கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மனிதன் தவிர, பிற உயிரினங்கள் தாம் வாழும் சூழலில் இயற்கையில் கிடைப்பவற்றை அப்படியே துய்க்கின்றன. மனிதன் மட்டுமே கருவியைக் கொண்டு தன் உழைப்பைச் செலுத்தி, இயற்கையில் இருப்பவற்றைப் பயன்படுத்தித் தன் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கான உற்பத்திச் செயலில் ஈடுபடுகிறான். இந்த உற்பத்திச் செயல்தான் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான முதன்மையான வேறுபாடு.

உற்பத்திச் செயல் என்கிற நடைமுறையிலிருந்தே மனித அறிவு என்பது உருவாகி வளர்ச்சி பெற்று வந்தது. மனிதர்கள் கூட்டு உழைப்பில் ஈடுபட்ட போது, தங்களுடைய எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்தது. அந்நிலையில்தான் நீண்டகாலப்போக்கில் பேச்சு மொழி தோன்றியது. இதை எங்கெல்சு, “உழைப்பிலிருந்தும், அதனுடைய மாற்றப் போக்கிலிருந்தும் மொழியின் பிறப்பை விளக்கு வது ஒன்றே சாலவும் பொருத்தமுடையது” என்று கூறுகிறார்.

பேச்சு மொழி உருவான பின் பன்னெடுங்காலம் கழித்தே அது, எழுத்து மொழியாக வரிவடிவம் பெற்றது. சமற்கிருத மொழியில் செய்யுள் வடிவில் சொல்லப்பட்ட ஆரியர்களின் வேதங்கள் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகே எழுத்து வடிவம் பெற்றன.

உலகில் தற்போது 6,900 மொழிகள் பேசப்படுவ தாகக் கூறப்படுகிறது. இவற்றில் கால்பங்கு மொழிகள் 1000 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படு கின்றன. அய்ரோப்பாவில் 230 மொழிகளும், ஆசியாவில் 2,197 மொழிகளும் பேசப்படுகின்றன. பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை எழுத்து வடிவம் பெறாதவை.

அடுத்த நூறு ஆண்டுகளில் 3000 மொழிகள் அழியக்கூடிய ஆபத்து இருப்பதாக அய்க்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் (ருசூநுளுஊடீ - யுனெஸ்கோ) தன்னுடைய கவலையைத் தெரிவித்துள்ளது.

students strike 600தொழிற்சாலைகளில் எரிசக்தியைக் கொண்டு எந்திரங்கள் மூலம் பொருள்களை உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்தி முறை 250 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. முதலாளியம் தன் இலாபவேட்டைக்காகக் கண்மூடித்தனமாக இயற்கையின் கனிமவளங்களைச் சுரண்டியதால் பெரும் பரப்பில் காடுகள் அழிந்தன. இதனால் பல உயிரினங்கள் வேகமாக அழிந்து வரு கின்றன. இவ்வாறு அழியக்கூடிய நிலையில் உள்ள உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமும், செயல் பாடும் வலுப்பெற்று வருகின்றன.

ஆனால் இந்த அளவிற்கு மொழியின் அழிவு பற்றிய விழிப்புணர்வு இன்னும் எழுச்சி பெறவில்லை. ஒரு மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டும் அன்று; ஒவ்வொரு மொழியிலும் அதன் வரலாறு நெடுகிலும் உருவான அறிவு, ஒரு கருவூல மாகச் சேமிக்கப்பட்டுள்ளது. அம்மொழி பேசும் மக்களுக்கே உரித்தான - தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டுக் கூறுகள், கலை வடிவங்கள் உள்ளன. இயற்கையில் பல்லுயிர்ப் பன்மையைப் பாதுகாத்தல் எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதேபோல் மொழிகளின் பன் மையையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. அதனால்தான் ஆண்டு தோறும் பிப்பிரவரி 21ஆம் நாளைத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடித்து, தாய்மொழியின் முதன்மையை மக்கள் உணருமாறு செய்கிறது.

மனிதகுல வரலாற்றில் மத்திய காலத்தில் (கி.பி.500 -கி.பி.1500) நிலவுடைமை சமூக அமைப்பு நிலவியது. இந்தியாவைப் பொருத்த அளவில் 1775இல் ஆங்கிலேயர் ஆட்சி காலூன்றும் வரையில் நிலவுடைமை சமூகக் கட்டமைப்பே நீடித்தது. மத்திய கால வரலாற்றில் ஆளும் வர்க்கம் மதத்தை ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவி யாகப் பயன்படுத்தியது. அக்காலத்தில் கல்வி என்பது மதக்கல்வியாக மட்டுமே இருந்தது. மேட்டுக்குடியி னருக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது. இந்தியாவில் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மொழியே வழிபாட்டுக் குரிய மொழியாக இருந்தது. எனவே மத ஆதிக்கமும் மொழி ஆதிக்கமும் பின்னிப்பிணைந்திருந்தன. இவை அரசியல் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்க-ஆஸ்திரேலிய கண்டங்களைக் கண்டறிவ தற்குமுன் அய்ரோப்பாவில் இலத்தீன் மொழியே கிறித்துவ மதத்தின் வழிபாட்டு மொழியாக இருந்தது.

1517இல் செருமனியைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் கிறித்துவ மதத் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய் தார். இதன் விளைவாகக் கிறித்துவ மதம் கத்தோலிக்கப் பிரிவு, பிராடஸ்டென்ட் பிரிவு என்று பிளவுபட்டது. அதனால் அவரவர் தாய்மொழியில் கிறித்துவ மறை நூலான விவிலியத்தைப் படிக்கின்ற - பரப்புரை செய் கின்ற நிலை உருவானது. முதலாளியம் தன் தேவைக் காகத் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தையும், தேச-அரசுகள் உருவாக்கத்தையும் ஊக்குவித்தது. எனவே அய்ரோப்பாவில் தாய்மொழிகள் வேகமாக வளர்ச்சியடைந்தன.

இந்தியாவில் கி.பி.4ஆம் நூற்றாண்டில் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம அடிப்படையிலான இந்து மதமும் சமற்கிருத மொழி ஆதிக்கமும் வலிமையாக நிலைகொண்டன. மதச் சடங்குகள் செய்யும் உரிமை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியதாயிற்று. சமற்கிருதம் வழிபாட்டு மொழியாக மட்டுமின்றி கல்வி மொழியாகவும், மன்னர்களின் ஆட்சி மொழியாகவும் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் பெருநிலப்பரப்பை ஆட்சி செய்த முகலாயர் காலத்தில் (கி.பி.1526-1775) பாரசீகம் ஆட்சிமொழியாக இருந்த போதிலும்-பார்ப்பன ஆதிக்கமோ, சமற்கிருத ஆதிக்கமோ சற்றும் குலைய வில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1835ஆம் ஆண்டில்தான் பொதுக்கல்வி முறை கொண்டுவரப்பட்டது. அனைத்துச் சாதியினருக்கும் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் ஆங்கில வழியிலான கல்வியே தரப்பட்டது. அதனால் காலங்காலமாகக் கல்வி உரிமை பெற்றிருந்த பார்ப்பனர்களே கல்வி கற்று, பெருமளவில் அரசு வேலைகளில் அமர்ந்தனர். கல்வி கற்ற பார்ப்பன, சத்திரிய, பனியா வகுப்பினர் ஆங்கிலேயரிடமிருந்து முழு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்க மாகக் கொண்டு, 1885இல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியைத் தொடங்கினர். இதற்காக இந்து மதத்தின் பேரால் மக்களை அணிதிரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். திலகர் இதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

காந்தியார் 1915இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். 1920இல் காங்கிரசு காந்தியின் தலைமையின்கீழ் வந்தது. பல்வேறு தாய்மொழிகளைப் பேசும் மக்களை ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டுவதற்காக, காங்கிரசுக் கட்சியை மொழி வழியில் அமைத்தார். சென்னை மாகாணம் ஒரே ஆட்சி நிருவாகத்தின்கீழ் இருந்த போதிலும், தமிழ் மாகாண காங்கிரசு, தெலுங்கு மாகாண காங்கிரசு என்கிற கட்சி அமைப்புகள் நிறுவப்பட்டன. 1923இல் தமிழ் மாகாண காங்கிரசு உருவான போது பெரியார் அதன் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார். காங்கிரசுக் கட்சி, சுதந்தர இந்தியா வில் மொழிவழிப்பட்ட மாநிலங்கள் அமைக்கப்படும் என்று கூறிய போதிலும், இந்திதான் இந்தியாவின் தேசிய ஆட்சி மொழியாக இருக்கும் என்றும் கூறிவந்தது. காந்தியாரும் இந்தியைத் தீவிரமாக ஆதரித்து வந்தார்.

1937இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சர் (பிரதமர்) ஆனார். 10.8.1937 இல் இராசகோபாலாச்சாரி இந்தியை சென்னை மாகாண உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு கட்டாயப் பாடமாக வைக்கப் போவதாக அறிவித்தார். இதற்கான அரசு ஆணை 21.4.1938இல் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து பெரியாரின் தலைமையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. இந்தித் திணிப்பு என்பது மொழி ஆதிக்கம் மட்டுமன்று, வடஇந்திய மேல்சாதி இந்துக் களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இதன் நோக்கம் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்ட தால்தான் இன்றுவரை இந்தித் திணிப்பை எதிர்த்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டபோது, இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருப்பதா? ஆங்கிலமே தொடர்வதா? என்கிற விவாதம் எழுந்தது. தில்லியில் அரசியல் சட்ட அமைப்பு இல்லத் தில் (Constitution House) நடந்த காங்கிரசுக் கட்சியின் கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டது. அப்போது நடத்தப் பட்ட வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாகவும் எதிராக வும் சமமான வாக்குகள் இருந்தன. அப்போது காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்த பட்டாபி சீத்தாராமய்யா தலைவருக்கான வாக்கை இந்திக்கு ஆதரவாக அளித் தார். காங்கிரசுக் கட்சி இந்தியை ஏற்றுக்கொண்டதால் அரசமைப்புச் சட்ட அவையில் 14.9.1948 அன்று இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பகுதியில் விதி 341(1)-இல், “இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி யாக (அ) ஆட்சி மொழியாக, தேவநாகரி எழுத்து வடிவில் உள்ள இந்தி இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டது, 343 முதல் 349 முடிய உள்ள விதிகள் இந்திய ஒன்றியத்தின் பல துறைகளிலும் அலுவல் மொழி இந்தி தான் என்று கூறுகின்றன.

இந்திய நாட்டின் ஒற்றுமையைக் காக்க, பெரும் பகுதி மக்களால் பேசப்படும் இந்தியே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் கூறு வதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இதை வலியுறுத்துவதுதான் வியப்புக்கு உரியதாகும்.

சுதந்தர இந்தியாவில் மொழிவழிப்பட்ட மாநிலங் கள் அமைக்கப்படும் என்று நீண்டகாலமாகக் காங்கிரசுக் கட்சி அளித்து வந்த வாக்குறுதியைப் பிரதமர் நேரு நிறைவேற்ற மறுத்தார். அதனால் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று ஆந்திரப் பகுதியில் மாபெரும் போராட்டங்கள் நடந்தன, 1952இல் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணாநோன்பிருந்து (19.10.1952இல் 15.12.1952 வரை) இக்கோரிக்கைக்காக உயிர் துறந்தார். அதன் பிறகு ஆந்திரம் 1-10-1953இல் முதலாவது மொழிவழி மாநிலமாக அமைக்கப்பட்டது. இந்திய அளவில் 1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

அந்நிலையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1955 திசம்பர் 23 அன்று “மொழிவழி மாநிலங்கள் குறித்த என் எண்ணங்கள்” என்கிற தலைப்பிட்ட நீண்ட அறிக்கையைக் குறுநூல் வடிவில் வெளியிட்டார், அதில் அவர் கூறியிருப்பது :

“மொழிவழி மாநிலங்களால் ஏற்படும் நன்மை களைக் கூறியது போலவே, அவற்றின் தீமைகளை யும் எடுத்துரைக்க விரும்புகின்றேன். பிராந்திய மொழி யை ஆட்சிமொழியாகக் கொண்ட மொழிவழி மாநிலம் சுதந்தரமான தேசியமாக எளிதில் உருவெடுக்கும். சுதந்தர அரசு என்பதற்கும் சுதந்தரமான தேசியம் என்பதற்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவாகும். மொழிவழி மாநிலங்கள் அமைந்தால் இப்போது நாம் பெற்றுள்ள நவீன இந்தியா என்பது மறைந்து போகும், போட்டிகளும் போர்களும் கொண்ட தாக இருந்த பல அரசுகள் வரலாற்றின் மத்திய காலத்தில் இருந்தது போன்ற நிலைமை உருவாகும்.

இந்த ஆபத்தை எதிர்கொள்வது எப்படி? மொழி வழி மாநிலங்களின் ஆட்சிமொழியாக அம்மாநிலத்தின் மொழி இருக்கக்கூடாது; இந்தியே மாநிலங்களில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தில் விதி செய்ய வேண்டும், இந்த நிலை உரு வாகும் வரையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க லாம்” (அம்பேத்கர் நூல் திரட்டு (ஆங்கிலம்) முதல் தொகுதி, பக்கம் 144, 145).

மொழிவழிப்பட்ட தேசிய இனங்களின் விடு தலை உலக அளவில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் பல நூற்றாண்டு களாக தனித்த தேசிய இனங்களாக வளர்ந்த மொழிவழித் தேசிய மக்களின் அடிப்படையான மொழி உரிமையை மறுக்கும் வகையில் “இந்தியே இந்தியா” என்கிற சிறைக்குள் அடைக்க முயலும் அம்பேத்கரின் கருத்தை ஏற்க இயலாது. அடுப் பங்கரையிலும் ஆங்கிலம் பேச வேண்டும் என்கிற பெரியாரின் கருத்தைப் புறக்கணிப்பது போலவே, இந்தியனாக இருக்க வேண்டுமானால் இந்தி யைத் தாய்மொழியாகக் கருதவேண்டும் என்கிற அம்பேத்கரின் கருத்தையும் புறக்கணிப்போம்.

அரசமைப்புச் சட்டத்தில் 1965 முதல் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அதனால் 1963இல் தமிழ் நாட்டில் இந்த விதியை மாற்றக்கோரி போராட்டங்கள் எழுந்தன. அதனால் பிரதமர் நேரு, “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாகத் தொடரும்” என்று வாக் குறுதி அளித்தார், நேருவின் மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது தமிழ்நாட் டில் 1965இல் மாணவர்கள் முன்னின்று மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். தி.மு.க. இதில் முதன்மையான பங்காற்றியது. இந்தப் போராட் டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரின் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். அதன்பிறகே நேருவும் லால்பகதூர் சாஸ்திரியும் அளித்த வாக்குறுதி கள் சட்ட வடிவம் பெற்றன.

தமிழ்நாட்டில் நடந்தது போல் இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட் டங்கள் நடக்காதது ஏன்? தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து காலப்போக்கில் கிளைத்தவை என்றாலும், ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தால் சமற்கிருத மொழியுடன் பெருமளவில் கலப்புக் குள்ளாயின. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் சமற்கிருத ஆதிக் கத்தை எதிர்த்துத், தமிழின் தனித்து இயங்க வல்ல ஆற்றலைக் காத்தன. மேலும் தமிழர்க்கு திருவள்ளுவர் காலம் தொடங்கி, சித்தர்கள், இராமலிங்க அடிகள் என நெடிய ஆரிய எதிர்ப்பு மரபு உண்டு. நீதிக்கட்சியின் ஆட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற வலிமையான “பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்” போன்ற இயக்கம் பிற மாநிலங்களில் இல்லை.

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற சட்டம் இயற்றப்பட்ட போதிலும் நடுவண் அரசில் ஆட்சியில் அமர்ந்த காங்கிரசு, பா.ச.க. உள்ளிட்ட எல்லாக் கட்சி களும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன.

அரசமைப்புச் சட்டத்தில் இந்தி அலுவல் மொழி என்று மட்டுமே எழுதப்பட்டுள்ள போதிலும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி - பொது மொழி என்கிற கருத்து ஆரியப் பார்ப்பன ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சூழ்ச்சி களில் ஒன்று, பிறமொழிகளைப் பேசுவோர்களையும் இந்தி மொழியைப் பேசுவோராகப் பொய்யாகக் கணக்குக் காட்டுவதாகும். அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் முதலில் 15 மொழிகள் இடம்பெற்றிருந்தன. 1991ஆம் ஆண்டில் கொங்கனி, நேப்பாளி, மணிப்பூரி ஆகிய மூன்று மொழிகளும் 2001ஆம் ஆண்டில் சந்தாலி, டோக்கிரி, போடோ, மைத்திலி ஆகிய நான்கு மொழிகளும் சேர்க்கப்பட்டன. தற்போது இப்பட்டியலில் 22 மொழிகள் உள்ளன.

முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872இல் எடுக்கப்பட்டது. அதன்பின் 1881 முதல் ஒவ்வொரு பத்தாவது ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தான் முதன்முதலில் நாட்டிலுள்ள மொழிகள் கணக்கு எடுப்பையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது 1652 தாய்மொழிகள் பேசப்படுவதாகக் கணக்கிடப் பட்டது. அதன்பின், பத்தாயிரம் பேருக்கு மேற்பட்டவர் களால் பேசப்படும் மொழிகளை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு முடிவு செய்தது.

இதன்படி 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின், மொழிகள் - அவற்றைப் பேசுவோர் பற்றிய விவரம் ஏழு ஆண்டுகள் கழித்து அண்மையில்தான் வெளியிடப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளைப் பேசுவோர் விவரம் பகுதி-அ என்றும், இதில் இடம்பெறாத 99 மொழிகளைப் பேசுவோர் விவரம் பகுதி-ஆ என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 121 (22+99) மொழிகள் உள்ளன. இவற்றின் உட்பிரிவு மொழிகள் உட்பட 270 தாய் மொழிகள் உள்ளன. தமிழ் என்கிற தலைப்பின்கீழ் இருளம், கைக்கடை, கொரவ, எருக்கலா ஆகிய தாய்மொழிகளைப் பேசுவோர் வைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு மொழியின் கீழும் அய்ந்தாறு மொழிகளுக்கு மேல் வைக்கப்படவில்லை. ஆனால் இந்தி என்கிற தலைப்பின்கீழ் 61 மொழிகள் அடைக்கப்பட்டுள்ளன. கட்டுரையின் இடநெருக்கடி கருதி இந்தி மொழிக்கு மட்டுமே உட்பிரிவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 121.01 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் இந்தி மொழி பேசுவோர், 52.83 கோடிப் பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 43.65 விழுக்காட்டினர். இதன் மூலம் இந்தியே அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 32.22 கோடிப் பேர் - 26.62 விழுக்காட்டினர் மட்டுமே ஆகும்.

இந்தி பேசுவோர்என்கிற பட்டியலில் போஜ்புரி 5.05 கோடி, இராஜஸ்தானி 2.58 கோடி, சத்தீஸ்கரி 1.62 கோடி, மகதி 1.27 கோடி, ஹர்யான் 98 இலட்சம், மார்வாரி 78 இலட்சம் பேர்களும் சேர்த்திருப்பது, திட்டமிட்ட இந்தி ஆதிக்க சூழ்ச்சியாகும். போஜ்புரி மொழி பேசும் 5 கோடி மக்கள் தங்கள் மொழியைத் தனியான மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். போஜ்புரி மொழியில் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. போஜ்புரி மொழிக்குத் தனியான இலக்கணம், இலக்கியம் இருக்கிறது. உலகில் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட வை. ஆனால் இந்தியாவில் இந்தி மொழியின் ஆதிக்கத் திற்காகப் பல இலட்சம் பேர்கள் பேசும் தாய்மொழி களை அழித்திடப் பார்ப்பன ஆளும் வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை களையும் இனி கண்டுபிடிக்கப்படப் போகும் அறிவியல் தொழில்நுட்பங்களையும் தன்னுள் கொண்டி ருப்பதாகக் கூறப்படும் சமற்கிருத மொழியைப் பேசுவதாக 24,821 பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினராக உள்ள பார்ப்பனர்கள் தங்கள் தாய்மொழியாக சமற்கிருதத்தைக் கூறியிருந்தால் அதைப் பேசுவோர் 6 கோடிப் பேர் என்று கணக்கில் வந்திருக்கும். தாய்மொழி என்பது குழந்தையின் தாய் பேசுகிற மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சமற்கிருதம் உண் மையில் எவருக்கும் தாய்மொழியாக இல்லை. இந்து மத ஆதிக்கத்தை-ஆரியப் பண்பாட்டை நிலைநிறுத்து வதற்காகவே சமற்கிருத மொழி இந்திய ஆளும் வர்க்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்படுகிறது.

சமற்கிருதம் இந்துமத வழிபாட்டு மொழியாக நீடிப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அரணாக நிற்கிறது. பள்ளி முதல் கல்லூரி வரை சமற்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும் என்று மோடி அரசு வலியுறுத்துகிறது. அவரவர் தாய்மொழியில் கோயில்களில் இந்துக் கடவுள்களை வழிபடும் உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பார்ப்பனிய-சமற்கிருத ஆதிக்கத்தை முறிடியக்க முடியும். கிறித்துவ தேவாலயங்களில் விவிலியம் அவரவர் தாய்மொழியில் படிக்கப்படுவதுபோல், மசூதி களில் குரானும் தத்தம் தாய்மொழியில் படிக்கும் நிலை ஏற்பட வேண்டும்.  மதத்துக்குரிய வழிபாட்டு மொழி என்கிற பெயரால், தாய்மொழி உரிமைப் பறிப்பு இருத்தல் கூடாது.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பதிவு செய்திருப் பவர் எண்ணிக்கை 2,59,678 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலோ-இந்தியர்;  மற்றவர்கள் இந்திய மேட்டுக்குடியினருள் வீட்டில் ஆங்கிலம் பேசும் சிறுபகுதியினர்.

ஆனால் இந்திய அளவில் பள்ளிக்கல்வியில் 50 விழுக்காட்டிற்கு மேலும் உயர்கல்வியில் 80 விழுக் காடும், தொழிற்கல்வியில் 100 விழுக்காடும் ஆங்கில வழிக்கல்வி இருக்கிறது. இத்தகைய நிலை கல்வியில், பிற துறைகளில் தாய்மொழிகளின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டையாக இது உள்ளது. பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிய நிறுவனங்களின் தொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கான இளைஞர்களை உருவாக்கு வதற்காகவே ஆங்கில வழிக் கல்வி முறை உருவாக் கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்தியே இந்தியா வின் ஆட்சி மொழி; ஆங்கிலம் இணை ஆட்சி மொழி என்கிற நிலையை மாற்ற வேண்டும். சமற்கிருதம் தவிர்த்த 21 மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழி கள் என்று ஆக்கப்பட வேண்டும். அந்நிலையில் மொழிவழி மாநிலங்களில் உள்ள நடுவண் அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், முதலான வற்றில் அம்மாநில மொழியே அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும். இந்நிலையை எய்தும் போது, இந்தி படித்தால் இந்திய அளவில் வேலை கிடைக்கும் என்கின்ற எண்ணம் மறையும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உண்மையான கூட்டாட்சி கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும். பாதுகாப்பு, அயலுறவு, நாணயம் அச்சிடல் ஆகிய அதிகாரங்கள் தவிர்த்து, மற்ற அதிகாரங்கள் அனைத் தும் மொழிவழி மாநிலங்களிடமே இருக்க வேண்டும்.

இந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்!

மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம்!