கண்டு கொள்ளாத ஊடகங்களும், தமிழ் அமைப்புகளும்!

இலங்கை யுத்தத்தின் காரணமாக வடக்குப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளில் வீட்டு வசதி திட்டமும் ஒன்று.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவிற்கு வருகை தந்தபோது... இலங்கையில் போர் பாதித்த வடகிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறி உள்நாட்டு அகதிகளாக இருக்கும் மக்களின் மறு வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக சுமார் 50 ஆயிரம் வீடுகள் இந்தியாவின் சார்பில் கட்டிக் கொடுப்பதாக ராஜபக்ஷேவிற்கு மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.

இந்த வாக்குறுதியின்படி இலங்கை முல்லைத் தீவு மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை யுத்தத்தின் காரணமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த வீட்டு வசதி திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; இதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என இலங்கை முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்திய அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் வீடுகளின் பயனாளர்களாக தமிழ் மக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலுக்குள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் இருக்கும் நிலையில், முஸ்லிம்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது இந்திய அரசின் தெளிவான பாரபட்சமாகும் என்று கூறுகின்றனர் இலங்கை முஸ்லிம்கள்.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரி அஷோக் கந்த்தாவை சந்தித்துப் பேசியிருக்கும் 17 பேர் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தின் முஸ்லிம் எம்.பி.க்கள் குழு, முஸ்லிம்களுக்கும் வீட்டு வசதி திட்டத்தில் போதுமான இட ஒதுக்கீட்டை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

இந்தச் செய்தியை இரான் செய்தி நிறு வனமான IrIran Republic News Agency - IRNA வெளியிட்டுள்ளது. தமிழ் ஊடகங்கள் இந்திய - இலங்கை ஊடகங்கள் இச்செய்தியை இருட்டடிப்புச் செய்திருக்கின்றன.

17 எம்.பி.க்கள் குழு அளித்திருக்கும் கோரிக்கை மனுவில், "இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதில் இந்தியாவின் மதிப்புமிக்க பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். அதே சமயம் வீடுகளை ஒதுக்குவதில் 2008ம் வருடத்திற்கு முன்பும், பின்பும் என வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களிடையே வேறுபாடு காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் வடக்குப் பிரதேசத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னால் வெளியேற்றப்பட்டு அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். யுத்த முடிவுக்குப் பின் அவர்கள் தங்களது சொந்த மண்ணுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் 2008ம் வருடத்திற்கு முன்பு இடம் பெயர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் 2008க்குப் பிறகு புதிதாக இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் எதுவும் (2008க்கு முன் இடம் பெயர்ந்த) இவர்களுக்கு கிடைக்கவில்லை 2008க்கு முன் இடம் பெயர்ந்தவர்கள் என்று இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நிவாரண உதவிகள் கிடைக்காமல் பெரும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வடக்குப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் நிவாரண உதவிகளைப் பெறுபவர்களுக்கான கணக்கெடுப்பின்போது கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளனர். முகவர்கள் தந்த தவறான மோசடியான தரவுகளின் அடிப்படையில் வீட்டு வசதி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட வடக்குப் பிரதேச முஸ்லிம்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்நாட்டு அகதிகளாக இலங்கையிலுள்ள புத்தளத்திலும், புத்தளம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் தங்கியுள்ளனர்.

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தின்போது வடக்குப் பிரதேச முஸ்லிம்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. 1990களின்போது தமிழ் பேசும் முஸ்லிம்கள் புலிகள் இயக்கத்தால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 1500 முஸ்லிம்கள் சாவகச்சேரியிலிருந்து துவக்க நிகழ்ச்சியாக புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அதனையடுத்து கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதியிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட யாழ்பாணம் முஸ்லிம்கள், யாழ்பாணத்திலுள்ள உஸ்மானியா கல்லூரி வளாகத்தில் ஒன்று திரட்டப்பட்டு உடைகள் மற்றும் 500 ரூபாய் மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டு 2 நாட்கள் அவகாசத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

வடக்குப் பிரதேசம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த காலத்தில் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் முஸ்லிம்கள்வரை அப்பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்டனர். 2002 பிப்ரவரி மாதம் புலிகள் அமைப்பிற்கும் இலங்கை அரசுக்குமிடையில் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட காலத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் புலிகள் அமைப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின்போது வடக்கு முஸ்லிம்கள் சொந்த மண்ணுக்கு திரும்ப புலிகள் அமைப்பு ஒப்புக் கொண்டது.

இதற்கான உடன்பாடு 2002 ஏப்ரல் மாதம் இரு தரப்புக்கும் இடையில் கையெழுத்தானது. அதன் பின்பும் முஸ்லிம்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் புலிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் 2009ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, இடம் பெயர்ந்து புத்தளம் அகதிகள் முகாமில் வசித்த வடக்கு முஸ்லிம்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதற்கான நிகழ்ச்சி ராஜபக்ஷே முன்னிலையில் நடந்தது. அப்போது புத்தளம் அகதி முகாமில் சிறிது காலம் வாழ்ந்தவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினராகவும், மீள்குடியேற்றத்துறை அமைச்சராகவும் இருந்த ரிசாத் பதியுத்தீன் வடக்கு முஸ்லிம்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ஆயினும் இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டாததாலும் தொடர்ந்த யுத்தத்தின் காரணமாகவும் ஊர் திரும்பும் வைபவம் நிகழாமல் போனது.

ஆக, வடக்குப் பிரதேச முஸ்லிம்களைப் பொறுத்தவரை யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களுக்கு சற்றும் குறையாத துயரத்திற்கு அவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது கண்கூடு.

இந்த வகையில் மீள் குடியேற்றம், மறு வாழ்வுத் திட்டங்கள், நிவாரணப் பணிகள் என அனைத்துத் திட்டங்களிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களையும் இணைத்தே அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் ஒரு அரசாங்கத்தின் பொறுப்புள்ள நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டு வசதி திட்டத்தில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பது இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் ஓரவஞ்சனைப் போக்கைத் தான் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்திய அரசுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த சரியான தரவுகளைத் தருவதில் இலங்கை அரசு தவறியிருக்கிறது. தமிழர்கள் - முஸ்லிம்கள் என்ற பார்வையை விடுத்து, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற கண்ணோட்டத்தில் இலங்கை அரசும் இந்திய அரசும் இந்த விஷயத்தை அணுகியிருக்க வேண்டும்.

50 ஆயிரம் வீடுகளோ, 1 லட்சம் வீடுகளோ... அவற்றை தமிழ் மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அதில் சிறிய அளவில் கூட ஒதுக்கீடு இல்லை என்கிறபோது இதனை நேர்மையான - நியாயமான செயலாக எப்படி கருத முடியும்? வடக்கு பிரதேச முஸ்லிம்களை அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை அரசு கருதி விட்டதோ என்னவோ!

இந்திய முஸ்லிம்களை வஞ்சித்து வரும் இந்திய அரசின் பாசிசத்தனத்தை அது இலங்கையிலும் காட்டியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரையறையை வகுத்தால் அதில் முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் முன்னுரிமை என்பதே உலக நடைமுறை. ஆனால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை 2008க்கு முன், 2008க்குப் பின் என பிரிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சதித் திட்டமாகத் தான் கருத முடிகிறது.

2008க்குப்பின் யுத்தத்தின் இறுதிவரை தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், இழப்பும் அதிகமானது என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் பாதிப்பினால் இடம் பெயர்ந்தவர்களுக்கான மறு வாழ்வில் சமூகங்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவது நியாயத்திற்குட்பட்டதல்ல.

வடக்குப் பிரதேசத்தில் முஸ்லிம்களும் கணிசமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பது இந்திய அரசுக்கு தெரியாத ஒன்றல்ல... 50 ஆயிரம் வீடுகள் கட்டும் இடத்தில் முஸ்லிம்களையும் கவனத்தில் கொண்டு கூடுதல் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதால் இந்திய அரசுக்கு என்ன நேர்ந்து விடும்?

யுத்த முடிவுக்குப் பின் இணக்கத்துடன் வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம் தமிழ் மக்களுக்கு மத்தியில் வெறுப்பை உண்டாக்கும் வேலையை இந்தியாவும் இலங்கையும் கூட்டாகச் செய்திருக்கின்றன.

இலங்கை இந்திய அரசுகளின் தமிழர் விரோதப் போக்கை கண்டிக்க இலங்கையிலும், தமிழகத்திலும் பல இயக்கங்கள் உள்ளன. தமிழுணவர்வாளர்களும் உள்ளனர். ஆனால் இந்திய - இலங்கை அரசுகளின் தமிழ் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டிக்க, குரல் கொடுக்க இலங்கையிலோ, தமிழகத்திலோ எவருமில்லை!

- ஃபைஸல்

Pin It