கே.எஸ். ராதாகிருஷ்ணன் என்றவுடன் எனக்குள் எழுகிற பிம்பம் “விவசாய இயக்கப் பற்றாளர்” என்பது தான். தமிழ்நாட்டில் 1980களில் திரு. நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் உழவர் இயக்கம் மிகப் பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பொழுது தென் மாவட்டங்களில் அந்த எழுச்சி பேரெழுச்சியாக வெளிப்பட்டது. அந்த பேரெழுச்சியில் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான குறிஞ்சாகுளமும் ஒன்று. துப்பாக்கிச் சூட்டில் எத்தனையோ உயிர்களைப் பறி கொடுத்தது, அந்த உணர்ச்சிமிகு பேரெழுச்சி.

அந்த எழுச்சியை முன்னெடுத்துச் சென்றவர் தாம் இந்தப் போராளி. பெருந்தலைவர் காமராசரின் மாணவர். அந்த நாற்றங்காலில் பயின்ற இந்த இளைஞர், ம.தி.மு.க வின் மிக முக்கிய தலைவராக இயங்கிய காலத்திலும் இவருக்குள் உயிர் துடிப்பின் அசலான விவசாயியே வெளிப்பட்டுக் கொண்டிருந்தார்.

நீர்ப்பாசனங்கள், அழகர் அணைத் திட்டம், கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் போன்ற கட்டுரைகளை தினமணி நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அக் கட்டுரைகளில் ஒரு மானாவாரி விவசாயியின் அறிவார்ந்த மனசே துடித்தது. சுற்றிலும் இருக்கிற நிலங்களை சிமெண்டு தூசியால் பாழடித்து நாசக்காடு பண்ணிக் கொண்டிருந்த சிவகாசி அருகில் உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையின் புகைத்தூளை எதிர்த்து உயர்நீதிமன்றப் படிகளில் ஏறி வெற்றி கண்ட பொழுதும் அவருக்குள் ஒரு மானாவாரி விவசாயியின் போர்க்குணமே சுடர்விட்டது.

Nellai
எனக்குள் அவர் பற்றியிருந்த பிம்பத்தை சரி சரி என்று பல சம்பவங்கள் நிருபித்து வந்து கொண்டிருந்தாலும் அந்த பிம்பத்தைக் கலைக்காமலேயே மற்றொரு பிம்பத்தை பிரம்மாண்டமானதாக எழுப்புகிறது, அவரது “நிமிர வைக்கும் நெல்லை” என்ற நூல்.

இந்த நூல் நெல்லை மாவட்டம் குறித்த துல்லியமான, வரலாற்று பூர்வமான, தொலைக்காலத் தகவல்கள் அடங்கிய வெளிச்ச ஆவணம். இந்த நூல் வாசிக்க வாசிக்க இலக்கிய வாசமிக்க நடையாக விரிகிறது. மொழி நடையின் வசீகரம், நம்மை “வா, வா” வென கை பற்றி உள்ளிழுத்துச் செல்கிறது. ஒரு நவீன எழுத்தாளனின் பக்குவப்பட்ட இலக்கிய மொழி நமது மனசுக்குள் நுழையும் தென்றலென இழைகிறது.

இருநூறு பக்க நூல். ஒரே மூச்சில் வாசித்து விட முடிகிறது. நூலுக்கான கச்சிதமிக்க அணிந்துரைகள். அகன்ற நெல்லைச் சீமையாக இருந்த காலத்தை விவரிக்கிற போது இன்றைய விருதுநகர் மாவட்டத்துக் காரனான நானும் நெல்லைச் சீமைக்காரனாகிப் போகிறேன். நெல்லை என்றால் அனைவருக்கும் தாமிரபரணி நதி மட்டுமே நினைவுக்கு வரும். அல்வா ஞாபகத்தில் இனிக்கும். உடன்குடி கருப்பட்டி மணக்கும். கோவில்பட்டி காராச்சேவும், கருப்பட்டி மிட்டாயும் ருசிக்கும். கரிசலின் வெக்கை சுடும்.

நூலுக்குள் மூழ்கி நீச்சலடித்தால்... நெல்லையின் உள்ளும் புறமான பெருமைகள், சிறப்புகள், ஆனந்தம் பெருகி ஆச்சரியத்தை அனுபவிக்க முடிகிறது.

இந்த நூலில் பழந்தமிழ் இலக்கியத்தில் நெல்லையின் இடம். வரலாற்று ரீதியாகநெல்லையின் தொன்மம். பக்தி இலக்கிய இயக்கத்தில் இதன் உன்னதம். பாதிரியார்களின் சமூகப் புரட்சி. தளபதி சுந்தரலிங்கம் போன்றோர்களின் தியாகம், சுதந்திரப் போராட்ட விதையை ஊன்றியவர்கள், ஆஷ் துரை கொலை போன்ற வரலாற்று நிகழ்வுகள், வ.உ.சி., பாரதி மற்றும் அய்யர் போன்றோர் பற்றிய சித்தரிப்பு... என்று நெல்லையைப் பற்றிய அள்ள அள்ளக் குறையாத தகவல் களஞ்சியம். செய்திப் புதையல்.

காமராசர் மனதில் மதிய உணவுத் திட்டம் அரும்பிய நிகழ்வை, சிறுகதை போல எழுதி இருக்கிறார். வ.வே.சு. ஐயர் அவர்கள் சேரன்மாதேவியில் குருகுலம் நடத்திய கதையை சுத்தானந்த பாரதியின் சொற்களில் அறிமுகம் செய்கிறார். நகரங்களின் தனித்துவங்கள், பண்பாட்டுப் பெருமைகள் கலாச்சாரத் தனித்தன்மைகள் அனைத்தையும் சித்தரிக்கிறார்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த சங்கரன் கோவில் வட்டாரத்துத் தனிச் சிறப்புகளை பிரியாணி மணத்துடன் எழுதுகிறார். குற்றாலம் அருவியில் இருந்த தீண்டாமையை சொல்கிறார். சாதீய சமூகங்களும், தொழில் பிரிவுகளும் நிலத்துத் தன்மைகளும், உழைப்பு மனிதர்களின் தனிக் கூறு சிறப்புகளும் பொதுக் கூறு பண்புகளும் அந்தந்த கால வரிசைப்படி ஆசிரியர் விவரித்துள்ளார்.

1946ல் சட்ட மன்றத்துக்கு நடக்கிற முதல் தேர்தலில் கோவில்பட்டி பொதுத் தொகுதியில் பாண்டியக் குடும்பனார் நிறுத்தப்பட்டு ஜெயித்த செய்தி உள்ளுக்குள் கிடக்கிறது. தலித்துகளுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தேர்தலே நடத்த முடியாத இன்றைய அவலத்தை நினைத்துக் கொண்டே இந்தச் செய்தியை வாசிக்கிற பொழுது ‘அடடா... எத்தனை உயர்ந்த பண்பு மரபுகளிலிருந்து நழுவிச் சரிந்திருக்கிறோம்’ என்பதை துல்லியமாக உணர முடிகிறது.

அரசியல் இயக்கங்கள், இலக்கிய பிரமுகர்கள், நுண்கலை வித்தகர்கள், திரை நாடகக் கலைஞர்கள் மேடைப் பேச்சாளர்கள் என்று பன்முக வகைப்பட்ட பிரிவினர்களின் வரலாற்றுச் செய்திகள் வளமாக இடம் பெற்றுள்ளன. அனைத்தும் அலுப்பூட்டுகிற நடையில் அல்ல... மனசுக்குள் இறங்கி... ஆணிவேர் அடித்துக் கொள்கிற வல்லமையிலுள்ள இலக்கிய மொழி நடையில் எழுதி இருக்கிறார்.

இரசிகமணி. டி.கே.சி. தமிழ்த்தாத்தா உ.வே.சா, புதுமைப்பித்தன், கி.ரா. கு.அழகிரிசாமி, அ. மாதவையா, தொ.மு.சி. ரகுநாதன், நா.வானமாமலை போன்ற சரித்திர புருஷர்களின் சாதனைகள் பற்றியும் சொல்கிறார். தூத்துக்குடி, திருச்செந்தூர் கடல் வளங்கள் மீனவச் சமூகம், கோவில்பட்டி, எட்டையபுரம், கரிசல் விவசாயிகள், சிமெண்டாலை, பஞ்சாலைத் தொழிலாளிகள் பற்றிய சித்தரிப்புகளும் உண்டு.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டையபுரம் ஜமீன் போன்றோரின் விவரிப்புகளும் உண்டு. பொதுவுடைமை இயக்கத்தின் சுதந்திரம் போராட்ட நடவடிக்கைகளும் தேசப்பற்று மிகுந்த தொழிற் சங்க விவசாய சங்க நடவடிக்கைகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. யார் பெயரையும் விட்டு விடாமல், எந்த தகவலும் விட்டு விடாமலும், எந்தச் செய்தியும் தவறிப்போகாமல், வரலாற்றின் முழுமையை துல்லியமான நுட்பத்துடன் சித்தரித்திருக்கிறார்.

நூலை வாசித்துப் பார்த்தவர்களுக்கு விரிவடைந்த நெல்லை மாவட்டம் பற்றிய சகலமும் தெரிந்தவராக விட்டோம் என்ற உணர்வு நமக்குள் முளை விடுவதை தவிர்க்க முடியவில்லை. நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் நூறு சதம் நிஜமானது என்ற நம்பகத்தன்மை ஏற்படுகிறது. அழுத்தமும், அடர்த்தியும் மிக்க இந்த நூலின் அச்சாக்கமும், வடிவமைப்பும் தனியழகாக நம்மை வசீகரிக்கிறது.

இது வரை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்ற ஒரு மானாவரி விவசாயிக்குள் அறிவார்ந்த போராளியைப் பார்த்த நான், உலகத்தரமான ஓர் ஆராய்ச்சியாளரையும் தரிசிக்கிறேன். இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து விடுபட முடியாமல் தத்தளிக்கிறேன். “தேனுக்குள் சிக்கிய சிற்றெறும்பாக”.

நூல் : நிமிர வைக்கும் நெல்லை
ஆசிரியர் : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
பக்கங்கள் : 200 விலை: ரூ.75
வெளியீடு: பொதிகை - பொருநை - கரிசல் அறக்கட்டளை,
4/359, ஸ்ரீசைதன்ய அவென்யூ,
பாலவாக்கம், சென்னை - 41
நூல்கள் கிடைக்கும் இடங்கள்: பாரதி புத்தகாலய கிளைகள். 

Pin It