முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, 16.5.2013 அன்று எல்லா நாளேடுகளிலும் “சாதனை புரிந்த ஈராண்டு -சரித்தரம் பேசும் பல்லாண்டு”என்ற தலைப்பில் நான்கு பக்க அளவிலான விளம்பரம் அரசால் வெளியிடப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதா விதி 110கீழ் 100தடவைகளுக்குமேல் நீண்ட அறிக்கைகளைப் படித்தார் என்பது சாதனைப் பட்டியலில் இடம்பெறாதது வியப்பளிக்கிறது.வழக்கம்போல் 14.5.2013அன்று முதலமைச்சர் செயலலிதா விதி 110இன் கீழ் சட்டப்பேரவையில் ஒரு நீண்ட அறிக்கையைப் படித்தார்.

அப்போது,“பெருமை வாய்ந்த தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் வகையில்,அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்தர தேவி சிலையைப் போல தமிழர்களின் நாகரிகம்,பண்பாடு,இலக்கியச் செல்வங்கள்,கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில்,சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய்ச் சிலை அமைக் கப்படும்” என்று அறிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள சுதந்தர தேவி சிலை நியூயார்க் துறைமுகம் அருகே கடல் பகுதியில் உள்ள குட்டித் தீவில் அமைந்துள்ளது.வடஅமெரிக்கா,இங்கிலாந்தின் காலனிய ஆட்சியிலிருந்து 1776இல் விடுதலை பெற்றது.சுதந்தரம் பெற்றதன் நூற்றாண்டைக் குறிக் கும் வகையில்,சுதந்தர தேவியின் சிலை 1876இல் நிறுவப்பட்டது.சிலையின் உயரம் 151 அடி. பீடத்துடன் சேர்த்து இதன் உயரம் 305 அடியாக உள்ளது.

இந்துக் கடவுள்களின் சிலைகளுக்குப் ‘பால் அபிஷேகம்’ செய்வது போல், அமெரிக்காவின் சுதந்தர தேவி சிலைக்குச் ‘குருதி அபிஷேகம்’ செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க அய்க்கிய நாடுகள் (United States of America- U.S.A.) என்றழைக்கப்படும் வடமெரிக்கா என்கிற நாடே, கொலம்பஸ் 1492இல் அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்கு முன் அங்கு வாழ்ந்திருந்த பல இலட்சம் தொல்குடியினரைக் கொன்று குவித்து,அவர்களின் மண்டையோடுகளின் மீது நிறுவப்பட்டதாகும்.எனவே அமெரிக்காவின் சுதந்தர தேவியின் சிலை என்பது ‘இரத்தக் காட்டேரி’யின் சிலையே ஆகும்.

வடஅமெரிக்கா உலகில் எந்தவொரு நாட்டின் சுதந்திரத்திற்கோ விடுதலைக்கோ எவ்வகையிலும் உதவவில்லை.முதல் உலகப் போரினால் நிலை குலைந்திருந்த பிரித்தானியப் பேரரசை வீழ்த்தி, தான் உலக வல்லரசாக விளங்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்தால்,பிரித்தானிய ஆட்சியின்கீழ் இருந்த இந்தியா போன்ற எண்ணற்ற காலனிய நாடுகளுக்குச் சுதந்தரம் வழங்க வேண்டும் என்று கூறியது.இரண்டாம் உலகப் போருக்குப்பின் வடஅமெரிக்கா உலகில் மாபெரும் வல்லரசாக உருவானது.இரண்டாம் உலகப் போரில் இரண்டு கோடி சோவியத் மக்கள் தம் இன்னுயிரை ஈந்து,மானுடப் பகைவன் இட்லரை வீழ்த்திய தன் விளைவாக சோசலிச சோவியத் நாடும் மற்றுமோர் உலக வல்லரசாக உருவெடுத்தது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் வடஅமெரிக்கா 1950களில் கொரியா தொடங்கி வியத்நாம், இந்தோனேசியா; தென்அமெரிக்க நாடுகள் எனப் பல நாடுகளில் தன் படைகளை அனுப்பி அந்நாடுகளில் உண்மையான சுதந்தரமும்,சனநாயகமும் ஏற்படாமல் தடுத்தது. அந்நாடுகளில் பல இலட்சம் மக்களைக் கொன்றது. சர்வாதிகாரத்தை ஒழித்து, சனநாயகத்தை நிலைநிறுத் துவது என்ற பெயரால் ஆப்கானிஸ்தானிலும் ஈராக் கிலும் வடஅமெரிக்கா மக்களைக் கொன்று குவித்து,தன் பொம்மை ஆட்சியை ஏற்படுத்தியிருப்பது அண் மைய வரலாற்றுச் செய்தியாகும்.

அமெரிக்காவின் சுதந்தர தேவியின் சிலையின் குறியீடும் அமெரிக்கா ‘உபதேசிக்கும்’ சுதந்தரமும் சனநாயகமும் எந்த அளவுக்கு உண்மை நிலைக்கு எதிரானதோ அதேபோன்றதுதான் முதலமைச்சர் செயலலிதா சங்கத் தமிழ் முழங்கிய மாமதுரையில் தமிழ்த் தாய்க்குச் சிலை அமைக்கப்படும் என்று கூறுவதும்!

முதலமைச்சரின் தமிழ்த்தாய்ச் சிலை அறிவிப்புக்கு அய்ந்து நாள்களுக்குமுன்,10.5.2013 அன்று கல்வி அமைச்சர் வைகைச்செல்வன்,“தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கக் கடந்த ஆண்டு அரசு அனுமதியளித்தது. இதன்படி கடந்த ஆண்டு 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

வரும் கல்வியாண்டு (2013-14)முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள்,நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங் கப்படும்.இதனால் ஆண்டுக்கு 1.5இலட்சம் மாணவர்கள் பயனடைவர்”என்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போது அறிவித்தார்.

ஆங்கிலேயன் இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்டதால்,அவனுடைய ஆட்சி நிர்வாகத் தேவைக்காக ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தினான்.அப்போதே இதைப் பலரும் எதிர்த்தனர்.காந்தியார்,“எனக்கு மட்டும் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப் படுமானால்,அன்னிய மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன்.நமது ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன்”என்று கூறினார்.

1937இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இராசகோபாலாச்சாரி இருந்தபோதுதான் முதன்முதலாகப் பொதுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1954இல் காமராசர் முதலமைச்சரானபின் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மட்டுமே இருந்தது.ஆனால் 1965இல் பக்தவத்சலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, உயர்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தார்.தமிழ் வழிக் கல்விக்குச் சாவு மணி முதன்முதலில் அடிக்கப்பட்டது.

பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா சொன்னார்.ஆனால் காலப் போக்கில் முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையை தி.மு.க.மூட்டைக் கட்டி வைத்தது. பிறகு பார்ப்பன எதிர்ப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகிவற்றிலும் மென்மையான போக்கை மேற்bhகண்டது. தமிழ்மொழி உணர்வை மட்டுமே முதன்மையான மூலதனமாகக் கொண்டது. சங்க இலக்கியங்களை - பழைய பெருமைகளை - சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீர வரலாறுகளைப் போற்றிப் புகழ்ந்து இளைஞர்களை ஈர்த்தது. நல்ல தமிழில் உரையாடுவது, எழுதுவது,குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவது முதலான நடை முறைகளை வளர்த்தெடுத்தது.

1965ஆம் ஆண்டு மாணவர்களும் இளைஞர்களும் வீறுகொண்டெழுந்து நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டு 1967இல் தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.
‘சென்னை மாநிலம்’ என்று இருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என்று அண்ணா தலைமையிலான தி.மு.க.ஆட்சி சட்டப்படி மாற்றியது.சென்னை மெரீனா கடற் கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலைகளை நிறுவியது.உலகத் தமிழ் மாநாடுகள்,பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தியது. தி.மு.க. ஆட்சி வள்ளுவர் கோட்டம் கட்டியது. குமரிமுனையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவியது.

ஆனால் தமிழை அறிவியல் மொழியாக,கல்வி மொழியாக வளர்த்தெடுக்க உருப்படியாக எதையும் செய்யவில்லை. கலைஞர் கருணாநிதி 1969 முதல் 1976 வரை முதலமைச்சராக இருந்தபோது ‘ஆங்கில மோகம்’இல்லாதிருந்த சூழலில் தமிழை உயர் கல்வி மொழியாக வளர்த்தெடுக்க தவறிவிட்டார்.எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்தபோது ஆங்கில வழி பதின்நிலைப் (மெட்ரிக்) பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன.

கலைஞர் கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக வந்த போது பதின்நிலைப் பள்ளிகள் இன்னும் அதிக அளவில் திறக்கப்பட்டன. 1978இல் பதின்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 34ஆக இருந்தது. இப்போது 3,474 ஆங்கில வழி பதின்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. ஆகவே தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் 1.30 கோடி மாணவர்களில் 40விழுக்காட்டினருக்கு மேல் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் கேடான நிலை உருவாகி விட்டது.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 25.4.1998 அன்று 101 தமிழறிஞர்கள், குறைந்தபட்ச மாக முதல் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.இந்த நெருக்குதல் காரணமாக இக்கோரிக்கையை ஏற்பதாக அரசு கூறியது.இது குறித்து ஆராய நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் 1 முதல் 5 வரை உள்ள பள்ளிகளில் தாய்மொழி வழியில் கல்வி அளிப் பதற்கான சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண் டும் என்று கூறியது. ஆனால் கலைஞர் கருணாநிதி இத்தகைய சட்டத்தை இயற்றுவதற்கு மாறாக, 1999 சனவரி 13 அன்று ஓர் அரசு ஆணையைப் பிறப்பித்தார்.

ஆங்கில வழிப் பள்ளிகள் சார்பில் அரசின் இந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் இந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு இன்னமும் விசாரிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆனால் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் மேற்குவங்கம், குசராத், மராட்டியம் போன்ற பல மாநிலங்களில் தொடக்கப் பள்ளிகளில் அந்தந்த மாநிலத்தின் தேசிய மொழியே பயிற்று மொழியாக இருக்கிறது.

ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்பிக்கப்படுகிறது.ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த மொழி என்றும்,திராவிட மொழி களுக்குத் தாயாகவும், ஆரிய மொழிகளுக்கு மூலமாக வும் விளங்குகின்ற மொழி என்றும் பெருமிதத்துடன் கூறப்படும் தமிழ்மொழி வழியில் தொடக்கப் பள்ளி நிலையில்,கல்வி கற்பதற்குக்கூட வழியில்லை -இருக்கின்ற வாய்ப்பும் அரசால் பறிக்கப்படுகிறது என்றால் தமிழனைப்போல் தன்மானமற்ற இனம் உலகில் வேறு எதுவும் இல்லை என்பது மெய்ப்படுகிறதல்லவா!

கல்வி அமைச்சர் 10.5.2013அன்று சட்டப் பேரவையில் அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்ததற்குக் கலைஞர் கருணாநிதி ‘இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கது அல்ல’என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1999-2000ஆம் ஆண்டு முதல் சமூக அறிவியல்,கணிதம்,அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் இரண்டு பாடங்களைத் தமிழ் வழியில் கற்பிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது”என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2006 முதல் 2011 வரையில் தி.மு.க. ஆட்சியில் இதை நடைமுறைப் படுத்த எந்தவொரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?

தமிழே என் உயிர்மூச்சு என்றோ,உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்றோ, முத்தமிழ் அறிஞன் என்றோ கலைஞர் கருணாநிதி கூறிக்கொள் வதுபோல் செயலலிதா எப்போதும் சொல்லிக் கொண்ட தில்லை.நான் ஒரு பார்ப்பனத்தி என்று சட்டமன்றத் திலேயே வெளிப்படையாக அறிவித்தார் செயலலிதா. தமிழ்மொழி மீது பற்று இருப்பதாகப் பாசாங்குகூடச் செய்வதில்லை.மாறாக ஆங்கிலத்தின் மீது தனக்குள்ள ஆர்வத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துபவர்.

நீதிக் கட்சியும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் உருவாக்கிய திராவிட இயக்கத்தின் மூலக்கொள்கைகளுக்கு எதிரான கருத்துடைய செயலலிதா ஒரு திராவிட அரசியல் கட்சியின் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருப்பது வரலாற்றின் அவலமாகும். எனவே முதல் வகுப்பு முதலே ஆங்கில வழிக் கல்வியை அவர் நடை முறைப்படுத்திட முனைந்திருப்பது வியப்புக்குரிய தன்று!நாம் அதை எப்படி எதிர்கொண்டு வீழ்த்தப் போகி றோம் என்பதே தமிழர் முன் உள்ள வினாவாகும்!

ஆங்கிலேயனின் ஆட்சி அகன்ற பின்னும் ஆங்கில மொழி மீதான மோகம் நீடித்திருப்பது ஏன்? காலங் காலமாகக் கல்வி கற்கும் உரிமையை தம் முற்றுரி மையாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் ஆங்கிலே யரின் ஆட்சியில் ஆங்கிலத்தைக் கற்று அரசுப் பதவி களைக் கைப்பற்றிக் கொண்டனர்.அதன்மூலம் ஆளும் வர்க்கமாகத் தம்மைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டனர்.இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகும்,இந்தியத் தேசியத்தின் பெயரால் தெற்கே தமிழ்மொழி முதல் வடக்கே பஞ்சாபி,காஷ்மீரி வரையிலான தேசிய மொழிகளும் அம்மொழிகளைப் பேசும் இனமக்களும் உரிமைகோரி எழுச்சி பெறாதவாறு ஒடுக்கப்படுவதற்கு தில்லி ஒற்றையாட்சி முறையும் இந்தியும் ஆங்கில மொழியும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பார்ப்பன-பனியா மேல்சாதிக்காரர்களான முதலாளிகளின் பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்கான,அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நடுவண் அரசில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தகர்க்க வேண்டும்.ஒவ்வொரு தேசிய இனமும் -எடுத்துக் காட்டாகத் தமிழ்த்தேசிய மக்களைக் கொண்ட தமிழ் நாடு -தன்னுடைய மொழி, அரசியல், பொருளியல், பண்பாடு, சமூகம் குறித்த முடிவுகளை எடுக்கக்கூடிய தன்னாட்சி கொண்ட தன்னுரிமைத் தேசங்களாக அமைக்கப்பட வேண்டும்.அந்நிலையில் தான் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். இந்தியப் பெரு முதலாளிகளின்,பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும் கொள்ளை யையும் ஆதிக்கத்தையும் வீழ்த்த முடியும்

எனவே தமிழ்த் தேசிய விடுதலைக்கான தன்னுரிமைப் போரில் தமிழை ஆயுதமாக ஏந்துவோம். தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே வாழ்வியல் மொழியாக, அறிவியல் மொழியாக, ஆட்சி மொழியாக,கல்வி மொழியாக,நீதிமன்ற மொழியாக,இருக்கும் நிலையை உண்டாக்குவோம். ஆகவே வள்ளுவர் கோட்டம், குமரியில் திருவள்ளுவர் சிலை, மதுரையில் தமிழ்த் தாய் சிலை போன்ற செப்பிடு வித்தைகளுக்கு மயங்காமல், தமிழ்மொழியின் - தமிழ் இனத்தின் விடுதலைக்காக 1938ஆம் ஆண்டிலும் 1965ஆம் ஆண்டிலும் நடத்தியதைவிட வீறார்ந்த மொழிப்போரை நடத்திட முரசறைந்து அணிதிரள்வோம்; களமாடுவோம்.

Pin It