கீற்றில் தேட...

அந்தக் காலத்தில் இரண்டு வழிப் போக்கர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், எந்தத் தயக்கமும் இன்றி, ஒருவருக்கு ஒருவர், ‘உங்கள் வர்ணம் (ஜாதி) என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கான விடையையும் தெரிந்து கொள்வார்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன் வரை, கிராமந்தரங்களில் வாழ்கிறவர்களின் பெயர்களை வைத்தே, அவர் இன்ன வகுப்பைச் சார்ந்தவர் என்று ஒருவாறு யூகித்துக் கொள்வார்கள்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பிறகு குப்பன், சுப்பன், மாடன், காடன், மாடசாமி, கருப்பன், கருப்பாயி போன்ற பெயர்களைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைத் தவிர்த்து, விளிம்பு நிலை மக்களும் தன் பிள்ளைகளுக்கு, மணியரசன், முத்தமிழ், கலைமணி, தமிழரசி என்று பெயர்களைச் சூட்டினார்கள்.

சென்ற நூற்றாண்டு வரை கிராமத்துப் பெரியவர்கள் தன் பெயருடன், தன் ஜாதியின் பெயரையும் சேர்த்தே சொன்னார்கள். இப்படியாகப் பெயரும் ஜாதிய அடையாளமும் தமிழர்களைத் தொற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த கதை இது.

உயர்ந்த ஜாதிக்காரர்கள் அதிலும் பணக்காரர்கள், தன் பெயரைக் கம்பீரமாக வைத்துக் கொண்டார்கள். அதே போல் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள், அதிலும் ஏழைகள், சின்னச்சாமி, முனியசாமி, கருப்பசாமி என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.

பெருந்தெய்வங்களை வழிபடுகின்ற மக்கள் அத்தெய்வங்களின் பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்துக் கொண்டார்கள். சிறு தெய்வங்களை வழிபடுகின்ற கிராமத்து மக்கள், அத்தெய்வங்களின் பெயர்களையே தன் பிள்ளைகளுக்கு வைத்துக் கொண்டார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் உயர் ஜாதியினரின் கோயில்களுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் தன் பிள்ளைகளுக்கு, பெருஞ்சாமிகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்ளவில்லை. அப்படியே விதிவிலக்காக விளிம்புநிலை மக்களில் யாராவது பெரிய சாமிகளின் பெயரை வைத்துக் கொண்டால் அவர்கள் தன் பெயரை மாற்றிக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அப்படி தாழ்த்தப்பட்ட, ஏழை மனிதன் ஒருவன் தன் பெயரை மாற்றிக் கொள்ளத் தன் முதலாளியால் நிர்பந்திக்கப்பட்ட விதத்தையும், அச்சிக்கலில் இருந்து அவன் மீண்டு வந்த விதத்தையும் பற்றிப் பேசும் ஒரு பழமொழியையும், அப்படி அதற்குப் பின்னால் உள்ள கதையையும் பார்ப்போம்.

‘பெருமாள் பெரிய பெருமாளாகிய கதையாக, இருக்கிறதே’!’ என்பது கிராமத்து மக்களின் நாக்குகளில் இன்னும் உலா வரும் ஒரு சொலவடையாகும். இந்தச் சொலவடைக்கு விளக்கம் சொல்வதைப் போன்று அமைந்துள்ளது இந்தக் கிராமியக் கதை.

ஒரு ஊர்ல, ஒரு பண்ணையார் இருந்தார். அவர் தீவிரமான வைணவ பக்தர். ‘சிவ, சிவா' என்று யாராவது அவரின் முன்னால் நின்று சைவக் கடவுளின் பெயரை மெல்லக் கூறினால் கூட, பண்ணையார் தன் காதுகள் ரெண்டையும் பொத்திக் கொள்வார். அதே சமயம், அவரின் முன்னால் நின்று ‘கோபாலா, கிருஷ்ணா, கோவிந்தா, கண்ணா’ என்று சொன்னால் போதும். அப்படிச் சொன்னவனுக்கு, காசு, பணமும் கொடுத்து காணாததுக்கு அறுசுவையுடன் கூடிய விருந்தும் கொடுத்து அவனைக் கொண்டாடுவார்.

இப்படி, மத வெறி, ஜாதிய வெறி, அந்தப் பண்ணையாரின் ரத்தத்தில் கலந்து போய் இருந்தது. அந்தப் பண்ணையார், உயர்ந்த ஜாதிக்காரர்கள் அதிலும் வைணவர்கள் மட்டுமே ‘பெருமாள்' என்ற பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

இப்பேர்ப்பட்ட பண்ணையாரிடம் ஒரு வேலைக்காரன் வேலைக்கு வந்து சேர்ந்தான். வேலையில் சேர்க்கும்போது பண்ணையார், வேலைக்காரனின் வர்ணத்தை (ஜாதியை) கேட்டார். வேலைக்காரனும் தன் உண்மையான ஜாதியின் பெயரைச் சொன்னான். பண்ணையார், வேலை கேட்டு வந்தவனிடம் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டார். வேலைக்காரனும் ‘பெருமாள்' என்ற தன் உண்மையான பெயரை மறைத்து, தன் பட்டப் பெயரைச் சொன்னான். அவன் தலை பம்பையும்,பரட்டையுமாக இருந்ததால், கிராமத்து மக்கள், அவனைப் ‘பரட்டை' என்ற பட்டப் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். பண்ணையாரின் புத்தியை அறிந்து கொண்டுதான் வேலைக்காரனும் தன் உண்மையான பெயரை மறைத்து விட்டுத் தன் பட்டப் பெயரைச் சொன்னான். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த வேலைக்காரனுக்கு ‘பரட்டை' என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாக நினைத்த பண்ணையார் உடனே, அந்த வேலைக்காரனுக்கு அன்றே வேலை போட்டுக் கொடுத்தார்.

வேலைக்காரன் ரொம்ப நாணயமாகவும், நேர்மையாவும், குறிப்பறிந்தும் வேலை செய்தான். ஒருத்தனே ரெண்டாள் செய்யும் வேலையைச் செய்தான். அதே சமயம் வேலை, செய்நேர்த்தியுடனும், சுத்தமாகவும் இருந்தது. ‘பரட்டை' என்ற வேலைக்காரனைப் பண்ணையாருக்கு ரொம்பப் (மிகவும்) பிடித்துப் போய் விட்டது. தனக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் கிடைத்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார் பண்ணையார். வேலைக்காரனுக்கு விரைவிலேயே சம்பளத்தையும் கூட்டிக் கொடுத்தார். வேலைக்காரன் இப்போது முன்பை விட இன்னும் கடுமையாக உழைத்தான்.

ஒரு நாள் பண்ணையாரின் மேற்பார்வையில் பரட்டை என்ற வேலைக்காரன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த வேலைக்காரனின் தாய் தலைவிரி கோலமாக, அரக்கப் பரக்கத் தன் மகன் வேலை பார்க்கும் பண்ணைக்கு ஓடி வந்து, ‘ஏலே, பெருமாளு... சீக்கிரமா வீட்டுக்கு வாலே, அங்க வீட்டுல உம் புள்ளைக்கு ரொம்பச் சுகமில்லை!’ என்றாள்.

வேலைக்காரனின் தாய் தன் மகனைப் பார்த்து ‘ஏலே பெருமாளு’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதைக் கேட்டு, மிகுந்த அதிர்ச்சியுற்றார் பண்ணையார். வேலைக்காரனைப் பார்த்துப் பண்ணையார், ‘ஏப்பா... உன் பேரு பெருமாளா? பரட்டையா?’ என்று பதற்றத்துடன் கேட்டார்.

வேலைக்காரனோ, தன் பிள்ளைக்குச் சுகமில்லை என்ற சேதியைக் கேட்டுக் கலங்கிப் போய் நின்றான். பண்ணையாருக்கு வேலைக்காரனின் பிள்ளைக்குச் சுகமில்லை என்பதைப் பற்றி எந்தக் கலக்கமும் இல்லை. அவர் மனது ‘வேலைக்காரனின் உண்மையான பெயர் என்னவாக இருக்கும்?’ என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

வேலைக்காரன் தன் பெயரை பண்ணையில் சொல்ல வேண்டாம் என்று வீட்டில் கூறி இருந்தான் என்றாலும் பேரனுக்குச் சுகமில்லை என்பதால், தன் தாய் தன்னை அறியாமல் தன் உண்மையான பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு விட்டார் என்பதைப் புரிந்து கொண்ட வேலைக்காரன், பண்ணையாரிடம் அரைகுறையாக உத்தரவு வாங்கிக் கொண்டு தன் வீட்டைப் பார்த்து ஓடினான்.

பண்ணையார் வைணவர், தன்னிடம் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவனுக்கு ‘பெருமாள்' என்று பெயர் இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் நம்பிக்கையான, நாணயமான, கடின உழைப்பாளியான அந்த வேலைக்காரனை வேலையை விட்டு நீக்கி விடவும் மனம் வரவில்லை. எனவே, அந்த வேலைக்காரனிடம் சொல்லி அவன் பெயரை, மாற்றச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் பண்ணையார்.

வேலைக்காரன் சுகமில்லாத தன் மகனை வைத்தியரிடம் கூட்டிக்கிட்டுப் போய் வைத்தியம் செய்த பிறகு அவனுக்கு நோய் குணமாகி விட்டது. ஒரு வாரம் கழித்து மீண்டும் பண்ணையார் வீட்டிற்கு வேலைக்கு வந்தான். அந்த வேலைக்காரன் இல்லாமல், பண்ணையாருக்கு ஒரு கை முறிந்த மாதிரி இருந்தது. இப்போது அந்த வேலைக்காரன் மீண்டும் வேலைக்கு வந்ததும் முதல் காரியமாக, ‘யப்பா நீ உன் பெயரை மாற்றிக் கொள்’ என்றார். வேலைக்காரன், பண்ணையாருக்கு இருக்கும் ஜாதிவெறியை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டு, ‘என் பெயரை மாற்றி விடலாம். அதில் ஒன்றும் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும். நூறு ஏழை, பாளைகளுக்கு அன்னதானம் செய்து, சில பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்த பிறகுதான் பெயரை மாற்ற முடியும்’ என்றான்.

பண்ணையார் ‘செலவைப் பற்றி ஒன்றும் கவலையில்லை எப்படியாவது நீ உன் பெயரை மாற்றிக் கொண்டால் சரிதான்’ என்றார் வேலைக்காரனிடம்.

வேலைக்காரனும் பார்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து ‘பெயர் மாற்றும் செலவுக்காக ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டான்.

பண்ணையாரும் உடனே தன் ஒழுக்கரைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து வேலைக்காரனிடம் கொடுத்து ‘உனக்கு இன்னும் ஒரு வாரம் விடுப்புத் தருகிறேன். விடுப்பு முடிந்து வரும் போது உன் பெயரை மாற்றிக் கொண்டு வா’ என்று கூறினார்.

வேலைக்காரன் பண்ணையார் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் மறுநாள் தன் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கிடா வெட்டி விருந்து படைத்தான். ஒரு வாரம் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் பண்ணையாரின் வீட்டிற்கு வேலைக்கு வந்தான்.

பண்ணையார், வேலையில் சேருவதற்காக வந்த வேலைக்காரனைப் பார்த்து ‘உன் பெயரை மாற்றிக் கொண்டாயா?’ என்று அவசர, அவசரமாகக் கேட்டார்.

வேலைக்காரன் பண்ணையாரைப் பார்த்து, ‘ஆம், ஐயா நான் நேற்றிலிருந்து என் பெயரை மாற்றிக் கொண்டேன்’ என்றான் பௌவியமாக. ‘இப்போது உன் பெயர் என்ன?’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பண்ணையார்.

வேலைக்காரன் தனக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘ஐயா, ‘பெருமாள்' என்ற என் பெயரைப் ‘பெரிய பெருமாள்' என்று மாற்றிக் கொண்டேன்’ என்றான்.

வேலைக்காரன் சொன்னதைக் கேட்டதும் பண்ணையாருக்கு ‘விக்கினாப்புலயும் இல்லை, விரைச் சாக்குலயம் இல்லை' என்றாகி விட்டது. ஏற்கனவே வேலைக்காரனுக்கு இருந்த ‘பெருமாள் ' என்ற பெயரே தேவலை என்றிருந்தது அவருக்கு.

இனியும் ஒரு தடவை பெயரை மாற்றிக் கொள் என்றால், இன்னும் ஒரு வாரம் விடுப்பு கேட்பான். அத்தோடு அன்னதானம், பூஜை, புனஸ்காரம் செய்ய என்று ஆயிரம் ரூபாய் வேறு கேட்பான். அடுத்த தடவை இதை விட மோசமாக தன் பெயரை ‘கிருஷ்ண பெருமாள் ' என்று மாற்றினாலும் மாற்றி விடுவான். இனிமேல் அவன் பெயரை மாற்றிச் சொல்லக் கூடாது. என்ன பெயரும் அவனுக்கு இருந்து விட்டுப் போகட்டும். நாம் எப்போதும் போல் வேலைக்காரனை ‘பரட்டை' என்றே அழைப்போம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் பண்ணையார்.

அன்றிலிருந்து பண்ணையார் அந்த வேலைக்காரனை ‘பரட்டை' என்றே அழைத்தார் என்பதுதான் ‘பெருமாள் பெரிய பெருமாள் ஆன கதை'.

நகைச்சுவைக்காக இந்தக் கதையை இன்றும் கிராமத்து மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதைக்குள் புதைந்துள்ள கூர்மையான ஜாதிய வெறி நம்மை சிந்திக்க வைக்கிறது. அங்கதச் சுவையுடன் கூடிய இக்கதை பல சமூக விமர்சனங்களை நம் முன் வைக்கிறது.

நாட்டுப்புறவியல் சார்ந்த தரவுகள், இத்தகைய சமூகம் சார்ந்த பல சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், அவைகளை இன்றும் நாம் மறு கவனிப்பு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.