மானுடத்தின் நெடிய வரலாற்றில்,இறந்தவர்களைப் புதைப்பதுதான் எல்லாத் தொன்மை நாகரிகங்களிலும் மரபாக வளர்ந்தது.இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இதற்கு முதன்மை யான காரணமாக அமைந்தது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து நாட்டில் நியூகரான்ச் (Newgrange)என்று போற்றப்படுகிற நினைவிடம்தான் உலகின் மிகவும் தொன்மையான நினைவிடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கருங்கற்களால் அமைக்கப்பட்ட இந்த நினைவிடம் இன்றும் பொலிவுடன் சிதையாமல் இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் டானா டோர்ஜா (Tana Toraja)என்ற நினைவிடம் டோர்ஜான் இனக்குழு மக்களிடம் இருந்த புதைக்கும் வழக்கத்தால் உருவாக்கப்பட்டது. இறந்த உடலைப் பதப்படுத்தி, குகைகளில் வைத்து மிகப்பெரிய அளவில் நினைவிடங்களை அமைத்தார்கள்.

4560 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் மறைந்த அரசர்களை, அரச குடும்பத்தினர்களை ஒரே இடத்தில் புதைத்துப் பெரிய அளவில் நினைவுச் சின்னங்களை அமைத்தார்கள். இவை தான் உலகப் புகழ்பெற்ற “பிரமிடுகள்” என்று அழைக்கப்படுகின்றன. கிசா நிக்கரபொலிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பிரமிடுகள் அமைந்துள்ளன.இன்றைய இரஷ்யா,சீனா, இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளைத் தனது போர்த் திறத்தால் கைப்பற்றி 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசை நிறுவிய மாமன்னர் செங்கிஸ்கான் தனது மறைவிற்குப் பிறகு, தனது உடல் புதைக் கப்பட்ட இடம் மற்றவர்க்குத் தெரியக்கூடாது என்பதற் காகச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான் மறைந்தார். உலகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் பலர் இணைந்து இந்த நினைவிடத்தைத் தேடி வருகின்றனர்.

2008இல் செங்கிஸ்கான் நினைவிடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கத் தொல்பொருள் ஆய்வாளர் குழு குறிப்பிட்டாலும்,இன்றளவும் இதற்கான உறுதியான தரவுகள் தரப்படவில்லை.இருப்பினும், மங்கோலியாவிலும், சீன அரசுக்கு உட்பட்ட, மங்கோலிய உட்பகுதிக்குள் சிலை அமைத்து மங்கோலிய மக்கள் செங்கிஸ்கானைப் போற்றி வருகிறார்கள்.

10ஆம் நூற்றாண்டிலிருந்து, இங்கிலாந்து நாட்டில், இதுபோன்று சமூகத்தில் முதன்மையான இடத்தில் இருந்தவர்களை,இறந்த பிறகு வெஸ்ட்மினிஸ்டர் அபே (Westminister Abbey) என்ற நினைவிடத்தில் புதைக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. இறந்த அரசர்கள், மத குருமார்கள் இந்த நினைவிடத்தில் புதைக்கப்பட்டார்கள். பின்பு கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர் கள் ஆகியோர் இதே இடத்தில் புதைக்கப்பட்டனர். குறிப்பாக, எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்சு, கவிஞர் டென்னிசன், அறிவியல் அறிஞர்கள் ஐசக் நியுட்டன், டார்வின் ஆகியோர் இந்த நினைவிடத்தில் புதைக்கப்பட்டனர்.

இதுபோன்று ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் நிலவி வந்த பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நினைவிடங்கள் உருவாயின.1631ஆம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது காதல் மனைவியான மும்தாஜுக்கு,பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட‘தாஜ்மகால்’என்ற நினைவிடம் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.இவ்வகையில்தான் ஒவ்வொரு நாட்டிலும் நினை விடங்களைக் கட்டும் பழக்கம் தொடர்ந்தது.

1917இல் சோவியத் ஒன்றியத்தில் புரட்சியின் வழி,முதல் சமதர்ம அரசை உருவாக்கிய மாவீரர் இலெனினுக்கும் நினைவிடம் உருவானது. இதைத் தொடர்ந்து 1924 இல் இலெனின் மறைவிற்குப் பிறகு சோவியத் ஒன்றி யத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற ஜோசப் ஸ்டாலின் 1953இல் மறைந்தார்.இலெனின், ஸ்டாலின் மற்றும் பொதுவுடைமைப் புரட்சியில் பங்கேற்ற தலைவர்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்களுக்கு மாஸ்கோவில் ஒரு நினைவிடம் உருவாக்கப்பட்டது.சோவியத் ஒன்றியத்தின் தலைவராகக் குருசேவ் பதவியேற்ற பிறகு ஸ்டாலினுடைய பதப்படுத்தப்பட்ட உடல் அகற்றப் பட்டு எரிக்கப்பட்டது.இலெனினுடைய பதப்படுத்தப்பட்ட உடல் இன்றும் நினைவிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.

மக்கள் சீனத்தில் பொதுவுடைமைப் புரட்சியின் வழியாக ஒரு சோசலிச அரசை 1949இல் உருவாக்கிய மா-சே-துங் அவர்களுக்கு பீஜிங் நகரில் நினைவிடம் உள்ளது.அவருடைய உடல்பதப் படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.வியட்நாமில் பிரெஞ்சு,அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் போரின் வழியாக வென்ற மாவீரர் ஹோசிமின்னுக்கு நினைவிடம் ஹனொய் நகரில் அமைந்துள்ளது.

அவரது உடல் பதப்படுத்தப் பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஹோசிமின் தான் இறந்த பிறகு தனது உடலை எரித்துவிட வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், பொதுவுடைமைக் கட்சியும், வியட்நாம் அரசும் இந்த நினைவிடத்தை அமைத்தன.

இதுபோன்று மன்னர் தொடங்கி,பொதுவுடைமைத் தலைவர்கள் உட்படப் பலருக்கு நினைவிடங்கள்அமைக்கப்பட்டாலும்,அந்நினைவிடங்களில்வந்து செல்லும பார்வையாளர்கள் அவற்றைச் சுற்றுலா இடங்களாகத்தான், பார்க்கிறார்கள். 1980, 1982 ஆண்டு களில் இருமுறை சீனப் பயணம் மேற்கொண்ட போது மாவோவின் நினைவிடத்தைக் காணும் வாய்ப்பு இக்கட்டுரையின் ஆசிரியருக்குக் கிட்டியது.

1982இல் மாவோ நினைவிடத்திற்குச் சென்று திரும்பி, வெளியே வந்து நின்று கொண்டிருந்த போது,பீஜிங் பல்கலைக் கழகத்தின் மாணவரிடம் மாபெரும் தலைவர் மாசேதுங் பற்றி வினா எழுப்பிய போது, அவர் அளித்த விடை அதிர்ச்சியாக இருந்தது. அந்த மாணவர் இந்தத் தலை முறையினர் மாவோவை அதிகமாக விரும்பவில்லை என்றார்.

2007ஆம் ஆண்டு இரஷ்யப் பயணத்தின் போது மாஸ்கோவில் அமைந்துள்ள இலெனினின் நினைவிடத்தில் அவரின் பதப்படுத்தப்பட்ட உடலைப் பார்த்த போது,வெளிநாட்டுப் பயணிகள்தான் அதிக எண்ணிக்கையில் இந்த நினைவிடத்தைப் பார்க்க வருகின்றனர். ஆன்டுருஸ் என்கிற மாஸ்கோ பல்கலைக்கழக முதுகலை மாணவர் மொழிபெயர்ப்பாளராக எங்களோடு நினைவிடத்திற்கு வந்த போது,இலெனினைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட வில்லை.

சீனாவில் மாசேதுங் மீது மாணவர் வைத்திருந்த அதே உணர்வைத்தான்,இந்த மாஸ்கோ பல்கலைக்கழக மாணவரிடமும் காண முடிந்தது.இவ்வகையான வேறுபட்ட,மாறுபட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் இடமாக நினைவிடங்கள் அமைகின்றன.

மும்பையில் இருந்து வெளிவரும் ‘அரசியல்-பொருளாதார வார ஏட்டில்’ (Economic and Political Weekly, April 2013) “காஷ்மீரில் இறந்த மனிதர்கள் சொல்லும் கதைகள்” என்ற தலைப்பில், டாடா சமூக இயல் ஆய்வு மையத்தின் பருக் பாஹிம் என்ற மாணவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா நினைவிடத்தைப் பற்றி அவர் எழுதி யுள்ள கருத்துகள் எண்ணிப்பார்க்கத் தக்கவையாக உள்ளன. ஷேக் அப்துல்லா, ஸ்ரீநகரின் புறநகர் பகுதி யான சவுராவில் 1905ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5ஆம் நாள் பிறந்தார்.இவருடைய தந்தை ஷேக் முகமது இப்ராகிம் காஷ்மீர் சால்வைகளை விற்கும் வணிகம் செய்து வருமானத்தை ஈட்டியவர்.

ஒரு நடுத்தர வருமானத்தைப் பெற்ற குடும்பத்தில் உள்ள அனைத்து அறைகூவல்களையும் இப்ராகிம் எதிர் கொண்ட போதிலும், ஷேக் அப்துல்லாவை பட்டதாரியாக் கும் முயற்சியில் மனம் தளரவில்லை. ஷேக் முகமது இப்ராகிமின் உண்மையான பெயர் ரகோராம். காஷ்மீர் பார்ப்பனப் பண்டிதராகத்தான் பிறந்தார் ரகோராம்.

1890இல் ரஷித் பால்கி என்ற இசுலாமிய மதகுருவால் இசுலாமியராக மாற்றப்பட்டார். எனவேதான் பண்டித மோதிலால் நேரு குடும்பத்திற்கும்,ஷேக் அப்துல்லா குடும்பத்தினருக்கும் நெருங்கிய குருதி உறவு இருந்த தாக சிலரால் குறிப்பிடப்படுவதுண்டு. இணையதளத் திலும் இவ்விதக் கருத்து ஒன்று கட்டுரையாகப் பதிக் கப்பட்டுள்ளது. ஆனால் இக்கருத்து எவ்வகையில் உண்மையானது என்பதை யாரும் உறுதியாகக் கூற வில்லை. ஷேக் அப்துல்லா இளம் வயதில் அரசியலில் ஈடுபட்டுப் பின்பு மக்கள் போற்றும் தலைவராக, “காஷ்மீர் சிங்கம்” என்று அழைக்கப்பட்டார்.‘காஷ்மீர் மக்கள் தனித்தன்மை பெற்றவர்கள் எனவே காஷ்மீருக்கு சுயாட்சி தேவை’ என்று வலியுறுத்தினார்.

இந்திய விடுதலைச் சட்டத்தை இங்கிலாந்து அரசு 1947இல் நிறைவேற்றிய பிறகு, இந்தியாவில் ஆட்சிப் புரிந்த சிறுகுறு மன்னர்களையும்,அவர்கள் ஒரு காலத்தில் ஆண்ட 561 பகுதிகளையும் இந்தியாவில் நேரடியாக இணைத்த போது, ஜம்மு-காஷ்மீரின் மன்னரான ஹரிசிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட விரும்பிய நேரத்தில், ஜவகர்லால் நேரு, ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு மட்டும் தனது தன்னிச்சையான முடிவை மேற்கொண்டார்.அதன்படி ஷேக் அப்துல்லாவை ஜம்மு-காஷ்மீரின் பிரதமராக ஆக்கினார். அது மட்டுமின்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்குத் தனி அந்த°தை வழங்கும் 370ஆம் சட்டப்பிரிவை இணைத்தார்.

இதற்கெல்லாம் காரணங்கள் யாவை என்று இன்றளவும் ஆய்வாளர்களால் அலசப்படுகின்றன. இருப்பினும், காஷ்மீர் தனித்தன்மையைக் காப்பாற்றுவதற்காக அரசியல் ரீதியாக ஷேக் அப்துல்லா எழுப்பிய கோரிக்கைகளும்,அரசியல் களமும் அமைந்தன. 1953ஆம் ஆண்டு இதன் காரணமாக, அவர் ஜம்மு-காஷ்மீர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுப், பின்பு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் கொடைக்கானலில் ஒரு மாளிகையில் சிறை வைக்கப் பட்டிருந்த ஷேக் அப்துல்லாவிற்கு தமிழ் கற்பதற்கான ஆசிரியர் உட்படப் பல வசதிகள் அளிக்கப்பட்டன என் பதும் குறிப்பிடத்தக்கவை.

1964இல் நேருவின் கட்டளையின்படி ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். ஷேக் அப்துல்லா மீது புனையப்பட்ட சதி வழக்கு திரும்பப் பெறப்பட்டது.காஷ்மீர் தொடர்பாக, பாகி°தான் நாட்டின் பிரதமர் ஆயுப்கானிடம் பேசுவதற்கு நேரு ஷேக் அப்துல்லாவிற்கு வேண்டுகோள் விடுத்தார். பாகிஸ்தான் சென்று ஷேக் அப்துல்லா இந்தியாவும், பாகி°தானும் காஷ்மீர் தொடர்பாக ஒரு உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என ஆயுப்கானிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளுக்கு இணங்க ஆயுப்கான் இந்தியா வருவதற்கான பயண நாளும் குறிக்கப்பட்டது. 1964 மே திங்களில் நேருவின் மரணத்திற்குப் பிறகு நிலை மைகள் மாறின. 1964 சூன் திங்களில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்று 1966 வரை பிரதமராகப் பதவியில் இருந்தார். 1965ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. தாஷ்கன்ட் நகரில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. அங்கேயே பிரதமர் லால் பகதூர் சா°திரி மறைவுற்றார்.

இக்காலக்கட்டத்தில் மீண்டும் ஷேக் அப்துல்லா விற்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன.‘காஷ் மீருக்குள் நுழையக் கூடாது.அரசியல் கோரிக்கைகள் எழுப்பக் கூடாது’ போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டன. 1971ஆம் ஆண்டு மீண்டும் இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தபோது, ஷேக் அப்துல்லா, இந்திராகாந்தியுடன் ஓர் உடன்பாடு கண்டார்.

காஷ்மீருக்காக அவர் எழுப்பிய முழக்கங்கள் எல்லாம் முடங்கிப் போயின.திருமதி. இந்திராகாந்திக்கு அடங்கியே போனார்.மீண்டும் காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ஷேக் அப்துல்லா முதலமைச் சரானார். நேருவின் குடும்பத்தைப் பின்பற்றி, காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு வித்திட்டார்.

எனவேதான் இன்று அவரது மகன் பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும், அவர் பேரன் உமர் அப்துல்லா காஷ்மீர் முதலமைச்சராகவும் இன்றளவும் நீடிக்க முடிகிறது.உரிமை கோரும் காஷ்மீர் மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளைக் கண்டும் காணாமல் ஷேக் அப்துல்லாவின் பேரன் ஆட்சியைத் தொடருகிறார்.

1982இல் முதல்வராக இருந்து ஷேக் அப்துல்லா இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினர். தால் ஏரிக்கு அருகில் அவருக் குப் பெரும் நினைவிடம் கட்டப்பட்டது. நூலகம், கண்காட்சி ஆகியவை உருவாக்கப்பட்டன. குரானைப் படிப்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் தனி இடம் உருவாக்கப்பட்டது.இத்தகைய நினைவிடம் இன்று எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றி, பரூக் பாஹிம் விளக்கியுள்ளார்.

காஷ்மீர் பிரிய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறவர்கள் கைது செய்யப்படும் போதும், இராணுவத்தால் சில நேரங்களில் சித்ரவதை செய்யப்படும்போதும்,சுடப்படும் போதும் ஷேக் அப்துல்லா வின் நினைவிடத்தைச் சிதைக்கக் காஷ்மீர் இளைஞர் கள் முயற்சி செய்கிறார்கள். எனவே அவருடைய நினைவிடம் 24 மணிநேரமும் பகல் இரவு என்று பாராது பாதுகாக்கப்படுகிறது. இந்த நினைவிடத்திற்கு மக்கள் செல்லுவதில்லை என்றும், ஆய்வாளர் பரூக் பாஹிம் குறிப்பிட்டுள்ளார்.

1966இல் ஒரு புலனாய்வுத் துறை ஆய்வாளரை மகபூல் பத் என்ற இளைஞர் சுட்டுக்கொன்றார்.இவர் 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.இவர் 1966இல் கைது செய்யப்பட்ட போது,இவரிடம் இருந்த ஒரு காகிதத்தில் ஒரு அறிக்கை இருந்தது. அந்த அறிக்கையின் தலைப்பு ‘இந்தியாவிற்கு எதிரான போர்ப் பிரகடனம்’என்பதாகும்.இவர் 1984இல் தூக்கிலிடப்பட்ட போது 46வயது ஆகியிருந்தார்.தூக்கிலிடப்படுவது பற்றிக் கவலைக் கொள்ளாமல் நிதானமாகவும், அமைதியாக வும் இருந்தார் என்று இவரைத் தூக்கிலிட்ட சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகபூல் பத்தின் உடல் அவருடைய விருப்பத்திற்கு மாறாக,திகார் சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டது. 1982இல் ஷேக் அப்துல்லா மறைந்த போது இருந்த உணர்விற்கும், 1984இல் மகபூல்பத் தூக்கிலிடப்பட்ட போது இருந்த உணர்விக் கும் இடைவெளி பெருகிவிட்டது. குறிப்பாக,இவருடைய தூக்குத் தண்டனைக்குப் பிறகு,காஷ்மீர் மக்களின் மனநிலை மாறியது.இதற்குப் பிறகுதான்,காஷ்மீரில் பல பிரிவினைவாதக் குழுக்கள் உருவாயின. மேலும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியில் இவருடைய உடலை மீட்டுப் புதைப்பதற்காக ஒரு இடம் காஷ்மீர் இளைஞர்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நினைவிடத்தில் என்றாவது ஒரு நாள் தூக்கிலிடப்பட்ட அந்த மாவீரரின் உடல் புதைக்கப்படும்,மாவீரர்களுக்கான உரிய மரியாதையை மக்கள் அளிப்பார்கள் என்று பெரும்பாலான இளைஞர்கள் கூறி வருகின்றனர்.

2013 பிப்ரவரி 9ஆம் நாள் காஷ்மீரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது என்று காவல் துறை அறிவிப்பு கள் வெளியிட்டது. இணையத்தளங்கள் எல்லாம் முடக்கப்பட்டன.ஏனென்றால் அன்றுதான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.அது மட்டுமல்ல ஸ்ரீநகரில் மகபூல் பத்திற்கு ஒதுக்கப்பட்ட நினைவிடத்திற்கு அருகே அப்சல் குருவின் உடலைப் புதைப்பதற்காக மற்றொரு இடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஷேக் அப்துல்லா, மகபூல்பத், அப்சல் குரு ஆகியோர் நினைவிடங்கள் வெவ்வேறு வகையான உணர்வுகளைக் கிளறி வருகின்றன.

காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவை, இன் றைக்கு, “காஷ்மீர் மக்களின் துரோகி” என்று அழைக் கிறார்கள். மகபூல்பத், அப்சல் குரு ஆகியோரைக் காஷ்மீரின் நாயகர்கள் என்று போற்றுகிறார்கள் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.உலகின் பல நாடு களில் நடைபெற்றுவரும் விடுதலைப் போர்களில் உயிரிழந்த மாவீரர்களை மதிப்பதும்,போலித் தலைவர்களாக மாறிவிட்டவர்களைத் துரோகி என்று பட்டம் சூட்டுவதும் தொடர்கிறது.

இந்திய விடுதலைப் போரின் போது,மாவீரன் பகத்சிங்கிற்குப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய போது,அந்தத் தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தையும், நாளையும் குறிப் பிடாமல் கமுக்கமாக வைத்திருந்தார்கள். காந்தி, பகத்சிங் விடுதலைக்குப் பிரிட்டீஷ் அரசிடம் வேண்டுகோள் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் நேதாஜி சுபாஷ்சந்திர போசும்,ஜின்னாவும் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்று வாதிட்டார்கள்.நிலைமைகள் மாறிவிட்டன.இன்று இந்த மக்கள் மாவீரர்களைப் போற்றுகின்றனர். எனவே, தற்போது இந்திய அரசு,பாகிஸ்தான் அரசிடம் லாகூரில் பகத்சிங்கின் நினைவைப் போற்ற வேண்டும்.அவருடைய பெயரில் ஒரு சாலை அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.

1919இல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படு கொலைக்கு முதன்மைக் காரணமாக இருந்த ஆளுநர் ஓ துவையரை,பல ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து சென்று காக்°டன் மன்றத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த துவையரை நேருக்கு நேர் சுட்டுக்கொன்றார் உத்தம் சிங். 1940இல் காங்கிரசுத் தலைவரான நேரு, “இந்த வன்செயலை நாங்கள் ஏற்க வில்லை; முட்டாள்தனமானது” என்று குறிப்பிட்டார். 1962ஆம் ஆண்டு அதே நேரு பிரதமரான பிறகு,“உத்தம்சிங்கை ஒரு மாபெரும் தியாகி என்றும்,உயிரை அர்ப்பணித்த மாவீரர் என்றும் மரணத்தை முத்தமிட்ட மாமனிதர்” என்றும் போற்றினார்.

நேருவின் மறைவிற்குப் பிறகு 1974இல் பஞ்சாப் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சாதுசிங் தின்டின் வேண்டுகோளை ஏற்றுப் பிரதமர் இந்திரா காந்தி இங்கிலாந்துப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்து, உத்தம்சிங்கின் எலும்புகளை மீண்டும் இந்தியாவிற்கு எடுத்து வந்து தீயூட்டி அதன் சாம்பலைச் சட்டிலஜ் நதியில் கரைத்தார்.இந்தியாவினுடைய குடியரசுத் தலைவர்களாகப் பின்னாளில் பொறுப்பேற்ற கியானி ஜெயில் சிங்கும்,சங்கர் தயாள் சர்மாவும்,பிரதமர் இந்திராவும் உத்தம் சிங்கின் எலும்புகள் அடங்கிய பெட்டிக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். காலம் மாறுகிற போது - மக்களின் மன ஓட்டத்தில் விடுதலை உணர்வு தீப்பிழம்பாக எரியும் போது வீர மரணத்தைத் தழுவிய மாபெரும் வீரர்கள் ஆட்சியாளர் களால் போற்றப்படுகிறார்கள்.உரிய நேரத்தில் போற்ற மறுத்தவர்களே மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

புரட்சியாளர்கள் என்றுமே இறப்பதில்லை;அவர்கள் புதைக்கப்படுவதில்லை;அவர்கள் விதைக்கப்படுகிறார்கள்என்றஉண்மைமீண்டும்மீண்டும்காலத்தால்மெய்ப்பிக்கப்படுகிறது.புரட்சி எண்ணங்கள் பூவாகப் பூத்து மணம் பரப்புகின்றன.இவ்வகையில் ஈழத் தமிழர்கள் செய்த மாபெரும் தியாகமும் ஒரு நாள் போற்றப்படும்.முள்ளிவாய்க்காலில் மாவீரர்களுக்கும்,உயிர்நீத்த மக்களுக்கும் நினைவிடம் அமைக்கப்படும். தனி ஈழத்திற்கான களம் மீண்டும் உருவாகும்.இதைத்தான் நினைவிடங்கள் நமக்குப் பாடமாகப் புகட்டுகின்றன.

Pin It