மனிதர்கள் பலருக்கும் பலவிதமான மூட நம்பிக்கைகள் உள்ளதை நாம் காண்கிறோம். அதிகாலையில் ஒருவனிடம் ஐந்து ரூபாய் கடன் கேட்டு பாருங்கள்; “விடிஞ்சு விடியாம கேட்டுட்டியா? இன்னைக்கு உருப்பட்ட மாதிரித்தான்'' என்பான்.
அதே போல மாலை மயங்கும் வேளையில் கடன் கேட்டால், "ஏன்டா வெளக்கு வைக்கிற நேரத்துல கேட்டுட்டியா? இன்னைக்கு வெளங்குன மாதிரித்தான்' என்பான். இவ்வாறு சிலருக்கு மூட நம்பிக்கைகள். அதுபோல பள்ளிக் கூட காலத்தில் புத்தகத்திற்குள் ஒரு மயிலிறகை வைத்து விட்டு மறுநாள் திறந்து பார்த்தால் அந்த மயிலிறகு குட்டி போட்டு இரண் டாக இருக்கும் என்று அறியாப் பருவ சிறார்களுக்கு ஒரு அசாத்திய நம்பிக்கை. அத்தகயை சிறு வர்களுக்கு ஒப்பாக இன்றைக்கு ஒரு பெரும் கூட்டம் ஒருவகை மூட நம்பிக்கையில் மூழ்க, இவர்களின் மூடநம்பிக்கையை வைத்து முத்துக் குளிக்கிறது வியாபாரக் கூட்டம். அதுதான் அட்சய திருதியையாகும்.
அட்சய திருதியை நாளைக் கொண்டாடும் இந்துக்களின் நம்பிக்கையை நாம் குறை கூற முன்வரவில்லை. அதே நேரத்தில் அன்றைய தினத்தின் பெயரால் நடைமுறையில் உள்ள மூட நம்பிக்கையை மட்டுமே நாம் இங்கே முன்வைக்கிறோம்.
இந்த அட்சய திருதியை நெருங்குகிறது என்றாலே நகை விலை நாலு கால் பாய்ச்சலில் எகிறிவிடும். காரணம், இந்த நாளில் ஒரு கிராம் அளவாவது நகை வாங்கிவிட்டால் அது பெரு கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால் நகைக் கடையில் அன்றைய தினம் ஈ மொய்ப்பதை விட அதிகமாக கூட்டம் இருக் கும். எந்த அளவுக்கு என்றால் கையில் காசு இல்லாதவர்கள் கூட வட்டிக்கு கடன் வாங்கி அன்றைய தினம் நகை வாங்கி விடுவர். இவர்களின் இந்த நம்பிக்கை உண்மையா என்பதை ஆராய்வ தற்கு அமெரிக்க கல்போர்னியா வில் உள்ள பல்கலைக் கழகம் சென்று படிக்க வேண்டிய தில்லை. சிம்பிளான சிந்தனை போதும்.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் நகை வாங்கி வீட்டில் வைத்தவர்கள் இந்த ஆண்டு அது பத்து கிராமாக மாறி விட்டது என்பார்களா? சொல்ல முடியாது. ஏனெனில் குட்டிபோட தங்கம் ஒன்றும் ஆடோ, மாடோ அல்ல. அது ஒரு திடப்பொருள். எத்தனை கிராம் வாங்கி வைத்தார்களோ அத் தனை கிராம்தான் பத்து வருஷம் ஆனாலும் இருக்கும். இதுதான் யதார்த்தம்.
இதை புரியாமல் ஏமாறுவது எந்தவகை பகுத்தறிவு என தெரியவில்லை. மேலும் வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங் கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடி யாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம்.
தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் வணக்கத்திலும் மனதை செலுத்த முன்வர வேண்டும்.
தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். கண் களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை. அடுத்து ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வதுபோல தங்கம் வாங்கினால் பெருகும் என்ற கருத்து அட்சயதிருதியைக்கு உண்டா என்றால் இல்லை. "அக்ஷயா' எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.
இந்த கருத்தின்படி எடுத்துக் கொண்டாலும் ஒரு வீட்டில் வாங்கி வைத்த நகை குறையா மல் இருக்குமேயன்றி வளராது. இது இந்த ஒரு நாளுக்கு மட்டு மல்ல. நாம் வைத்த நகையை நாம் எடுக்காதவரை அது என்றைக் கும் குறையாது எனும்போது, இந்த அட்சய திருதியை நாள்தான் அள்ளித் தருவதுபோல நம்புவது ஏன்? அல்லது வளர்கிறது என்றால் அதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிப்பார்களா? மத நம்பிக்கை தவறல்ல; மடத்தனமான நம்பிக்கையே தவறு.