4.1.1932 திராவிடன் ஏட்டில் சென்னைப் பல் கலைக்கழகம் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட்டதைப் பாராட்டி எழுதப்பட்டது.

14.9.1931 அன்று திருவல்லிக்கேணியில் நடை பெற்ற ‘இந்தி’ வகுப்புத் திறப்பு விழாவில் உரை யாற்றிய எஸ். சத்தியமூர்த்தி இந்தியாவுக்குப் பொது மொழியாக இந்தித்தான் வரவேண்டும். அதனால் அனைவரும் கண்டிப்பாக இந்தி படிக்க வேண்டும் என்று பேசியதை எஸ்.வி. லிங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளார் (திராவிடன் 24.9.1931).

1931ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி சென்னை நகராட்சியில் இந்தியை 5ஆம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளில் விருப்பப்பாடமாக வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.319).

1934ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் இந்தி கற்பிப்பது பற்றியத் திட்டத் தை விவரித்துச் சென்னை மாகாண அரசுக்குப் பரிந்துரைத்தது. அந்தத் திட்டத்தை அரசு திருப்பி அனுப்பியதோடு அதை iவிடுமாறும் ஆணையிட்டது (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.319).

1935ஆம் ஆண்டு ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க ஏற்பாடு செய்துதரும்படி அரசைக் கேட்டுக் கொண்டது. மீண்டும் இந்தத் தீர்மானத்தை நீக்கிடச் செய்து மாநகராட்சிக்குத் திருப்பி அனுப்பியது நீதிக்கட்சி அரசு (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.320).

மிகப்பெரும் தலைவராக அன்று இந்தியா முழுவதும் வலம்வந்த காந்தியும், தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலை வர்களும் இந்தியைத் தென்நாட்டில், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் பரப்புவதற்கு-ஏன் திணிப்பதற்குச் செய்த முயற்சிகளை எல்லாம் முறியடித்தது நீதிக்கட்சி அரசு.

ஆங்கிலத்தை நீதிக்கட்சி அரசு திணிக்கவில்லை. அது ஏற்கெனவே 150 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்ததுதான். அப்போது இரட்டை ஆட்சியில் இவர்களுக்குப் போதுமான அதிகாரம் இல்லாததால் ஆங்கிலத்தை அகற்ற முடியவில்லை. ஆங்கிலேயரும் ஆட்சியில் சம பங்கு பொறுப்பு வகித்தனர்.

நீதிக்கட்சி ஆட்சியில் தொடக் கப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்வியே இருந்தது. மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. தாய்மொழி யும் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

எஸ்.சத்தியமூர்த்தி அய்யரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) 7 தொகுதிகள் 1921 முதல் 1937க்குள் நீதிக்கட்சி ஆட்சி யில்தான் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மொழிக்கும் அந்த காலக்கட்டத்தில் இப்படி ஓர் அகராதி உருவாக்கப் படவில்லை.

1921 முதலே சட்டமன்றத்தில் அவரவர் தாய்மொழி களில் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. மதுரைப்பிள்ளை, டி.சி. தங்கவேலுப்பிள்ளை முதலானவர்கள் 1921 முதல் தமிழிலேயே சட்டமன்றத்தில் பேசியுள்ளார். சுவாமி சகஜானந்தம் 1927 முதல் தமிழிலேயே பேசியுள்ளார். அதேபோல தெலுங்கு மொழி உறுப்பினர்கள் தெலுங் கிலும், மலையாள மொழி உறுப்பினர்கள் மலையாளத் திலும், கன்னட மொழி உறுப்பினர்கள் கன்னடத்திலும் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. உறுப்பினர்கள் தாய் மொழியில் பேசச் சபைத்தலைவரிடம் முன்கூட்டித் தெரிவிக்க வேண்டும். சுருக்கெழுத்தரை ஏற்பாடு செய்வதற்காக என்ற முறை நடைமுறையில் இருந்தது.

நீதிகட்சி ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட முக்கிய அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளி லும் வெளியிடப்பட்டன.

நீதிக்கட்சியினர் ஆட்சியில் இருந்த போது ஆந்திர தனி மாகாணக் கோரிக்கை சட்டமன்றத்தில் 19.3.1928 இல் விவாதத்திற்கு வந்தபோது நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடுநிலை வகித்தனர். பனகல் அரசர் எதிர்த்து வாக்களித்தார். (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் தொகுதி 41, பக்கங்கள் 363-377, நாள் 19.3.1928)

பொப்பிலி அரசர் முதலமைச்சராக இருந்த போதும் ஆந்திரா தனி மாகாணக் கோரிக்கை சட்டமன்றத்தில் 2.8.1933 அன்று விவாதத்திற்கு வந்த போதும் முதலமைச்சர் பொப்பிலி அரசர் உட்பட நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர் யாரும் அதற்கு ஆதரவாக இல்லை. (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் தொகுதி 67, பக்கங்கள் 198-227, நாள் 2.8.1933)

எனவே நீதிக்கட்சியைச் சார்ந்த முதல்வர்கள், தலைவர்கள் தெலுங்கர்களுக்கு ஆதரவாளர்களாக செயல்பட்டார்கள் என்பது உண்மையல்ல.

தனி ஆந்திர மாகாணக் கோரிக்கை எழுந்ததற்கு காரணம் சென்னை மாகாண அரசில் ஆந்திரப் பகுதி யைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய அளவு கல்வி வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்பதுதான். தனி ஆந்திர மாகாணக் கோரிக்கையை எழுப்பியவர்கள் ஆந்திரா பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்களும், காங்கிரசுகாரர்களும் தான் என்பதை கே.வி. நாராயணராவ் என்பவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளார். (K.V.Narayana Rao, Emergence of Andra Pradesh.363)

நீதிக்கட்சியின் ஆட்சியின் போதுதான் 1924-25இல் மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அது மிகப்பெரிய அளவில் பயன்பட்டு வருகிறது.

நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி அடைந்த போது பார்ப்பனர்கள் மிகப் பெரிய அளவுக்குக் கொண் டாடி மகிழ்ந்தனர். ஏனென்றால் பல நூறு ஆண்டு களாகச் சமூகத்தில், கல்வியில், வேலையில் உச்ச நிலையில் இருந்த பார்ப்பனர்களின் கொட்டத்தைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைத்துக் கீழ்த்தட்டு மக்களை சற்று கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வழி வகை செய்தது நீதிக்கட்சி ஆட்சியேயாகும்.

நீதிக்கட்சியின் தோல்வியைக் குறிப்பாகப் பொப்பிலி அரசரின் தோல்வியை ஆனந்த விகடன் மகிழ்ச்சி பொங்க எழுதியது.

“கடைசியாகப் பொப்பிலி விழுந்தார். அந்தக் காலத்தில் இராவணன், கும்பகர்ணன், இரணியன் முதலியோர் விழுந்தபோது உலகம் சந்தோஷித்தது போல் சென்னை மாகாண வாசிகள் குதூகலமடைந் தனர் (‘ஆனந்தவிகடன்’ 7.3.1937).

பார்ப்பனர்கள் நீதிக் கட்சியினரைப் பரம எதிரி களாக கருதி செயல்பட்டனர்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழிசை யில் மாற்றம் கொண்டு வந்தவர்கள் நீதிக்கட்சியினரே ஆவர். தமிழிசைச் சங்கத்தை நிறுவியவர்கள் ராஜா சர். அண்ணாமலை அரசரும், சர். ஆ.கே. சண்முகம் இருவருமே ஆவர். தமிழகத்தில் தெலுங்கு, சமஸ் கிருதம் கலவாமல் முழுவதுமாக தமிழில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி சர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியே ஆகும். இதைப்பற்றி ஆனந்தவிகடன் ஏட்டில் எழுதியிருந்ததாவது : சென்ற பிப்ரவரி 26இல் “தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை கோகலே மண்டபத்தில் தமிழ்ச் சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. இச்சங்கத்தார் தமிழைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வத்தின் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.எம்.எம். தண்டபாணி தேசிகர் தொடக்கம் முதல் தமிழ்ப் பாட்டுகளையே பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

நமது சங்கீத வித்வான்கள் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுகளுக்கு அதிகமாக இடம் கொடுக்க வேண்டு மென்ற கிளர்ச்சி சில காலமாகத் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்கத் தமிழில் பாடிய தண்ட பாணி தேசிகருக்கு ‘இசை அரசு’ என்ற பட்டம் வழங் கப்பட்டது.

இன்னொரு விஷேசம் பன்னீர்ச்செல்வம் கச்சேரிக்கு விஜயம் செய்ததும் அதில் ஊக்கம் காட்டியதுமாகும். இந்தி எதிர்ப்புக் கேலிக் கூத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் இந்த மாதிரி உபயோகமான காரியத்தில் தலையிடு வதைப் பாராட்டுகிறேன். ஆனால் இது விஷயத்தில் அவருடைய உற்சாகம் அளவுக்கு மீறிப் போய் விடுமோ என்ற பயமும் நமக்கு இருக்கிறது. கீர்த்தனைகளும் பாட்டுகளும் தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் வற்புறுத்துவதில் நமக்குப் பூரண சம்பந்தம், இதற்கு மேலே போய் “ராகங்களும் தமிழில் பாட வேண்டும் என்று வற்புறுத்துவாரானால் அங்கே நாம் ஆட்சே பிக்க வேண்டியதாயிருக்கும்”. பன்னீர்ச்செல்வத்தை நான் கேட்டுக் கொள்வது ஐயா, உங்கள் தமிழன்பை அளவுக்கு மீறிக் காட்டாதீர்கள். ராக ஆலாபனத்தின் விஷயத்தில் வித்துவான்கள் பிழைத்துப் போகட்டும். ராகமும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள் (ஆனந்த விகடன் 5.3.1939).

ஆக தமிழகத்தில் விஜயநகர ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் திசைமாறிப் போன தமிழ் இசையை மீட்டுக் கொண்டு வந்தவர்கள் சுயமரியாதை இயக்கத் தைச் சார்ந்தவர்களும், நீதிக்கட்சியைச் சார்ந்தவர் களுமே யாவர்.

தமிழ் இசைக்குத் திராவிடர் இயக்கத்தவர்களின் பங்களிப்புக் குறித்து எஸ்.வி. ராஜதுரை ‘கலை எனப் படுவது இனக்கொலை என்றால்’ எனும் தலைப்பில் தனி நூலே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1938 இந்தி எதிர்ப்பிற்குப் பிறகு தான் தமிழ் நாட்டில் நாம் தமிழர்கள்; நாம் இந்தியர்கள் அல்ல என்ற உணர்வே ஏற்பட்டது. எனவே 1920 முதல் 1936 வரை ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியை இனப் பிரச்சனை அடிப்படையில் பார்ப்பது சரியன்று.

தந்தை பெரியார் அவர்களையும் வரதராசலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்களையும் நீதிக்கட்சி யைப் பலவீனப்படுத்துவதற்கென்றே காங்கிரசுக் கட்சிக்குள் பார்ப்பனர்கள் இழுத்தனர்.

கேசவப்பிள்ளை தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்பது நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரசுக் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் அமைப்பாகும். இதை முதலில் புரிந்து கொண்டவர் பெரியார். பின்பு வரதராசலு நாயுடு, இறுதிக்காலத்தில் திரு.வி.க.வும் அதை உணர்ந்து பெரியாரிடம் வந்து சேர்ந்தார்.

இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனர்களின் பித்தலாட்டம், பொய் என்று பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே விமர்சிக்கத் தொடங்கினார்.

தமிழ்நாட்டு மக்களை இந்தியத் தேசியத்தில் இரண்டற கலந்துவிடாமல் செய்தது நீதிக்கட்சியே ஆகும். நீதிக்கட்சி ஆண்டுதோறும் நடத்திய மாநாடு களும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் என்ற பெயரி லேயே நடத்தப்பட்டன. நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதார் நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. மிகக்குறைந்த அதிகாரத்தில் மிக அதிக நன்மைகளை இம்மக்களுக்கு அளித்தது. தேசிய இனப்பிரச்சினை அந்தக் காலத்தில் பெரிய அளவுக்கு எழவில்லை. ஆகவே தமிழர் தெலுங்கர் என்ற கண்கொண்டு நீதிக்கட்சி ஆட்சியை நோக்குவது முறையன்று.

தொடரும்....

Pin It