தந்தை பெரியார், கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் சிந்தனையாளன் ஆசிரியர் ஆனைமுத்து ஆகிய திராவிட இயக்கப் பெரும் ஆளுமைகள் 90 வயதிற்கு மேல் வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். தற்போது விடுதலை ஆசிரியர் வீரமணியார் 91 வயதைக் கடந்து சுறுசுறுப்போடு இயங்கி திராவிட இயக்கப் பணிகளை உயர்த்தி பிடித்து வருகிறார்.

இதில் ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் மேற்கூறிய தலைவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் தடம்மாறா கொள்கை வழி அரிமாக்கள். இத்தலைவர்கள் கண்ட களங்கள் பலபல. பெற்ற வெற்றிகளும் பலபல. இருப்பினும் சனாதனம் மீண்டும் மீண்டும் வாலாட்டி வருகிறது. ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கிற மூடநம்பிக்கைகளை நிலைநிறுத்துகிற பல பிற்போக்குத்தனமான மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். இன்று உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளும் அதனை ஒட்டி நடைபெறுகிற மூடநம்பிக்கை நிகழ்வுகளும்  இதற்குச் சான்று பகர்கின்றன.

திராவிட இயக்கத்தின் தொடர் பணிகள் இன்றும் பெரு மளவில் தேவைப்படுகின்றன என்பதையே இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன. ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொள்ளும் சனாதனம் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தி மதமயக் கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி இன்றும் தனது ஆதிக் கத்தைத் தொடர்கின்றது.

பிரித்தானியக் கிழக்கிந்திய குழும ஆட்சியில் பல கொடு மையான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பல சட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பார்ப்பனர்களில் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட வங்கத்தின் குல்மி பார்ப்பன வகுப்பில் பிறந்தவர்தான் இராஜாராம் மோகன் ராய். இந்த குல்மி பார்ப்பனர்கள் தாங்கள்தான் உயர்ந்த வர்கள் என்று கூறிக்கொள்ள அஞ்சவில்லை.karunanidhi and periyar 2இராஜாராம் மோகன்ராயின் சமூக சீர்த்திருத்தத்தின் தொடக்கம் அவரது இல்லத்திலிருந்தே புறப்பட்டது. இராஜா ராமின் அண்ணன் இறந்த போது அவருடைய அண்ணி யைக் கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றினர். அண்ணி உயிரோடு எரிந்த காட்சியைக் கண்ட இராஜாராம் மோகன் ராய் பல எதிர்ப்புகளையும் மீறி உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழுமத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கொடுமையைக் கண்ட கிழக்கிந்தியக் குழுமத் தலைமை ஆளுநர் பெண்டிங்க் 1829ஆம் ஆண்டு உடன்கட்டை ஏறுதலுக்குத் தடை விதித்தார். 1857இல் இந்தியா, பிரித்தானியப் பேரரசின் நேரடி ஆட்சியின்கீழ் வந்த பிறகு 1861ஆம் ஆண்டு இந்தியா

முழுமைக்கும் உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தென் இந்தியாவில் ஐதராபத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நிசாம் மன்னர்கள் ஆட்சியில் ஆறாம் நிசாம் ஆசாப் ஜா மேற்கத்தியக் கல்வி முறையில் பயின்றவர். எனவே தனது ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறுதலைத் தடைசெய்தார். இது தென்னிந்தியாவில் நடைபெற்ற முதன் மையான முற்போக்கு நடவடிக்கையாகும்.

இருப்பினும் வழக்கம் போல மதவெறியும் மூடநம்பிக் கைகளும் வடநாட்டில் கைகோர்த்தன. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று இராஜஸ்தான் மாநிலத்தில் 18 வயதே ஆன ரூப்கன்வர் என்ற பெண்னை அவரது கணவர் இறந்த பிறகு உயிரோடு எரித்தனர். மதவெறியர்கள் ரூப்கன்வரைத் தூயத் தாய் என்றும் சதி அன்னை என்றும் போற்றிக் கொண்டாடினர். இந்திய அளவிலும் உலக அளவிலும் இக்கொடுமை அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இதன் பிறகுதான் இராஜஸ்தான் சட்டமன்றத்தில் ஒரு புதியச் சட்டம் இயற்றப்பட்டது. உடன்கட்டை ஏறும் நடைமுறையைப் பின் பற்றுபவர்களுக்கும் ஆதரிப்பவர்களுக்கும் இறக்கும் வரை ஆயுள் சிறைத் தண்டனை என்று இச்சட்டம் வலியுறுத்தியது.

சனாதனமும் மூடநம்பிக்கைகளும் காலந்தோறும் புதிய தோற்றத்தில் மக்களை மதமயக்கத்தில் ஆழ்த்தின. இதன் காரணமாக அறிவியல் கண்ணோட்டத்தைத் துறந்து மக்கள் மத மாயையில் இன்றும் வீழ்ந்து வருகின்றனர்.

1995ஆம் ஆண்டு பிள்ளையார் சிலை பால் குடிப்பது என்ற மூடநம்பிக்கையை இந்தியா முழுவதும் பரப்பினர். மக்களும் பிள்ளையாருக்கு முன் பாலை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றனர். இதைக் கண்ணுற்ற மராட்டிய மாநிலத்தின் மருத்துவர் தபோல்கர் இந்து மத வெறியர்கள் போட்ட ஆட்டத்தை கண்டு கொதித்தெழுந்தார். இது ஒரு ஏமாற்று வித்தை, அறிவியல் உலகிற்குப் பொருந்தாத மத வாதிகளின் செயல் என்று பரப்புரை செய்தார். பார்ப்பனராக இருந்தாலும் தபோல்கரை மதவெறிப் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. அவரைச் சுட்டுக்கொன்றனர். அண்மையில் மும்பை நீதிமன்றம் இரண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கி இருக்கிறது. இருப்பினும் இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒரு இந்துமத வெறியனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கவில்லை.

பல முற்போக்காளர்கள் நீதிமன்றச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். தபோல்கர் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர். பேராசிரியர் பன்சாரே, துணைவேந்தராக இருந்த கல்புர்கி, சமூகச் செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் அனைவரும் தபோல்கர் கொல்லப்பட்ட வழியிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வெளிவந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து வெளிவந்துள்ளது.

இதுபோன்ற மதவெறியின் அடிப்படையில் நடக்கும் தாக்குதல்கள், படுகொலைகள், பசுக்காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் அராஜகங்கள் 2014இல் ஒன்றிய அரசில் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்கின்றன. அண் மையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கைளைப் பின்பற்றியவன் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். இந்துத்துவ வெறி நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் ஊடுருவும் போக்கினை நீதிபதி தனது ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களை உயிரோடு எரிப்பது, பெண்களுக்குக் கல்வி மறுப்பது, பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதைத் தடுப்பது, குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது, விதவைகள் திருமணத்தைத் தடை செய்வது போன்ற பிற்போக்குத் தனமான இந்து மதத்தின் பெயரால் நடைபெறும் பல கொடுமைகளைச் சடங்குகள் என்ற பெயரில் ஆதரிப்பது தகவல் தொழில்நுட்பப் புரட்சி மேலோங்கிய இக்காலத்திலும் நடைபெறுவது வெட்கக்கேடானது.

இத்தகைய பிற்போக்குவாதிகளின் ஆதிக்கம் அரசியலில் சமூகத்தில் நிலவி வந்த, நிலவி வருகின்ற சூழலில் தமிழ்நாடு மூடச்செயல்களுக்கு விதிவிலக்காக இருந்து வருகிறது. இதற்கு முதன்மையானக் காரணம் என்ன? என்பதை இன்று வடமாநிலங்கள் உட்பட பலர் உணரத் தொடங்கியுள்ளனர். திராவிட இயக்கத்தின் தொடர் பணிகளும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட பல முற்போக்குச் சட்டங் களும் திட்டங்களும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைகின்றன.

பேரறிஞர் அண்ணா 60ஆம் வயதில் மறைந்தாலும் தந்தை பெரியாரின் பல கொள்கைகளுக்குத் தமிழ்நாட்டில் அடித்தளம் அமைத்தார். 1967இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். மிகத் துணிவுடன் அரசு அலுவலகங்களில் இருந்து கடவுள் படங்களை நீக்கினார். சுயமரியாதை திருமணச் சட்டத்தை இயற்றினார். சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். தற்போது உச்ச நீதிமன்றம் இந்து மத மரபுகளைக் கடைப்பிடித்து திருமணம் செய்தால்தான் இந்து திருமணம் செல்லும் என்று ஓர் அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் தொடர் பாக ஓய்வுபெற்ற நீதி நாயகம் சந்துரு அவர்கள் ஆங்கில ஏட்டிலும் ஜூனியர் விகடன் ஏட்டிலும் இரு கட்டுரைகள் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்து திருமண முறை சடங்குகளைப் பின்பற்றாமல் பார்ப்பனரை வைத்து நடத்தும் வைதீக முறையை ஏற்காமல் நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லும் என்ற கருத்தைப் பல நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தார். இது தந்தை பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை திருமண முறையும் அறிஞர் அண்ணா அளித்த சட்ட வடிவமும் காலத்தி னால் என்றும் நிலைத்திருக்கக் கூடிய வலிமையான சட்டம் என்பதை இன்று பல முற்போக்காளர்கள் உணர்கின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டு நடை முறைக்கு வந்த பிறகு இடஒதுக்கீடு கொள்கை போன்ற பல முற்போக்குச் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளால் பல தடைகளைச் செய்தன என்பதைப் பல ஆய்வாளர்கள் இன்றைக்குச் சட்ட இயல் நூல்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள் இத்தகைய தடைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக அமை கின்றன. எனவேதான் 1957இல் தந்தை பெரியார் தலை மையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு  பல ஆயிரம் பேர் சிறை சென்றனர். சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு என்ற தலைப்பில் திராவிட இயக்கச் சிந்தனையாளர் திருச்சி என் செல்வேந்திரன் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

இந்நூலில் தேசிய மரியாதையை அவமதிக்கும் செயலுக்கு மூன்றாண்டுகள் கடும் தண்டனை என்ற பெயரில் 1957ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் தமிழகச் சட்டமன்றத் தில் முதல்வர் காமராசர் தலைமையில் அமைந்த காங்கிரசு அரசால் (The Prevension of Insult to National Honour) கொண்டு வரப்பட்ட சட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் 15 உறுப்பினர்களுடன் நுழைந்து திமுகவின் சட்டமன்றத் தலைவராக அறிஞர் அண்ணா இக்காலக்கட்டத்தில் செயல்பட்டார். காங்கிரசு சீர்திருத்தக் கட்சி என்ற ஒன்றைத் தொடங்கி அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக வி.கே.இராமசாமி இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் இடம்பெற்றனர். அறிஞர் அண்ணாவைத் தவிர வேறு யாரும் இந்தச் சட்ட வடிவை எதிர்க்கவில்லை. மேலும் இந்தச் சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று தான் கம்யூனிஸ்ட் கட்சி உட்படப் பல கட்சிகள் வலியுறுத்தின.

அறிஞர் அண்ணா தனது சட்டமன்ற உரையைத் தொடங்கும் போது, “இன்று வரையில் குற்றங்கள் என்று கருதப்படாமல் இருந்து வந்த சில செயல்கள் இனி மூன்றாண்டு களுக்குத் தண்டிக்கத்தக்கக் கடுமையான குற்றங்கள் என்று தெரிவிக்கும் இந்த மசோதாவை நான் தீதானது, தேவை யற்றது, கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது என்று கூறி கண்டிக்கிறேன் என்று சொன்னால் இக்காரியங்களிலே பங்கேற்றுக் கொள்கிறவன் என்று நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

காந்தியாரின் உயிரை வாங்கிவிட்ட சாதிவெறியை அடக்குவதற்கு நாங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால் பாராட்டுவேன். காந்தியாரின் சமாதிக்கு மாலை போட்டுவிட்டு கதர் கட்டிக் கொண்டிருக்கிற காங்கிரசு காரர்கள்தான் இன்றைக்கு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பெரியார் மாளிகையில் தங்கியிருந்தவர்கள் தான். காந்தியார் சாதிவெறியனால் கொல்லப்பட்ட நேரத்திலே காந்தியார் இருந்த இந்த நாட்டிற்குக் காந்தி நாடு என்றும் இந்நாட்டில் உள்ள மதத்திற்குக் காந்தி மதம் என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார்தான் என்பதை அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருப்ப வர்கள் மறந்திருக்கலாம். ஆனால் நாடு மறந்திருக்காது. நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். காந்தி பெரியாரின் மாளிகையில் தங்கியிருக்கிறார். காந்தி நினைவாகத் தன் தமக்கையின் பெண்ணுக்குப் பெரியார் காந்தி என்று பெயர் வைத்திருக்கிறார்.

காந்தியார் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் சொன்னார் என்றால் அவருக்கு அவற்றின் பெயரில் இருக்கின்ற வெறுப்பினால் அல்ல; தேசியக் கொடிக்குத் தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல; இவைகளை எந்தக் காரணத்திற்காகக் கொளுத்தச் சொல்கிறேன், கிழிக்கச் சொல்கிறேன் என அவர் எடுத்துச் சொல்கிறாரோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்குவதற்கு சர்க்கார் முயற்சி எடுத்துக் கொள்வதற்காக அவருடைய கவனத்தைக் கவருவதற்காகச் சொல்லப்படுகிற விஷயங்கள் தாம். அவற்றின் பெயரில் அவருக்கு வெறுப்பு இல்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டு அவர் எந்தெந்த காரணங்களுக்காக உள்ளம் குமுறிக்கொண்டிருக்கிறாரோ அவற்றை நிறைவேற்ற இவர்கள் ஏற்பாடுகள் செய்தார்களா?

இந்தக் குற்றத்தைச் செய்தால் இத்தனை வருடங்கள் தண்டனைக் கிடைக்கும் என அவரிடம் சென்று சொல்லும் அறிவிப்பாகத்தான் இருக்கும். அதைப்போய் நான் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்கள். பத்திரிக்கை வாயிலாக அவரே பார்த்துக்கொள்வார். உண்மையில் நான் அவரைப் போய் இந்தக் காரணமாகச் சந்திப்பதினால் இலாபம் ஏற்படும் என்றால் திரும்பவும் நாங்கள் அவரோடு ஒட்டிக்கொள்ள முடியும் என்றால் மகன் தந்தை செய்ததை மறந்து திரும்பவும் அவர்களிடத்தில் ஒட்டிக்கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல. குணங்களில் ஒன்று என்பதை நிதியமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”. (அண்ணா அறிவுக்கொடை சட்டமன்ற உரைகள் பகுதி 1, 1957-58 பக்.110-135).

அறிஞர் அண்ணா தொலைநோக்குமிக்கத் திராவிட இயக்கத் தலைவர் மட்டுமல்ல; தந்தை பெரியாரைப் பிரிந்திருந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் அக்கொள்கைகளைப் போற்றியவர் என்பதற்கு மேற்கூறிய சட்டமன்ற நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சட்டமன்ற உரை நிகழ்த்தப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1967இல் முதல்வராகப் பொறுப்பேற்றுத் தந்தை பெரியாரின் சமூக நீதி, மாநிலங்கள் உரிமை, பெண்ணுரிமை போற்று வதற்குப் பல திட்டங்களைச் செயல்படுத்தி மெய்ப்பித்தார். இந்தச் சமூகச் சீர்திருத்தத் தொடர் பயணத்தை அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் தனது 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் தொடர்ந்தார்.

கலைஞர் 1971ஆம் ஆண்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார். சனாதன வெறியர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று இந்து மரபுகளை அழிக்கும் முயற்சி என்று தடை பெற்றனர். அன்றும் இன்றும் உச்சநீதிமன்றத்தின் செயல் பாடுகளில் மாற்றமில்லை என்பதற்கு அண்மையில் வழங்கிய இந்து திருமணம் பற்றியத் தீர்ப்பே எடுத்துக்காட்டாகும். 2006ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்ற போது சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிற்கு மாற்றினார். இந்த நடவடிக்கையும் சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் தடைபட்டுள்ளது.

அண்மையில் இந்து மத நம்பிக்கை என்ற பெயரில் பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவது தவறல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதும் இதற்கு மற்றொரு சான்று. பிற்போக்குச் சமூகக் கொடுமைகளை நீக்குவதற்கு முற்போக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு அச்சட்டங்களுக்குத் தடையாணையைப் பிறப்பிப்பது நீதி மன்றங்களின் தொடர் செயலாகி வருகிறது. மதச்சார்பற்ற நிலையை சில நீதிபதிகள்தான் பின்பற்றி தீர்ப்புகளை

வழங்குகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் இந்துமதச் சார்பு நிலையையே நீதிமன்றங்கள் எடுத்துவந்துள்ளன. இதன் காரணமாகதான் தந்தை பெரியார் நீதிமன்றத்தைத் தனது இறுதி உரையில்கூட கடுமையாகக் கண்டித்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றித் தந்தை பெரியாரின் பார்வை சரியானதே என்பதைக் காலம் மெய்ப்பித்து வருகிறது.

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த போது மிகவும் பின்தங்கிய சமுதாயப் பிரிவினருக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டு ஆணையைப் பிறப்பிப்பித்தார் முதல்வர் கலைஞர். இந்தப் புதிய அணுகுமுறையின் வழியாகத் தமிழ்நாட்டில் மிகப் பின்தங்கிய வகுப்பினர் பெருமளவில் உயர் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் உயர் வதற்கு வழிவகுக்கப்பட்டது. மகளிருக்குச் சொத்துரிமையில் சம பங்கு அளிக்கும் முற்போக்கான சட்டமும் நிறைவேற்றப் பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1989ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரசின் நிதியுதவியோடு தொடங்கப்பட்டன. இன்று பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு முறை முதன்முதலாக 1989இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளுக்கு அனைத்துச் சமூகத் தினரும் வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகை செய்தது.

1996ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பல பகுதிகளில் பெரியார் சமத்துவபுரம் என்ற திட்டத்தைத் தொடங்கி அனைத்துச் சமூகத்தினரும் ஒரே வாழ்விடத்தில் தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். ஒரு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழத் தொடங்கினால் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படும் என்பதைத் தான் சமூக மூலதனம் (Social Capital) என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டில் இதற்கான அடித்தளம் தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டத்தின் வழியாக அமைக்கப்பட்டது. இதன்தொடர்பாக இக்கட்டுரை ஆசிரியரும் தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ஜோதி சிவஞானமும் இணைந்து மும்பையில் இருந்து வெளிவரும் அரசியல் பொருளாதார ஏட்டில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டு ரையை வெளியிட்டனர். தற்போது சாதி மத வேறுபாடுகளைப் பெருக்கி வேற்றுமைகளை பாஜக ஆளும் மாநிலங்களில் அரசே ஊக்குவிப்பது இந்தச் சமூக மூலதனக் கொள்கையைச் சிதைக்கும் செயலாகும்.

2006இல் கலைஞர் 5ஆம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக லாம் சட்டத்தை மீண்டும் இயற்றி இன்று உச்சநீதிமன்றத் தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2021இல் திமுக ஆட்சிய மைந்த பிறகு பயிற்சிப் பெற்ற அனைத்துச் சாதிகளைச் சார்ந்த 24 அர்ச்சகர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 2023இல் உயர்நீதிமன்றம் இந்த நியமனங் களை ஏற்றுக்கொண்டது. இடஒதுக்கீட்டு கொள்கையில் இசுலாமிய சமுதாயத்தினருக்கு 3.5 விழுக்காடும் தாழ்த்தப் பட்ட பிரிவில் அருந்ததியருக்கு 3 விழுக்காடு தனி ஒதுக்கீடும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

2006இல் இக்கட்டுரை ஆசிரியர் மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற போது 11ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த செலவான ரூ.92,332 கோடியில் 44 விழுக்காடு கல்வி, பொதுச் சுகாதாரம், சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டைத் திட்டக்குழுவின் தலைவரான கலைஞர் முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினார். சான்றாக ஒன்றிய அரசின் அனைவருக்கும் கல்வி என்கிற திட்டம் நிறை வேற்றப்படும் போது 2008இல் ஒரு புள்ளிவிவரக் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்களின்படி தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஏறக்குறைய 98 விழுக்காடு அளவிற்குத் தமிழ்நாட்டி லிருந்தது. இது பலருக்கு வியப்பை அளித்தது. அதற்கு காரணம் 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சத்துணவோடு பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளும் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் புரதச் சத்து வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் பங்கினை அளித்தது.

திராவிட இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளான இடஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றம் போன்ற சமூக நீதிக் கொள்கைகள் திமுக ஆட்சியில் பின்பற்றபட்ட காரணத்தி னால்தான் தமிழ்நாடு இன்று உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியாவின் மாநிலங்களிலேயே முதன்மையாக உள்ளது. மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்திய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்று வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிஞர் அமர்தியா சென்னும் தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ்சும் 2013இல் ஒரு நிலையற்ற வெற்றி-இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (An Uncertain Glory : India and Its Contradictions) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழ்நாடு அடைந்த வெற்றி, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சாதனைகளை முறியடிக்கக் கூடியது. குறைந்த காலக்கட்டத்தில் விரைந்த வளர்ச்சியைப் பெற்று கொடுமையான வறுமையும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் தமிழ்நாடு உள்ளது. அனைத்துச் சாதிப் பிரிவினரும் பள்ளிக்குச் செல்லும் வண்ணம் சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நிறை வேற்றப்படுகிறது. உறுதியான சமூக அடித்தளம் இதற்குக் காரணமாக அமைகிறது. சமூக உணர்வைத் தூண்டும் பெரியாரின் சமூகச் சீர்திருத்த இயக்கம் ஒரு காரணமாக அமைந்தது (the social reform movement initiated by Periyar is responsible for socially engineered economic growth) என இந்நூலில் இந்த இரு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17, சமூகநீதி நாள், என்று தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் போற்றப் படுகிறது. 2022ஆம் ஆண்டு முதல் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாளைச் ‘சமத்துவ நாள்’ என்று அரசு அறிவித்து விழா எடுக்கிறது.

மாநிலங்கள் தன்னுரிமை பெற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதித்துறையில் இழைக்கப்படும் அநீதி நீக்கப்படும். ஒன்றிய அரசு விதிக்கும் நேர்முக, மறைமுக வரிகளில் தமிழ்நாட்டின் பங்கு அதிகமானது. ஒன்றிய அரசிற்கு வரும் வரி வருவாயில் 70 விழுக்காட்டிற்குமேல் 6 மாநிலங்கள் மட்டும் செலுத்துகின்றன.

தமிழ்நாடு அதிக வரியை ஒன்றிய அரசின் நிதித் தொகுப்பிற்கு அளித்தும் தமிழ்நாடு பெறும் நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நிதியியல் நெறிப்படி வரிவருவாயை பகிர்ந்தளித்தால் சமுதாயத்தின் அனைத்து நலிந்த பிரிவினருக்கும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசால் தொடர முடியும்; விரிவுபடுத்த முடியும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசிற்கு உரிய நிதித் தொகையை அளிக்காமல் இருந்தும் பல நிதிச்சிக்கல்களுக்கு இடையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்வதற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டமும் மாணவ மாணவியருக்கு ‘நான் முதல்வன்’ போன்ற பல சமூக நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

- பேராசிரியர் மு.நாகநாதன்