அது விடுமுறைக்காலமும் அல்ல; விடுமுறையில் சொந்த ஊருக்கோ, சுற்றுலாவிற்கோ பயணம் செல்லும் கூட்டம் இல்லை. நண்பர்களின் உறவினர்களின் திருமணத்திற்காகப் பயணம் செய்ய அது திருமணத் திற்கான முகூர்த்த நாளும் அல்ல; பயணம் செய்தே தீரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் பிற நிகழ்ச்சிகளும் அன்று இல்லை. ஆனாலும் மதுரை தொடர்வண்டிச் சந்திப்பு மக்கள் நெரிசலில் தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது. கதர்ச் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்த ஒரு முதியவர் சென்னைக் குச் செல்வதற்காக முதல் நடைமேடையில் நின்றிருந்த பாண்டியன் விரைவு வண்டியில் ஏறுவதற்கு மக்கள் திரளின் ஊடே சென்று கொண்டிருந்தார். நிலையத்தில் இருந்த கடிகாரம் மணி இரவு 8.20 என்று காட்டிக் கொண்டு இருந்தது. இன்னும் 15 நிமிடங்களில் வண்டி புறப்பட்டுவிடும். அதற்குள் பொதுப் பெட்டி (General Compartment) உள்ள இடத்தை அடைந்து ஏற வேண்டும். திரைப்படங்களில் உச்சக்கட்டம் (Climax) என்பதற்காகக் காட்டப்படும் அபத்தமான நிகழ்வுகள் போன்று எதுவுமின்றி வண்டி புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பேயே குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல், வண்டியில் ஏறியும் விட்டார். ஆனால் அமருவதற்கு இடம்தான் கிடைக்க வில்லை. இடம் கிடைக்குமோ என்று தேடி முடிப் பதற்குள் வண்டி புறப்பட்டுவிட்டது.

அமர்வதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த முதியவரைக் கண்ட மற்றவர்கள் தங்களுக்குள் அனுசரித்துக் கொண்டு அவர் ஏதோ ஒரு வகையில் அமர்வதற்கு இடத்தை ஏற்படுத்திக் கொடுத் தார்கள். அவரும் ஏதோ ஒரு வகையில் அமர்ந்தார். இவ்வாறு நெருக்கி அடித்துக்கொண்டு அமர்ந்து இரவு முழுவதும் பயணம் செய்ய வேண்டிய கொடுமை யைப் பற்றி அவர் நினைத்துப் பார்க்கும் நிலையில் இல்லாத அளவிற்கு வேறு துயரமான நிகழ்வு அவருடைய மனதை ஆக்கிரமித்து இருந்தது.

இவ்வளவு சிரமங்களையும் இந்த முதிய வயதில் உள்வாங்கிக் கொண்டு செரித்துக் கொண்டு இருந்த அந்த முதியவரைப் பார்த்து உடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் “பெரியவரே! இந்த மாதிரி ஜெனரல் கம்பார்ட்மெண்டிலே வந்து ஏன் கஷ்டப் படறீங்க? ரிசர்வேஷன் செய்து இருக்கக் கூடாதா?” என்று கேட்டார். “அவசரமாகப் புறப்பட வேண்டிய தாச்சு தம்பி! ரிசர்வேஷன் செய்யணும்னா மூணு நாலு மாசத்துக்கு முன்னாலே இல்லே செய்ய வேண்டி இருக்குது” என்று அந்த முதியவர் பதில் கூற, கேள்வி கேட்டவரும் அதிலுள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டார்.

இன்னொருவர் “இப்படி நெருக்கி அடித்துக் கொண்டு போவதற்குப் பதிலாகப் பஸ்சில் போகலாமே” என்று வினவ, முதியவரும் “இந்த வயசான காலத்திலே பஸ்சிலே போக முடியலே தம்பி! அது சரி! நீங்க பஸ்சிலே போயிருக்கலாமே?” என்று அந்த முதியவர் எதிர்வினாத் தொடுத்தார். “அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? இதுலே போறத்துக்கு ரூ.108 ஆகுது. பஸ்சிலே போகணும்னா ரூ.600-700-800ன்னு ஆகுது. கவர்மெண்ட் பஸ்சுன்னாக்கூட ரூ.200, 300ன்னு ஆகுது” என்று அந்த இன்னொருவர் புலம்பித் தீர்த்தார்.

அந்நேரத்தில் அங்கிருந்த நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் கதர்ச் சட்டையும் கதர் வேட்டியும் போட்டிருப்பதைப் பார்த்தால் காங்கிரசுக் கட்சிக்காரரோ அல்லது சுதந்திரப் போராட்டத் தியாகியோ என்று நினைக்கத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். அந்த முதியவரும் தான் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல என்றும் ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் என்றும் பதிலளித்தார். உடனே அந்த நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர் “அப்படின்னா உங்களுக்கு கவர்மெண்ட் கொடுக்கிற இலவச ரயில் பாஸ் இருக்குமே? அதுலே நீங்க முதல் வகுப்பிலேயே போகலாமே, துணைக்கு இன்னொருத்தரையும் கூட்டிப் போகமுடியுமே, ஏன் இப்படி வந்து கஷ்டப் படறீங்க?” என்று வியப்புடன் வினவினார்.

அதற்கு அந்த முதியவர் நிதானமாக, “கவர்மெண்ட் பென்சனும், இரயில் பாசும், சுதந்திரப்போராட்டத்திலே ஜெயிலுக்குப் போனவங்களுக்குத்தான் கெடைக்குது. நான் 1927இலே பிறந்தேன். எனக்கு 15 வயசு ஆனதிலேயிருந்து போராட்டத்துக்குப் போனேன். போலீஸ் கைது செஞ்சாக்கூட, பின்னால சின்னப் பையன்னு சொல்லி விட்டுடுவாங்க. அதனாலே ஜெயிலுக்குப் போகலே” என்று கூறும்போதே, “இது ரொம்பவும் அநியாயம். இன்னைக்கு யார் யாரோ எப்படி எப்படியோ அரசாங்கப் பணத்தைச் சுருட்ட றாங்க. சுதந்தரப் போராட்டத்துக்குப் போன ஒருத்தர் ஜெயிலுக்குப் போகலேங்கறதுக்காகப் பென்சன் குடுக்க லேன்னா என்னங்க நியாயம்?” என்று அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் பொரிந்து தள்ளினார்.

அதற்கு அந்த முதியவர் “எனக்குப் பென்சனும் ரயில் பாசும் கிடைச்சா சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனால் எல்லோருமே நான் ஜெயிலுக்குப் போகலை; ஆனா போராட்டத்துக்குப் போனேன்னு சொல்லிப் பென்சன் கேட்க ஆரம்பிச்சா என்ன பண்றது? அதனாலே இந்த விதிமுறையைக் கொறை சொல்றதுலே அர்த்தம் இல்லை” என்று கூறவும், அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அப்பொழுது வண்டி திண்டுக்கல்லை அடைந்தது. அங்கு சிலர் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். ஏறியவர்கள் உட்காருவதற்கு இடம் கிடைக் குமா என்று சுற்றிப் பார்த்து ஏமாந்து, நடைவழியி லேயே அமர்ந்து கொண்டார்கள். அப்படி அமர்ந்தவர் களில் ஒருவர் இவ்வளவு அதிகமாக மக்கள் பிரயாணம் செய்யும் பொழுது வண்டிகளின் எண்ணிக்கையைப் போதுமான அளவிற்கு அதிகப்படுத்தாத அரசாங்கத் தைத் திட்டித் தீர்த்தார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் “இப்பொழுது உள்ள வண்டிகளை ஓட்டும் போதே கிராசிங் பிரச்சனை வருது. இன்னும் அதிகமா வண்டிகளை விடணும்னா நாடு பூராவும் ரெட்டைப் பாதை போட ணும். சொல்லப்போனா அதுவும் பத்தாது. எக்ஸ்பிரஸ் வண்டி போறதுக்கும் வர்ரதுக்கும் ரெண்டு பாதையும், லோக்கல் வண்டிக்கு ரெண்டு பாதையும் போடணும். அப்பத்தான் ஜனங்களுக்கு வேண்டிய அளவு வண்டி விட முடியும். அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?” என்று அரசாங்கத்தின் செயல்படா நிலையை நியாயப்படுத்திப் பேசினார்.

அவரை நோக்கி அந்த முதியவர் “ஏன் தம்பி! அது முடியாத காரியமா?” என்று வினவவும், அவர் “அதெப் படிங்க முடியும்? நாலு பாதை போடணும்னா நெலம் வேணாமா? அதை எடுக்கணும்னா நெலச் சொந்தக் காரங்க ஒத்துக்குவாங்களா? அதுக்கு மொதல் போடற துக்குப் பணம் வேணாமா?” என்று தன்னுடைய நியாயத்தை மேலும் வலுப்படுத்திப் பேசினார்.

அதற்கு அந்த முதியவர் “கார் தொழிற்சாலைக்கும், அதுபோல மத்த தொழிற்சாலைங்களுக்கும் நெலத்தை எடுத்துக்கிறாங்களே! அது எப்படி முடியுது?” என்று வினவவும், அந்த நியாயவாதி “அது...அது...” என்று பதில் வராமல் திணறி, பின் சமாளித்துக் கொண்டு அதுலே லாபம் வரும். இதுலே என்ன கெடைக்கப் போகுது? நஷ்டம் இல்லே வருது?” என்று முடித்தார்.

அதற்கு அந்த முதியவர் “நஷ்டம் வருதுன்னா இரயில் வேலையை இழுத்து மூடிரலாமே?” என்று கேட்கவும், அந்த நியாயவாதிக்குக் கோபம் வந்து விட்டது. “என்னங்கய்யா சொல்றீங்க? அப்ப நம்ம எல்லாம் ட்ராவல் பண்ண வேணாமா?” என்று ஓங்கிய குரலில் கேட்டார்.

அந்த முதியவர் பொறுமையாக “நாம ட்ராவல் பண்ணாத்தான் நஷ்டம் வருதே? அப்படின்னா அந்த நஷ்டத்தைத் தாங்கிக்கிட்டு வண்டி ஓட்றதை ஒத்துக் கிறீங்க. அந்த நஷ்டம் இன்னும் கொஞ்சம் அதிகமானா என்ன குடிமுழுகிப் போயிடும்?” என்று கேட்டார். தான் கோபமாகப் பேசியும் தன்னிடம் அந்த முதியவர் பொறுமையாகவே பேசியதைக் கண்டு சற்றுத் தணிந்து போன அந்த நியாயவாதி “எதற்கும் ஒரு அளவு இருக்கு இல்லையா?” என்று அமைதியாகக் கேட்டார்.

மீண்டும் அந்த முதியவர் “அந்த அளவு தான் என்ன தம்பி? இரயில்வே வரவு-செலவு மட்டும் இல்லே; நாட்டோட எல்லா வரவு-செலவையும் கொஞ்சம் கவனமாப் பாருங்க. ஜனங்க உபயோகிக்கிற செர்வீ சாலே நஷ்டம் வர்ரதே இல்லே. உதாரணமா பஸ் ஓட்டறதெ எடுத்துங்குங்க. அரசாங்கம் பஸ் ஓட்றதுக் காக ஒரு கார்ப்பரேஷனை வைக்குது. அதுக்குக் கடன் கொடுத்து, அந்தக் கடனுக்கு வட்டி வாங்கிக்கிது. பஸ் கார்ப்பரேசன் கணக்குக் காட்டும் போது வட்டிய செலவுல காட்டிறதாலே இலாபம் குறையுதுன்னும், நஷ்டம் வருதுன்னும் சொல்லுது. ஏன் அரசாங்கமே நேரா பஸ் ஓட்டினா இந்த வட்டிச் செலவு இருக்காது இல்லே.

அரசாங்கம் தன் பணத்துக்குத் தானே வட்டி எடுத்துக்கிட்டு, நஷ்டக் கணக்குச் சொல்லுது. அதோட ஊழல் வேறே. உண்மையாப் பார்த்தா இதுலே எல்லாம் நஷ்டம் இல்லே; இந்த மொதலாளிங்களுக்கு வரிச்சலுகை, கொறஞ்ச விலையிலே மின்சாரம், தண்ணீர் இன்னும் பல வசதிகள் பண்ணிக் குடுக்கிற திலே செலவாகுற பணத்திலே பத்துலே ஒரு பங்கு நமக்காகத் திருப்பிவிட்டாலே போதும்; நாம இரயிலுக் கும், பஸ்சுக்கும் ரிசர்வேஷன் பண்ணவே அவசியப் படாது. ட்ராவல் பண்றவங்க அத்தனை பேரும் வசதியா ட்ராவல் பண்ற அளவுக்கு வண்டி விட முடியும். இதேபோல மத்த வசதிகளையும் பண்ண முடியும்” என்று கூறிவிட்டு நிறுத்தினார். முதியவரின் பேச்சை அந்த நியாயவாதி மட்டுமல்லாமல் அவரைச் சுற்றி இருந்த அனைவரும் கேட்டனர்.

அவர்களுள் திண்டுக்கல்லில் ஏறி, அதிக வண்டிகள் விட வேண்டும் என்று திட்டித் தீர்த்தவர் அந்த முதியவரைப் பார்த்து “அப்ப ஏன் நம்மளை இப்படி வதைக்கிறாங்க? நெறைய வண்டி விட்டுத் தொலைக்க வேண்டியதுதானே?” என்று அப்பாவித்தனமும், கோபமும் கலந்த குரலில் கேட்டார்.

முதியவர் பேச ஆரம்பிக்கையில் இருமல் வந்தது. உடனே பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடமிருந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு, தண்ணீரைக் குடித்துவிட்டு அம்முதியவர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். “தம்பிகளா! எல்லாத்துக்கும் காரணம் இந்த சமூக அமைப்புதான். இப்ப நம்ம சமூகம் முதலாளித்துவ முறையிலேதான் போயிக்கிட்டிருக்கு. அந்த முறையிலே என்ன தொழில் செஞ்சா அதிக லாபம் கெடைக்குமோ அந்தத் தொழிலைத்தான் செய்ய முடியும். கார், ஃபிரிட்ஜ், ஏசி மெஷின் இதுகளை எல்லாம் உற்பத்தி செஞ்சா நல்ல லாபம் கெடைக்குது. விவசாயம் செஞ்சா கொறைஞ்ச லாபம் கெடைக்குது; இல்லேன்னா நஷ்டம் வருது. அதனாலே கார், ஃபிரிட்ஜ், ஏசி மெஷின் இதுகளையே உற்பத்தி பண்றாங்க. விவசாயம் நசிந்து வருது” என்று கூறிக்கொண்டு இருந்த முதியவரை இடை மறித்து, ஒரு இளைஞர் “ஆமாங்கையா கார், ஃபிரிட்ஜ், ஏசி மெஷின் எல்லாம் களோபல் வார்மிங்கை அதிமாக் கும் இல்லையா?” இப்படி இதுகளையே உற்பத்தி செஞ்சா உலகம் அழிஞ்சிடாதா?” என்று கேட்டார்.

முதியவர் “இதுபோல யோசிக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. ஆமா! இன்னைக்கு இருக்கிற உற்பத்தி முறை தொடர்ந்தா உலகம் அழியறதைத் தடுக்க முடியாது” - என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே, மீண்டும் அந்த இளைஞர் குறுக்கிட்டு “இதை மாத்துறதுக்கு ஏதாச்சும் வழி இருக்காங்கய்யா?” என்று அவசரக் குரலில் கேட்டார்.

முதியவரும் சிரித்துக் கொண்டே “நிச்சயமா இருக்கு. இன்னைக்கு இருக்கிற முதலாளித்துவ முறையை ஒழிச்சிட்டு சோசலிச முறையை உலகம் பூராவும் கொண்டாந்துட்டா, இந்த குளோபல் வார்மிங்லேயி ருந்து உலகத்தைக் காப்பாத்திடலாம்” என்று கூற, “சோசலிசம்னா அதுலே மனுஷனுக்கு சுதந்தரம் இருக்காதுல்லே” என்று நடைவழியில் அமர்ந்திருந்த திண்டுக்கல்காரர் கேட்டார்.

முதியவர் “இப்பொழுது நீங்க சுதந்தரமா இருக்கீங் களா தம்பி!” என்று கேட்டுச் சற்று இடைவெளி விட்டு “தம்பிகளா! இன்னைக்கு ஒருவர் வேலை வேணும்னா, மத்தவங்க கிட்டே கெஞ்சி நிக்க வேண்டியிருக்கு. வேலை கொடுத்தவன் என்ன தப்பு செஞ்சாலும் எதிர்த்து எதுவும் கேட்க முடியாது. இது சுதந்திரமா? சோசலிச அமைப்புன்னா வேலை வேணும்னு யார்கிட்டேயும் கெஞ்சி நிக்கணும்னு அவசியம் இல்லே. அது அரசாங் கத்தோட கடமை. வேலை உத்தரவாதம் இருக்குன் னாலே மேலே இருக்கிறவன் செய்யிற தப்பைத் தட்டிக் கேட்கும் தைரியம் வந்துடும். இது சுதந்தரமா? செய்ற தப்பை மத்தவங்க தட்டிக் கேட்கக் கூடாதுன்னு ஆசைப்படறவங்க தான் சோசலிசத்திலே சுதந்தரம் இல்லேன்னு சொல்லுவாங்க. ஆனா சோசலிசத்திலே தான் உண்மையான சுதந்தரம் இருக்கு” என்று கூறி நிறுத்தினார்.

புவிவெப்ப உயர்வு பற்றி ஆர்வம் கொண்ட இளைஞர் முதியவரைப் பார்த்து “சோசலிசம் எப்படிங்கய்யா குளோபல் வார்மிங் பிரச்சினையைத் தீர்க்கும்?” என்று கேட்டார்.

உடனே முதியவரும் “முதலாளித்துவ சமூகத்திலே இலாபம் கிடைக்கும் பொருளைத்தான் உற்பத்தி செய்ய முடியும். சோசலிச சமுதாயம் அப்படி இல்லே. அங்கே இலாபம் வருதா இல்லையான்னு பாக்கமாட் டாங்க. நம்ம மக்களுக்கு சமூகத்துக்கு என்ன வேணும்னு பார்த்து அதுகளை உற்பத்தி பண்ணுவாங்க. இன் னைக்கு உலகத்திலே நிறைய பேர் பட்டினி கிடக்காங்க. அதனாலே விவசாயமும், மரம் வளர்க்கிற தும் ரொம்பவே செய்யப்படும். கார் உற்பத்தி ரொம்பவே கொறஞ்சிடும். ட்ராவல் பண்ணனும்னா ரயில் அல்லது பஸ்சிலே தான் பண்ணனும். அவசர, அவசிய வேலைக் குத்தான் கார்லே போகலாம். அதனாலே குளோபல் வார்மிங் அதிகப்படாது. விவசாயமும், மரம் வளர்க்கறதும் மக்களோட பசி, பட்டினியைக் கொறைக்கிற நேரத்திலே குளோபல் வார்மிங்கை கொறைக்கவும் செய்யும். அதனாலே உலகத்தை அழியாம காப்பாத்தலாம்.

லெனின், ஸ்டாலின், மாவோ காலத்திலே எல்லாம் மக்களுக்குச் சுதந்தரம் வேணுங்குறதுக்காகத்தான் சோசலிசம் வேணும்னு நிலைமை இருந்தது. ஆனா இன்னைக்கு உலகம் அழியாம காப்பாத்துறதுக்கே சோசலிசம் வேணும்னு ஆயிடுச்சி. ஆனா ஜனங்க இன்னும் புரிஞ்சிக்காம இருக்கிறது வருத்தமா இருக்கு” என்று கூறி முடித்தார்.

கதர்ச் சட்டையையும், கதர் வேட்டியையும் அணிந்த ஒரு முதியவர் சோசலிசத்தைப் பற்றி இவ்வளவு எளிமையாகவும், அதேசமயம் அழுத்தமாகவும் கூறு வதைக் கேட்க, சுற்றிலும் இருந்தவர்களுக்கு வியப் பாக இருந்தது. சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காந்தியின் வழியில் கதராடையை அணிவதைப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒருவர் பொதுவுடைமைத் தத்துவத்தின்பால் எப்படி ஈர்க்கப்பட்டார் என்று தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வம் உண்டாயிற்று.

தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்ட பின், ஒருவர், “நீங்க கதர்ச் சட்டையும் கதர் வேட்டியும் போட்டிருக்கிறதைப் பார்த்து காங்கிரசுகாரர்னு நெனச் சோம். ஆனா நீங்க கம்யூனிசம் பேசறீங்க. நீங்க ஆரம்பத்திலே இருந்தே கம்யூனிஸ்டா, இல்லேன்னா யாராச்சும் சொல்லி மாறினீங்களா?” என்று கேட்கவும், முதியவரின் முகம் மாறிவிட்டது. விம்மிவிம்மி அழ ஆரம்பித்துவிட்டார்.

சுற்றிலும் இருந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். தாங்கள் தவறாக ஒன்றும் கேட்டுவிடவில்லையே? பின் அம் முதியவர் அழக் காரணம் என்ன? என்று புரியாமல் தவித்தனர்.

சிறிது நேர விம்மலுக்குப் பின் முதியவர் தாழ்ந்த குரலில் பேசினார். எங்க அப்பாவும் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்தான். எனக்குப் பதினஞ்சு வயசாகும் போது, அதாவது 1942லே எங்கப்பா காலமாயிட்டாரு. நான் எங்கப்பாவப் போலவே காந்தியவாதியா வாழ்ந் திட்டு இருந்தேன். எனக்கு ஒரு பையன் பொறந்து பெரியவனான பிறகு, அவன் கம்யூனிசத்தைப் பத்தி தெரிஞ்சிட்டு எனக்குச் சொல்லுவான். நான் பையன் தறுதலை ஆயிட்டானோன்னுதான் நினைச்சேன். ஆனா எந்த விஷயத்தையும் பொறுமையாவே பேசறதைப் பாத்ததுக்கப்பறம் அவன் தறுதலை இல்லேன்னு புரிஞ்சுக்கிட்டேன். இருந்தாலும் கம்யூனிசத்தை ஒத் துக்கலே. ஆனா நாளாக நாளாக அவன் பேச்சிலே இருந்த நியாயம் புரிய ஆரம்பிச்சுது. நானும் கம்யூனிஸ்ட் தத்துவப் புத்தகங்களைப் படிச்சுப் பார்த்தேன். அதுதான் சரின்னு விளங்கிச்சு” என்று கூறினார்.

“அது சரிங்கய்யா! அதுக்கு ஏன் அழறீங்க?” எனச் சுற்றிலும் இருந்தவர்கள் கேட்க, முதியவர் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். சற்றுநேர அழுகைக்குப்பின் “அந்த மகன்தான் இன்னைக்கு மத்தியானம் அவன் ஃபாக்டரியிலே நடந்த விபத்துலே செத்துப்போயிட் டான். அதுக்காகத்தான் நான் சென்னைக்குப் போயிட்டு இருக்கேன்” முதியவரின் அழுகை நிற்காமல் தொடர்ந்தது.

உடனிருந்த பயணிகள் அவருக்கு ஆறுதல் கூறவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Pin It