அந்த நாளில், சமூக வாழ்வில், மனுநீதியையே வாழ்வியல் அறமாகக் கொண்டிருந்தனர்- ஆட்சியாளரும், மக்களும். அந்த வாழ்க்கை முறையில் நால்வருணம் வலியுறுத்தப்பட்டுப் பின்பற்றப் பட்டக் காரணத்தால். கல்வி, ஆட்சி அதிகாரம் அனைத்திலும் பிராமணர்களே தலைமை வகிப்பவர்களானார்கள்.. மற்றவகுப்பினர் அவர்களுக்கு அடங்கித் தொண்டு புரியும் அடிமைகளாயினர்; கல்வி கற்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தனர். அந்த நாளில் சதாரா மன்னரே படிக்க ஆசைப்பட்டு இரவில் இரகசியமாகக் கல்வி கற்றார் எனில் மற்றக் குடிமக்களின் நிலை என்ன?
இத்தகைய சமூக அமைப்பில் மகர் என்ற தீண்டப்படாத வகுப்பில் விடிவெள்ளியெனத் தோன்றித், தீண்டப்படாத வகுப்பினரின் அடிமைத்தளையை அகற்றிடத் தன் வாழ்நாள் முழுதையும் அர்ப்பணித்த சமூகப்போராளி யார்? அவர் வரலாறைக் காண்போம்!
அம்பேத்கர், பிரித்தானிய இந்தியாவில் இராணுவமுகாம் அமைந்திருந்த மாவ் எனுமிடத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் இணையருக்கு 14-வது மகனாகப் பிறந்தார். அம்பேத்கார் தீண்டப்படாத மஹர் என்ற தாழ்ந்த சாதியில் பிறந்தவர். எல்லா சாதியக் கொடுமைகளுக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஆட்படுத்தப்பட்டார். அம்பேத்கரின் முன்னோர்கள் நீண்டகாலமாக பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பனியின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அம்பேத்கரின் தந்தை பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்தவர். ராம்ஜி மாலோஜி சக்பால் 1894 ஆம் ஆண்டு இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் சதாரா என்ற ஊருக்குச் சென்றார். சிறிது காலத்திற்குப்பின் அம்பேத்கர் அன்னை மரணம் அடைந்துவிட்டார். மூன்று ஆண் மக்களையும் -பல்ராம், ஆனந்த்ராவ், பீம்ராம் இரண்டு பெண் மக்களையும்-மஞ்சுளா, துல்சா ஆகியோரையும் அவர்களது அத்தை மிகுந்த கஷ்டங்களுக்கிடையேயும் அன்புடன் வளர்த்துவந்தார். இவர்களில் அம்பேத்கர் மட்டுமே உயர் கல்வி பயிலச் சென்றார். இரத்னகிரி மாவட்டத்திலுள்ள அம்பாவடே என்பது அவர்களது சொந்தக்கிராமம். அதனால் அம்பாவடேகர் என்பது அவர்களது குடும்பப் பெயராயிற்று. அதுவே பின் நாளில் அம்பேத்கர் என்று மருவியது.
இளமையில்
சதாராவில் தொடக்கப் பள்ளியில் அம்பேத்கர் கல்வி பயின்றார். அந்தப் பள்ளியில் (அம்பேத்கர்) தீண்டத்தகாத மாணவர்கள், மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டனர். ஆசிரியர்களும் அவர்களது கல்வி வளர்ச்சியைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை. பள்ளியின் உள்ளே அவர்களை அமர வைப்பதில்லை. அவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் என்றால் மேல் சாதி மாணவன் மேலிலிருந்து நீரை ஊற்ற, கையேந்தி அருந்தவேண்டும். கீழ்சாதி மாணவர் தண்ணீரையும் பாத்திரத்தையும் தீண்டக்கூடாது. தீண்டினால் நீரும் பாத்திர மும் தீட்டாகிவிடும். அம்பேத்கருக்குக் குடிக்க நீர் ஊற்றுபவர் பள்ளிச் சேவகர். சேவகர் பள்ளியில் இல்லையெனில் அம்பேத்கருக்கு அன்று குடிக்க தண்ணீர் கிடையாது. அம்பேத்கர் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவந்து அதில் அமர்ந்து தான் கல்வி. கற்கவேண்டும். வீட்டிற்குச் செல்லும்போது கோணிப்பையை எடுத்துச்செல்லவேண்டும்.
அம்பேத்கர் குடும்பத்தினர் 1897 ஆம் ஆண்டுமுதல் பம்பாயில் வசிக்கத் தலைப்பட்டனர். ஆங்கே எல்பின்ஸ்டன் உயர் நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார் அம்பேத்கர். அந்தப் பள்ளியில் அவர் ஒருவர்மட்டுமே தாழ்த்தப்பட்ட மாணவர். அந்தப் பள்ளியிலும் தீண்டப்படாத மக்கள் மீதான கொடுமைகள் தொடர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர் அவரைக் கரும்பலகையில் ஒரு கணக்கைப் போடப் பணித்தார். அவர் கரும்பலகை நோக்கிச் செல்லுமுன் சகஉயர்சாதி மாணவர்கள் கூக்குரலிட்டவண்ணம் ஓடிக் கரும்பலகைக்குப் பின் வைக்கப்பட்டிருந்த உணவுப் பாத்திரங்களை எடுத்துச் சென்றனர் - தங்கள் உணவு தீட்டா வதைத் தவிர்ப்பதற்காக. அந்நிகழ்வைக் கண்ட ஆசிரியர் ஒருவர், அம்பேத்கர் படிப்பதே வீண் என்றார். அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்திட விழைந்தார். ஆனால் பிராமணர் தவிர வேறெவரும் சமஸ்கிருதம் படிக்கத் தடை அந்த நாட்களில் இருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி பாரசீக மொழியினைப் பயின்றார். பிற்காலத்தில் அவர் தன் சொந்த முயற்சியில் சமஸ்கிருதம் பயின்று அம்மொழியில் புலமை பெற்றார்.
1906 ஆம் ஆண்டில் அம்பேத்கர் அகவை 15.. அந்தச் சிறுவயதிலேயே அவருக்கு 9 வயது நிரம்பிய சிறுமி ரமாபாயுடன் திருமணம் நடைபெற்றது. 1907 ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். தாழ்த்தப்பட்டவகுப்பிலிருந்து மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவன் அம்பேத்கர் என்பதால் மகர் சாதியினர் அதனை வெகு விமரிசையாக விழாவெடுத்துக் கொண்டாடினார்கள். விழா முடிவில் அம்பேத்கரின் குடும்ப நண்பர் கிருஷ்ணாஜி அர்ஜுன் கெலுஸ்கர், தான் எழுதிய, “புத்தர் வாழ்க்கை வரலாறு” என்ற நூலினைப் பரிசாக நல்கி வாழ்த் துரை வழங்கினார்
பம்பாய் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு
1908 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பெற்றிருந்த எல்பின்ஸ்டன் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார். பரோடா மன்னர் கெய்க்வாட், கல்வி உதவி நிதியாக மாதம் 25 ரூபாய் கொடுத்து உதவினார். ஆனால் அந்தக் கல்லூரியில் உணவு விடுதி நடத்தி வந்த பிராமணர் அம்பேத்கருக்கு தேநீர், குடி நீர் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் வெளி நாட்டவரான பேராசிரியர் முல்லர் அம்பேத்கரிடம் அன்பு கொண்டு, படிப்பதற்கு பல அறிவு நூல்களை வழங்கியதோடு உடுத்த நல்லாடைகளும் கொடுத்து அவரது படிப்பார்வத்தை ஊக்குவித்தார். அவரது தந்தையும் பொருள் நெருக்கடியிலும், புதல்வனின் அறிவுத் தாகத்தைப் போக்குவான் வேண்டி நிறைய நூல்கள் வாங்கித் தந்தார். பல நாள் பசித்திருந்தவன் முன் பானை ஆரக் கனத்திருந்த வெண் சோறு கண்டால் பெறும் இன்பத்தினைப் போல், அறிவுப்பசி கொண்ட அம்பேத்கர் தந்தை தரும் அறிவு நூல்களைப் பெற்றுப் படித்து அறிவினை வளர்த்துக் கொண்டார். அரசியல், பொருளியல் பாடங்களில் தேர்ச்சி பெற்று இளங்கலைப் பட்டம் 1912 இல் பெற்றார். அவர் பரோடா மன்னர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த சிறிது காலத்தில் தந்தையின் உடல் நலம் குன்றியதால் பம்பாய்க்கு மீண்டும் வந்தார். 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் தந்தை மரணம் எய்தினார்.
கொலம்பியா பல்கலைக் கழகத்தில்
பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால், நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களூக்கென்று கல்விஉதவிநிதி நிறுவப்பட்டது. இந்த நிதியைப் பெறும் மாணவர், படிப்பு முடிந்தவுடன் பரோடா அரசில் பத்தாண்டுகள் பணிபுரிதல் வேண்டும் என்பது நிபந்தனையாகும்.. அம்பேத்கர் அந்த நிபந்தனையை ஏற்றுக் கையெழுத்திட்டபின், 1913 இல் தனது 22ஆம் வயதில் அமெரிக்க அய்க்கிய நாடுகளுக்கு உயர் கல்வி பயின்றிடச் சென்றார். அவருக்கு கல்வி உதவிநிதி மாதம் 11.50 (ஸ்டர்லிங்) மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது..
அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயிலச் சென்ற அதே கால கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அங்கே படிக்கச் சென்றார் அம்பேத்கர் நியூயார்க் சென்ற டைந்ததும் லிவிங்க்ஸ்டன் ஹாலில் ஒரு அறை எடுத்துத் தங்கினார். அவருடன் நேவல் பத்தானா என்ற பெயருடைய பார்சி இனமாணவரும் தங்கியிருந்தார். இவர் அம்பேத்கரின் வாழ் நாள் நண்பராய் விளங்கினார். அம்பேத்கர் 1915 இல் பொருளியலை முதன்மைப் பாடமாகவும், துணைப்பாடங்களாக சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் ஆகிய பாடங் களையும் பயின்று முது நிலைப் பட்டம் பெற்றார் பண்டைய இந்திய வணிகம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப் பித்தார். ஜான் டேவி என்ற அறிஞர் மீதும், அவரின் மக்களாட்சித் தத்துவம் குறித்த ஆய்வுகளின் மீதும் அம்பேத்கர் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இந்தியாவின் தேசியப் பங்கு-ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற இரண்டாவது ஆய்வுக் கட்டுரையை மற்றொரு முதுநிலைப் பட்டத்திற்காக (எம். ஏ) 1916 ஆம் ஆண்டு எழுதி வழங்கினார். இறுதியாக 1917 இல் அவர் மூன்றாவது ஆய்வுக்கட்டுரைக்காக பொருளாதாரத்தில் பிஎச்.டி பட்டத்தைப் பெற்றார். அலெக்சாண்டர் கேல்டன்வைய்சர் என்ற மானுடவியலாளர் 1916 ஆம் ஆண்டு மே திங்கள் 9 ஆம் நாளன்று நடத்திய கருத்தரங்கில் அம்பேத்கர், “இந்தியாவில் சாதிகள்: அவற்றின் இயக்கம், தோற்றம், வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். அக் கட்டுரையில் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுடன், மனு, சாதிப் பாகுபாடுகளைத் தொகுத்து விதிகளாக எழுதியிருந்ததை வெளிப்படுத்தினார்.அந்தச் சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.
இலண்டன் பொருளியல் பள்ளியில்
அம்பேத்கர் கிரேஸ் இன்னில் சட்டம் பயில 1916 அக்டோபர் மாதம் பதிவு செய்து கொண்ட அதே நேரத்தில் இலண்டன் பொருளாதாரப் பள்ளியிலும் முனைவர் ஆய்விற்காகப் பணி புரிந்து வந்துள்ளார். பரோடா மன்னரிடமிருந்து வந்த கல்வி உதவி நிதி நின்றுவிட்டதால், அம்பேத்கர் சூன் 1917 இல் இந்தியா விற்குத் திரும்பிவந்தார். இங்கிலாந்து பேராசிரியர் எட்வின் கன்னான் பரிந்துரையின் பேரில் நான்கு ஆண்டுகளுக்குள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினைச் சமர்ப்பிக்க மீண்டும் லண்டன் வருவதற்கு அனுமதி பெற்று வந்திருந்தார். ஆதலால் 1921 இல் மீண்டும் லண்டன் சென்று “ரூபாயின் பிரச்சினை: அதன் தேற்றமும் அதன் தீர்வும்” என்ற அவரது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுகலைப் பட்டம் பெற்றார். 1923 இல் பொருளாதரத்தில் டி.எஸ்சி பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் கிரேஸ்இன்னில் சட்டம் பயில அழைக்கப்பட்டார். பாரிஸ்டர் அட்-லா பட்டம் பெற்றார்.
பரோடாவில்
அம்பேத்கர், பரோடா மன்னரின் கல்வி நிதிஉதவி பெற்றுக் கல்வி பயின்றமையால், அம்மன்னரின் அரசில் பணிபுரியக் கடமை பெற்றிருந்தார். ஆதலின் பரோடவிற்குச் சென்றார். பரோடாவில் தங்குவதற்கு பார்சி பயணியர் விடுதிக்குச் சென்றார். காரணம் பார்சி மதத்தில் தீண்டாமை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதால். அவர் பார்சி பெயருடன் தங்கினார். பின் அரண்மனைக்குச் சென்று. இராணுவச் செயலாளராக மன்னர் கெய்க்வாட் அவர்களிடம் பணியில் சேர்ந்தார். பட்டம் பெற்ற உயரதிகாரியாக இருந்தபோதும், அவர் தீண்டத்தகாத மகர் இனத்தைச்சார்ந்தவர் என்பதாலேயே அவர் பதவிக்கு உரித்தான மதிப்பினை, மரியாதையை, அலுவலகத்தில் அவரின் கீழ்ப் பணியாற்றிய அலுவலர்கள் தரவில்லை. கடைநிலை ஊழியர் கூட, கோப்புகளை அவர் கையில் தராது மேசை மீது எறிந்து அவரை அவமதித்தனர். எனவே அவர் விரக்தியிலிருந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சில முரடர்கள் வந்தனர். அம்பேத்கர் தீண்டப்படாதவர் என அறிந்து அவரை உடனே விடுதியிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். எங்கு தேடியும் தங்குவதற்கு இடம் கிடைக்காததால் மன்னரிடம் சொல்லி அவர் மூலம் திவானுக்குச் சொல்ல, திவான் தன்னால் முடியாது என்று தட்டிக் கழித்துவிட்டார். அலைந்து அலைந்து பசியால் சோர்ந்து போய் மரத்தடியில் அமர்ந்து அழுதார். இந்துக்களுக்கு, ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் பார்சிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் அவன் தீண்டத்தகாதவன் தான் என்பதை அறிந்து மிகவும் சோர்வும் கோபமும் கொண்டார். ஆகவே உடன் அப்பணியிலிருந்து விலகி பம்பாய் சென்று விட்டார். அதன்பின் தன் குடும்பத்தின் வாழ்க்கைச் செலவினை ஈடு செய்ய, சிறிது காலம் இரண்டு மாணவர்க்குக் கல்வி போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஒரு வணிகரிடம் கணக்க ராகப் பணியாற்றினார். ஒரு முதலீட்டு ஆலோசனை வணிக மையத்தினை நிறுவினார். நிறுவனர் தீண்டத்தகாதவர் என்ப தால் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தைப் புறக்கணித்தனர்.
1918 ஆம் ஆண்டு பம்பாயில் சிடன்ஹாம் வணிகப் பொருளியல் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரி யராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்கள் முதலில் அவரை அலட்சியப்படுத்தினர். ஆனால் அவரின் ஆழ்ந்த நூலறிவும், சிந்தனையைத் தூண்டும் உரைகளும் கற்பிக்கும் திறனும் மாணவர்களை மிகவும் கவர்ந்தன. காலப்போகில் அவரைச் சிறந்த ஆசிரியர் என்று போற்றினர். ஆனால் அவருடன் பணிபுரிந்த மற்ற பேராசிரியர்கள் அவரிடம் தீண்டாமை பாராட்டினர். தண்ணீர் குவளையைக் கூடப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையின் படி, வாக்குரிமை வழங்குவது தொடர்பாகச் சவுத் பரோ குழு இந்தியாவில் பல்வேறு இயக்கங்களின் கருத்துகளைக் கேட்டறிய 1919 இல் வந்தது. இக்குழுவின்முன் சாட்சியம் அளிக்க அம்பேத்கர் அழைக்கப் பட்டார். தீண்டப்படாதோருக்குத் தனி வாக்குரிமையும், தீண்டப்படாத வகுப்பு மக்களின் தொகைக்கேற்ப இடஒதுக்கீடும் தேவை என்று அம்பேத்கர் கோரினார். மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழை பம்பாயில் கேல்ஹாப்பூர் மன்னர் சாகு அவர்களின் உதவியுடன் 1920 சனவரி 31 ஆம் நாள் தொடங்கினார். இந்தப் பத்திரிக்கை வெளியிடுவது குறித்து விளம்பரம் செய்யுமாறு கேசரி இதழைக் கேட்டுக் கொண்டபோது, அதை வெளியிட மறுத்துவிட்டனர்- அவ்விதழின் ஆசிரியர் குழுவினர். அப்பொழுது திலகர் உயிருடன் இருந்தார். அவர் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
1923 சூன் மாதம் அம்பேத்கர் உயர் நீதிமன்ற வழக்கறி ஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் அம்பேத்கர் தீண்டப்படாத மக்களின் கல்வி வளர்ச்சியிலும், அந்த மக்களின் சமூக முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டார். 1924 ஜூன் மாதம் 20 ஆம் நாள் பகிஷ்கார ஒழிப்பு சபை தொடங்கப்பட்டது. தீண்டப்படாத, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பெருக்குவதற்கும், சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கும் பாடுபடுவது இச்சபையின் நோக்கங்களாகும். இச்சபையின் செயற்குழுத் தலைவராக அம்பேத்கர் செயல்பட்டார். 1925 சனவரி 4 ஆம் நாள் ஷோலாப்பூரில் உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதியை இச்சபை நிறுவியது.
1925 இல் பிராமணர்கள் இந்தியாவைப் பாழாக்கிவிட்டனர் என்று பழி சுமத்தி எழுதினார்கள் என்று, பிராமணரல்லாத தலைவர்களாகிய கே.பி. பக்டே, கேசவராவ் ஜெடே, தினகர் ராவ் ஜவால்கர் ஆகிய மூவர் மீதும் பூனாவில் வசித்த சில பிராமணர் களால் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அவ் வழக்கில் அம்பேத்கர் பிராமணரல்லாத தலைவர்கள் சார்பில் வழக்கறிஞராகத் தோன்றி வாதாடி 1926 அக்டோபரில் அந்த வழக்கில் மகத்தான வெற்றி பெற்றார். தீண்டப்படாத மக்களின் உரிமைகளைப் பேணுதற்கு அம்பேத்கார், மூக் நாயக், பகிஷ்கிரித் பாரத், ஜனதா ஆகிய இதழ்களை வெளியிட்டார்
1927 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பம்பாய் மாநில சட்டமன்ற உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். பத்திரிக்கை ஆசிரியர், தீண்டப்படாத மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்க சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளுதல் எனப் பல் வேறுபட்ட பணிகளில் ஈடுபட்டகாரணத்தால் வழக்கறிஞர் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. ஆகவே வாழ்க்கைச் செலவிற்காக 1928 சூன் முதல் அம்பேத்கர் பம்பாய் அரசு சட்டக்கல்லூரியில் பேராசிரியர் பணியைத் தற்காலிகமாக ஏற்க நேரிட்டது. ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றினார். மாண வர்கள் உள்ளத்தில் அவர் பெரும் மதிப்பினைப் பெற்றிருந்தார். ஆயினும் 1929 மார்ச் மாதத்துடன் அவருடைய பேராசிரியர் பதவி முடிவுக்கு வந்தது.
சைமன் கமிஷன்
ஆங்கிலேயர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த சைமன் குழுவினருடன் பணியாற்ற 1928 ஆகஸ்டு 3 ஆம் நாள், அம்பேத்கர் பம்பாய் மாநிலக் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சைமன் கமிஷன் முன் 18 தீண்டப்படாத வகுப்புச் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பித்தன. பகிஷ்கிரித் ஹித்த காரிணி சபையின் சார்பில், அம்பேத்கர் ஒரு கோரிக்கை அறிக்கையை இக்குழுவிடம் வழங்கினார். அதில் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கெனத் தனியான இட ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதி ஏற்படுத்தப்படவேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் இந்திய நாட்டிற்காக எழுதப்படவுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குக் கல்வி வழங்குவதே மாநில வரவுசெலவு திட்டத்தில் முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்றும், இராணுவம், கடற்படை, காவல்துறை ஆகியவற்றில் பணியில் சேருவதற்கான உரிமை அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
உரிமைப் போர்கள்
1927 ஆம் ஆண்டில், அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராகத் தீவிர முடிவு செய்தார். பொதுக் குடிநீர் ஆதாரங்களைத் தீண்டப் படாத வகுப்பு மக்களின் பயன்பாட்டிற்காகத் திறப்பதற்கான இயக்கங்களை அவர் ஆரம்பித்தார். இந்துக் கேயில்களுக்குள் நுழைவதற்கான உரிமைக்காகவும் அவர் பேராடினார். இத்தகைய போராட்டங்களை அம்பேத்கர் தொடங்கிட உந்து சக்தியாக அமைந்தது. 1924 இல் தந்தை பெரியார் கேரளாவில் வைக்கம் நகரில் நடத்திய தெருவில் நடக்கும் உரிமைக்கான போராட்டமும், 1926 இல் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டமும் தான் . வைக்கம் போராட்ட வெற்றிக்குப் பின் சில மாதங்க ளுக்குப்பின் தம் ஏட்டில் அதைப்பற்றிப் பெருமைப்பட எழுதி மகத் போராட்டத்தை அம்பேத்கர் அறிவித்தார்.
மகத் நகரிலுள்ள பொதுக்குளத்தில் தீண்டத்தகாத மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக ஒரு சத்தியாக்கிரகத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்.
பம்பாய் மாநில சட்டசபைக்குத் தீண்டப் படாதார்கள் சார்பாக நியமிக்கப் பட்ட உறுப்பினர் திரு எஸ்.கே. போலே அவர்கள், தென் ஆப்பிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்க்கும் நாம், முதலில் நம்மைஙம திருத்திக் கொள்ளவேண்டும். எல்லா நீர்நிலைகளையும் தீண்டத்தகாதோர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; பொதுப் பள்ளிக்கூடங்கள், நீதி மன்றங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் அவர்களை எந்தத் தடையுமின்றி அனுமதிக்க வேண்டும் என அவர் கொண்டுவந்த தீர்மானம் 4-8-1923 இல் நிறைவேற்றப்பட்டது. 11-9-1923இல் அரசு ஆணை வெளியிடப் பட்டது. எஸ்.கே.போலே இறுதிவரை டாக்டர் அம்பேத்கரின் நண்பராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நல உரிமைக்காவல ராகவும் வாழ்ந்து மறைந்தவர். 1923 இல் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம் 1926இல் சிறுமாற்றங்களுடன் உறுதிப் படுத்தப்பட்டது. இத் தீர்மானத்தின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டிலேயே மகத் நகராட்சி சௌதார் குளத்தைத் தீண்டப் படாதவர்கள் பயன்படுத்த அனுமதித்தது. ஆனால் நகராட்சியின் ஆணை செயல்வடிவம் பெறவில்லை. உயர் சாதி இந்துக்கள் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். எனவே தீண்டப்படாத மக்கள் இந்தக் குளத்தைப் பயன்படுத்த இயல வில்லை.
எனவே மகத்தில் தீண்டப்படாதவர்கள் மாநாடு 1927 மார்ச் 19, 20 தேதிகளில் அம்பேத்கரால் நடத்தப்பட்டது. மாநாட்டுப் பந்தலில் 10,000 மக்கள் கூடியிருந்தனர். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமை உரையில் போர்ப்படைப் பிரிவுகளில் மகர் சாதியினருக்கு வேலை தராத ஆங்கில அரசின் செயலை மிக வன்மையாகக் கண்டித்தார். போலே தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரினார். மறு நாள் கூட்டத்தினர் அனைவரும் சௌதார் குளத்திற்கு ஊர்வலமாகச் சென்று, நீரை அள்ளிப் பருகினர். பின்னர் மக்கள் அமைதியாக மாநாட்டுப் பந்தலை நோக்கிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியைக் கண்ட சாதி இந்துக்கள், தீண்டப்படாத மக்கள் வீரேஸ்வரர் கோயிலில் நுழைந்திடவும் திட்டமிட்டுள்ளனர் என்று வதந்தியைப் பரப்பினர். இந்து மதத்திற்கு ஆபத்து; கோயிலின் புனிதம் கெடப்போகிறது, கடவுளைக் களங்கப் படுத்தப் போகிறார்கள் எனக் கூச்சலிட்டு, சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். அடிபட்ட மக்கள் பழிக்குப் பழி வாங்கத் துடித்தனர். அம்பேத்கர் அவர்களை அமைதிப் படுத்தி ஊர் திரும்பச் செய்தார். பின்னர்,21-3-1927 அன்று உயர் சாதி இந்து மக்கள், குளத்திற்குத் தீட்டுக் கழித்தனர். 108 குடங்களில் மாட்டுச் சாணம், சிறுநீர்,பால், தயிர், நெய் கலந்து குளத்தில் (பஞ்சகவ்யம்) கொட்டினர். அர்ச்சகர்கள் தண் ணீரில் நின்று கொண்டு மந்திரம் சொல்லித் தீட்டைப் போக்கினர். இதுபோல் மீண்டும் நடைபெறாமல் தடுக்கக் குளத்திற்குக் காவலர்களை நியமித்தனர் அந்தப் போராட்டத்திற்குப் பின்னர் தாழ்த்தப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை, மகத் நகராட்சியினர் 5-1-1924இல் போட்ட தீர்மானத்தை இரத்துச் செய்து விட்டு, 1927 ஆகஸ்டு 4 ஆம் தேதி தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுப்பதை மீண்டும் தடை செய்தனர். அம்பேத்கர் இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டார்,
சம நீதியை, சமஉரிமையை நிலை நாட்டிட மீண்டும் மகத்தில்1927 டிசம்பர் 25 இல் 15000 சத்யாக்கிரகிகளைத் திரட்டினார். ஊர்க்காரர்கள் அவர்களுக்குத் தண்ணீர் தரவும், வியாபாரிகள் பொருட்களை விற்கவும் மறுத்தனர். மனிதர் களுக்குரிய உரிமையை, பிறரால் பறிக்கப்பட்ட உரிமைகளைக் கெஞ்சியோ, பிறர்க்கு அஞ்சியோ கேட்டால் அடையமுடியாது; போராட்டத்தின் மூலமே அடைய முடியும். இவர்கள் பலியிடுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல.அரசியலில் இறுதி இலட்சியம் மனித உரிமையைப் பெற்று நிலை நாட்டுவது தான், என்று கூறினார். மனித உரிமைகளை மறுக்கும் இந்து வேதங்களையும் மனுசாஸ்திரத்தையும் கண்டனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் மாலை 4 மணிக்கு நடந்த மாநாட்டில் அம்பேத்கர் வர்ணாஸ்ரம தர்மத் தை-நால்வகைச் சாதி பாகுபாட்டினையும், மற்றும் "தீண்டாமை" யையும் சித்தாந்த ரீதியாக நியாயப்படுத்தியதற்காக, மனுஸ்மிருதி என்ற இந்து நூலினைக், கண்டனம் செய்தார். மனுநீதி நூலின் பிரதிகளை அன்றிரவு 7.30 மணிக்குத் தீயிட்டுக் கொளுத்தினார். ஆண்டுதேறும் டிசம்பர் 25 அன்று மனுநீதி எரிக்கும் நாள், தீண்டப்படாத வகுப்பு மக்களால் பம்பாய் மாநிலத்தில் கெண்டாடப்படுகிறது.
சூத்திரர்களின் இழி நிலைக்குக் காரணமான கீதையையும், மனுஸ்மிருதியையும் தீயிலிடவேண்டும் என்று திருப்பூர் காங்கிரஸ்மாநாட்டில் 1922 இல் தந்தை பெரியார் பேசினார். ஐந்து ஆண்டுகள் கழித்து தீண்டப்படாதார் மா நாட்டில் 25-12-1927 இல் மகத் மாநாட்டில் மனு நீதி தீக்கிரையாக்கப்பட்டது.
இதற்கிடையில் குளம் தனியாருக்குச் சொந்தமெனச் சிலர் வழக்குப் போட்டு உள்ளூர் உரிமை இயல் நீதிமன்றத்தில் 14-12-1927 அன்று இடைக்காலத் தடை பெற்றனர். மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கும்படி அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்டார். நீண்ட போராட்டத் திற்குப்பின் அம்பேத்கர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வாதாடி சௌதார் குளம் அனைத்து மக்களுக்கும் உரியதே என்ற உரிமையை நிலை நாட்டினார் . இறுதியாக 13-6-1929 இல் வெற்றியடைந்தார்.