Childகுழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே, தனது மூன்று வயது மகனை, அவனது தாய் தயார் செய்ய தொடங்கினாள். பிறக்கப் போகிறது பெண் குழந்தை என சதிஷுக்கு சொல்லியவுடன், அவனும் தினமும், அம்மா வயிற்றருகே வந்து உள்ள இருக்கும் தங்கைக்காக பாடத் தொடங்கினான். சந்திக்காத தங்கையுடன் பாசமாக பழகினான்.

நாட்கள் கடந்து செல்ல செல்ல பிரசவக் காலம் நெருங்கிற்று. எல்லாம் சுமுகமாக முடியும் என எதிர்பார்த்திருந்த வேளையில் எதிர்பாராத பிரச்னைகள் தலை தூக்கின. அறுவை சிகிச்சை செய்தார்கள். பிறந்த குழந்தை துவண்டு போய் கிடந்தது.

செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் , நகரின் வேறொரு பக்கம் இருந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு பறக்க, கிரணும், அவளது கணவனும் நொறுங்கிப் போனார்கள். 24 மணி நேர அவசர சிகிச்சை 48 மணிநேரம் கடந்தும் பலனற்று போனது. முகத்தில் கவலையை தேக்கிக் கொண்டு கையை விரித்து விட்டார்கள் மருத்துவர்கள்.

“சில மணி நேரம் நாடித் துடிப்பு தாங்கும் உறவினர்களுக்கு சொல்லி விடுங்கள்”

மூன்று நாட்கள் கழித்தும் தங்கையை பார்க்க முடியாத சதீஷ் அம்மாவை கெஞ்சிக் கொண்டிருந்தான், “நான் தங்கச்சிப் பாப்பாவை நான் பார்க்கணும் நான் அவளுக்குப் பாட்டுப் பாடணும்”

“பார்க்கலாம் இருடா, “

குழந்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல சொல்லிவிட்டார்கள். அந்த கொடிய தருணங்கள் நெடிய நாட்களாய் நகர, ஏறக்குறைய ஒரு வாரம் ஆகிவிட்டது. குழந்தை வெறுமனே உயிரோடு இருந்தது. அழுது, கண்ணீர் வற்றி , மகளின் பிரிவை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்து விட்டனர் பெற்றோர்.

“அம்மா, நான் இன்னிக்காவது தங்கச்சிப் பாப்பாவை பார்க்கணும்.... ப்ளீஸ்மா,”

இந்த சிறப்பு பிரிவிற்குள் மற்ற குழந்தைகளை விடமாட்டார்கள். எனினும், கிரண் தன்மகனை உள்ளே அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். இன்று இவன் பார்க்காவிட்டால் எப்பொழுது பிறகு பார்க்கப் போகிறான்.

‘சரி, வா,’ எனக் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல, நர்ஸ் வேகமாக ஓடி வந்தாள். ‘குழந்தைகள் வரக்கூடாது எனத் தெரியாதா?’ சீறினாள். அமைதியாக அவளை ஏறெடுத்துப் பார்த்த கிரண் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தான். இவன் தங்கச்சிக்கு ஒரு பாட்டு மட்டும் பாடிவிட்டு போய்விடுவான். இருவரையும் சந்தேகமாக பார்த்த நர்ஸ் மனதிற்குள்ளேயே நகைத்துக் கொண்டாள்.

மெல்ல கட்டிலருகே சென்ற சதீஷ் சிரமப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டிருந்த பாப்பாவை பாசமாக பார்த்து, மெல்ல வருடினான். கண்களில் நீர்திரையிட, குழந்தையின் அருகே சென்று தூய்மையான குரலில் பாடத் தொடங்கினான்.

“இருளை போக்கிடும்
ஒளிதானே - உன்
ஒளி தானே...”

Statueகிரணுக்கும் அழுகை வந்தது. “பாடு... கொஞ்சம் சத்தமாகவே பாடு”

என் அன்பு எவ்வளவு பெரியதென உனக்கு தெரியாது.

என் ஒளியை எடுக்காதே -
உயிரின் ஒளியை எடுக்காதே”

குழந்தை அசையத் தொடங்கியது. முகத்தில் சிறிய மாற்றம்.

மூச்சு திணறல் சற்று குறைந்தது போலிருந்தது.

கிரணுக்கு திடீரென புது ரத்தம் பாய்வது போன்ற உணர்வு.

‘சதீஷ், பாடுவதை நிறுத்தாதே பாடு,”

“உன்னை கைகளில் ஏந்தி
தாலாட்டினேன்
இறுகத் தழுவி மனம் குளிர்ந்தேன்...”

குழந்தையின் வெளிறிய முகத்திலும் இரத்தம் பாய்ந்தது. மூச்சு சீரானது. உடலில் ஒரு குணமடைந்த அமைதி தென்பட்டது.

இதை தான் எதிர்பார்த்தது போல சதீஷ், கனிவு குரலில் குழைய,

இருளைப் போக்கிடும்
ஒளிதானே... உன்
ஒளிதானே...”

பாட்டும் வருடலும் தொடர... அடுத்த நாள், ஆம், அடுத்த நாளே சுகமாகிவிட்ட தங்கச்சிப் பாப்பாவுடன் வீட்டிற்குச் சென்றான் சதீஷ்.

இது உண்மையில் நடந்த சம்பவம். “ஒரு சகோதரனின் புதுமைப் பாட்டு” எனப் பெண்களின் பத்திரிகை வர்ணித்தது.. மருத்துவர்களுக்கு அவர்களது அறிவையும் மீறிய புதிர். கிரணுக்கோ இது Miracle of god’s love- கடவுள் அன்பின் புதுமை.

‘நீங்கள் அன்பு செய்பவரை என்றுமே கைவிட்டு வீடாதீர்கள். அன்பு மிகவும் சக்தி வாய்ந்தது.’

வாழ்க்கையில் நாம் அதிகம் நேசிப்பவரை தான் அதிகம் இம்சிக்கவும் செய்கிறோம். நம்மை நிபந்தனையின்றி அன்பு செய்பவரிடம்தான் நாம் எத்தனை நிபந்தனைகள் விதிக்கிறோம். நம்மில் எத்தனைபேர் உறவாடுவதில் காயம் படாதவர்களாக, அன்பு செலுத்துவதில் குற்ற உணர்வு இல்லாதவர்களாக இருக்க முடிகிறது?

அன்று ‘சூப்பர்’ மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த தர்ஷிணிக்கு எதிலும் மனம் ஓடவில்லை. திருமணம் ஆனதிலிருந்து இந்தக் கடைக்கு அவள் தனியாக வந்ததே கிடையாது. ஏதோ காரணம் சொல்லி அவள் கணவன் நரேனும் வந்து அவளைச் சீண்டிக் கொண்டே இருப்பான். இவள் வர வேண்டாம் எனத் தடுத்தாலும் வருவான். இவள் முறைத்துக் கொண்டு பேசாமல் வர, அவன் அழகிய மஞ்சள் ரோஜாக்களை வாங்கித் தருவான்.

திடீரென வந்த நோயில் கணவன் சுவடின்றி மறைந்து விட்டான். தன் உலகத்தில் இவ்வளவு வெறுமையும், சூன்யமும் இருக்கும் என நம்ப முடியாத அளவிற்குத் தனிமை. அப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என இங்கு வந்தால் அந்த இனிய நினைவுகள் முட்களாய் குத்திக் கொண்டிருக்கின்றன.

தன் கணவனுக்குப் பிடித்த பொருட்கள் எதையும் வாங்க இயலாததே எவ்வளவு வேதனை தெரியுமா?

எந்த முடிவுக்கும் வராமல் நின்று கொண்டிருக்கும் போது, அருகே வந்த இன்னொரு இளம்பெண், சில உணவுப் பொருட்களை எடுத்து தள்ளுவண்டியில் வைத்து விட்டு, மீண்டும் திரும்பி வந்து அப்பொருட்களைப் பழைய இடத்திலேயே வைத்தாள்.

Goatபக்கத்தில் இருந்த தர்ஷிணியின் கண்களை எதேச்சையாக சந்தித்த அவள் வெட்கமாய் புன்னகைத்துவிட்டு, ‘அவருக்கு இந்த மீன் உணவு ரொம்ப பிடிக்கும். ஆனால் செலவு அதிகமாகிறதே எனப் பார்க்கிறேன்’ என்றாள். தர்ஷிணி ஆதரவாய் அவள் தோள்களைத் தொட்டுச் சொன்னாள்.

‘தயவு செய்து வாங்கிக் கொடு. உயிரோடு இருக்கும் போதே அன்பை வெளிக் காட்டுவது தான் உத்தமம்.’ அந்த இளம்பெண் ஆமோதித்து விட்டு மீண்டும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அமைதியாகச் சென்றாள். சிறிது நேரம் கழித்து, பணம் கட்டச் சென்றால் அந்த இளம் பெண் இவளை நோக்கி வந்தாள். எதற்காகவென இவள் யோசிக்கும் போதே, அருகே வந்து ‘நன்றி’ எனக் கூறி விட்டு, கைகளில் கொடுத்துச் சென்றாள் - மூன்று அழகிய மஞ்சள் ரோஜாக்கள்.

வாழ்க்கையின் பிரச்சனைகளை இதயத்தின் வழியாக பார்க்கும் போது தீர்வுகளைத் தெளிவாக உணர முடியும். ஆனால் மிக நெருங்கிய உறவுகளில் கூட ஈகோ தலைதூக்கும் போது ‘யார் பெரியவன்?’ (நல்லவன், திறமையுடையவன், குடும்ப பலம் அதிகமுள்ளவன்...) என்ற கேள்வி நிறைய உறவுப் பாலங்களைச் சிதைத்திருக்கிறது.

அன்பு என்பது ஒருவரின் தேவை அல்ல. மாறாக தேவைகளைப் பூர்த்தி செய்வது. அன்பு பாதுகாப்பு தேடுவதில்லை. ஆனால் பாதுகாப்பு கொடுப்பது.

யோசித்துப் பாருங்கள். அன்பு செலுத்துவதால் மனம் புண்படுகிறது என்பது உண்மையல்ல. அன்பைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் வலி ஏற்படுத்துகிறது.

அதே போல தூய்மையான அன்பை ஏற்காததும் மனத்திற்கு பாரத்தைத் தருகிறது. அதனால் தான் உண்மையான அன்பில் மற்றவர் கண்களை உற்று நோக்குகையில் உங்கள் ஆன்மாவே உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், மற்ற வகையான அன்பில் உடல் கவர்ச்சியும், ஈகோவும், காமமும் தான் முதன்மையாக இருக்கும்.

வாழ்க்கையில் துன்பமாக இருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. - மற்றவரை எப்படியாவது அடைய வேண்டும், தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அது. இத்தகையவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாலும், உள்ளத்தின் ஆழத்தில் அமைதியற்றவர்களாக, ஆசைகள் பூர்த்தியடையாத வர்களாகத் தான் இருப்பார்கள்.

அப்படியானால் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா? இருக்கிறது. கொடுத்துக் கொண்டேயிருப்பது தான் அது. முட்களை அல்ல, பூக்களை. உங்கள் சுமைகளை அல்ல, சுகங்களை, திகட்ட, திகட்ட அடுத்தவர்க்குக் கொடுத்துக் கொண்டேயிருப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது. அந்நேரத்தில் அந்த வகை இருந்தது அவளின் ஒரே சகோதரனிடம் தான்.

‘உன் சகோதரிக்கு உன் இரத்தம் கொடுக்க விரும்புகிறாயா?’ ஒரே வினாடியில் முடிவுக்கு வந்த சிறுவன் ‘கட்டாயமாக’ என்றான். பக்கத்திலேயே படுக்க வைத்து இரத்தத்தை ஏற்ற, கொஞ்ச நாழியில் சிறுமியின் முகத்தில் உயிர்க்களை வந்தது. எல்லாம் முடிந்ததும் அந்தச் சிறுவன் கண்களை இலேசாக மூடியவாறே, அருகில் வந்த டாக்டரிடம் கேட்கிறான் ‘நான் உடனடியாக சாகத் தொடங்கி விடுவேனா?’

அந்தச் சிறுவனுக்குத் தன் சகோதரிக்கு இரத்தம் கொடுப்பததென்றால் தன் உயிரைக் கொடுப்பதென நினைத்துக் கொண்டிருக்கிறான். அதற்கும் அவன் தயாராக இருந்தான்.
Pin It