‘அன்தில்லா’ என்பது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வளமனையாகும். இதுவரையில் இவ்வளவு பெருந் தொகையைச் செலவிட்டு வேறு எவரும் இதுபோன்ற வீட்டைக் கட்டவில்லை. 27 அடுக்கு மாடிகள் கொண்ட இம்மாளிகையில், மூன்று சிறிய விமானதளங்கள், ஒன்பது மின் தூக்கிகள், தொங்குத் தோட்டங்கள், நடன அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஆறு தளங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் முதலானவை உள்ளன. 600 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். 27 அடுக்குகளின் உயரத்திற்கும் இரும்புச் சட்டகங்கள் மீது புல்வெளி அமைக்கப் பட்டுள்ளது.

120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு மதிப்பு அளவிற்கான சொத்து இப்படி 100 பெரும் கோடீசு வரர்களிடம் இருக்கிறது.

இவ்வளவு பெரிய மாளிகையில் அம்பானி குடும்பம் வாழவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எவர்க்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த மாளிகைக்கு வாஸ்து சரியில்லை; அதில் பேய்கள் நடமாடுகின்றன; அது ‘அதிர்ஷ்டம்’ இல்லாதது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பன்னாட்டு நிதியத்தால் திணிக்கப்பட்ட புதிய தாராளமயக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், தற்போது இந்தியாவில் 30 கோடி நடுத்தர மக்கள் இருக்கின்றனர். இவர்களின் அருகிலேயே அவலமான இந்தியாவும் இருக்கிறது. வளங்களை இழந்து கிடக்கும் ஆறுகள், வறண்டுவிட்ட கிணறுகள், மொட்டையாகக் காட்சி தரும் மலைகள், கொள்ளை யடிக்கப்பட்ட காடுகள், கடன் சுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 2,50,000 உழவர்களின் ஆவிகள், ஒரு நாளைக்கு இருபது உருபாய்க்கும் குறைவாகவே செலவிடக் கூடிய வறிய நிலையில் வாழும் 80 கோடி மக்கள் என்று பட்டியல் நீள்கிறது.

முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 20 பில்லியன் டாலர் (1 பில்லியன் - 100 கோடி). ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் முகேஷ் அம்பானியிடம் உள்ளன. பெட்ரோலியப் பொருள்கள், எண்ணெய், இயற்கை எரிவளி, செயற்கை இழை, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், உணவுப் பொருள் சில்லறை வணிகம், கல்வி நிறுவனங்கள், உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஈடுபட்டுள்ள ரிலை யன்சு நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 47 பில்லியன் டாலர். அண்மையில், செய்திகள் மற்றும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் (சேனல்கள்) 27 கொண்டிருந்த இன்போடெல் நிறு வனத்தின் 95 விழுக்காட்டுப் பங்குகளை ரிலையன்சு வாங்கியது.

ரிலையன்சைப் போல இந்தியாவில் டாடா, ஜிண்டால், வேதாந்தா, மிட்டல், எஸ்ஸார், முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் ஆகியவை முதன்மையான முதலாளிய நிறுவனங்களாக உள்ளன. இந்நிறுவனங்களின் கிளைகள் அய்ரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளன. இந்நிறுவனங்களின் வலைப்பின்னல்கள் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் - வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளன. டாடா நிறுவனத்துக்கு 80 நாடுகளில் 100 கம்பெனிகள் உள்ளன. இந்தியாவில் மிகவும் பழமையான பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களுள் டாடா நிறுவனமும் ஒன்று. டாடா நிறுவனம் சுரங்கங்கள், எரிவாயு வயல்கள், எஃகு ஆலைகள், தொலைபேசி, கேபிள் டி.வி. மற்றும் அகண்ட அலைவரிசை வலைப்பின்னல், நகரியங்கள் அமைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறது. மகிழுந்துகள், சரக்குந்துகளைத் தயாரிக்கின்றது. பல தாஜ் ஓட்டல்கள் உள்ளன. தேயிலை நிறுவனம், புத்தக வெளியீட்டு நிறுவனம், நூல் விற்பனை மய்யங்கள், புகழ்பெற்ற டாடா உப்பு, லேக்மி அழகு சாதனங்கள் தயாரிப்பு முதலானவற்றையும் நடத்து கின்றது. ‘எங்களுடைய பொருள் இல்லாமல் நீங்கள் வாழ முடியாது’ என்று விளம்பரம் செய்யக் கூடிய அளவுக்கு டாடா நிறுவனம் எல்லாத் தொழில்களிலும் - துறைகளிலும் ஈடுபட்டுள்ளது.

எல்லாவற்றையும் தனியார் மயமாக்குவது என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உலகிலேயே பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்தது. ஆயினும் பழைய காலனி நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது போலவே, இந்தியாவின் கனிம வளங்கள் முதன்மையாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிலத்தடியின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் கனிமங்கள் கொள்ளைப் பணத்தை அள்ளிக்கொடுக் கின்றன. அதனால் இத்தொழிலில் டாடா, ஜிண்டால், எஸ்ஸார், ரிலையன்சு, ஸ்டெர்லைட் போன்ற முதலாளிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பணம் கொடுத்து வாங்காத ஒரு பொருளை விற்பது போன்ற சுரங்கத் தொழில் - வணிகனின் பெருங் கனவு நனவானது போன்றதல்லவா!

அடுத்ததாக, பெருமுதலாளியக் குழுமங்களுக்குப் பெருமளவிலான வருவாய், மனை-நில வணிகத்தி லிருந்து கிடைக்கிறது. உலகில் பல நாடுகளிலும் உள்ள ஊழல் அரசு ஊழியர்களின் உதவியால், வால் ஸ்டிரீட் தரகர்களும், வேளாண்-வணிகப் பெருங்குழுமங்களும், சீனாவின் பில்லியனர்களும் பல நாடுகளில் பெரும் பரப்பளவு கொண்ட நிலங் களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் அரசு பல இலட்சம் ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து, ‘பொது நன்மைக்காக’ என்று கூறி, தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்து வருகிறது. சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், அடிப்படையான கட்டு மானத் திட்டங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், மகிழுந்து செய்யும் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்கூடங்கள், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஆகியவற்றுக்காக முதலாளிகளுக்கு அரசு நிலங்களை அளிக்கிறது. (சொத்துரிமைச் சட்டம் ஏழைகளுக்குச் செல்லாது போலும்).

எப்பொழுதும் போல, தம் நிலங்களிலிருந்தும், வாழ்வாதாரங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் மக் களுக்கு மறுகுடியமர்த்தலும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று உறுதிமொழி மட்டும் அளிக்கப் படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் ஒட்டுறவே இல்லை என்பது இப்போது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 20 ஆண்டுக்கால ‘வளர்ச்சிக்கு’ப்பின், உழைக்கும் வயதி னருள் 60 விழுக்காட்டினர் சுய தொழில் செய்வோராக இருக்கின்றனர். நாள் / வார / மாதக் கூலிக்கு (சம்பளத் துக்கு) வேலை செய்யும் உழைப்பாளர்களில் 90 விழுக்காட்டினர் அமைப்புச்சாராத் தொழிலாளர்களாக - எத்தகைய பணிப்பாதுகாப்பும் உதவியும் அற்ற வர்களாக இருக்கின்றனர்.

சுதந்தர இந்தியாவில், 1980கள் வரையில், நக்சலைட்டுகள் இயக்கம் முதல் செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் முழுப்புரட்சி இயக்கம் வரை பல்வேறு இயக்கங்கள், பெருநிலப் பண்ணையார் களிடம் உள்ள நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துத் தர வேண்டும் என்று போராடின. ஆனால் இன்று, நிலத்தையோ அல்லது சொத்தையோ பிரித்தளிக்க வேண்டுமென்று யாரேனும் பேசினால், அது சனநாயகத்துக்கு எதிரானது என்றும், அவ்வாறு கூறுபவர் பைத்தியம் என்றும் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆயுதமேந்திக் கடுமையாகப் போராடும் இயக்கங்கள் கூட, மக்களிடம் குறைந்த அளவில் எஞ்சியுள்ள நிலத்தைப் பாதுகாப்பதற்காகவே போராடும் நிலை உள்ளது. நிலமற்ற பல இலட்சம் மக்கள் - இவர்களில் பெரும் பகுதியினர் தலித்துகள், பழங்குடியினர் - அவர்கள் காலங்காலமாக வாழ்ந்த சிற்றூர்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, தற்போது சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் எத்தகைய அடிப்படை வசதிகளுமில்லாத குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் இழிந்த-இரங்கத்தக்க வாழ்நிலை பற்றி எவரும் பேசுவதில்லை.

2005ஆம் ஆண்டு சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மாநில அரசுகள் பல முதலாளியக் குழுமங்களுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம், பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பாக்சைட், இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை அற்பத் தொகைக்கு விற்கப்பட்டன. தாராளமயச் சந்தையின் விதிப்படி, கனிமங்களின் மதிப்பு மீது 0.5 விழுக்காடு முதல் 7.00 விழுக்காடு வரையிலான உரிமைப் பங்கீட்டுத் தொகையை (ராயல்டி) அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதுகூட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம் பெறவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மஸ்தார் எனும் இடத்தில் டாடா நிறுவனம் எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாள்களுக்குப் பின், சல்வாஜுடும் என்கிற ஆயுதமேந்திய கண் காணிப்புப் படை உருவாக்கப்பட்டது. ‘காடுகளில் வாழும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே முன்வந்து உருவாக்கிய மக்கள் படை இது’ என்று அரசு விளக்கமளித்தது. கனிம வளம் உள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக அரசும் சுரங்க முதலாளியக் குழுமங்களும் கூட்டாக உருவாக்கிய ஆயுதப் படை தான் சல்வாஜுடும். மற்ற மாநிலங்களிலும் வெவ் வேறு பெயர்களில் இதுபோன்ற குண்டர் படைகளை அரசுகளும் முதலாளிகளும் இணைந்து உருவாக் கினர். எனவேதான் பிரதமர் மன்மோகன்சிங் ‘மாவோ யிஸ்டுகள்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்’ என்று அறிவித்தார். இது மாவோயிஸ்டுகள் மீதான அரசின் போர் அறிவிப்பே ஆகும்.

சல்வாஜுடும் காடுகளில் சிற்றூர்களில் வாழும் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக அவர்களைத் தாக்கியது. பலர் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப் பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இவ்வாறு வெளியேறும் பழங்குடியினருக்காக அரசு முகாம்களை அமைத்து உதவுவது போல் நடித்தது. 600 சிற்றூர் களிலிருந்து 50,000 மக்கள் அரசு முகாம்களில் அடைக்காலம் புகுந்தனர். 3,50,000 பேர் வேறு இடங் களுக்கு ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர், ‘காடுகளிலிருந்து வெளியேறாமல் உள்ள எல்லோரும் மாவோயிஸ்டுகளாகக் கருதப்படுவார்கள், என்று அறிவித்தார். இவ்வாறாக நவீன சுதந்தர இந்தியாவில் சில பகுதிகளில் மக்கள் தங்கள் நிலத்தை உழுது விதைப்பதுகூட பயங்கரவாதச் செயலாகக் கருதப்படு கிறது. சல்வாஜுடும் செய்த அட்டூழியங்களால் மக் களிடம் எதிர்ப்பும் சினமும் தீயாய் மூண்டது. அவர்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினர். பலர் மாவோயிஸ்டு படையில் சேர்ந்தனர். 2009ஆம் ஆண்டு ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் மீதும் மக்கள் மீதும் அரசுப் படைகள் தாக்குதல் தொடுத்தன. சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், மேற்குவங்களாம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலட்சம் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

அண்மையில் பஸ்தாரில் ஆசிரியராகப் பணி செய்த பழங்குடி இனப்பெண் சோனிசோரி என்பவரை மாவோயிஸ்டுகளின் கையாள் என்று கூறி காவல் துறை கைது செய்தது. மாவோயிஸ்டுகளுக்குக் கையா ளாக இருப்பதாக ஒத்துக்கொள்ளுமாறு சோனிசோரி யின் பிறப்பு உறுப்புக்குள் கற்கள் திணிக்கப்பட்டன. இந்த ஆசிரியப் பெண்மணி கைது செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. கொல்கத்தா மருத்துவமனை யில் மருத்துவ ஆய்வுக்காக அவர் சேர்க்கப்பட்டபோது, பிறப்பு உறுப்பில் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசார ணைக்கு வந்தபோது சோனிசோரியின் பிறப்பு உறுப்பிலிருந்து அகற்றப்பட்ட கற்கள் (பாலிதீன் பையில்) நீதிபதிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதன்பிறகும் சோனிசோரி சிறையில் இருக்கிறார். சோனிசோரியை விசாரணை செய்த காவல்துறை கண்காணிப்பாளர் அன்கிட் கார்க் என்பவருக்கு வீரச் செயல் புரிந்ததற்காக, குடியரசு நாளில், குடியரசுத் தலைவரின் கையால் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது.

மத்திய இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் கேடுகள், கொடுமைகள் பற்றிய செய்திகளை மக்களின் பேரெதிர்ப்பு மற்றும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் கள் வாயிலாகத்தான் நாம் அறிகிறோம். அரசுகள் இதுபற்றிய தகவல்களைத் தருவதில்லை. புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் இரகசிய ஆவ ணங்களாக உள்ளன. ஊடகங்களில் ஒரு சில மட்டுமே இதுபற்றிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிக் கின்றன. பெரும்பாலான அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இச்செய்திகளை வெளியிடுவதில்லை. ஏனெனில் இவ் ஊடகங்களின் வருவாயில் பெரும் பகுதி பெருமுதலாளியக் குழுமங்கள் அளிக்கும் விளம் பரங்கள் மூலம் கிடைக்கிறது. மேலும் முதலாளியக் குழுமங்களே ஊடகங்களின் உரிமையாளராக உள்ளன.

பெருமுதலாளியக் குழுமங்களின் கொடையாண்மை (Corporate Philanthropy):

மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, 1990களில் முதலாளியக் குழுமங்கள் அழகிப் போட்டிகளை நடத்தின. இப்போது, குறிப்பாக, சுரங்கத் தொழிலில் உள்ள பெருங்குழுமங்கள் இலக்கிய விழா, கலை விழா, திரைப்பட விழா என்கிற பெயரில் நிகழ்ச்சி களை நடத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன. பன்னெடுங்காலமாகக் காடுகளில் வாழ்ந்துவரும் கோண்ட் பழங்குடியினரை வெளியேற்றி பாக்சைட் கனிமத்தைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் வேதாந்தா நிறுவனம் திரைப்படக் கல்வி பயிலும் இளைஞர் களுக்கு ‘மகிழ்ச்சியை உருவாக்குவது’ என்ற தலைப்பில் திரைப்படப் போட்டி நடத்தியது. தற்காலக் கலைகள் குறித்த சிறப்பு இதழை ஜிண்டால் குழுமம் வெளி யிட்டது. அப்போது இந்தியாவில் உள்ள கலைஞர் களில் பலருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டியது. தெல்கா ‘நியூஸ்வீக்’ நடத்தும் சிந்தனைக் களம் நிகழ்ச்சியின் புரவலர் எஸ்ஸார் குழுமமும். டாடா நிறுவனமும், ரியோ டின்டோ நிறுவனமும் இணைந்து அண்மையில் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடத்தின. அறிவாளிகளை, கலைஞர்களை, எழுத்தாளர்களைத் தன் வலைக்குள் இழுத்துப்போட்டுத் தன் ஆதரவாளர் களாக மாற்றுவதே கார்ப்பரேட் கொடையாண்மையின் குறிக்கோள்.

கார்ப்பரேட்டுகளின் கவர்ச்சியான கொடையாண் மையின் வரலாறு 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் அமெரிக்காவில் அறக்கட்டளைகள் என்ற பெயரில் தொடங்கியது. கார்னிஜி எஃகு நிறுவனம் 1911இல் முதலாவது அறக்கட்டளைகளையை தொடங்கியது. 1914இல் ராக்பெல்லர் அறக்கட்டளை உருவாக்கப் பட்டது. ஜெ.டி. ராக்பெல்லர், ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனியை நிறுவியவர். இப்போது நம் ஊரில் டாடா, அம்பானி போல் அப்போது அமெரிக்காவில் கார்னிஜி, ராக்பெல்லர் நிறுவனங்கள் இருந்தன.

ஜெ.டி. ராக்பெல்லர்தான் அமெரிக்காவின் முதலாவது பில்லியனர்; உலகின் முதல்நிலைப் பணக்காரர். ஆப்பி ரகாம் லிங்கன்பால் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். குடிப்பழக்கம் இல்லாதவர். கடவுள் தான் தனக்கு இவ்வளவு பெருஞ்செல்வத்தைக் கொடுத்தார் என்று அழுத்தமாக நம்பியவர்.

பெரு முதலாளியக் குழுமங்கள் அமெரிக்காவில் அறக்கட்டளைகளை அமைக்கத் தொடங்கிய போதே, அவற்றின் நம்பகத்தன்மை, சட்ட ஏற்பு, பொறுப் பாண்மை இல்லாமை ஆகியவை குறித்துக் கடுமை யான விவாதம் நடந்தது. இந்நிறுவனங்களிடம் உபரி யாகப் பெருந் தொகை இருக்குமானால், தொழி லாளர்களின் ஊதியத்தை உயர்த்தித் தரட்டும் என்று மக்கள் கேட்டனர். (இவ்வாறு மக்கள் கேட்கும் நிலை அப்போது அமெரிக்காவில் இருந்தது). தங்கள் தொழிலைப் பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்குமான ஓர் உத்தியே அறக்கட்டளைகளை நிறுவுவதாகும். ஏனெனில் அறக்கட்டளையின் பணத்துக்கு வரிகட்ட வேண்டியதில்லை; எவ்வளவு தொகை வேண்டுமா னாலும் வைத்துக் கொள்ளலாம்; யாருக்கும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை; வெளிப்படைத் தன்மையற்றது. பொருளியல் வழியாகக் குவித்த செல்வத்தை அரசியல், சமூக, கலாச்சார மூலதனமாக மாற்றுவதற்கும், எதிரிகளைச் சமரச வழிக்குக் கொண்டு வருவதற்கும், பணத்தை ஆட்சி அதிகாரமாக மாற்றுவதற்கும் அறக்கட்டளைகள் சிறந்த வாயில் களாக உள்ளன. தங்களின் கொள்ளை இலாபத்தில் கடுகளவு பணத்தைச் செலவிட்டு உலகையே ஆள் வதற்கு இதைவிட வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது? கணினி பற்றி ஒன்றிரண்டு தொழில் நுட்பங்கள் மட்டுமே தனக்குத் தெரியும் என்று ஒத்துக் கொள்கிற பில்கேட்ஸ், அமெரிக்காவிற்கு மட்டுமல் லாமல், உலகிற்கே கல்வி, சுகாதாரம், வேளாண்மைக் கோட்பாடுகளை வகுக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருப்பது எப்படி? எல்லாம் அறக்கட்டளை செய்யும் மாயவித்தைதான்!

1920களில் அமெரிக்க முதலாளியத்துக்குக் கடல் கடந்த நாடுகளின் மூலப்பொருள்களும், சந்தையும் தேவைப்பட்டன. எனவே உலக அளவில் கார்ப் பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கான திட்டத்தை அறக்கட்டளைகள் தாம் வகுத்தன. 1924ஆம் ஆண்டு ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்ட ளையும் இணைந்து அயல்உறவுக்கான கவுன்சில் (Council on Foreign Relations - CFR) என்ற அமைப்பை உருவாக்கின. அமெரிக்காவின் பெருமுதலாளிய நிறுவனங்களின் நலன்களைப் பேணும் வகையில் அமெரிக்காவின் அயல்உறவுக் கொள்கைகளை வகுப்பது இதன் வேலை.

ஃபோர்டு அறக்கட்டளையும் இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்து வருகிறது. 1947ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.அய்.ஏ.வுக்கு அயல் உறவுக் கவுன்சில் பண உதவி செய்து வருகிறது. மேலும் இவை இரண்டும் இணைந்து செயல் படுகின்றன. பிறகு, அமெரிக்க அரசின் செயலாளர்கள் 22 பேரும் இக்கவுன்சிலில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அய்க்கிய நாடுகள் மன்றத்தை அமைக்க ஏற்படுத்தப்பட்ட செயற்குழுவில் அயல் உறவுக் கவுன்சில் உறுப்பினர்கள் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். ராக்பெல்லர் 8.5 மில்லியன் டாலர் நிதி அளித்து நியூயார்க்கில் வாங்கிக் கொடுத்த நிலத்தின் மீதுதான் அய்.நா. மன்றக் கட்டடம் இன்றும் அமைந்துள்ளது.

1946க்குப்பின் உலக வங்கியின் தலைவர் களாகப் பதவி வகித்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் அயல்உறவுக் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தவர்களே! ஆனால் உலகில் ஏழைகளின் தேவதூதர்களாக இவர்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

1950களில் ராக்பெல்லர் மற்றும் போர்டு அறக் கட்டளைகள், பல நாடுகளிலும் இருந்த அரசு சாரா அமைப்புகளுக்கும் (தொண்டு நிறுவனங்கள்) கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவி செய்தன. அமெரிக்க அரசின் ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கு அறக்கட்ட ளைகள் பாதை அமைத்துத் தந்தன. அப்போது அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இந்தோனேசியாவிலும், ஈரானிலும் முறைப்படித் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்துக் கொண்டிருந் தது. போர்டு அறக்கட்டளை அமெரிக்க மாதிரியிலான பொருளாதாரப் படிப்பை இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தியது. இதில் பயின்ற மாணவர் களுக்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பயங்கர வாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான பயிற்சியை அளித்தார்கள். 1965இல் இந்தோனசியாவில் சி.அய்.ஏ. ஆதரவுடன் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில், இம் மாணவர்கள் பங்கேற்றனர். சி.அய்.ஏ. ஜெனரல் சுகர்ட்டோவை ஆட்சியில் அமர்த்தியது. அதன்பின் சி.அய்.ஏ. அளித்தத் திட்டத்தின்படி பல இலட்சம் கம்யூனிஸ்டுகள் அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று ராக்பெல்லர் அறக்கட்டளையால் சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை பற்றிய படிப்பு ஏற்படுத்தப்பட்டது. சிலி நாட்டு இளைஞர்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்க் கப்பட்டனர். சி.அய்.ஏ. இவர்களுக்குப் பயிற்சி அளித்தது. சிலி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவர் அலண்டே அமெரிக்க முதலாளி களின் சுரங்கங்களை நாட்டுடமையாக்கினார். சோச லிசக் கொள்கையினரான அலண்டே ஆட்சியை 1973இல் சி.அய்.ஏ. கவிழ்த்தது. அலண்டே படு கொலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களும் இராணுவத் தினரும் துணை நின்றனர்.

1957இல் ராக்பெல்லர் அறக்கட்டளை இரமோன் மகசேசே விருதை ஆசிய நாட்டின் சமூகத் தலைவர் களுக்கு வழங்குவதற்கென ஏற்படுத்தியது. இரமோன் மகசேசே என்பவர் பிலப்பைன்சு நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் ஆசியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கான செயல்பாடுகளில் அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்டவர். 2008ஆம் ஆண்டு போர்டு அறக்கட்டளை, பல துறைகளில் சிறப்பாகப் பணிபுரிபவர்களுக்கென்று மகசேசே விருது வழங்கத் தொடங்கியது. இந்தியாவில் கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர் ஆகியோரிடையே மகசேசே விருது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி, சத்தியஜித்ரே, செயப்பிரகாஷ் நாராயணன், சிறந்த ஊடகவியலாளரான பி. சாய்நாத் முதலானோர்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மகசேசே பட்டத்தால் கிடைத்ததைவிட, இவர்கள் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய் துள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற விருதுகள், பட்டங்கள் வழங்கப்படுவதன் நோக்கம், எத்தகைய எதிர்ப்புகளை அனுமதிப்பது, எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதேயாகும். ஊழலுக்கு எதிராக அன்னா அசாரேவின் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களுள் மூவர் மகசேசே விருது பெற்ற வர்கள் - அன்னா அசாரே, அரவிந் கெஜிரிவால், கிரண்பேடி. அரவிந் கெஜ்ரிவால் பல தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார். அவற்றுள் ஒன்று போர்டு அறக்கட்டளையின் நிதி உதவியால் நடக்கிறது. கிரண்பேடியின் தொண்டு நிறுவனத்துக்கு கொகோ கோலாவும், லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும் நிதி வழங்குகின்றன. அதனால் அன்னா அசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பெருமுதலாளியக் குழு மங்களின் பகற்கொள்ளையைப் பற்றி வாய் திறப்ப தில்லை.

பன்னாட்டு நிதியம் ‘மறுகட்டமைப்பு’ என்ற பெயரால் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், கல்வி, சுகா தாரம், குழந்தைகள் நலம், பிற வளர்ச்சித் திட்டங் களுக்குச் செலவிடும் தொகையைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்தின. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தொண்டு நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தனியார் மயமாக்கப்படும் அனைத்தும் தொண்டு நிறுவனமயமாகின்றன (NGO-Isation). எல்லா தொண்டு நிறுவனங்களையும் மோசடியானவை என்று கூறிவிட முடியாது. பல இலட்சக்கணக்கில் உள்ள தொண்டு நிறுவனங்களில் சில மட்டுமே உண்மையான தொண்டு செய்கின்றன. ஆனால், கார்ப்பரேட்டுகளின் நிதி உதவி யுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிரான மக்கள் இயக்கங்களைக் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

நருமதை அணை எதிர்ப்பு இயக்கம், கூடங்குளத் தில் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவற்றை கார்ப்ரேட் ஊடகங்கள் வெட்கமின்றி, அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுகின்றன என்று கூறுகின்றன.

பெருந்தொகையை வைத்துக் கொண்டுள்ள பெரும் பாலான தொண்டு நிறுவனங்கள் புரட்சிகரமான இயக் கத்தை நடத்துவோரை அவற்றின் மாத ஊதியக்காரர் களாக மாற்றி விடுகின்றன. அறிவாளிகள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர் ஆகியோரை அவர்களின் புரட்சிகர நோக்கங்களிலிருந்து தடம்புரளச் செய்து, மனித உரிமைகள், பெண்ணுரிமை, சமூக முன் னேற்றம் என்கிற மென்மையான தளங்களில் செயல் படுமாறு மாற்றி விடுகின்றன.

முதலாளியம், தாராளமயம், தனியார்மயக் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற் றுள்ளது. ஆனாலும் முதலாளியம் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நெருக்கடியின் விளைவுகள் இன்னும் முழுமையாக வெளிப்பட வில்லை. மார்க்சு, “முதலாளியம் எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்குச் சவக்குழி தோண்டுவோரை - பாட்டாளிவர்க்கத்தைப் படைக்கிறது. முதலாளியத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் நடந்தே தீரும்” என்று கூறியிருக்கிறார்.

மார்க்சு கணித்தவாறு முதலாளியம் பாட்டாளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆலைகள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலைகள் பறிபோகின்றன. தொழிற்சங்கங்கள் செயலற்று உள்ளன. பாட்டாளிகள் ஒருவருக்கெதிராக ஒருவர் மோதவிடப்படுகிறார்கள். இந்தியாவில் முசுலீம்களுக்கு எதிராக இந்துக்கள், தலித்துகளுக்கு எதிராகப் பழங்குடியினர், ஒருநிலப் பகுதியினர்க்கு எதிராக வேறொரு நிலப்பகுதியினர் மோதவிடப்படு கின்றனர். ஆயினும் உலகம் முழுவதும் முதலாளி யத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன. சீனாவில் எண்ணற்ற வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தியாவில் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்த விடாமல் மக்கள் போராடி வருகின்றனர். முதலாளியம் மாற்று வழி என்ன என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது.

அம்பானி குடும்பத்தினர் அவர்களுடைய மாளி கைக்கு அன்தில்லா என்று ஏன் பெயரிட்டனர். 8ஆம் நூற்றாண்டில் இபேரியன் பகுதியில் (தற்போதுள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்) நடந்ததாக வழங்கப் படும் கதையில் வரும் ஒரு தீவின் பெயர் அன்தில்லா. முசுலீம்கள் ஹிஸ்பானியாவைக் கைப்பற்றியதும், எட்டு கிறித்துவப் பாதிரிகளும் அவர்களுடைய ஆட் களும் கப்பலில் ஏறி தப்பிச் சென்றனர். சில நாள்கள் கழித்து அன்தில்லா தீவில் இறங்கினர். காட்டு மிராண்டிகள் கைப்பற்றிய தங்கள் தாயகத்திற்கு இனிச் செல்வதில்லை என்றும் உறுதிபூண்டார். தமக்கான புதிய நாகரிகத்தைப் படைப்பது என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களுடைய படகுகளைத் தீயிட்டு எரித்தனர்.

அம்பானி குடும்பம் தங்கள் மாளிகைக்கு அன்தில்லா என்று பெயரிட்டிருப்பதால், தங்கள் தாய்நாட்டில் வறுமையிலும் அழுக்கேறிய - நாற்றமடிக்கும் சூழ்நிலையிலும் வாழும் மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு புதிய நாகரிக வாழ்வை உருவாக்கப் போகிறார்களா? அப்படியானால் இதுவே மிகவும் வெற்றிகரமான பிரிவினையாக அமையும். நடுத்தர வர்க்கத்தினரும் மேட்டுக்குடியினரும் விண் வெளிக்குச் சென்று வாழப் போகிறார்களா?

மும்பை நகரின் மீது இரவின் இருள் படர்கிறது. அன்தில்லா மாளிகையின் வாயிலுக்கு வெளியே சீருடையில் கையில் கைப்பேசிகளுடன் அம்மாளி கையின் காவலர்கள் காவலுக்கு நிற்கின்றனர். மாளிகையிலிருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் - பேய்களை விரட்டுவது போல எரிகின்றன. ஆனால் அக்கம்பக்கத்தில் வாழ்வோர், அன்தில்லா மாளிகையின் ஒளிவெள்ளம் தங்களின் இனிய இரவைக் களவாடுவதாகக் கூறுகின்றனர்.

நமக்குரிய இரவை மீண்டும் நாம் பெறுவதற்கு இதுவே தகுந்த வேளையாகும்.

(அவுட்லுக் 2012 மார்ச்சு 26 இதழில் அருந்ததிராய் எழுதிய நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். நன்றி. அவுட்லுக். தமிழாக்கம் : க. முகிலன்)

Pin It