திருச்சிராப்பள்ளியில் மீனாட்சித் திருமண மண்டபத்தில் 07.08.2011 ஞாயிறு அன்று நடந்த மார்க்சியப் பொரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாநாடு மற்றும் மா.பெ.பொ.க. மாணவர் - இளைஞர் அணி போராட்ட விளக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் : 1

ஈழச் சிக்கலுக்கான தீர்வுகள்

உலக வரலாற்றில் 1939-45 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் 60 இலட்சம் யூதர்கள் பலியானார்கள். 2 கோடிக்கும் மேற்பட்ட சோவியத்து மக்கள் மடிந்து போனார்கள். உலகம் முழுவதும் 5 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். இவ் வளவுக்கும் அடிப்படைக் காரணம் ஜெர்மனியை யூதர் கள் சுரண்டுகிறார்கள். அவர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று அடால்ப் இட்லர் திட்டமிட்டது தான். இரண்டாம் உலகப்போரின் உச்சக்கட்டத்தில் யூதர்களைச் சுரங்கங்களில் அடைத்து வாயிற்படி வழியாக நச்சுக்காற்றை உள்ளே அனுப்பிப் பதைக்கப் பதைக்கக் கொன்றான். சமவெளியில் ஆயிரக்கணக் கானோரை ஓடவிட்டு முதுகுப்புறத்தில் சுட்டுக்கொன் றான். அப்படி 1945க்கு முன் போர்க்குற்றம் இழைத்த வர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்து நியூரம்பர்க் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்ட னை வழங்குவதை 1980 வரையில் கூடச் செய்தார்கள்.

இப்போது 2007 சூலையில் தொடங்கி 22 மாதங்களில் தாய்நாட்டு விடுதலைக்குப் போராடிய ஈழ விடுதலைப்புலிகள் 20,000 பேரையும் மகிந்த இராசபக்சேயும், கோத்தபய்யா இராசபக்சேயும் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இந்திய இராணுவத்தின் படைத் துணை, பணத்துணை, ஆயுதத்துணை கொண்டு 2 இலட்சம் ஈழத் தமிழர்களையும் கொன்றொழித்தார் கள். 2009 மே 17, 18, 19 ஆகிய மூன்று நாள்களில் மட்டும் 1,41,000 தமிழர்களைக் கொத்துக் குண்டு களை வீசி இரவு பகல் நேரங்களில் இலங்கை இராணுவம் கொன்றது. இதனைக் காட்சிப்படம் (வீடியோ) ஆக்கிய வர்கள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடு களுக்கு அனுப்பி அங்கிருந்தவர்களெல்லாம், அந்தக் கொடூரக் காட்சிகளைப் பார்த்து மனம் பதைத்தனர். அவர்களைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்று குரலெழுப்பினர். இந்த மாபெரும் குற்றங்களை இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென்பதில் ஐ.நா. அவை போதிய அக்கறை கொள்ளவில்லை. ஈழத் தமிழர்களைக் கொல்லு கின்ற அந்தக் கொடிய பணிக்கு இந்திய அரசு எல்லா வகையிலும் முந்தி முந்தி நின்று துணைசெய்தது. ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஜப்பான் முதலான வையும் இந்தியாவுடன் போட்டிப்போட்டுக் கொண்டு எல்லா உதவிகளையும் செய்தன.

இத்தகைய மிகப் பெரிய போர்க்குற்றத்தைச் செய்த மகிந்த இராசபக்சே, கோத்தப்பய்யா இராசபக்சே மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகளை தி ஹேக் இல் உள்ள உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்கிற உணர்வு இலங்கையிலிருந்து 18 கல் தொலைவில் உள்ள இந்திய நாட்டு ஆட்சியாளர் களுக்கு வரவில்லை. இது கடுங்கண்டனத்திற்கு உரிய தாகும். இச்சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் அணுகி, அவர்கள் ஈழப் போர்க்குற்றம் பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் நேர் மையான விவாதம் செய்யவேண்டுமென வற்புறுத்த வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெய லலிதா இதுபற்றி இந்தியப் பிரதமரிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதையும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழம் பற்றிய கோரிக்கையை முன்வைத்ததையும் தமிழக மக்கள் நல்லெண்ணத் தோடு ஆதரிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு யார் குரல்கொடுக்கிறார் களோ அவர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். இத்துடன் கூட, உடனடியாக இலங்கையின் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் இரண்டையும் இணைத்து ஈழத் தமிழர்களுக்குத் தன்னுரிமையுடன் கூடிய தமிழீழத்தை அமைத்திட இலங்கை அரசு முன்வர வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 2

தமிழ்வழிக் கல்வி

இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டிலும் 1835 முதல் ஆங்கில மொழி, பள்ளிகளில் கற்றுத்தரப்படு கிறது. ஆனாலும் கடந்த 200 ஆண்டுகளில் 10 விழுக் காட்டினர்க்கு மேல் ஆங்கிலம் கற்க முடியவில்லை. ஏனெனில் அது ஓர் அந்நிய மொழி, மக்களின் பயன் பாட்டுக்குக் கைகொடுக்காத மொழி, மேலும் ஆங்கில வழியில் அறிவியல் தொழில் நுட்பவியல் பாடங் களைக் கற்றவர்கள் தாங்களாகவே தங்கள் தங்கள் தாய்மொழியில் அப்பாடங்களைக் கற்பிக்கவோ, நூல் கள் எழுதவோ முடியவில்லை. ஏனெனில் அவர்கள் படிக்கும்போதே தாய்மொழி வழியில் படிக்காததினால் அவர்கள் அவரவர் தாய்மொழியில் எழுதவோ கற்பிக் கவோ இயலவில்லை. இது கண் கூடான நிலைமை ஆகும்.

இந்நிலையில் கல்வி அளிப்பது அரசின் கடன் என்கிற கொள்கையிலிருந்து பிறழ்ந்து, தனியார் கல்வி நிறுவனங்கள் பெருக இந்திய அரசும், மாநில அரசுகளும் இடங்கொடுத்துவிட்டன. இந்தியாவில் உள்ள மொழிகளில் மிகப் பழமையானது தமிழ் மொழிதான். உலகத்தில் உள்ள எந்தப் பொருளைப் பற்றி வேண்டு மானாலும் தமிழ்வழியில் கற்பிக்கவும், எழுதவும் ஆன வல்லமையைத் தமிழ்மொழி இயற்கையாகப் பெற்றிருக்கிறது. இந்த உண்மையான இருப்பு நிலை யைப் புறந்தள்ளிவிட்டுத் தனியார் கல்வி நிறுவனங் களை வளர்த்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து பொது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு ஆங்கில மொழியிலே யே படிக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையை அரசு தான் ஏற்படுத்துகிறது. எனவே தமிழ்வழியில் கற்றவர் களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமையும், தமிழ் வழியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்தவர்களுக்குக் கல்லூரிச் சேர்க்கையில் முன்னுரிமையும் அளிப்பதன் மூலம் தமிழ்வழிக் கல்விக்கு ஆக்கம் சேர்க்க வேண்டு மெனத் தமிழ்நாட்டு அரசினரை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2 (அ) சமச்சீர் கல்வி :

ஒரே வகையான பாடங்களை 10ஆம் வகுப்பு வரையிலும் படிக்கின்ற எல்லா மாணவ-மாணவி யரையும், கற்கச் செய்ய வேண்டும் என்பதே சமச்சீர் கல்வியின் தலையாய நோக்கம் ஆகும். இதை முதன்முதல் நடப்புக்கு கொண்டுவந்தவர்கள் தி.மு.க. ஆட்சியினர் என்பதனால், அதனை நம்கட்சி அரசு ஆதரிக்கக்கூடாது என்று இன்றைய ஆளுங்கட்சி நினைப்பது வருந்தத்தக்கது. இந்தப் போக்கினை உடனடியாகக் கைவிட்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 2011-2012ஆம் கல்வி யாண்டிலேயே முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் : 3

இடஒதுக்கீடு - நவம்பர் 26 துக்க நாள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 16(4)இன்படி இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கு அரசு வேலை யில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் 1978 வரையில் வட மாநிலங்களில் மாநில அளவில் இடஒதுக்கீடு இல்லை. 1994 வரையில் மத்திய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு, இடஒதுக்கீடு இல்லை. அதேபோல் விதி 15(4)இன்படி மத்திய அரசுக் கல்வி, மாநில அரசுக் கல்வியில் பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இந்த 2011-12 கல்வியாண்டு வரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் பட்டியல் வகுப்பு மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும், மத்திய அரசு வேலையிலும் மத்திய அரசுக் கல்வியிலும் ஏட்டளவில் மட்டுமே ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. ஆகையால் இவ்விரு வகுப்பினருக்கும் உள்ள தேங்கிப்போன இடங்கள் வேலையிலும் கல்வியிலும் நிரப்பப்பட வேண்டும். அத்துடன் வேலை யிலும் கல்வியிலும் இடஒதுக்கீடு என்பதற்குக் குறிப் பிட்ட காலாவதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே வேலையிலும் கல்வியிலும் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மேல்சாதி வகுப்பினர், இந்து மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வர்கள் என்கிற நான்கு வகுப்பினர்க்கும் அவரவர் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்பப் பிரித்து தருகிற தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரும் அக்டோபர் 2011க்குள் திருத்த வேண்டு மென்றும்; அவ்வாறு திருத்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு தவறினால், அரசமைப்புச் சட்டம் நிறை வேற்றப்பட்ட “நவம்பர் 26ஆம் நாள்” என்பதைத் துக்க நாளாகக் கடைபிடித்து அவரவர் இல்லங்களில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினரும், அனைத் திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையினரும் கருப்புக் கொடி ஏற்றுவார்கள் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 4

மின் தட்டுப்பாட்டை நீக்குவது

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு தொடர்ந்து இருப் பதற்கு மூலகாரணம் மக்களின் தேவைக்கேற்ற அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்னும் இலக்கைத் தமிழக அரசு கொள்ளாததே ஆகும். அரசு மின்வாரியம் மின் உற்பத்தி செய்வதையும், மின் ஆற்றலைப் பகிர்ந்தளிக்கும் பணியையும் செய்கிறது. கடந்த 44 ஆண்டுகளாக நடைபெறும். திராவிடக் கட்சி களின் ஆட்சியில் மின்வாரியம் தனக்குள்ள கடமை களைச் செப்பமாக ஆற்றவில்லை என்று நாம் கருது கிறோம்.

காங்கிரசு ஆட்சிக்காலத்தில் மின்வாரியத் தலைமைப் பொறியாளராக இருந்தவர் ஒருவர் மட்டுமே. அவர் தவறாமல் மின்வாரியப் பொறியாளராகவே இருந்தார். ஆனால் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்குவந்த பின்னர் மின்வாரியக் குழுமம் என்பதன் தலைவராக இந்திய ஆட்சிப் பணியில் உள்ளவர்களே அமர்த்தப்பட்டார்கள். அவர்கள், உற்பத்தி செய் யப்படும் மின்சாரத்தைப் பகிர்வு செய்வதை மட்டும் நிர்வாகப் பணியாக மேற்கொண்டார்கள். மின்சாரத் தை அனுப்பும் போது ஏற்படும் இழப்பு, உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் திருட்டுத்தன மாய் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதால் ஏற்படும் இழப்பு இவற்றாலும்; வேளாண்மை மற்றும் விசைத்தறி போன்றவற்றிற்கு இலவச மின்சாரம் அளிப்பதாலும், பன்னாட்டுப் பெருந்தொழில் நிறுவனங் களுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் எப்போதுமே மின்பற்றாக்குறை இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்குப் புனல் மின்திட்டம் தமிழகத்தில் கைகொடுக்கக் கூடிய சூழல் இல்லை. அனல் மின் நிலையம் ஏற்படுத்துவதையும் அரசு கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை. கதி ரொளி மூலம் மின் ஆக்கம் செய்வதைiயும் அரசு தன் கொள்கையாக ஏற்றுக் கொள்ளவில்லை. காற்றாலை மின்சாரமும் போதிய அளவில் இல்லை. எனவே, மின்துறைக்கு எல்லா மட்டங்களிலும் மின்பொறியா ளர்களையே அமர்த்துவது உடனடிப் பணியாகும். அடுத்து, ஏற்கெனவே அதிக மின் பயன்பாட்டைச் செய் பவர்கள் விரும்பி கதிரொளி மின்சாரத்தைப் பயன் படுத்த முன்வரவேண்டுமென்று அரசு வற்புறுத்த வேண்டும். அந்த ஏற்பாட்டைச் செய்ய முன்வரு வோர்க்கு அரசு பெரிய அளவில் மானியம் வழங்க வேண்டும். அத்துடன் 2011க்குப் பிறகு புதிதாகக் கட்டப்படும் கட்டங்களுக்கு அவரவர் வீட்டு மின் பயன் பாட்டுக்குக் கதிரொளி மின் ஆற்றலையே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். அவர் களுக்கும் அரசு பணமாக மானியம் வழங்க வேண் டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

காவிரி நீர்ச் சிக்கல்

காவிரி நீர்ச் சிக்கலில் காவிரித் தீர்ப்பாயம் ஏற் கெனவே வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசினர் உடனடியாக இந்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்றும்; அந்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடக அரசு முழுவதுமாக நடைமுறைப்படுத்த இந்திய அரசு அவர்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் இம்மாநாடு இந்திய அரசினரை வேண்டிக் கொள்கிறது. காவிரிச் சிக்கலில் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவை எதிரும் புதிருமாக நிலைபாடுகளை மேற்கொள் வதை அடியோடு கைவிட வேண்டும் எனக் கோருகிறது.

அ)         காவிரி ஆற்றில் பருவக்காலத்தில் கூடப் போதிய வெள்ளம் வரவில்லை. எனவே, கோடை மழையினாலும், பருவக்காற்றினாலும் கிடைக்கும் தண்ணீரை ஆங்காங்கே சேமித்து ஏரிகளில் நிரப்பு வதற்கான தடுப்பு அணைகளை 5 கி.மீ.க்கு ஓர் இடத் தில் காவிரியிலும் கொள்ளிடத்திலும் கட்டுவதற்கு உரிய திட்டத்தைத் தமிழ்நாட்டு அரசு உடனடியாகப் போர்க் கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டுமென்று இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் : 6

வேளாண்மை நிலங்களைக் கையகப்படுத்தாதீர்!

இந்திய அரசும் மாநில அரசுகளும் பொது நன்மை யைக் கருதி, ஒரு தொழிலையோ ஒரு நிறுவனத் தையோ அமைப்பதற்குத் தனியாரின் நிலங்களைக் கையகப்படுத்துகின்றனர். அப்படிக் கையகப்படுத்தும் போது எக்காரணத்தை முன்னிட்டும் இப்போது பயிரி டப்படுகிற வேளாண் நிலங்களை மத்திய அரசோ, மாநில அரசுகளோ கையகப்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

அ)         மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் தனி யார் நிலங்களைக் கையகப்படுத்தும் போது தரப்படும் இழப்பீடுகளை 1894ஆம் ஆண்டைய நிலம் கையகப் படுத்தும் சட்டப்படிக் கையகப்படுத்தி மிகக் குறைவான தொகையைக் கிரையமாக நில உடைமையாளருக்கு அரசு அளிக்கிறது. இது அடாதது. இதுபற்றி இப்போது இந்திய அரசு செய்கிற சட்டம் கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு இன்றைய சந்தை விலை அளிக்கப்பட வேண்டும் என்கிற விதியைக் கொண்டி ருக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

சட்டம் படித்தோர்க்குத் தகுதித் தேர்வு வேண்டாம்

சட்டக்கல்வி பெறுவதற்கு வரும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருந்தால் 5 ஆண்டு படிப்புத் திட்டத்திலும், அறிவியல், கலை பட்டம் பெற்றிருந்தால் 3 ஆண்டுப் படிப்புத் திட்டத்திலும் சேர்ந்து பயின்று வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றிபெற்ற சட்டம் பயின்றவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்குச் செல்வ தற்குத் தகுதித் தேர்வு என ஒன்றை எழுத வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டிருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் இது அநியாயமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குத் தடை விதிப்பது என்றும் இம்மாநாடு கருதுகிறது. எனவே தமிழ்நாட்டு அரசினர் இதனை எதிர்த்து வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும், தமிழக மாணவர் உலகம் இதனை எதிர்த்துத் தெருவுக்கு வந்து போராட வேண்டுமென்றும் இம்மாநாடு அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8

மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு கூடாது

மருத்துவக் கல்வியைக் கற்க விரும்புவோர் அந்தந்த மாநில அரசு நடத்தும் பொதுத்தேர்வு அல்லது அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு இவற்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் போதும் என்பதே இப்போதுள்ள நடைமுறையாகும்.

மாநிலங்களுக்குள்ள இந்த உரிமையைப் பறிக்கும் தன்மையில் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்திந்திய அளவிலான பொதுநுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென 2009-2010 கல்வி ஆண்டு முதல் இந்திய அரசு வற் புறுத்தி வருகிறது. இதை எதிர்த்துத் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்தப் பொதுநுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்குப் பெறப்பட்டுள்ளது. இருப்பி னும் வரப்போகும் 2012-2013 கல்வியாண்டில் மருத் துவப் படிப்பு கற்க விரும்புவோர் அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு எழுதித் தீர வேண்டும் என அண்மையில் மருத்துவ ஆணையம் தீர்மானித்து அறிவித்துள்ளது. அனைத்திந்திய அளவில் இந்தக் கேடான திட்டத்தை எதிர்த்து அனைத்து வகுப்பு மக்களும் போராட வேண்டும் என்பதோடு கூட, குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் இத்திட்டத்தை முனைப்புடன் எதிர்த்துப் போராட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குக் கண்டனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2011-12 கல்வி ஆண்டு முதல் சமஸ்கிருதப் பட்டயப் படிப்புத் தொடங்கியுள்ளதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.

தீர்மானம் : 10

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுகோள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2010-11 கல்வியாண்டில் பெரியாரியல் பட்டயப் பயிற்சிக்கான வகுப்பு நடைபெற்றது. ஆனால் அப்பயிற்சிக்குப் போதிய மாணவர்கள் வரவில்லை என்கிற சொத்தைக் காரணம் காட்டி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியாரியல் பாடம் கற்பிப்பதை அறவே நீக்கிவிட்டார்கள் என்பதை அறிந்து இம்மாநாடு அளவுகடந்த வேதனை அடை கிறது. பெரியாரியல் கல்வி எப்படியும் கற்பிக்கப்பட வேண்டும் என்கிற நல்லெண்ணம் பாரதிதாசன் பல் கலைக்கழகத்தார்க்கு இருக்குமானால், பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினரும், பேரவையினரும் துணை வேந்தரும் முன்வந்து, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் உள்ளதுபோல், தமிழ்ப் பட்ட மேற்படிப்பு வகுப்பிலோ, வரலாறு பட்ட மேற்படிப்பு வகுப்பிலோ, சமூகவியல் பட்ட மேற்படிப்பு வகுப்பிலோ கட்டாயப் பாடமாகப் பெரியாரியல் பாடப் பயிற்சியை அளிக்க முன்வருமாறு இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் : 11

முன்னாள் இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மரணத் தண்டனைச் சிறையாளிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை யை இரத்து செய்ய வேண்டுமெனவும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யுமாறும் நடுவண் அர சையும் தமிழக அரசையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

Pin It