பெரியார் அவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பின்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. ஆண் களும், கைக்குழந்தைகளுடன் பெண்களும் தொடர்ச்சி யாக மறியல் செய்து சிறை சென்றனர்.
இங்கே சிறையில் அடைத்தால், தொண்டர்கள் அவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வருவார்கள் என்பதால், பெரியாரை, பெல்லாரி சிறையில் அடைத் தார் இராசாசி.
பெரியார் சிறை செல்லும் முன்னே நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள் பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். அதே திசம்பர் மாதம் இறுதியில் 29, 30, 31 நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது.
கி.ஆ.பெ. விசுவநாதம், ஏ.டி. பன்னீர்செல்வம் இருவரும் பெல்லாரி சென்று பெரியாரைச் சிறையில் சந்தித்து, கட்சியின் எதிர்காலம் குறித்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்வது குறித்தும் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநில மாநாட்டில் அவருடைய தலைமை உரையைப் படிப்பதற்காக எழுதி வாங்கி வந்தனர். மாநாட்டில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு பெரியாரின் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் முதல் பாதியையும், இரண்டாவது பாதியை கி.ஆ.பெ. விசுவநாதமும் உணர்ச்சி பொங்கப் படித்தனர்.
அவ் உரை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாகும். அவ்வுரையின் முக்கியப் பகுதிகளைக் கீழே காணலாம்.
“தேசியம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின்தள்ளப்பட்டு, தாழ்த்தப்பட்டு, தீண்டப்படாதவராகவும், கீழ்ச் சாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்)களாகவும் இழிவுபடுத்திவைக்கப்பட்டுமுள்ள 100க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம்பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடு தலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்த தற்கு உங்களுக்கு என் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்
தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபன மானது, இன்றைக்கு 22 வருடங் களுக்குமுன், அதாவது 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆந் தேதியன்று தோற்றுவிக்கப்பட்டதாகும். இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமும், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று, உயர்நிலையடைந்து, இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேரவாவுமுடைய சான்றோர்களாயிருந்ததோடுகூட, சிறிதும் தந்நலமற்ற பெருந்தியாகிகள் என்பதையும், அவர்கள் இவ்வியக்க வளர்ச்சிக்கு எவ்வளவு பாடு பட்டார்கள் என்பதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
இந்த ஸ்தாபனத்தை அவர்கள் ஏற்படுத்திய காலை, நாம் எந்நிலையில் இருந்தோம் என்பதும், இத்தகைய ஒரு இயக்கத்திற்கு அக்காலத்தில் எவ்வளவு அவசியம் இருந்தது என்பதும், இன்றுள்ள நம் வாலிபர்களுக்கோ, அன்றிப் பள்ளிப்படிப்பை விட்டவுடன் தேசபக்தியில் மூழ்கி, தேசிய வீரர்களெனப் பட்டம் பெற்ற தேசாபி மானிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலருக்கோ சரியாகத் தெரியாதென்றே சொல்லுவேன். ஏனெனில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றைக்கு 22 ஆண்டுகள் கழிந்துவிட்டபடியால், நமது அன்றைய நிலைமையைப் பலர் மறந்திருக்கக்கூடும்.
சர். பி. தியாகராயரும், டாக்டர் நாயர் பெருமானும் எவ்வளவு இன்னல்களுக்கிடையிலும், எதிர்ப்புகளுக் கிடையிலும் அக்காலத்தில் இவ்வியக்கத்தை ஆரம்பித்து, அதை வளர்த்து நமக்கு அழியாத பெரும் பொக்கிஷமாக வைத்து விட்டுப் போனார்கள் என்பதை உணர்ந்தவர்கள் அப்பெரியோர்களுக்கு என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த இயக்கத்தை ஒழிப்பதற்கு இதன் எதிரிகள் அன்று தொடங்கி இன்றளவும் கையாண்டுவரும் சூழ்ச்சிகளுக்கும், கொடுத்துவரும் இடையூறுகளுக்கும் ஓர் அளவுண்டோ?
உரிமை வேண்டுவது வகுப்புவாதமா?
இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலமுதற் கொண்டு இன்றுவரை நம் எதிரிகள் இதை “வகுப்புவாத இயக்கமென்று” சொல்லி இதை நசுக்க முயற்சிகள் பல செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் 100க்கு 97 பெயரினராக உள்ள மக்கள் ஒன்றுபட்டுத் தங்களுக்கு உரிய சமுதாய உரிமைகளைப் பெற முயற்சிப்பது வகுப்புவாதமானால் 100க்கு 3 பெயராகவுள்ள ஒரு சிறு கூட்டத்தினர் நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதும், அந்நிலை என்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு வருவதும் என்ன வாதமாகும்?
நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமூகத்தை விற்றாவது தான் வாழ்வது குற்றமன்று என்று கருதி எதிரிகட்குக் கையாளாகி, அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்துவிட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்புக்கோ, சிறுபான்மை சாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமோ? அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த சாதியினராதலால் தனிச்சலுகை தங்களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா? சூழ்ச்சியிலும், சுயநலத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறு-மிகச் சிறு கூட்டத்தாரால், அதுவும் அவர்கள் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட பெருஞ் சமூகம் விழிப்படைவது வகுப்புவாதமானால், அந்த வகுப்பு வாதம் நம் உரிமைகளை நாம் பெறும்வரை நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்பதே நமது ஜீவாதார கோரிக்கையாக இருக்க வேண்டுமென்று கூற ஆசைப்படுகின்றேன்.
இந்நாட்டில், இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், அல்லது தென்னிந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டாலும் சரித்திர காலந்தொட்டே வகுப்புவாதம், வகுப்புவாதப் போர் இல்லாத காலம் எப்போதாவது இருந்ததா என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா?
ஒரு சிலரடங்கிய ஒரு சிறு கூட்டத்தினர் தங்கள் நாகரிகம், கலைகள், ஆசார அனுஷ்டானம், பழக்க வழக்கங்கள் இவைகளில் 100க்கு 97 பேர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும், தம்மை ஒப்பாரும், மிக்காரும் இல்லையென்றும், பூதேவரென்றும் ஆதலால் தங்களுக்குத் தனி உரிமை வேண்டுமென்றும், தாங்கள் மெய் வருந்தி உழைக்கக் கூடாதவர்கள் என்றும் சொல்லிக் கொண்டும் மற்றவர்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து “வகுப்புவாதிகள்” என்று சொல்வது யோக்கியமாகுமா என்றும், அவர்கள் சொல்வது சரியென மற்றவர்கள் ஒப்புக்கொள்வது வீரமாகுமா என்றும் கேட்கின்றேன்.
நம்மை வகுப்புவாதிகள் என்று அழைக்கும் நம் எதிரிகள் நாம் அரசியல் சுதந்தரங்களிலும், அரசாங்கப் பதவிகளிலுந்தான் மிகுதியாக வகுப்புவாத உணர்ச்சி காட்டி, நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் விளைவிக்கின்றோம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். 100க்கு 97 பேர்களாக உள்ள நாம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நம் பங்கு உரிமைகளைப் பெற விரும்புகின்றோமா? அன்றி அளவுக்கு மீறிய உரிமை களை அநியாயமாக அனுபவிக்க விரும்புகின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும்.
நமது நிலை
இவ்வியக்க ஆரம்பகாலத்தில் நம் நிலை எப்படி இருந்தது?
ஹிட்லர் ஜெர்மன் யூதர்களிடம் கொண்டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்னென்னவென்று அவர் சொல்லுகின்றாரோ-அவைகளும் அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நமது பெருந்தலை வர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங் களாயிருந்தன.
கல்வி
1916-வது ஆண்டில், நம்இயக்கம் ஆரம்பிக்கப்படுமுன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலை யிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப்போம்.
கல்வி இலாகா நிர்வாகத்தில் மொத்தம் 518 உத்தியோகங்களில் 400 உத்தியோகங்கள் பார்ப்பனர் கள் கையிலிருந்தன. 73 உத்தியோகங்களை ஆங்கிலோ இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர் இம்மூன்று வகுப்பினரும், 28 உத்தியோகங்களை முஸ்லீம்களும் வகித்து வந்தனர். வகுப்புவாதம் பேசுவதாகச் சொல்லப்படும் நமக்கு, அதாவது “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” என்பவர்களுக்கு 18 உத்யோகங்களே இருந்தன. 400 எங்கே? 18 எங்கே?
ஜெர்மனியில் அப்பொழுதிருந்த யூதர்கள் நம் நாட்டுச் சிறு கூட்டத்தாரைப்போல இவ்வளவு அதிகப்படியான உத்தியோகங்களைக் கைப்பற்றியிருந்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கின்றது.
நம் இயக்கம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில் 100க்கு 7 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அந்த எழுதப் படிக்கத் தெரிந்த மக்களில் 100க்கு 90 பேருக்கு மேல் பார்ப்பனர்களே. படித்த இந்தியரில் “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” தொகை 100க்கு 5-க்கு மேல் இருந்திருக்க முடியாது. நூற்றுக்குத் தொண்ணூறு எங்கே? ஐந்தெங்கே! ஆனால் கல்வித் திறமையிலோ பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு இளைக்காமலே இருந்து வந்திருக்கின்றார்கள்.
1915-ம் வருடத்திய சென்னைப் பல்கலைக்கழக அறிக்கைப்படி, 1914-ம் ஆண்டில் எப்.ஏ. (F.A.) பரீட் சைக்கு அனுப்பப்பட்ட 1900 பார்ப்பனப் பிள்ளைகளில் 775 பேர் தேறியிருந்தால், 340 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 240 பேர் தேறியிருக்கின்றார்கள். பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பரீட்சை கொடுத்த 469 பார்ப்பனப் பிள்ளைகளில் 210 பேர் தேறியிருந்தால், 133 பார்ப்பனரல்லாத மாணவர்களில் 60 பேர் தேறியிருக் கின்றனர். பி.ஏ. சையன்ஸ் பரீட்சையில் 442 பார்ப்பனப் பிள்ளைகளில் 159 பேர் தேறியிருந்தால், பார்ப்பனரல் லாத பிள்ளைகளில் 107க்கு 49 பேர்கள் தேறியிருக் கிறார்கள். பி.ஏ. (புதிது) முதல் பகுதியில் 430க்கு 270 பார்ப்பனப் பிள்ளைகளும் 108க்கு 64 நம் சமூகப் பிள்ளைகளும் தேறியிருக்கின்றனர். இரண்டாவது பகுதியில் 426 பார்ப்பனப் பிள்ளைகளுக்கு 203 பேரும், 117 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 63 பேரும் தேறியிருக்கிறார்கள். எம்.ஏ. (M.A.) பரீட்சையில் பரீட்சைக்கு அனுப்பப்பட்ட 157 பார்ப்பனப் பிள்ளைகளுள் 67 பேரும் பார்ப்பனரல்லாதவர்களில் 20 மாணவர் களுக்கு 9 பேரும் தேறியிருக்கின்றனர். பி.ஏ., எல்.டி., (B.A., L.T.)) என்ற உபாத்திமைத் தொழிற் பரீட்சைக்குச் சென்ற 104 பார்ப்பனப் பிள்ளைகளில் 95 பேர் தேறியிருந்தால் நமது சமூக மாணவர்கள் 11 பேரில் 10 பேர் தேறியிருக்கின்றார்கள்.
பரீட்சைத்தாள் திருத்துபவர்கள் எல்லோரும் அநேகமாகப் பார்ப்பனர்களாகவே இருந்தும்- கல்வி யிலாகா அவர்கள் கையிலிருந்தும் நம் மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு மேலாகவே அநேக பரீட்சைகளில் தேறியிருப்பது கவனிக்கத் தக்கது. கூடவே இன்னொன்றும் கவனியுங்கள். பார்ப்பனப் பிள்ளைகள் 100 பேர் ஒரு பரீட்சைக்கு அனுப்பப்பட்டால், பார்ப்பனரல் லாத பிள்ளைகள் அதில் 4-இல் ஒரு பாகத்திற்குக் குறைவாகவும் சில பரீட்சைகளுக்கு 100க்கு 10 விகிதத் துக்குக்கூட குறைவாகவுமேதான் அனுப்பப்பட்டிருக் கின்றார்கள்.
இவற்றிற்குக் காரணம் யாதாக இருந்திருக்கலாம்?
பரீட்சை கொடுக்கும் திறமையில் சரி சமமான, ஏன், மேலான சக்தி உடையவர்களாக இருந்தும் பரீட்சைக்கு அனுப்பப்படும் கணக்கு விகிதத்தில் மாத்திரம் நம் மாணவர்கள் இவ்வளவு குறைந்திருப்பதற்குக் காரணம், கல்வி இலாகாவை அவர்கள் கைப்பற்றிவிட்ட ஒரு காரணம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கக்கூடும்? இவ்வொரு காரணத்தாலேயே உத்தியோகங்களிலும் நம்மவர்கள் சரியான விகிதம் பெற முடியாமல் செய்யப் பட்டுப் போய்விட்டது என்று கூசாமல் சொல்லலாம்.
உத்தியோகம்
1916ஆம் ஆண்டில் புரோவின்ஷியல் சிவில் சர்வீஸ் என்னும் உயர்தர நிர்வாக உத்தியோகத்தில் ஜனத்தொகையில் 100க்கு 3 பேர் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனர்களில் 100 உத்தியோகஸ்தர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்பதவியிலிருந்த பார்ப்பனரல்லாதவர்கள் 29 பேரேயாகும். நீதி இலாகா வில் 190 பார்ப்பனர்கள் பதவி வகித்திருந்தார்கள். பார்ப்பனரல்லாதவர்களில் 35 பேர்தான் பதவி வகித்திருந்தார்கள்.
மற்றும் கொழுத்த சம்பளங்களும், ஏகபோக அதிகாரங்களுமிருந்த எல்லா உத்தியோகங்களிலும் இவ்விரண்டு வகுப்பாருக்கும் மேல்காட்டிய விகிதாசார முறையிலோ, அன்றி, இதைவிட மோசமான விகிதாசார முறையிலோ தான் உத்தியோகங்கள் இருந்து வந்திருக்கின்றன.
மேலும், “உத்தியோகத்தில் கெட்டிக்காரர் பார்ப்பனர்; வக்கீல்களிலே கெட்டிக்காரர் பார்ப்பனர்; ஆங்கில அறிவிலே சிறந்தவர்கள் பார்ப்பனர்; தமிழில் பாண்டித் தியம் உடையவர்கள் பார்ப்பனர்; அறிவு நூல் தேர்ச்சி மிக்கவர்கள் பார்ப்பனர்; ஆராய்ச்சியில் வல்லவர்கள் பார்ப்பனர்” என்று கெட்டிக்காரப் பட்டமெல்லாம் பார்ப்பனர்களுக்கே ஒழிய, மற்றவர்களுக்குக் கிடையாது என்ற நிலை இருந்து வந்தது.
பொருளாதாரம்
பாடுபடாமல் பொருள் திரட்டுவதில் பார்ப்பனர்களுக்கே சகல வசதியும் இருந்து வந்தது. பார்ப்பனரல்லாதாரோ நெற்றி வேர்வை நிலத்திற் சொட்ட பாடுபட்டு ஈட்டும் பொருளையும் பல வழிகளிலும் பார்ப்பனர்களுக்கே கொடுக்க வேண்டியவர்களாயிருந்து வந்தார்கள்.
சமுதாயத் துறை
சமுதாயத் துறையிலோ, மிக்க இழிந்த பார்ப்பனன் கூட, உயர்ந்த சாதியான் ஆகவும்; மிகச்சிறந்த, அறிவுள்ள, ஒழுக்கம் பூண்ட செல்வந்தனான பார்ப்பனரல்லாதான் கீழ்ச் சாதியானாகவும் மதிக்கப்படுவதாக இருந்தது. ஆகவே கல்வி, பதவி, நிபுணத்வம், செல்வம், சமூக உயர்வு, இதுபோன்ற நன்மைகள் எல்லாம் ஒரு சிறு சாதிக்கும், அதற்கு மாறுபட்டதெல்லாம் நமக்கும், என்ற நிலையிருந்தால் இது, ஹிட்லர், ஜெர்மன் யூதர்களைப் பற்றிக் கூறும் குறைகளுக்கு அதிகமாக இருந்தனவா, அன்றிக் குறைவாக இருந்தனவா? என்பதை ஆலோசித் துப் பாருங்கள்.
துவேஷம் உண்டா?
நம் நிலைமை இப்படியிருந்தும், நாம் யாதேனும் ஒரு தனிமனிதன் மீதோ, அன்றி வகுப்பு மீதோ வெறுப்புக் கொண்டிருக்கின்றோமா? எங்களது வீழ்ச்சிக்குக் காரண மான தடைகளை நீக்கி, தளைகளை அறுத்து மேல் நிலை அடைய வேண்டுமென்றும், மக்கள் அனைவரும் சமமாகவும், சகல உரிமைகளையும் அனுபவிக்க சம சந்தர்ப்பம் உடையவர்களாகவும் இருக்க வேண்டு மென்றுந் தானே விரும்புகின்றோம்? இது துவேஷமா?
கொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்கு துவேஷிகளாகி விடுவோமா? மூட்டைப்பூச்சி பிடிக்காமலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதால் நாம் மூட்டைப்பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத்திற்கும் துரோகத்திற்கும் நாம் ஆளாகக் கூடாது என்று பயந்து பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியிலே எடுத்துச் சொல்வதற்கும் அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக ஆகிவிட்டோம்.
இன்றுதான் என்ன?
இப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவித்தும் நம்மில் தலைசிறந்த அறிவாளிகளும், செல்வந்தர்களும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களும், கடந்த 22 வருடங்களாக, இந்த ஸ்தாபனத்திற்காக எவ்வளவோ பாடுபட்டு வந்திருந்தும் நமது தற்போதைய நிலைமை தான் என்னவென்று பாருங்கள்.
அநேக விஷயங்களில் முன்நிலை சிறிதும் மாறுதல் அடையாமல் பழையபடி தானேயிருந்து வருகிறது? இந்த 22 வருடங்களில் நமது நிலைமையை உயர்த்துவதற் குச் செய்துவந்த வெகு சிறு காரியங்களும் இப்பொழுது நம் எதிரிகளால் அழிக்கப்படுகின்றன. நாம் என்றென்றும் தலைதூக்க முடியாவண்ணம் எவ்வித முன்னேற்றத் திற்கும் முயற்சிகூட செய்ய முடியாதபடி நம் எதிரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நம் இயக்கத்திற்கும் நம் நன்மைக்கும் உண்மையாக உழைத்துவந்த பெரியோர் களில் ஏதோ இரண்டொருவர் தவிர மற்றவர்களெல்லாம் தங்கள் செல்வத்தை இழந்தார்கள்; தங்கள் வருவாயைக் கெடுத்துக் கொண்டார்கள்; குடும்பப் பெருமையை இழந்தார்கள்; கெட்ட பெயரும் சுமத்தப்பட்டார்கள். மற்றும் பல வழிகளிலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். உண்மை இப்படியிருந்தும், நம் இயக்கம், தனிப்பட்ட சிலருடைய சுயநல இயக்கம் என்றும், பணம், உத்தியோகம், இவைகள் தேடும் இயக்கம் என்றும், அழிவு வேலை செய்யும் இயக்கம் என்றும், தேசத் துரோகமும், வகுப்புத் துவேஷமும் கொண்ட இயக்கம் என்றும், ஒரு சுயநலக் கூட்டத்தாரால் கூறப்படுவது விந்தையினும் விந்தையே!
தோழர்களே!
இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி அரசர் அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி அரசர் அவர்கள் தன் முயற்சியையும் செல் வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி னார்கள் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக் கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரேதான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பொப்பிலி அரசர் அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்றுதல், தியாகம் முதலிய அருங்குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளை யை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட, பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம் மக்களுக்கு இடை விடாத் தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற என தருமைத் தோழர்களான, சௌந்திரபாண்டியர் அவர் களுக்கும் விசுவநாதம் அவர்களுக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
(தொடரும்)