கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும், மாணவர்-இளைஞர் அணியினரும் பங்கேற்பு, தீர்மானங்களைச் செயற்படுத்த வேண்டுகோள்!

சென்ற 07.08.2011 ஞாயிறு அன்று, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 35ஆவது ஆண்டை நிறைவு செய்தது.

அவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் - மாவட்டச் செயலாளர்கள் அனைவரும்; மாணவர்-இளைஞர் அணியினர் பலரும் திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை யை அடுத்த மீனாட்சித் திருமண மண்டபத்தில், காலை 8 மணிக்கே திரண்டனர். பல மாவட்ங்களி லிருந்தும் பேருந்து, சிற்றுந்து வழியாகப் பலரும் வந்திருந்தனர்.

குறிப்பிட்டபடி, காலை 9 மணிக்கு திருச்சி குழந்தை ஈகவரசன் தமிழர் எழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

முற்பகல் மாநாட்டுக்குக் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி. நடராசன் தலைமையேற்க வேண்டும் எனக் கவிஞர் தமிழேந்தி முன்மொழிந்தார். முதல் நிகழ்ச்சியாகக், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் களில் மூத்தவரான தோழர் து. தில்லைவனம், தம் உடல் நிலை கெட்டிருந்த நிலையிலும் மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்பாக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் உரையாற்றினர்.

பகல் 1.30 மணிக்கு மாநாட்டின் தீர்மானங்களைப் படித்துக் காட்டி, அவையினரின் ஒப்புதலைத் தோழர் தமிழேந்தி பெற்றார். 11 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. பிற்பகல் சரியாக 2 மணிக்கு, முற்பகல் நிகழ்ச்சி முடிவுற்றது. மதிய உணவுக்குப் பின்னர் 3 மணிக்கு சமர்பா இசைக்குழுவினர் இன்னிசை முழங்கினர்.

பிற்பகல் 3.30 மணிக்கு மாணவர் - இளைஞர் போராட்ட விளக்க மாநாடு, துரை. சித்தார்த்தன் தலைமையில் தொடங்கியது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து, முனைவர் பேராசிரியர் சோம. இராசேந்திரன் எழுச்சி உரையாற்றினார்.

மாணவத் தோழர்களும், தோழியர்களும் தொடர்ந்து உரையாற்றினர். இரவு 8 மணிக்கு வே.ஆனைமுத்து வின் நிறைவுரையுடன் மாநாடு முடிவுற்றது. மாநாட்டில் பங்கேற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், மற்றும் ஆதர வாளர்கள் இரவு உண வை முடித்துக் கொண்டு அவரவர் ஊருக்குத் திரும்பினர்.

திருச்சி மாநாட்டுக்குக்கான செலவுகளுக்கு அந்தந்த மாவட்டத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகையை, எல்லா மாவட்டத் தோழர்களும் தொய்வின்றித் திரட்டி வந்து அளித்தனர். சேலம், அரியலூர் மாவட்டத் தோழர்கள் தங்கள் பங்கைவிட அதிகமான தொகை யை அளித்தனர்; இரண்டொரு மாவட்டத்தினர் தங்கள் பங்குக்குக் குறைவாக நிதி அளித்தனர். மொத்தத்தில் எந்தக் குறைபாடும் இல்லாத எழுச்சி மாநாடுகளாகத் திருச்சி மாநாடுகள் அமைந்தன.

மாணவ-இளைஞர்கள் தமிழ்வழிக் கல்வித் தீர்மானத்தை நடப்புக்குக் கொண்டுவர ஏற்றதாக - சென்னையில், மாநிலப் பள்ளிக் கல்வித் துறை இயக்க கத்தின் முன்னர், விரைவில் ஓர் ஆர்ப்பாட்டப் போராட் டத்தை நடத்த வேண்டும் என முன்மொழிந்து பேசினர்.

கட்சியின் சார்பிலும், ஒடுக்கப்பட்டோர் பேரவை யின் சார்பிலும் - எல்லா வகுப்பினருக்கும் விகிதாசார வகுப்புவாரி உரிமையை அளிக்கும் தன்மையில் இந்திய அரசமைப்பச் சட்டத்தை 2011 அக்டோபருக்குள் திருத்த வேண்டும் என்றும், அப்படித் திருத்திட அரசு தவறினால் - அரசியல் அமைப்புச் சட்டம் நிறை வேற்றப்பட்ட நவம்பர் 26ஆம் நாளைத் துக்க நாளாக அநுசரித்து, மா.பெ.பொ.க. உறுப்பினர்களும் இளை ஞர்களும் மாணவர்களும் ஒடுக்கப்பட்டோர் பேரவையினரும் அவரவர் இல்லத்தில் 26.11.2011 அன்று கறுப்புக் கொடி ஏற்றிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போராட்டங்களின் நோக்கங்களை எடுத்துக்கூறும் வகையில், வரும் செப்டம்பர் 17 தொடங்கி 2011 அக்டோபர் 15 வரையில் தமிழ்நாடு முழுவதிலும் நடத்தப்படவுள்ள பெரியார் 133ஆவது பிறந்த நாள் விழாக் கூட்டங்களில் பரப்புரை செய்ய வேண்டும் எனக் கட்சியின் மாவட்ட, நகரச் செயலாளர்கள்; துணை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள்; மாணவர்-இளைஞர் அணியினர் ஆகியோரை அன்பு டன் வேண்டிக் கொள்கிறேன்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திட ஆவன செய்ய வேண்டும் என்றும்; இரண்டு நாள்களிலும் எவை யேனும் இரண்டு பெரிய ஊர்களில், வீடுதோறும் “விகிதாசார வகுப்புரிமைப் போராட்ட நிதி” கோரி, உண்டியல் குலுக்கிப் பெரிய அளவில் பொருள் திரட்ட வேண்டும் என்றும்; இப்போதே செப்டம்பர் - அக்டோபர் கூட்டங்களுக்கு ஆயத்தம் ஆகுங்கள் என்றும் தோழர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுள்ள,

வே.ஆனைமுத்து

Pin It