கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இன்று அரசியலும், பொது வாழ்க்கையும், நேர் மையும் ஒழுக்கமும் இன்றி யாவரும் வெறுத்து ஒதுக்கும் நிலைக்குக் கேடுற்ற நிலையை அடைந்துள்ளது

அந்நாளில்  நெஞ்சுரமும், நேர்மைத் திறமும் கொண்டு கொள்கைக் குன்றாய் நின்று தூய அரசியலுக்குச் சொந்தக்காரராய் விளங்கிய திராவிட இயக்க முன்னோடி சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் களங்கமில்லா பொது வாழ்க்கைப் பயண வரலாறிது.

somaskandthan 450நாடும் ஏடும் போற்றிய அந்த மாமனிதர் திருவாரூருக்கு அருகிலுள்ள செல்வபுரத்தில் 01-06-1888 அன்று பிறந்தார். தஞ்சையில் தொடக்கக் கல்வி கற்றார்.பின்னர் திருச்சி புனித வளனார் உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்.

கல்லூரியில் பட்டம் பெற்றதும், சட்டம் பயில விரும்பி இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சட்டம் பயின்றதோடு ஆங்கிலேயர் போன்றே ஆடை அணியும் வழக்கத்தையும் மேற் கொண்டார். பாரி ஸ்டர் பட்டம் பெற்ற பின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து,சிலகாலம் சென்னையில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார் சில காலம் கழித்து தஞ்சைக்கே வந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடர்ந்தார்.

திருச்சியில் கல்லூரி மாண வராக இருந்தபோதே பொன்னு பாப்பாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.வழக்கறிஞர் தொழிலைச் செல்வம் குவிக்கும் தொழிலாகக் கருதாமல் நேர்மையாகத் தொழில் புரிந்து ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு நடந்து கொண்டார். பல இளைஞர் மன்றங்களோடு இணைந்து சாதி, மத வேறுபாடு களின்றி அனைவரின் நலத்திற்காகவும் பொதுப் பணி யாற்றினார்.

நீதிக்கட்சியில்

சென்னையில் 1916 நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.அன்றே பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியாயிற்று. அந்தப் பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம், பார்ப்பனர் ஆதிக்கம் செழித்திருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.டி.பன்னீர்செல்வத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அந்த ஆண்டின் இறுதியில் நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டார்.

கரந்தை தமிழ்ச்சங்கத்தை உருவாக்கிய த.வே.உமா மகேசுவரம் பிள்ளை, பட்டுக்கோட்டை வேணுகோபால் நாயுடு, நெடும்பலம் ஆர்.சாமியப்ப முதலியார், அய்.குமார சாமிப் பிள்ளை, நாகை வி.பி.பி.காயாரோகணம் பிள்ளை, கும்பகோணம் கந்தசாமி மூப்பனார் ஆகிய தன் தோழர்களையும் நீதிக்கட்சியில் இணைத்து அவ்வியக் கத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

மாண்டேகு  செம் ஸ்போர்டு  சீர்திருத்தம் குறித்து இந்தியத் தலைவர்கள் கருத்தறிய மாண்டேகு சென்னை வந்தார் அவரைப் பல கட்சியினரும் சென்று சந்தித்தனர்  நீதிக்கட்சியின் சார்பில் திரு.பி.இராஜரெத்தின முதலியார் மாண்டேகுவைச் சந்தித்து, எந்தச் சீர்திருத்தமும், பிராமணரல்லாத மக்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாயிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தலைவர் டி.எம். நாயர் தலைமையில் ஒரு குழு இங்கிலாந்து சென்று அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் நீதிக்கட்சியின் கொள்கைகளுக்கு வலு சேர்க்க ஆதரவு திரட்டினர்.

ஆனால் நீதிக்கட்சியின் கோரிக்கையான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்கப்படவில்லை. மாண்டேகு  செம் ஸ் போர்டு சீர்திருத்தத்தைச் செயல்படுத்த சௌத்பரோ தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் வகுப்புவாரி பிரதிநிதித்து வத்திற்கு எதிரான இருவர் இடம் பெற்றிருந்தனர், அவர்கள் சென்னையைச் சேர்ந்த வி.எ ஸ்.சீனிவாச சா ஸ்திரியும், வங்காளத்தைச் சேர்ந்த சுரேந்திரநாத் பானர்ஜியும் ஆவர். இவ்விருவரின் நியமனத்தை நீதிக்கட்சி வன்மையாகக் கண்டித்தது.; நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்துமாறு அறிவித்தது. கட்சியின் கட்டளையை சிரமேற்கொண்டு,

06-10-1918 அன்று தஞ்சையில் கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில் சிறப்பாகக் கண்டனக் கூட்டத்தை பன்னீர்செல்வம் நடத்தித் தலைவர்கள் பாராட்டைப் பெற்றார். 1918ஆம் ஆண்டின் இறுதியில் தஞ்சையில் கட்சியின் மாநாட்டைச் சிறப்புற நடத்தித் தலைவர்களின் கவனத்தைக் கவர்ந்தார்

தஞ்சை நகராட்சித் தலைவர்-கல்விப்பணி

1918 ஆம் ஆண்டில் நடைபெற்ற தஞ்சை நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம் தஞ்சை நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்; 1920 ஆம் ஆண்டு வரை சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தார். மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 40 பள்ளிகளே செயல்பட்டுக் கொண்டிருந்த தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை 170 ஆகப் பன்னீர் செல்வம் உயர்த்தி பார்ப்பனரல்லாத குழந்தைகள் பள்ளிக்கல்வியைப் பெற வழிவகை செய்தார். பள்ளிகளே இல்லாத முத்துப்பேட்டை, கூத்தா நல்லூர் போன்ற இடங்களில் நடுநிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்தார், திருவாரூர், பாபநாசம் பள்ளிகளை மாவட்டக்கழகத்துடன் இணைத்து அப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார். தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு வசதியாக மாணவர் விடுதியைக் கட்டுவித்தார்.

ஜில்லாபோர்டு தலைவர்-பணிகள்

1924 ஆம் ஆண்டு ஜில்லாபோர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1930ஆம் ஆண்டு வரை சிறப்பாகப் பணியாற்றினார் பன்னீர்செல்வம். மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஒரத்த நாடு, இராசாமடம் போன்ற பகுதிகளில் வழிப்போக்கர்கள் தங்கி, சாப்பிட்டுச் செல்ல அன்னச் சத்திரங்கள் கட்டி அதற்கான நிதியும் வழங்கியிருந்தனர். பின்னர் அச் சத்திரங்கள் அனைத்தும் ஜில்லாபோர்டின் நிர்வாகத்தின் கீழ் செயல்படத் தொடங்கின.

ஜில்லா போர்டின் தலைவராக வி.கே.இராமானு ஜாச்சாரி இருந்த காலத்தில் அந்தச் சத்திரங்களில் பார்ப்பனக் குழந்தைகள் தங்கிக் கல்வியும் உணவும் பெற்றுவந்தனர்.பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு அங்கு இடமளிக்கவில்லை.

தஞ்சை ஜில்லாபோர்டு தலைவராக சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் பதவி யேற்ற பின், பார்ப்பனர்களின் ஆதிக்கத் திலிருந்து சத்திரங்களை மீட்டு எல்லோருக்கும் உணவு வழங்கவும், கல்விகற்கவும்  ஏற்பாடு செய்தார். திருவை யாறில் இருந்த சம ஸ்கிருதக் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களைக் கல்வி கற்க அனுமதிப்பதில்லை.அந்தக் கல்லூரியை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து பார்ப்ப னரல்லாத மாணவர்கள் தமிழில் கல்வி கற்கும்படிச் செய்தார். கரந்தை உமா மகேசுவரம்பிள்ளையும் பன்னீர்செல்வத்துக்குத் துணையாக நின்றார். சம ஸ்கிருதக் கல்லூரியில் இன்று தமிழ் கற்பிக்கப்படுவதற்கு இவர்கள் இருவருமே காரணம். சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் சமுதாயப் புரட்சிக்கு எதிராக பார்ப்பனர்கள் குரல்கொடுத்தபோது, தந்தை பெரியார் பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்துத் துணை நின்றார்.

பார்ப்பனர்களும், அவர்களின் பத்திரிக்கைகளும் ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு எதிரான பரப்புரைகள் செய்து கொண்டிருந்த வேளையில் தஞ்சை ஜில்லா போர்டு தேர்தல் வந்தது. பன்னீர்செல்வத்தைத் தேர்தலில் தோற்கடிக்க பல்வேறு வியூகங்களை அமைத்துப் போராடினர் எதிரணியினர்.

எதிரிகள் இந்தத் தேர்தலைத் தடை செய்யுமாறு அமைச்சரிடம் கோரினர். அமைச்சர் மறுத்துவிட்டார். பின்னர் தேர்தலுக்கு முதல் நாள் முனிசீப் கோர்ட்டில் தடை ஆணை கேட்டார்கள். அந்த முனிசீப் முதல் நாள் வழக்கை விசாரித்துவிட்டு தேர்தல் தினத்தன்று 11  மணிக்குத் தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லிவிட்டார். தேர்தலுக்கு எல்லா உறுப்பினரும் வந்துவிட்டனர். இறுதியாக 11மணிக்கு முனிசீப் தடை ஆணை தர முடியாது; தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதோடு விட்டார்களா?இல்லை.12 மணிக்கு ஜில்லா ஜட்சிடம் அப்பீல் செய்தார்கள். ஜில்லா ஜட்ஜு 1 மணிவரை வழக்கினை விசாரித்துக் கடைசியாக அப்பீலை செலவுடன் தள்ளிவிட்டார். பின் 2மணிக்குத் தேர்தல் தொடங்கியது.

பன்னீர்செல்வம் பெயரை முன்மொழிந்தனர். உடனே ஒரு முகமது கனவானைவிட்டு, சட்டப்படி பன்னீர்செல்வம் போட்டியிடுவது ஒழுங்கல்ல என்று ஆட்சேபனை சொல்லச் செய்தார்கள்.தேர்தலுக்குத் தலைமைவகித்த துணைத் தலைவர் அவ்வாட்சேபனையைப் புறந்தள்ளி விட்டார்.

எதிரிகள் மருதவாணம் பிள்ளையைப் போட்டியாளராக முன்மொழிந்தனர்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, மருதவாணம் பிள்ளை 10 வாக்குகள் பெற்றார்.பன்னீர் செல்வம் 27 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று முடிவு அறிவிக்கப்பட்டதும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு அளவில்லை.

தஞ்சை ஜில்லாபோர்டில் எல்லா நிலைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர். பன்னீர்செல்வம் தலைவராக ஆனபின்னர் அவர்களது ஆதிக்கம் சிதைந்தது.

ஜில்லாபோர்டில் அலுவலர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனரல்லாதாராக ஆகும் வரையில், பார்ப்பனருக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்று ஒரு தீர்மானம் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வேணுகோபால் நாயுடு அவர்களால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருந்தது அதனாலேயே அவாள் அவர்மீது கடுங்கோபம் கொண்டிருந்தனர். பன்னீர் செல்வத்திற்கு அதனாலேயே பல இடர்ப்பாடுகளையும், சங்கடங்களையும் செய்து வந்தனர். இருந்தபோதிலும், பன்னீர்செல்வம் அவாளிடத்தில் பெருந்தன்மையுடனே நடந்து கொண்டார். வேணுகோபால் தீர்மானம் இருந்த போதிலும் பன்னீர் செல்வம், பார்ப்பனருக்கு உத்தியோகம் தருவதில் எந்தக்குறையும் வைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, பார்ப்பனரல் லாதாரை விரோதியாகவே பார்த்தவர், நடத்தியவர் ஸ்ரீமான் சூரிய நாராயண ஐயர். அவருடைய மூன்று பிள்ளை களுக்கும் பன்னீர்செல்வம் ஜில்லாபோர்டில் உத்தியோகம் கொடுத்திருக் கிறார் என்றால் அவர் இதேபோன்று துவேஷ மின்றி தகுதியுள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேருக்கு உத்தியோகம் கொடுத்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்!

பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய பன்னீர் செல்வம், பார்ப்பனரல்லாத மக்களிடையே இருந்த சாதியத் தையும், தீண்டாமைக் கொடுமையையும் வெகுவாக எதிர்த்து சமத்துவத்தையும், சுயமரியாதையையும் நிலை நாட்டிப் புகழ் கொண்டார்.

தஞ்சை ஜில்லா போர்டு தலைவராகப் பன்னீர் செல்வம் இருந்தபோது, பட்டுக்கோட்டை வட்டக் கழகத் திற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்தார். பட்டுக்கோட்டை வட்டக் கழகத்திற்குத் தலைவராக யிருந்த வி.நாடிமுத்துப் பிள்ளை, அந்த நியமனத்தை ஏற்க மறுத்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம் சாதி ஆதிக்கத் தீண்டாமையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை வட்டக்கழக உறுப்பினராக நியமனம் செய்து மற்றவர்களுடன் சரிசமமாக அமர வைக்கமுடியாது என்றார். எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், என்றார். பன்னீர்செல்வம், தன்னுடைய நியமன ஆணையை மாற்றமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த விஷயம் முதல்வர் டாக்டர் சுப்பராயன் கவனத்திற்கு வந்தது. அவர்,ஜில்லா போர்டால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் நியமனத்தை பட்டுக் கோட்டை வட்டக் கழகம் ஏற்றுக் கொள்ளவேண் டும். மறுத்தால் பட்டுக்கோட்டை வட்டக் கழகம் கலைக்கப்படும், என்று எச்சரித்தார்.அதனால் நாடிமுத்துப் பிள்ளை, பன்னீர்செல்வம் நியமித்த உறுப்பினரை ஏற்க வேண்டியதாயிற்று.

சனாதனவாதிகளின் ஆதிக்கத்தையும், அவர்களுக்கு அடிபணிந்து கிடந்த பார்ப்பனரல்லாத மேல்சாதியினரின் ஆதிக்கத்தையும் அஞ்சாது எதிர்த்துப் பணியாற்றினார் பன்னீர்செல்வம்.

பார்ப்பனரல்லாத மக்கள் எவருக்கும் அடிமையாக இல்லாது சுயமரியாதையுடன் வாழ்ந்திட சுயமரியாதை இயக்கம் நடத்திவந்த தந்தை பெரியாருடன் பன்னீர்செல்வம் கொண்ட தோழமை கொள்கையின் பாற்பட்டது; இயல்பானது; ஆழமானது!

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்மாகாண மாநாடு செங்கல் பட்டில் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,18, தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டின் இரண்டாம் நாள் பார்ப்பன ரல்லாத வாலிபர் மாநாட்டிற்கு பன்னீர் செல்வத்தைத் தலைமையேற்க வைத்துச் சிறப்புச் செய்தார், பெரியார்.

1930 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தஞ்சை, திருச்சி கிறிஸ்துவத் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியடைந்து சட்டமன்றம் சென்றார்,

1919 இல் நடைமுறைக்கு வந்த மாண்டேகு  செம் ஸ் போர்டு சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய சைமன் கமிஷன் 18-2-1929 இல் சென்னை வந்தது.காங்கிர ஸ் சைமன் கமிஷனைப் புறக்கணித்தது. அப்போது நீதிக்கட்சியின் சார்பில் சைமன் கமிஷனைச் சந்தித்த குழுவில் சர்.ஏ. இராமசாமி முதலியா ருடன் சர்.ஏ.டி. பன்னீர்செல்வமும் பங்கேற்றார். இந்தியாவிற்கு டொமினியன் அந்த ஸ்து அளித்திடல் வேண்டும்; வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்ந்திடவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டன. ஆனால் நீதிக்கட்சியின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது

இந்த நிலையில் இந்தியத் தலைவர்களை இங்கிலாந் திற்கே அழைத்து ஆலோசிக்க முடிவு செய்து வட்டமேஜை மாநாட்டை இங்கிலாந்தில் கூட்டியது. முதல் மாநாட்டில் காங்கிர ஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தி பங்கேற்றார் இரண்டு மாநாடுகளிலும் இந்தியக் கிறி ஸ்துவர்கள் சார்பாக சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். சர்.ஏ.இராம சாமி முதலியார், ஏ.பி.பாத்ரோ, ஆர்.சீனிவாசன் ஆகியோர் நீதிக்கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.

புதிய அரசியல் சீர்திருத்ததின்படி 1937 இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காங்கிர ஸ் 159 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. நீதிக்கட்சி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்தது. சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், கே.வி.ரெட்டி நாயுடு, எம்.சி.இராஜா, பி.கலிபுல்லா சாகிப், முத்தையா செட்டியார் ஆகியோர் நீதிக்கட்சியில் வெற்றி பெற்ற முக்கியமானவர்கள். காங்கிர ஸ் அமைச்சரவை அமைக்க முன் வராததால் ஆளுநர் நீதிக்கட்சியினரை இடைக்கால அரசை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். கே.வி.ரெட்டி நாயுடு தலைமையில் மந்திரிசபை பொறுப்பேற்றுக் கொண்டது அந்த அமைச்சரவையில் நிதி, உள்துறை பொறுப்புகளை ஏற்று அமைச்சரவையில் இரண்டாம் இடம் பெற்றார் ச.ர்.ஏ.டி.பன்னீர் செல்வம். அவரோடு எம்.சி.இராஜா, பி.கலிபுல்லா சாகிப், ஆர்.எம்.பாலட் ஆகியோர் மந்திரி சபையில் இடம் பெற்றனர். 01.04.1937 அன்று பதவியேற்றனர். 14-07-1937 அன்று பதவி விலகினர்.

நீதிக்கட்சி அரசு பதவி விலகியதும் இராஜகோபாலாச் சாரியார் தலைமையில் காங்கிர ஸ் மந்திரிசபை பதவி யேற்றுக் கொண்டது. ஆச்சாரியார் 11-08-1937 இல் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் புகுத்தினார். தமிழகம் கட்டாய இந்தியை எதிர்த்துப் போர்க்களம் கண்டது. திருச்சியில் சென்னை மாநில தமிழர் மாநாட்டை கி.ஆ.பெ.விசுவநாதம் 26-12-1937 அன்று கூட்டினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார், முத்தையா முதலியார், கருமுத்து.தியாகராஜ செட்டியார் ஆகியோருடன் சர்.ஏ.டி.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். இந்தித் திணிப்பை எதிர்த்து முழக்கமிட்டார். தமிழகம் முழுதும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.

நீதிக்கட்சி நேரடியாக இந்தி எதிர்ப்புக் களத்தில் இறங்க வில்லை, காரணம் கட்சிக்குச் சரியான தலைமை இல்லாத தேயாகும். கட்சிக்கு புத்துயிர் ஊட்டப் புதிய தலைமை வேண்டும் என்று 12-06-1938இல் இராம நாதபுரத்தில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பன்னீர் செல்வம் வெளிப்படையாக அறிவித்தார்.

28-11-1938 அன்று நீதிக்கட்சியின் செயற்குழு கூடி தந்தை பெரியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதற்கிடையில் இந்தி எதிர்ப்புப்போர் தீவிரமடைந்தது. இராஜாஜி கடும் சட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் கைது செய்து சிறையில டைத்து வந்தார்.

06-12-1938 அன்று பெரியாரும் கைது செய்யப்பட்டார். சென்னை முதல் வகுப்பு மாஜி ஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. பன்னீர்செல்வம் பெரியாருக்காக வழக்காடினார். பெரியாருக்கு தண்டனை உறுதியானதும் பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலேயே பெரியாரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். பெரியாருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியார் சிறை சென்ற பின்னரும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் குறைவின்றித் தமிழகம் முழுவதும் நடை பெற்றன. வேலூரில் 27-12-1938 இல் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் பன்னீர்செல்வம் ஆற்றிய தலைமை உரை தமிழர்களின் சிந்தனையைத் தூண்டியது; எழுச்சி கொள்ளச் செய்தது. தமிழர்களின் அரசியல் களம் தங்களுடைய நாட்டை மொழியைக் காக்கும் இனப் போராட்டமாக மாறிப்போயிற்று!

தந்தை பெரியார் தலைமையில் நீதிக்கட்சி மாநாடு 29-12-1938 இல் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. ஆனால் மாநாட்டுத் தலைவர் சிறையில்; அவருக்குப் பதிலாகப் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். பன்னீர் செல்வத்திற்கு இட்ட மாலையை, என் தோளுக்கிட்ட மாலையை தலைவர் பெரியாரின் தாளுக்கு இடுகிறேன், என்று தந்தை பெரியார் படத்திற்கு அணிவித்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அதன் பின் தந்தை பெரியாரின் தலைமை உரையை பன்னீர்செல்வம் வாசித்தார். பன்னீர் செல்வத்திற்கு பெரியாரிடம். இருந்த நட்பையும், மதிப்பையும் உணர்த்துவதாக இம்மாநாட்டு நிகழ்வுகள் அமைந்திருந்தன.

பெரியாரின் விடுதலைக்காக  கண்டனக் கூட்டங் களும், ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுதும் நடை பெற்றன, சிறையில் பெரியாரின் உடல்நிலை கேடுற்று வருவதால் உடன் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசிற்கு பன்னீர் செல்வம் தந்தி அடித்தார்.

பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர், முதல்வர் ஆச்சாரியார் இந்தி எதிர்ப்புப் போராளிகளை கொடுமையாக ஒடுக்க முற்படுகிறார் என்றும் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவுடன் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெறுகின்றது எனவே கட்டாய இந்தி ஆணையைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் பேசினார்.

முதல்வர்: பாரதியாரும் பெரியாரும் தானே இந்தியை எதிர்க்கின்றனர், வேறெவரின் ஆதரவும் இல்லை என்னும் கருத்து தொனிக்கக் கூறினார்.

பன்னீர்செலவம்: அப்படியானால் இந்தியை நீங்கள் ஒருவர்தானே ஆதரிக்கின்றீர்கள் என்று பதிலளித்தார்.

இந்தி எதிர்ப்புப் போராளிகள், நடராஜன், 15-1-1939 அன்றும், தாளமுத்து 12-3-1939 அன்றும் சிறையில் மரணமுற்றனர். அவர் மரணமடைந்ததைப் பற்றி பன்னீர்செல்வம் வினா எழுப்பியபோது முதல்வர் இராஜாஜி, ஜாதி உணர்வோடும் ஆணவத்தோடும் பதிலுரைத்தார். கல்வி அறிவில்லாததால் நடராஜன் இந்து தியாலாஜிகல் பள்ளி முன் 5-12-1938 அன்று மறியல் செய்தார். ஆதிதிராவிடரிடையே கல்வி அறிவின்மை பரவலானது என்றார். தமிழரின் உரிமைப் போராட் டத்தை கேவலப்படுத்தினார். பன்னீர்செல்வம், தங்கள் பதிலில் சாதிவெறி தெரிகின்றது, என்று சீற்றத்துடன் பதிலுரைத்தார்.

பின்னர் உடல் நலக் குறைவு காரணமாகப் பெரியார் 22-5-1939 அன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இந்தியர்களின் விருப்பத்தை அறியாமல் இந்தியாவைப் போரில் பிரிட்டிஷ் அரசு ஈடுபடுத்தியதை 23-10-1939 இல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற் குழு கண்டித்ததுடன் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநிலங்களில் உள்ள காங்கிர ஸ் அமைச்சரவைகள் பதவி விலகவேண்டு மென்றும் அறி வுறுத்தியது. அதைத் தொடர்ந்து 30-10-1939 அன்று இராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவையும் பதவி விலகியது. பெரியாரும் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு அரசின் போர் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார். அரசு நல்லெண்ண நடவடிக்கையாக 1939 நவம்பர் திங்கள் மத்தியில் இந்தி எதிர்ப்புப் போரில் கைதான வர்களை விடுதலை செய்தது.

போர் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசமுடிவெடுத்த கவர்னர் ஜெனரல் நீதிக்கட்சியின் சார்பாகப் பேச பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்தார். பன்னீர்செல்வம், தன்னுடன் பேசுவதைவிடத் தலைவர் பெரியார் அவர்களுடன் பேசினால் நீதிக்கட்சி யின் முழு ஆதரவையும் கிடைத்திடச் செய்வார் என்று தெரிவித்தார். அதன்பின் தலைவர் நீதிக்கட்சியின் சார்பாகப் பேச பன்னீர்செல்வத்தையே அனுப்பி வைத்தார்.

பின்னர் போர்க்கால அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இந்திய அமைச்சருக்குத் துணையாக அமைக்கப்பட்ட குழுவில் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பன்னீர்செல்வத்தின் நியமனம்  தமிழக மக்களிடையே மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு பாராட்டும் வாழ்த்தும் குவிந்தன.சென்னை கன்னிமரா ஓட்டலில் அவருடைய நண்பர் நெடும்பலம் சாமியப்ப முதலியார். விருந்து கொடுத்தார். அவ்விருந்தில் தந்தை பெரியார், பி.டி. இராஜன், எம்.சி.ராஜா, முத்தையா முதலியார் போன்றோர் கலந்துகொண்டு பன்னீர்செல்வத்தைப் புகழ்ந்து பேசினார்கள்.

பெரியார், பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஏற்பட்ட உத்தியோகத்திற்கு நாம் பெருமைப்பட வேண்டும். நாட்டிற்கு இன்னும் நலன்கள் செய்வார். என்னைப் பொறுத்தவரை நீதிக்கட்சிக்குச் சரியான அ ஸ்திவாரமாகவும் அதிக உதவியாகவும் இருந்தவர். இந்த நெருக்கடியான சமயத்தில் இந்தியாவை விட்டுப் பிரிந்து செல்கிறார் என்றே வருத்தப்படுகிறேன். இந்த உத்தி யோகம் நம் கட்சிக்கு நல்லதோ கெட்டதோ தெரியாது. என்று தம் மனதில் ஏதோவொரு சஞ்சலத்துடன் பேசினார்.

1940 பிப்ரவரி 25 ஆம் நாள் தன் ஊரைவிட்டு விற்குடி இரயில் நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை சென்ட்ரலில் அவரைச் சூழ்ந்து பெரியார், அவரது ஆத்ம நண்பர் சாமியப்பா, அவரது மூத்தமகன் ஜார்ஜ் ஆகியோர் நின்றிருந்தனர். எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். மகனைக்கட்டித் தழுவி முத்தமிட்டுவிட்டுப் பெரியாரை நோக்கினார். இருவரும் பேசமுடியாது தத்தளித்தனர்.

சென்னையிலிருந்து சென்ற பன்னீர்செல்வம் கராச்சி சென்றடைந்தவுடன் பெரியாருக்கு ஒருகடிதம் எழுதினார்.

விமான நிலையம் கராச்சி  29-2-1940 

எனது அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நேற்று மாலை பம்பாயிலிருந்து இங்கு வந்து சேர்ந்தேன். இன்று காலை நான் எந்த பிளேனில் போகிறதாயிருந்தேனோ, அந்த பிளேன் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. அநேகமாய் இன்று மாலை இங்கு வந்துசேரும். நாளை காலை 7 மணி சுமாருக்கு நான் இங்கிருந்து கிளம்புவேன். ஆகவே வரும் திங்கள் கிழமை லண்டன் போய்ச் சேருவேன் என்று எண்ணுகிறேன்.

இப்படிக்கு, தங்களன்புள்ள,

பன்னீர்செல்வம்

அதற்குப் பின் அவரது மரணச் செய்திதான் தமிழர் களின் காதுகளில் தீயாகப் பாய்ந்தது.

மார்ச் 1, 1940 அதிகாலை நேரம் அனிபால் இராணுவ விமானத்தில் பன்னீர் செல்வத்துடன் நான்கு இராணுவ அதிகாரிகளும்,ஆங்கில அதிகாரிகள் மூவரும் சென்றனர்.  ஓமன் தீபகற்பத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்தவர் யாரும் உயிர் தப்பவில்லை. இச்செய்தி இடியெனத் தமிழ் மக்களைத் தாக்கிற்று.

தலைவர் பெரியாருக்கே தாங்கமுடியாத பேரிழப்பு! பெரியாரின் கண்ணீர் உரை:

என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும்   மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்றுதான் கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20ஆவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும், தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது.

காரணம் முன்சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுகத் துக்கத்தைப் பொறுத்தது. தந்நலம் மறையும் போது, அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தொறும், நினைக் குந்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார். இது என்று மறைவது. இவருக்குப் பதில் யாரென்று மனம் திகைக்கிறது என்று எந்த இழப்பிற்கும் எளிதில் கலங்காத தந்தை பெரியார் உணர்ச்சி வயப்பட்டு, மனம் பதைக் கிறது நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது கண் கலங்கி மறைக்கிறது

என்று பதற்றத்தோடு எழுதுகிறார்.

பன்னீர் மறைந்த 1-4-1940 ஆம் நாளை துக்கதின மாக அனுஷ்டிக்குமாறுச் சொல்கிறார், பன்னீர்செல்வம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! அவர் போல் கொள்கையில் உறுதி கொண்டவராக வாழ்வோம்!

அவர் போல் தன் நலம் கருதாத் தொண்டராய் வாழ்வோம்!

1-6-2018 பன்னீர்செல்வம் பிறந்த நாள்