குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார்.
சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..
வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார்.
சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான தேவையில்லை என்கிறார்.
குடிஅரசின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தி இரண்டு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்தியாவில் முதல்முறையாக தமிழில் மொழி பெயர்த்தது பெரியாரின் குடிஅரசு பத்திரிகை தான். அந்த நூலின் முன்னுரையில் பெரியார், மேலை நாடுகளில் ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் மேல் ஜாதி – கீழ் ஜாதி என்ற வேறுபாடு இருக்கிறது. இது கூடுதலாகவும் முதன்மையானதாகவும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டுதான் இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் பெரியார் ரஷ்யாவுக்கு சென்றுவந்த பிற்பாடு சமதர்ம இயக்கம் என்ற பெயரில் பெரியாரே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குகிறார். நாடு முழுவதும் இருந்து சமதர்மிகள் வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சமதர்ம இயக்கம் வளர்கிறது. சமதர்ம இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள். இப்படி அபரிமிதமான வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு சமதர்மக் கட்சியைக் கண்காணிக்கத் தொடங்கியது.
அப்போது பெரியாரின் கடிதங்களைப் பிரித்துப் பார்ப்பது, உளவுத்துறையின் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெரியாருக்குத் தடையாக இருந்தனர். அதனால் சுயமரியாதை இயக்கத்தையே தடை செய்யக் கூடிய ஒரு நிலை உருவாகியது. எனவே சமதர்மத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் கூட, சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரம் முதன்மையானது என்று நினைக்கிறேன். அப்படிச் சுயமரியாதை இயக்கத்தைத் தடை செய்துவிட்டார்கள் என்று சொன்னால் நான் தடையை மீறிச் செயல்பட்டு சிறையில் அமர்ந்து கொண்டு ஒரு வீரனாக வாழ முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வீர சொர்க்கத்தை அடைய நான் தயாராக இல்லை. நான் சுயமரியாதை இயக்கத்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் சமதர்ம பிரச்சாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சுயமரியாதை இயக்கத்தை நான் தொடர்கிறேன் என்று பெரியார் சொன்னார்.
அதற்காக ஜீவானந்தம், வல்லத்தரசு, சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் எல்லாம் பெரியாரை விட்டு வெளியேறித் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கிய சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவான காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கரைந்தார்கள்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஜீவானந்தம், பெரியாரை வைத்துக்கொண்டே பெரியார் மீது விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் பெரியார் பேசுகையில், நான் ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தேன் என்று விளக்கினார்.
நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற ஒரு கூட்டத்திற்குp போகும் வழியில் சுவர்களில் விபச்சாரி நாகம்மை ஒழிக! பெரியார் என்ற கழுதை ஒழிக! சுவற்றில் எழுதியிருந்ததைப் பெரியார் பார்த்தார். பின்னர் கூட்டத்தில் பெரியார் பேசுகையில், சுவரில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். நாகம்மை என்ற விபச்சாரி ஒழிக என்று கேட்கிறான். நாகம்மை விபச்சாரியா? பத்தினியா? என்பது எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நாகம்மையிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை என்று தெரிவித்துவிட்டார்.
இரண்டாவதாக நீ தாழ்த்தப்பட்ட பெண் ஒருவருக்கு உன் பிள்ளையைக் கட்டிக் கொடுப்பியா? என்ற கேள்வியைப் பெரியாரிடம் கேட்டனர். அதற்குப் பெரியார், இதை என்னிடம் கேட்கக் கூடாது, என் மகன், மகளிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதை என்னிடம் கேட்க வேண்டாம் என்று பெரியார் பதிலளித்தார்.
அதே கூட்டத்தில் பேசும் போது ஒன்றைச் சொல்கிறார். என்னை யாரும் ‘மகாத்மா’வாக்கிவிடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருந்தியவராகப் பார்க்கப்பட்டால் மக்கள் என் கருத்தை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும் என்று சொன்னார்.
சுயமரியாதை இயக்கத்தில் இருப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் மூடநம்பிக்கையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதக் கருத்துக்களை எதிர்ப்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார். அதைப்போலவே மத எதிர்ப்பைச் சுயமரியாதைக்காரர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பெரியார் மிக நுட்பமாக விளக்குகிறார். தலித் மக்களிடம் சென்று உன்னைப் பஞ்சமனாக வைத்திருப்பது இந்துமதம், இந்துக் கடவுள் தான் என்றும், சாதாரணக் கடவுளை வணங்குகிற தலித்திடம் சென்று, “ஏன்டா மடையனே உன்னால் சாமி கும்பிடாமல் இருக்க தைரியம் இல்லை. உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். நீ சாமி கும்பிடாமல் இருந்துட்டு வா. அந்தத் துணிச்சல் இல்லாத உனக்கு நான் ஏன் யோசனை சொல்ல வேண்டும். இப்படித் தீண்டத்தகாதவனாகவே கடைசி வரை இருந்து செத்துப்போ” என்று ஒரு சுயமரியாதைக்காரனால் பேச முடியாது. பேசவும் கூடாது என்கிறார். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அதிலிருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவதற்காக அவர்களுடைய நிலையில் இருந்து கீழே இறங்கித்தான் பேச வேண்டும்.
எந்த விசயத்துக்கும் கொள்கைகள் மட்டும் போதாது. கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்ல முடியும். மற்றபடி அனுபவ சாத்தியத்திற்கு இணங்காத கொள்கைகள் நடைமுறைக்கு மக்களிடம் கொண்டு செல்வதற்கு தடையேற்படுத்தக் கூடிய எதுவானாலும் அதை புஸ்தகப் பூச்சு என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது வெறும் கருத்தைத் தெரிவிக்கும் சிந்தனையாளர்களே ஒழிய செயல்பாட்டுக்கு உரியவர்கள் அல்ல என்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் மூல உத்தி, செயல் உத்தி என்று சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் பெரியார் படிக்கவில்லை, மக்களிடம் சென்று தனது அனுபவங்களின் வழியாகவே தொடர்ந்து பேசிவந்தார்.
ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் தமிழைப் பற்றிப் பேசுகிறார். பெரியார் படித்ததோ வெறும் 4வது தான். ஆனால் அவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவருடைய வாக்கியங்களில் இலக்கணம் இருக்காது. பெரியார் இறுதியாகச் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டக் காலத்தில் இரண்டு நாளுக்கு ஒரு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார். அவை அனைத்தும் கடுமையானதாகவும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை உள்ளடக்கியதாகவே இருந்தது. அப்போது பெரியாருக்கு வரும் கடிதங்களில் சில கடிதங்களைப் பிரித்துப் படித்துக்காட்டும் பணியைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போது அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையை எடுத்துட்டு வாங்க என்று பெரியார் சொன்னார். திராவிட நாடு குறித்து அண்ணா என்னென்ன எழுதியிருக்கிறார் என்று படியுங்கள் என்றார். அதை ஒரு முக்கால் மணிநேரம் படித்தேன். “நாட்டுப் பிரிவினைப் பற்றி எப்படி எழுதியிருக்கிறார் பாருங்க” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவரது உணர்வு, சிந்தனை அனைத்தும் இறுதிகாலத்தில் தமிழ்நாடு விடுதலை என்ற நோக்கிலேயே இருந்தது. தனது உரையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பேசும் போது கூட, இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இதை வைத்தாவது நமது நாடு நமக்கானதாக ஆகிவிடாதா? என்ற காரணத்தினால் தான் சொல்கிறேன் என்று சொன்னார்.
பல நேரங்களில் பெரியார் தனக்கு நேர்ந்த அடக்குமுறைகளைப் பற்றிப் பேசியதே கிடையாது. வைக்கம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெரியாருக்கு திருவனந்தபுரம் சிறையில் கை மற்றும் கால்களில் விலங்கு, நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் அளவுக்கு மேல் சுவர் என இவற்றுடனே பல மாதங்கள் சிறையில் கழித்தார். ஆனால் ஒரு இடத்தில் கூட தனக்கு சிறையில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் நேர்ந்தன என்று எழுதியதே கிடையாது.
ஆனால் வைக்கம் போராட்டம் பற்றி டி.கே.மாதவன் ஒரு வரலாறை எழுதியிருக்கிறார். அந்த வரலாற்றில் தான் பெரியார் இப்படிப்பட்ட அடக்குமுறைகளைச் சிறையில் சந்தித்தார் என்று எழுதியிருக்கிறார்.
கடைசியாகச் சிறைக்குப் போய் சில மாதங்கள் ஆகிவிட்டது. நான் ஏன் சிறைக்குப் போகாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன் என்று தெரியவில்லை. இவ்வளவு நாளாகிவிட்டது, என்னை யாரும் கைது செய்யவில்லையே என்று கவலைப்பட்டவர் பெரியார். சிறைக்குச் சென்றால் தான் என்னுடைய கருத்து பரவும், அடக்குமுறைகளைச் சந்தித்தால் தான் என்னுடைய கருத்து பரவும் என்பதில் உறுதியாக இருந்த பெரியார், அடக்குமுறைகளைத் தனது கொள்கைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியவர். அதற்காகவே அடக்குமுறைகளை வரவேற்றார். தன்மானத்தை விட்டு சமூக மானத்துக்காகப் போராடியவர்.
நான் ஏன் உணர்ச்சியோடு இருக்கிறேன், என்னை நிலைகுலையாமல் வைத்திருப்பது எது? என்பதற்கு பெரியார் ஒரு விளக்கத்தைச் சொல்கிறார். அது எதிரிகளுக்கு ஸ்தாபனம் உண்டு, பொறுப்பு உண்டு, ஓட்டுக் கவலை உண்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கான பொருளைத் திரட்டுகிற தந்திரம் உண்டு. ஆனால் நமக்கு என்ன உண்டு? சகலமும் நாடே தான், என்ற ஆணவமும் அகம்பாவமும் கொண்டதால் தான் நான் இவ்வளவு காலம் உயிர் வாழ முடிகிறது.
எனக்கும் மற்றவர்கள் இருக்கிறார்கள், ஸ்தாபனங்கள் இருக்கிறது, கவலையும் பொறுப்பும் உள்ள தோழர்கள் இருக்கிறார்கள் என்று சிறிதாவது கருதியிருப்பேனானால் நான் உணர்ச்சியும் ஊக்கமும் குறைவுபட்டு தொட்டதில் எல்லாம் தோல்வியிலேயே தலைகாட்டிப் பொதுவாழ்வில் இருந்தே விலகிப் போயிருப்பேன் என்று பெரியார் சொன்னார்.
27.11.1938-இல் நடந்த பெண்கள் மாநாடு இந்தி எதிர்ப்புப் போராட்டக் களம். அப்போது நிறையப் பெண்கள் போராட்டக் களத்திற்கு வந்தனர். ஆனால் ஆண்களெல்லாம் போராட்டத்திற்கே போகாதே என்று தடுத்தனர். இந்த நிலையில் தான் பெரியார் ஒன்றைச் சொல்கிறார்.
பெண்களாகிய நமக்கு ஏற்படும் வேதனைக்கோ தொல்லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது, நாட்டிற்குப் பாடுபடாது, ஆண்கள் உங்களுக்கு எதிராக வருவார்களே, ஆனால் ரோசம் இருக்கும் இடத்தைப் பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதே போல் பல நாடுகளில் பெண்கள் கணவன்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகிறது. அநேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் கண்டு பயப்படுவார்களேயானால், அவர்களைத் திருத்தவேண்டுமேயானால் நீங்கள் எதாவது ஒரு ஊருக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அவர்களுக்குத் தெரியாமலேயே சிறைக்குப் போய்விடுங்கள். அப்படிச் செய்தால் தான் அவர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள் என்று பெரியார் 1938 பெண்கள் மாநாட்டில் பேசியிருக்கிறார்.
தன்னையும் தன்னுடைய புகழையும் மறைத்து மக்களால் வெறுக்கக் கூடியக் கருத்துகளைத் துணிச்சலாக மக்களிடம் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார் என்பதில் தான் பெரியார் நிற்கிறார்.
குடிஅரசு நூற்றாண்டில் அதன் வரலாறுகளை நாம் கொண்டு சேர்ப்போம்! சமகாலத்தில் பெரியாரியலை வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அவை அமையும்!
(நிறைவு)
- விடுதலை இராசேந்திரன்