முந்தையக் காலத்தில் புலி மாமிசம் திங்காதாம்.

பசி எடுத்தால் புல்லைத் தான் திங்குமாம்.

புலிக்கு பிராணிகளை பிடிக்கத் தெரியாதாம்.

திங்கவும் தெரியாதாம்.

பிராணிகளைக் கண்டால் ‘சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்'' என்று முகத்தை திரும்பிக் கொள்ளுமாம்.

சரிப்பா... இப்படியாகப்பட்ட புலி, மாமிசம் திங்க ஆரம்பித்தது. அது எப்படி? அது ஒரு கதை. ஒருநாள் ஒரு பூனை எலியைப் பாய்ந்து பிடித்தது. அதைக் கொன்று தின்றது. இதை புலி பார்த்தது. நாக்கில் எச்சில் ஊறியது.

புலிக்கு சைவச் சாப் பாடு தான் பிடிக்கும். ஆனால் இன்று அசைவம் சாப்பிட ஆசைப்பட்டது. அன்று முதல் பூனையைக் காக்கா பிடிக்க துவங்கியது.

பூனை எங்கே போனாலும் கூடவே அலைந்தது. பூனை ஒரு மாமிசத் துண்டை நீட்டியது. புலி அதை வாயில் போட்டது. மொச்சு... மொச்சு என்று சப்புக் கொட்டித் தின்றது. ‘ஆகா ருசி ஆளைத் தூக்குதே'', ‘என்ன பண்ணலாம்'' என்று யோசித்தது.

புலி நைசாக பூனையிடம் பேசியது. ‘என்ன பண்ணலாம்'' என்று யோசித்தது.

புலி நைசாக பூனையிடம் பேசியது. ‘அண்ணே... அண்ணே எனக்கு மாமிசம் சாப்பிட ஆசை. பிராணிகளை எப்படி பிடிப்பது? எனக்கும் சொல்லிக் குடு அண்ணாச்சி. உனக்கும் புண்ணி யமாப் போகும்'' என்று கும்பிட்டது. பூனை தலையாட்டியது.

வித்தையை மெல்ல மெல்ல சொல்லிக் கொடுத்தது. பதுங்குவது எப்படி? பாய்வது எப்படி? ‘லபக்' என்று பிடிப்பது எப்படி? ஒரே அமுக்காக அமுக் குவது எப்படி? இப்படி பூனை பாடம் நடத்தியது.

புலி பிராணிகளை பிடிக்கத் தெரிந்து கொண்டது. ஒரே அமுக்காக அமுக்கத் தெரிந்து கொண்டது. எல்லாம் தெரிந்த புலிக்கு திமிரும் ஏறி விட்டது.

புலி கண்ணை உருட்டி பார்த் தது. திருட்டு முழி. அசைவ சாப்பாட்டுக்கு ரெடி ஆனது.

பூனை தான் புலியின் வாத்தியார். அந்த வாத்தியாருக்கு வேட்டு வைக்க நினைத்தது புலி. பூனையைக் கொல்லப் பாய்ந்தது.

வாத்தியார் பூனையாச்சே. சுதாரித்துக் கொண்டது.

ஒரே பாய்ச்சல்தான். மரத்தில் ஏறிவிட்டது.

‘அம்மாடி, நல்லவேளை தப்பித் தோம். சிக்கி இருந்தால் சட்னி தான்'' பூனை உடம்பை குலுக் கியது.

புலிக்கு மரம் ஏறத் தெரியாது. ‘சேச்சே... தப்பிவிட்டது'' என்று புலி நொந்தது. ‘அண்ணே... அண்ணே. எனக்கு மரம் ஏற சொல்லிக்குடு அண்ணே.'' புலி இளித்தபடி கேட்டது.

‘போடா போடா பொக்கு. உனக்கு நான் மரம் ஏற சொல்லித் தரவில்லை. சொல்லித் தந்திருந் தால் என்ன கதி? என்னை கை தனியா, கால் தனியா ஆக்கி இருப்பாய். பாவி, என் ஈரக்குலை நடுங்குது. போ... போ...'' என்று பூனை கத்தியது.

கதை முடிந்ததா? இன்னும் முடிய வில்லை.

பூனை ஒரு வித்தையை புலிக்கு சொல்லித் தரவில்லை. அது என்ன வித்தை?

புலி மிருகங்களை அடித்து திங்கும். மாமிச துண்டுகள் பல் இடுக்கில் சிக்கிவிடும். அதை எப்படி சுத்தம் செய்வது? இந்த வித்தை யைத்தான் பூனை சொல்லித் தரவில்லை.

பூனைக்கு கோபம் தீரவில்லை.

புலியே நான் உனக்கு நல்லது செய்தேன்.

நீ என்னைக் கொல்லப் பார்த்தாய்.

உனக்கு கெட்ட புத்தி.

உன் புத்தியைப் போல் உன் வாயில் இருந்த கெட்ட நாத்தம் வரட்டும். இப்படி சாபம் இட்டது.

அன்று முதல் புலியின் சுத்தம் செய்யாத வாயில் இருந்து கெட்ட நாத்தம் வருதாம்.
Pin It