ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கூட்டம்

26.11.1943 தேதி பகல் 2 மணிக்குச் சேலம் தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமையில் கூடிற்று. சென்னை முதல் தமிழ்நாட்டின் பல பாகங் களிலிருந்தும் அங்கத்தினர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் துவக்கப்பட்டவுடன், பெரியார் அவர்கள் தற் கால நிலைமையைப் பற்றியும், ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைத் திட்டத்தைப் பற்றியும் சுமார் அரை மணிநேரம் பேசினார். அவர் பேசினதை ஆதரித்தும் சில புதிய விஷயங்களை எடுத்துக்காட்டியும் தோழர் கள் ராவ் பகதூர் எ. துரைசாமி முதலியார், குமார ராஜா சர். முத்தைய செட்டியார், டி. சண்முகம் பிள்ளை, டாக்டர் எ. கிருஷ்ணசாமி, சி.என். அண்ணாதுரை, சி.டி. நாயகம், வாணியம்பாடி வி.எஸ். விசுவநாதம், டி.பி. வேதாசலம், ஜெகதீச செட்டியார், சி.ஜி. நெட்டோ முதலிய பலர் பேசினார்கள்.

அதன் பிறகு, பெரியார் அடியிற்கண்ட தீர்மானங் களைப் பிரேரேபித்தார்.

1.    “திராவிட நாடு, இந்தியா, மத்திய அரசாங்கம் என்று சொல்லப்படும் கவர்னர் ஜெனரல் ஆட்சியின் சம்பந்தமில்லாமல் நேரே அரசர் பெருமான் பார்லி மெண்டுக்குட்பட்ட தனி நாட்டு ஆட்சியாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டியது என்பது ஜஸ்டிஸ் கட்சிக்கு அங்கத்தினர்களாய்ச் சேருகிறவர்களுக்கு ஒரு கொள் கையாக அங்கத்தினர்களைச் சேர்க்கும் உறுதி மொழிச் சீட்டில் (Pledge) சேர்க்கப்பட வேண்டும்.

2.    ஜஸ்டிஸ் கட்சிக்கு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (S.I.L.F) என்றிருக்கும் பெயரைத் தென்னிந்தியத் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் South Indian Dravidan Federation என்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.

3.    நம் மாகாணத்தில் சர்க்கார் லைசென்ஸ் பெற்று நடத்தப்படும் உணவுச் சாலை முதலியவைகளில் திராவிடர்களுக்குச் சம இடமில்லாத இழிவை நீக்கச் சர்க்கார் லைசென்சு நிபந்தனைகளை மாற்ற வேண்டுமென்று பல தடவை சர்க்காரை வேண்டிக் கொண்டும், அது பயனற்றுப் போய்விட்டதால், அது விஷயமாய்த் தமிழ்நாட்டில் தீவிரக் கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமான காரியமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

4.    இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்கப் போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

மேற்படி மாநாட்டைச் சேலத்தில் நடத்தத் திருவாரூர் மாநாட்டில் தீர்மானித்தபடி ஜனவரி வாக்கில் சேலத்தில் நடத்திக் கொடுக்க ஒப்புக்கொண்டு அழைத்த தோழர் கள் முனிசிபல் சேர்மன் ரத்தினம் பிள்ளை, சி.ஜி. நெட்டோ, கெ. ஜெகதீசச் செட்டியார் ஆகியவர்களுடைய அழைப்பை மகிழ்ச்சியோடு இக்கமிட்டி ஒப்புக்கொள் கிறது.

தோழர்கள், டாக்டர் கிருஷ்ணசாமி, சி.என். அண்ணா துரை, ஜெகதீசச் செட்டியார், எஸ்.ஆர். சுப்ரமணியம், சி.டி. நாயகம் முதலியவர்கள் இத்தீர்மானங்களைப் பற்றிப் பேசிய பின்பு ஏகமனதாய் நிறைவேறின.

5.    பின்னால் ராவ்பகதூர், எ. துரைசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் மீது “S.I.L.F.க்கு மீ.100 ரூ. கவுரவ அளிப்புக்குள்ளாகவோ அல்லது முழு நேரமும் வேலை செய்ய சௌகரியம் இருக் கக்கூடிய ஒரு கவுரவப் பணியாளராகவோ பார்த்து ஒரு காரியதரிசியைத் தலைவர் நியமித்துக் கொள்ள வேண்டியது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.”

6.    அடுத்தபடியாக, “ஒவ்வொரு வருஷமும் இரண்டு ரீஜினல் ஆர்க்கனைசர்கள் தெரிந்தெடுக்க வேண்டு மென்றும், இதற்காக இம்மாகாணத்தை இரு பகுதி களாகப் பிரிக்க வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தப்பட வேண்டும் என்று கமிட்டி சிபாரிசு செய்கிறது.

     I.    தெற்கு ஜில்லாக்களும், மேற்கு ஜில்லாக்களும் சேர்ந்து ஒரு பகுதி.

     II.    கொடை ஜில்லாக்களும், கிழக்குக்கரை ஜில்லாக் களும் சேர்ந்து மற்றொரு பகுதி. ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு ரீஜினல் ஆர்கனைசரின் கீழ் இருந்து பிரச்சாரம், அமைப்பு ஆகியவை நடத்தப்பட்டு வரும்.

ஒரு பகுதிக்கு, மாநாட்டில் தெரிந்தெடுக்கப்படுகிற தலைவர் ஒரு ரீஜினல் ஆர்கனைசாராக இருப்பார். மற்றொரு பகுதிக்கு வேறொரு ரீஜினல் ஆர்கனைசர் தெரிந்தெடுக்கப்படுவார்.

கட்சிக் கொள்கை சம்மந்தமான எல்லாக் காரியங் களிலும் ரீஜினல் ஆர்கனைசர்கள் கட்சித் தலைவரைக் கலந்து அவரது சம்மதத்தின் மீதே நடந்து கொள் வார்கள்.

நிர்வாகக் கமிட்டி, மூன்று மாதத்திற்கொருமுறை கூடும்.

- (“குடிஅரசு”, 4.12.1943, பக்கம் 5)

Pin It