1.பெரியாரின் மறைவுக்குப் பின்னர் கோவில்களும் விழாக்களும் பெருகியிருக்கின்றன என்கிறார்களே! அது உண்மையா?

இல்லை. பெரியார் தன்மான இயக்கத்தை - ‘பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கத்தை, 26.12.1926-இல் தொடங்கினார். அன்றையத் தமிழ் நாட்டு மக்கள் தொகை 2 கோடி. இன்றைய மக்கள் தொகை 7.25 கோடி. மக்கள் தொகை மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது. அதனால் கடவுளை நம்புவோர் எண்ணிக்கையும் கோவில்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளன. இந்த விகித வளர்ச்சி மாறுதல், பெரிய அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

2. பெரிய அளவில் இதில் ஏன் மாறுதல் உண்டாக வில்லை?

இருப்பதில் மாறுதல் வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. மாறுதல் வேண்டும் என்பது இந்திய அரசின் கொள்கையாக இல்லை.தமிழ்நாட்டு அரசு இதில் மாறுதல் செய்ய வேண்டும் என்று நினைக்கவே முடியாது.தமிழகத்தை எந்தக் கட்சி ஆண்டாலும் கோவில்களைப் புதுப்பிக்கும்; குடமுழுக்கு விழாவை நடத்தும்; திருவிழாக்களை நடத்தும்; திருவிழாக்களுக்கு அரசு விடுமுறை தரும்; பணக்காரக் கோயில்களுக்குத் தங்கத் தகடு போர்த்திய தேர் செய்து அமைச்சர்கள்,அதிகாரிகள்,பொதுமக்கள் வடக்கயிறு கட்டி இழுப்பார்கள். இவற்றைச் செய்ய வேண்டியது கட்டாயம். இதற்கென அமைச்சகமும் அரசுத் துறைகளும் உள்ளன.

இன்னொரு பக்கம் முதலாளிகளும் மேல்சாதிக்காரர்களும்-பட்டாளிகளையும் பக்திக்காரர்களாக ஆக்கி,அவர்கள் அதிலேயே மூழ்கிக்கிடக்க வேண்டி கோயில்கள் கட்ட, கோடி கோடியாகச் செலவழிக்கிறார்கள்.அதனால் கோயில்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் சேருகின்றன.

இவை அப்படியே நீடிக்கிற வரையில்,இவற்றில் ஒருபோதும் மாற்றம் வராது.இவற்றை மாற்றுவது, எல்லா உரிமைகளையும் பெற்றுள்ள இந்திய அரசி னால் மட்டுமே முடியும்.

3. பெரியார் இயக்கம் தொடங்கிய 1926-இல் 100-க்குப் 10பேர்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.இப்போது 2013-இல் 100க்கு 85பேர் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்களே! அதன் பிறகும் ஏன் பெரிய மாற்றம் வரவில்லை?

அரசு தரும் கல்விக்கும் தனியார் தரும் கல்விக்கும் பாடத்திட்டம் வகுப்பது அரசு.பாடப் புத்தகங்களை அச்சிடுவது அரசும் தனியாரும்.அரசு தரும் எல்லாக் கல்வியிலும் தனியார் தரும் எல்லாக் கல்வியிலும் கடவுள் உண்டு; இந்து - இஸ்லாம் - சீக்கிய - கிறித்துவ மதங்கள் உண்டு என்றுதான் பாடங்கள் இருக்கின்றன.இருக்கிற பாடங்களைக் கற்பிப்பது மட்டுமே பள்ளிகளின் -கல்லூரிகளின் -ஆசிரியரகளின் - பேராசிரியர்களின் ஒரே வேலை. இப்படிப்பட்ட கல்வியை 100-க்கு 100 பேருக்கும் தந்துவிட்டாலும் - அதனால் அந்தக் கல்வி வளர்ச்சியின் விகிதத்தில் நாம் விரும்பும் மாறுதல் வளராது; வளர முடியாது.

4. பெரியார் இயக்கத்தினர் போதிய அளவில் பரப்புரை செய்தால் மாறுதல் விரைவில் வரும் அல்லவா? அப்படிச் செய்கிறார்களா?

பெரியார் காலத்தில் செய்ததைவிடச் சிறிதாவது அதிகமாகவே இப்போது பரப்புரை செய்கிறார்கள்.இதையே போட்டி போட்டுக்கொண்டு நான்கு மடங்கு அளவு செய்யலாம். யாரிடத்தில் அதைச் செய்யலாம் (அ) செய்ய முடியும்?

பெற்றோரால் வீட்டிலும் - சுற்றத்தாரால் தெருவிலும் - கல்விச் சாலைகளில் பாடங்களிலும்; செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள், திரைப்படங்களின் பக்தி நிகழ்ச்சிகளாலும் நல்ல மூடர்களாக உருவாகிவிட்ட படித்தவர்கள்தான் 1926, 1936, 1946, 1956, 1966, 1976, 1986, 1996, 2006, 2013-ஆம் ஆண்டுகளில் என, 87 ஆண்டுகளில் கல்வி கற்றவர்கள்தான் - இன்று 85 விழுக்காடு பேராகக் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம்தான் நாம் பரப்புரை செய்கிறோம்.

இவர்களுள் பெரியார் கொள்கைப் பரப்புரைக் கூட்டங்கள், பருவஇதழ்கள், நாளிதழ், நூல்கள் என்று எந்த வடிவத்திலெல்லாம் பரப்புரை செய்கிறோமோ - அதனால் 10 (அ) 15 விழுக்காடு பேர் தன்மானக் கொள்கையாளர்களாக மாறியிருக்கலாம்.அதுபற்றிய கணக்கு நம்மிடம் இல்லை. இந்த விழுக்காடு இன்னும் 10 ஆண்டுகளில் அதிகப்படலாம். ஆனால் அப்போது தமிழ் மக்கள் தொகை 10 கோடி ஆகிவிடும்.படித்த,படிக்காத மூடர்களின் தொகையும் அதற்கு ஏற்ப வளர்ந்துவிடும்.

மேலே சொன்ன பழைய ஏற்பாடுகளும் சட்டங்களும் அப்படியே இருக்கும் வரையில், சுவற்றிலுள்ள பழைய சுண்ணாம்பைச் சுரண்டி விட்டுப் புதுச் சுண்ணாம்பு அடிக்கிறது போன்ற அதே வேலையைத்தான் காலம் முழுவதும் நாம் செய்துகொண்டிருப்போம்.இந்த உண்மை நடப்பு -காலவட்டையானது இடைவிடாமல் சுற்றிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றுமே தவிர,சுற்றுப்பாதை பழைய பாதையாகவே தான் இருக்கும்.எவ்வளவு அதிக விசையாக வட்டையை (சக்கரத்தை)ச் சுற்ற வைத்தாலும் பழைய பாதையில்தான் சுற்றித் தீரவேண்டும்.

அதாவது பாதை மாறாத வரையில் பெரியாரின் கொள்கைப் பாதைக்கு 100-க்கு 85பேர் வரமாட்டார்கள்; வரமுடியாது.

5. அவர் காட்டிய அந்தப் பாதைதான் என்ன?

தமிழ்நாட்டைத் தனிச் சுதந்தர நாடாக ஆக்கி,நமக்கென்று நம் கொள்கை உடைய ஓர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும்.அதில் மதம் இருக்கும்;ஆனால் மதம் அரசினால் பின்பற்றப்படாது; மத நிறு வனங்களுக்குச் சொத்து இருக்காது; மதப் பண்டிகை களுக்கு அரசு விடுமுறை தராது.

அதன்மூலம் கல்வியிலிருந்து மதம் பிரிக்கப்படும்;மதச் சடங்குத்தனத்திலிருந்து (நாமம், விபூதி, சிலுவை, பிறை) ஒழுக்கம் பிரிக்கப்படும்; மதம் அரசிலிருந்து பிரிக்கப்படும். இவற்றை மீறுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.அத்துடன் இப்படிப்பட்ட எல்லாச் சொத்துக்களும், நாட்டிலுள்ள தனியார் உடைமைகளும் சமூக உடைமைகளாக (Socialisation)ஆக்கப்பட்டு,எல்லா உழைப்பாளி மக்களுக்கும் எல்லா வாழ்க்கை வசதிகளும் அரசினால் தரப்படும்.கவலை அற்ற வாழ்வு எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட்ட இடமே கடவுள் அற்ற இடம் ஆகும் என்பது பெரியாரின் திடமான கூற்று.

6. இதை நோக்கிப் பெரியார் கொள்கையினர் பயணிக்கிறார்களா?

இதற்கு உரிய நேரிடையான விடையினை அந் தந்த அமைப்பினர்தாம் - தனிப்பட்ட பெரியார் கொள் கையினர்தாம் தரவேண்டும். அது தேவை.

7. உங்கள் கட்சியின் கொள்கை என்ன?

தனிச் சுதந்தரத் தமிழ்நாடு பெறுவதற்கு கொள்கை நீர்த்துப்போகச் செய்யப்பட்ட இன்றையத் தமிழகச் சூழல் -  இந்தியச் சூழல் - உலகச் சூழல் இடந்தரும் என நாங்கள் எண்ணவில்லை.
தமிழர்கள் உண்மையான தமிழ்ப்பற்று இல்லாத வர்கள்.மற்ற மொழிக்காரர்கள் அப்படி இல்லை.

“தமிழர் ஒற்றுமை என்பது ஒரு கிலோ என்ன விலை?” என்று கேட்பவர்கள் தாம் தமிழகத் தமிழர், தமிழீழத் தமிழர், உலக நாட்டுத் தமிழர் ஆகிய எல்லோரும். எனவேதான், “தமிழர் நாடு” என்று ஒரு சுதந்தர நாடு எங்கும் அமைக்கப்படவில்லை.

தன்னுரிமைத் தமிழ்நாடு அடைவது -பெரியார் கொள்கை நிறைவேற்றத்துக்குப் பெரிய அளவில் போதும் என்பது எம் கட்சிக் கொள்கை.அதையும் தமிழர்கள் மட்டும் தனித்து நின்று அடைய முடியாது.

இந்தி மாநிலங்கள் தவிர்த்த எல்லா மாநிலங்களுக்கும் நாம் பயணித்து,ஒரு கூட்டு முயற்சியின் மூலம் அதைச் செய்திட விரும்பி,புதுதில்லியில்,20.10.1991-இல் நாங்கள் முடிவெடுத்தோம். 2001 முதல் அதில் நாட்டம் கொண்டுள்ளோம்.

இது முடியும் என நம்புகிறோம்.இதில் ஆர்வம் உள்ள பெரியாரின் தன்மானக் கொள்கையினர்,எங்களுக்குப் பேராதரவு நல்க முன்வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

இதற்கு மாற்று வழி இருந்தால்,சற்றும் தயங் காமல்,அதைச் சுட்டிக்காட்டுங்கள்!நன்றி! நன்றி!

Pin It