பின்னர் எதற்கு தமிழ் ஈழம்? தமிழ் வாழ்க என்னும் முழக்கமெல்லாம்? இவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு ஏதும் நன்மை செய்ய முயல்வோரையும் துரோகி, கைக்கூலி என்ற வார்தைகளால் துரத்தியடிக்கும் போக்கு. உண்மையில் இவையெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது? இவைகள் எல்லாம் அடிப்படையில் மனிதனின் தன்னிலை விருப்பங்களில் இருந்தே நாம் விளங்கிக் கொள்ள முடியும். இதில் மார்க்சியவாதி என்போர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருப்பது? எனவே இங்கு பிரச்சனை கருத்தியல் அல்ல மனிதர்களே என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

எனது தன்னிலையை சாட்சியாகக் கொண்டு உண்மையை உரைப்பதெனின் - நான் ஒரு மார்க்சியவாதி அல்ல – அப்படி உச்சரிப்பதற்கான எந்தவொரு தகுதியும் என்னிடமில்லை. வேண்டுமானால் மார்க்சிய சிந்தனைகள் மிது ஈடுபாடுள்ள, அதன் வளர்ச்சியில் அக்கறையுள்ள நபர் என்று என்னை சொல்லிக் கொள்ளலாம். நான் ஒரு மார்க்சியவாதி, கம்யூனிசவாதி, இடதுசாரி என்றொல்லாம் நான் எப்போதாவது உச்சரிக்கிறேன் எனின் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். அது வேறான்றுமல்ல – என்னை விடுங்கள் நான் கற்பனையொன்றில் சிறிது சஞ்சரிக்க விரும்புகிறேன்.

இன்றுவரை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றிய தனித்துவமான சிந்தனையாளராகவே மார்க்ஸ் கொண்டாடப்படுகிறார். புரட்சிகர அரசியலின் நம்பிக்கை நிழலாக இந்த சோவியத்தும் அதன் வழியான சோசலிச முகாம்கள் அனைத்தும் தகர்ந்த போது, சோவியத்தின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்பட்ட ஸ்டாலினின் உருவச் சிலை அவரது மக்களாலேயே உடைத்து வீசப்பட்டது. லெனினின் சிலை கூட பிடுங்கப்பட்டு வனாந்தர இருள் ஒன்றுக்குள் தள்ளப்பட்டது. சீனாவில் மாவோவின் சிலை சிறிதாகியது. ஆனால் எங்குமே போராசான் மாக்ஸ்சின் சிலைகள் வெறுக்கப்படவில்லை, தகர்க்கப்படவுமில்லை. தனது வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திப்பதற்காகவே செலவிட்ட, எவருடனும் ஒப்பிட முடியாத பெரும் மனிதர் அவர். உலகில் இன்றுவரை அதிகம் ஆதரிக்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும், எதிர்க்கப்பட்டதுமான ஒரு சிந்தனை இருக்க முடியுமானால் அது மார்க்சியம் மட்டும்தான்.

இதுபற்றி தெரிதா இவ்வாறு கூறுவார் – மார்க்சுடனான உரையாடல் முடிவுறாதது. இன்று உலகில் இயங்கும் எந்தத் தீவிரமான அறிவுஜீவியும், குடியுரிமை கொண்டிருத்தல், அரசு என எதைக் குறித்து இயங்கும் எந்தவொரு அறிவுஜீவியும் நிச்சயமாக விமர்சனப்பூர்வமான உள்ளார்ந்த உரையாடலை மார்க்சிய மரபுடன் நிகழ்த்தியே தீர வேண்டும்’ (New left Rewiew – மொழிபெயர்ப்பு – யமுனா ராஜேந்திரன்) ஆனால் அப்படிப்பட்ட ஒன்றின் பிதாவான அந்த பேராசான் பட்ட இன்னல்களும் அடைந்த மனக்குமுறல்களும் சொல்லில் வடிக்க முடியாதவை. தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவோர் சில நிமிடங்களாவது தங்கள் கற்பனைகளுக்கு கடிவாளம் இட்டுவிட்டு இந்த இடத்தில் சிறிது அமைதியாக நில்லுங்கள்.

தன் வாழ்வை கொடிய இருள் சூழ்ந்திருந்த போதும் உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக சிந்தித்த நிகரற்ற மனிதர் மார்க்ஸ், ஆனால் அதற்காக அவர் ஒன்றும் மலர் தூவிய மஞ்சத்தில் உறங்கவில்லை. தனது வாழ்வை வறுமையில் கழித்து வறுமையிலேயே முடித்தவர். பலநாட்கள் முட்டியில் ஏற்பட்ட புண்களுடனும் அழுக்கு படிந்த உடுப்புடனும் வாழ்ந்தவர். தனது உடுப்பு அடகுக் கடையில் இருந்ததால் பல நாட்களாக வெளியில் செல்ல முடியாதவராக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர். சில சமயங்களில் அணிவதற்கு உடையில்லாமையால் அவரது புதல்விகள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர். அவரது பெண் குழந்தையொன்று இறந்த போது அதனை அடக்கம் செய்வதற்குக் கூட அவரிடம் வசதி இருக்கவில்லை. 1862 இல் மார்க்ஸ் தனது நன்பர் ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகின்றார் – “தானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்லுகின்றாள். உண்மையில் நான் அவளைக் குறை சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமதிப்புக்களும் கடுந்துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை” தனது வறுமை நிலையை மார்க்ஸ் சுருக்கமாக ‘பிசாசு ஆட்டுகின்றது’ என்று நொந்து குறிப்பிட்டிருக்கிறார். கடன்காரர்களுக்கு பயந்து சில சந்தர்பங்களில் பேராசான் மறைந்து இருந்ததும் உண்டு.

ஹென்றி வோல்கவ் சொல்வது போன்று ‘மார்க்ஸ் தன்னுடைய மேதாவிலாசமான அறிவைக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு அடிமைப்பட்ட அறிவு ஜீவிகள் நடத்துகின்ற வசதியான வாழ்க்கையை அனுபவித்து இருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிக்கின்ற வழியாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது அதனை திரித்துக் கூறுவது போன்று கேவலமானது. அவ்வாறு செய்வதிலும் பார்க்க மரணமடைவதற்கு அவர் தயாராக இருந்தார்’ .

அன்று மார்க்ஸ் தன்னை விற்றிருந்தால் அந்தக் காலத்திலேயே ஒரு புரூணை சுல்தானாகவோ அல்லது பில்கேட்சாகவோ வாழ்ந்திருக்க முடியும். தான், தன் மனைவி மக்கள் என்று மட்டும் அவரால் சிந்திக்க முடியவில்லை. இதனால்தான் அவரது காலத்தில் எவருடன் ஒப்பிட முடியாதளவிற்கு மனத குலத்தின் மீதான தூய அன்பின் வடிவாகவே அவர் திகழ்கின்றார். அது யுகங்களைக் கடந்து ஒலிக்கிறது. மார்க்சின் இறப்பின் போது எங்கெல்ஸ் கூறிய வார்த்தைகள் சத்தியமானவை. ‘மனித குலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது ஆனால் அவரது பெயர் யுகங்களுக்கு நிலைத்திருக்கும்’ இப்பொழுது சொல்லுங்கள் உங்களில் மார்க்சியவாதிகள் எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? மார்க்ஸ் தன் வாழ்நாளை செலவிட்டு உருவாக்கிய ஒன்றை வளப்படுத்த நீங்கள் எத்தகைய தியாகத்தை செய்யத் தயாராக இருக்கின்றீர்கள்?

சிலர் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அந்த கோபமூட்டும் தருணங்களில் எல்லாம் நான் என்னை அமைதிப்படுத்திக் கொள்வதற்காக சண்முகம் சிவலிங்கத்தின் இந்தக் கவிதை வரிகளையே நினைத்துக் கொள்வதுண்டு. பிதாவே அந்த யூதர்கள் அறியாமல் செய்தனர். இந்த யூதர்களும் அறியாமல் செய்கின்றனர். இவர்களை மன்னித்து அருள்வீராக. பேராசான் மார்க்சின் கல்லறையை நினைத்து மண்டியிட்டுக் கொள்கிறேன். எனது பெருமதிப்புக்குரிய ஆசானே உங்கள் பேரால் உங்களை கொச்சைப்படுத்தும் இந்த ஈழத்து மார்க்சியர்கள் என்போரை மன்னித்து அருள்வீராக. சுய புத்தி இல்லாத ஆதரவாளர்கள் பற்றி நீங்களே கூறியிருக்கிறீர்கள், அவர்களை ஏளனம் செய்திருக்கிறீர்கள் ‘இவர்கள் கீழ்மட்ட மனிதர்கள், எத்தகைய தனித்தன்மையும் இல்லாதவர்கள், இவர்கள் வழக்கமாக கடந்த காலத்தின் தத்துவஞான மேதைகளுக்கு பின்னால் மறைந்து கொள்பவர்கள் - ஆனால் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் கழுதை சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கப்படுகிறது’  எனவே அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய பேராசான் அவர்களே உங்கள் பேராற்றலின் பேரால் இந்தக் கழுதைகள் போன்றோரை மன்னித்து விடுங்கள். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். 

- யதீந்திரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It