உலகமயம் எனும் பாலைநிலத்தில் பசுஞ்சோலை போல 1.4.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது.மருந்துக்கான காப்புரிமை என்ற போர்வையில், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பதற்கான ஒரு கேடயமாக இத்தீர்ப்பு விளங்கும் என்று பரந்துபட்ட மக்களின் நல்வாழ்வை விரும்பும் பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

நோவார்டிஸ் என்பது சுவிட்சர்லாந்து நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு பெரிய பன்னாட்டு மருந்து நிறுவனம்.குருதிப் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கென இந்நிறுவனம் கிளிவெக் எனும் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.ஒரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் கிளிவெக் மருந்தின் விலை ரூ.1,20,000 ஆகும். ஆனால் இந்திய நிறுவனங்களான சிப்ளாவும் (Cipla) நேட்கோ வும் (NATCO) இதே மருந்தை ரூ.8,000 முதல் ரூ.10,000 என விற்பனை செய்கின்றன.

நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதாலேயே, இந்திய மேல்சாதி ஆதிக்க வர்க்கத்தின் வஞ்சக எதிர்ப்பால், தலைமை அமைச்சர் பதவியையும் ஆட்சியையும் இழந்த வி.பி.சிங்கிற்குக் குருதிப் புற்றுநோய் இருந்தது. அவரைப் போன்று பணம் படைத்தவர்களால் மட்டுமே ஒரு மாதத்திற்கு இலட்சக் கணக்கில் மருந்துக்காகச் செலவிட முடியும்.இந்நாட்டில் ஒரு குடிமகனின் சராசரி மாத வருமானம் ரூ.5000 என்ற நிலையில், குருதிப் புற்றுநோய்க்கு ஆளான ஒருவரால், ‘குறைந்த விலை’ எனப்படும் ரூ.8000க்கான மருந்தை எப்படி வாங்க முடியும்?

இந்தியாவில் 1970ஆம் ஆண்டிற்கு முன்வரை,மருந்து தயாரிப்பு என்பது பன்னாட்டு நிறுவனங்களின் முழுமையான ஆதிக்கத்தின்கீழ் இருந்தது.அப்போது உயிர்காக்கும் மருந்துகள் வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்பட்டன.இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது 1970ஆம் ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டம் ( Indian Patent Act-1970) இயற்றப்பட்டது.

இதன்படி பன்னாட்டு நிறுவனங்களின் காப்புரிமை பெற்ற மருந்துகளின் மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு,மாற்றுச் செய்முறை மூலம் இந்திய மருந்து நிறுவனங்கள் மருந்துகளைத் தயாரித்து விற்பதற்கான உரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் மருந்துகள் ‘ஜெனிரிக் மருந்துகள்’ (Generic Drugs) எனப்படுகின்றன.

மேலும் 1978ஆம் ஆண்டு மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் ( Drug Price Control Order -DPCO) என்பது ஏற்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மருந்துகளின் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.இதன்விளைவாக இன்றியமையா மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தன.

பெருந்தொழில்களிலும் வணிகத்திலும்,நிதி நிறுவனங்கள் என்ற நிலையிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் வடஅமெரிக்கா,மேற்கு அய்ரோப்பிய நாடுகள், சப்பான் ஆகிய வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருக்கின்றன.இப்பன்னாட்டு நிறுவனங்களும் இவற்றின் தாயக அரசுகளும் மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் மக்களை மேலும் புதிய புதிய வழிமுறைகளில் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் காட் ஒப்பந்தம் (GATT Agreement) உலக வணிக அமைப்பு என்ற பெயரில் 1995 சனவரி முதல் காட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.காட் ஒப்பந்த விதிகளின்படி பன்னாட்டு நிறுவனங்களின், சரக்குகளும், நிதி மூலதனங்களும், சேவைகள்  என்ற பெயரிலான புதிய உயர் தொழில் நுட்பங்களும் தங்குதடையின்றி எந்தவொரு நாட்டிலும் நுழைந்து கொள்ளையடிப்பதற்கு அந்நாடுகளின் சட்டங்களைத் திருத்திச் சிவப்புக் கம்பளம் விரித்து வைக்க வேண்டும் என்று காட் ஒப்பந்தம் கட்டளை இட்டது.

இதுவே, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனப்படுவதாகும். காட் ஒப்பந்தத்தின் முதன்மையான கூறுகளில் ஒன்று ‘வணிகம் சார்ந்த அறிவுசார் காப்புரிமை’( Trade Related Aspects of Intellectual Property Rights - TRIPs) என்பதாகும். பெருமளவில் மூலதனம் இட்டுப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,அரிய அறிவாற்றால் உருவாக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்புக்குக் (சூநற ஐnஎநவேiடிn) காப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்த ஒப்பந்த விதி கூறுகிறது. அந்நிறுவனம் கண்டுபிடித்த புதிய மருந்தை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் இருபது ஆண்டு களுக்கு அந்நிறுவனத்துக்கு மட்டுமே முற்றுரிமை உண்டு. ஏனெனில் அந்நிறுவனம் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட தொகையை மீளப்பெறுவதற்காக இந்த ஏற்பாடாம்.அப்போதுதான் இப்பன்னாட்டு நிறுவனங் கள்,‘மனித குலத்தை உய்விப்பதற்காகப்’புதிய,புதிய கண்டுபிடிப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டு ‘ஈகம்’செய்ய முடியுமாம்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் கொள்கைக்கு உலக முழுவதும் உழைக்கும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்விளைவாக 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் சியாட்டில் நகரில் நடைபெற்ற உலக வணிக அமைப்பின் கூட்டத்தைப் பாதியிலேயே நிறுத்த  வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் 2001ஆம் ஆண்டு அரபு நாடான கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் நடைபெற்ற உலக வணிக அமைப்பு மாநாட்டில், மூன்றாம் உலக நாடுகளின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதன்படி, எந்தவொரு நாட்டிலும், மக்களின் நலவாழ்வின் முதன்மையைக் கருத்தில் கொண்டு,காப்புரிமை பெற்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலை மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது மருந்தின் விலையை அந்நிறுவனம் குறைக்க மறுத்தாலோ, அந்நாட்டு அரசு, குறைந்த விலையில் இம்மருந்தைத் தயாரிக்க அந்நாட்டின் மருந்து தயாரிக் கும் நிறுவனங்களை அனுமதிக்கலாம். இதுதான் ‘கட்டாய உரிமம் முறை’ (Compulsory Licensing)எனப்படுகிறது. இது தோகா அறிவிக்கை என அழைக்கப்படுகிறது.

இடையறாது இலாபத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் தணியாத வேட்கை!உலகிலேயே அதிக இலாபம் கொழிக்கும் தொழில் மருந்து தயாரிப்பாகும். ஒரு மருந்தின் காப்புரிமைக் காலம் முடிந்த பிறகு, வேறு எந்தவொரு நிறுவனமும் அம்மருந்தை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்பது விதி.அதனால் பன் னாட்டு நிறுவனங்கள் தங்கள் மருந்தின் காப்புரிமைக் காலம் முடிவதற்கு முன்பே, அம்மருந்தில் சிற்சில மாற்றங்கள் செய்து அவற்றைப் புதிய மருந்துபோல் காட்டி, மீண்டும் புதியதாகக் காப்புரிமை பெற்றுத் தொடர்ந்து கொள்ளை இலாபம் அடிக்க முயல்கின்றன. இது ‘ Ever-Greening’ எனப்படுகிறது.

“அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்துகளுக் கான ஆணையர் அலுவலகம் 1989க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் 1,035 புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 65விழுக்காடு மருந்துகள்,சந்தையில் விற்பனையில் உள்ள மருந்து களின் மூலக்கூறில், சிறிய அளவுக்கு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டவைகளாகும். 11 விழுக்காடு மருந்துகள் பழைய மருந்துகளையே எல்லா வகையிலும் ஒத்த வைகளாக இருந்தன.15 விழுக்காடு மருந்துகள் மட்டுமே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்ற தன்மையிலானவை”என்று இங்கிலாந்தில் வார்விக் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் துவிஜன் ரங்னேகர் என்பவர் கூறுகிறார் (தி இந்து, 3.4.2013).

இதே வழிமுறையைப் பின்பற்றித் தான், நோவார்டிஸ் நிறுவனம், குருதிப் புற்றுநோய்க்கான கிளிவெக் மருந் தில் சிறிய அளவில் மாற்றம் செய்து,புதிய மருந்து போல் காட்டி, இந்தியாவில் காப்புரிமை பெற, கடந்த ஏழு ஆண்டுகளாக அடாவடித்தனமாக முயன்றது.

நோவார்டிஸ் நிறுவனம் கிளிவெக் மருந்துக்கு 1993இல் அமெரிக்காவில் காப்புரிமைக்கு விண்ணப்பித்தது.1996இல் காப்புரிமை பெற்றது.2001ஆம் ஆண்டு இம்மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது.இம்மருந்தின் இராசயனப் பெயர் இமடினிப் மிசைலேட் ( Imatinib Mysylate) என்பதாகும்.இம்மருந்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்ததாக நோவார்டிஸ் நிறுவனம் கூறுகிறது. பீட்டா கிரிஸ்டலைன் வடிவம் (Beta Crystalline Form ) இது என்று கூறுகிறது.

கிளிவெக் மருந்தைவிட 30விழுக்காடு ஆற்றல் மிக்கது இம்மருந்து;எளிதில் கரையக்கூடியது;உடலில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மையது;கூடுதல் வெப்பத் தைத் தாங்கவல்லது; நீண்டகாலம் சேமிக்கக் கூடியது என்று நோவார்டிஸ் நிறுவனம் கூறுகிறது. ஆனால் இதற்கான ஆராய்ச்சி ஆதாரங்களை அளிக்கவில்லை.

இதன் அடிப்படையில் 2005ஆம் ஆண்டு இந்தியக் காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்டவுடன், காப்புரிமை கோரி,சென்னையில் உள்ள காப்புரிமைக் கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தது. 2005 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட காப்புரிமைச் சட்ட விதி 3(டி)இன்படி காப்புரிமை தரவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் கோரியிருந்தது., அறிவுசார் காப்புரிமை விதியின்படி 2003முதல் இந்தியாவில் கிளிவெக் மருந்தை விற்பதற்கான முற் றுரிமை நோவார்டிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

காப்புரிமை அலுவலகம் இக்கோரிக்கை விண் ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. 2006 மே மாதம் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நோவார்டிஸ் வழக்குத் தொடுத்தது. 2007 மே மாதம் சென்னை உயர்நீதிமன்றமும் நோவார்டிஸ் நிறுவனத் தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.2009ஆம் ஆண்டு இந்தியக் காப்புரிமை மேல்முறையீட்டு மன்றத்தில் முறையீடு செய்தது. அங்கேயும் தள்ளுபடி செய்யப் பட்டது. இறுதியாக 2009 ஆகசுட்டு மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கின் மீதுதான் 1.4.2013 அன்று, நீதிபதி அஃப்தாப் ஆலம், நீதிபதி இரஞ்சனாதேசாய் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, “நோவார்டி° காப்புரிமை கோரும் மருந்து புதிய கண்டுபிடிப்பு அல்ல;காப்புரி மைச் சட்டம் 3(டி)இன்படி புதிய மருந்துக்கு மட்டுமே காப்புரிமை வழங்கலாம்;எனவே இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது”என்று தீர்ப்பளித்தது.

நோவார்டிஸ் நிறுவனம் இந்தியாவில் இனி மருத்துவ ஆராய்ச்சியில் முதலீடு செய்யப் போவதில்லை என்று பூச்சாண்டி காட்டியுள்ளது.பெரிய பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் புதிய மருந்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க, 100 கோடி டாலருக்கு மேல் செலவாகிறது; பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது என்று கூறுவதே ஒரு பொய்.இத்தொகையில் 20 விழுக்காடு முதல் 25விழுக்காட்டுக்குமேல் செலவாகாது என்று ஆராய்ச்சியா ளர்கள் கூறுகின்றனர். மேலும் காப்புரிமை பெற்றபின், இம்மருந்தை அமெரிக்காவில் விற்பதன் மூலம் மட்டுமே ஒரே ஆண்டில் செலவிட்ட தொகையைப் பெற்றுவிடுகின்றன (தி இந்து-தலையங்கம்-2.4.2013).

குருதிப்புற்றுநோய் தவிர,பிற புற்றுநோய்கள்,எய்ட்ஸ்,கல்லீரலழற்சி நோய்கள்  முதலான நோய்களுக்கான மருந்துகள் விலையும் கிளிவெக் மருந்து விலை போல் மக்களால் வாங்க முடியாத அளவில் அதிகமாக உள்ளன.மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டிய இதயநோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய், காச நோய் முதலானவற்றின் மருந்துகளின் விலையும் அதிகமாக உள்ளது.

மக்கள் அனைவருக்கும் ஒரே தரமான இலவயக் கல்வியும்,மருத்துவமும் தரவேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும்.ஆனால் இந்தியாவிலோ கல்வியும் வணிகமும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தனியார்மயமாகி,வணிகக் கொள்ளையாகிவிட்டன. மருத்துவச் செலவில், 70 விழுக்காடு தொகையை மருந்துகளை வாங்குவதற்காகவே மக்கள் செலவிடுகின்றனர்.மருந்து நிறுவனங்களே விலைகளை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடுவண் அரசின் நலவாழ்வு அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வறிக்கையில், மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்தல், புதிய மருந்துகளுக்கு உரிமம் வழங் குதல் முதலானவற்றில் மருந்து நிறுவனங்களின் தூண்டுதலால் பல முறைகேடுகள் நடக்கின்றன என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத் தீர்ப்பை மட்டும் அரசின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்றாமல்,நடுவண்அரசும்,மாநில அரசுகளும் - மருந்துகளும் மருத்துவ வசதிகளும் ஏழை,எளிய மக்களுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

Pin It