இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைக் கடந்து சென்றால், அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கருதி நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக் காட்டிற்கும் மிகாதவண்ணம் குறைத்திட இயலும் என, பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்கீழ் 50 விழுக்காட்டிற்கும் மிகுதியாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தடுத்திட வகைபாடுகள் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. எனினும், அரசமைப்புச் சட்டக்கூறுகளுக்குச் சட்டவிளக்கம் அளிக்கும் வகையில் குறிப்பிட்டு எழுதப்படாத ஒன்று கண்டறியப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, தாழ்த்தப்பட்டோ ருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு. இக்கொள்கை நீதிமன்றம் நிர்ணயித்த 50 விழுக்காட்டு வரம்பைக் கடந்து செல்கிறது. எந்நேரமும், தமிழ்நாட்டின் இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் கூறப்பட இயலும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் முற்பட்ட வகுப் பினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு இடஒதுக்கீடு செய்வது என்பதை மனதிற் கொண்டே எழுதப்பட்டுள்ளதாக உணர முடிகிறது. கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழு, 2006ஆம் ஆண்டில் அளித்த அறிக்கையில், ஒரு படி மேலே சென்று, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிலையங்களில் செயல் படுத்தும் போது முற்பட்ட, வகுப்பினர் பாதிப்படையக்கூடும் எனக்கருதி அக்குழுவின் பரிந்துரைகளில் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்றும், முற்பட்ட வகுப்பினர் பாதிப்படையாத வகையில் கல்விக்கான மொத்த இடங்களை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1992ஆம் ஆண்டில் மண்டல் குழு வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னர், 1994 முதல் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 2008 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது; இருப்பினும் அது முழுமையாகக் கல்வி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படு கிறதா என்பது கேள்விக்குறியே. தென்னிந்தியாவில் தான் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்படைகிறார்கள் என்ற நோக்கத் தோடு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற வேண்டும். அவர்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற உணர்வுடன், கல்வியிலும் அரசுப் பணிகளிலும் 1980ஆம் ஆண்டு முதல் 68 விழுக்காடும், 1990ஆம் ஆண்டு முதல் 69 விழுக்காடும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. மத்திய அரசிலும், பிற மாநிலங்களிலும் பின்தங்கியவர்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டிராமல், பின்தங்கியவர்கள் எக்கேடுகெட்டாலென்ன என்பது போல் முற்பட்டவர்களுக்குச் சாதகமாகவே இடஒதுக் கீடுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வந்துள்ளதாக உணர முடிகிறது.

1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மாநிலத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காடு பிற்படுத்தப்பட் டோர் ஆவர். 13 விழுக்காடு முற்பட்ட வகுப்பினர் ஆவர். 67 விழுக்காடு கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 13 விழுக்காடு மட்டுமே உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 31 விழுக்காடு ‘பொதுப்போட்டி’ (Open Competition) இடங்களை முழுமையாகக் கைப்பற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, முற்பட்ட வகுப்பினருக்கு அரசமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளோ, சமவாய்ப்புகளோ மறுக்கப்பட்டுள்ளது என்று பேசுவதற்கே இடமில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டில், 31 விழுக்காடு பொதுப் போட்டி இடங்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே முற்பட்ட வகுப்பினர் போட்டியிடுகின்றனர் என்றால், அது பிற்படுத் தப்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்டோர் செய்த பிழையன்று. இயற்கையில், பொதுப்போட்டியிடங்கள் உயர்தகுதிவாய்ந்த (meritorious) முற்பட்ட வகுப்பினர் சிலராலும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சிலராலுமே நிரப்பப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு பொதுப்போட்டியிடங்கள் நிரப்பப் படாமல், அதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் முற்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுவிட்டனர் என்று நீதிமன்றம் வரை சென்று குமுறுகின்றனர்.

சமூக ரீதியாக முற்பட்ட வகுப்பினர் குடும்பக் கட்டுப்பாட்டைப் பல ஆண்டுகளுக்கும் முன்பே கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். நவீன காலத்திய கல்வியில் முற்பட்ட வகுப்பினர், அவர்களின் கலாச்சார மூலதனத்தால் (Cultural Capital) பின்தங்கிய வகுப்பினரைக் காட்டிலும், முன்னேற்றம் பெற்றுப் பல்வேறு உயர்கல்விகளில் தேர்ச்சியடைந்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. கலாச்சார மூலதனம் மற்றும் உயர்கல்வியில் முன்னேற்றம் ஆகியவற்றால், 1990களில் தொடங்கிய தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் (Liberalisation, Privatisation and Globalisation - LPG Policy) பயன்களை முற்பட்ட வகுப்பினர், பிறவகுப்பு களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக அனுபவித்து அயல்நாடுகளில் சென்று குடியேற்றம் பெற்றும் அல்லது உயர் வருமானப் பணிகளில் இணைந்தும் உள்ளனர். (இதனால், முற்பட்ட வகுப்பினருள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர் களே கிடையாது என்று ஒரே மூச்சில் கூற இயலாது). 

மேற்கூறிய காரணங்களால், 1983ஆம் ஆண்டில் 13 விழுக்காடு இருந்த முற்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை, தற்போது கணக்கெடுக்கப்பட்டால், 10 விழுக்காட்டிற்கும் மிகாமல் இருந்திடவே வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுக்கவியலாது. உடனடி வேலை வாய்ப்புகள், உயர் வருமானப் பணிகள், உயர் வாழ்க்கைத்தரம் வழங்கும் துறைகள் போன்றவைகளை மட்டுமே வெகுவாக விரும்பி முற்பட்ட வகுப்பினர் போட்டியிட்டு வருகின்றனர். குறிப்பிட்டுக் கூறவேண்டும் எனில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சீருடைப் பணியாளர் நியமனம், சார்நிலைப் பணிகளுக்கான நியமனம் போன்றவற்றிற்கு உயர்தகுதி படைத்த முற்பட்ட வகுப்பினர் விரும்பிப் போட்டியிடுவதேயில்லை. அவ்வாறு போட்டியிடும் வெகுசிலரும் பிற பணிகளுக்குத் தெரிவு செய்ய இயலாத உயர் தகுதியற்றவர்களாகவே உள்ளனர்.

இதேபோல, தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற தொழிற்கல்விச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை பொதுப் போட்டியிடங்களைக் காட்டிலும் வெகு குறைவாகவே இருக்கிறது. பொறியியல் கல்வியினைப் பொறுத்தவரை, இடங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், அக்கல்வி முடித்த குறுகிய காலத்தில் தரமான பணியில் விரைவில் சேர இயலும் என்பதாலும், தனியார் மயமாக்கத்தின் விளைவாக, விரும்பும் கல்வி நிறுவனத்தில் விரும்பிய பிரிவில் சேர மூலதனம் கொண்டுள்ளதாலும், பொறியியல் கல்விச் சேர்க்கையில் இடஒதுக்கீடு தொடர்பாக முற்பட்ட வகுப்பினர் எவ்விதச் சலனமும் செய்வதில்லை. ஆனால், மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் கிடைக்கவில்லையென, அரசமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட காலம் (1950) முதற்கொண்டே தமிழ்நாட்டின் முற்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அறை கூவல் விட்டு வருகின்றனர்.

31 விழுக்காடு என்ற பொதுப் போட்டி இடங்களை 50 விழுக்காடாக அதிகரித்து, இடஒதுக்கீட்டின் அளவை 69 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாகக் குறைத்தாலும் முற்பட்ட வகுப்பினரின் குறைவான மக்கள் தொகை, குறிப்பிட்ட துறைகளுக்கான இடங்களுக்கே முற்பட்ட வகுப்பினர் போட்டியிட விரும்புதல், தனியார் மயமாக்கல் கொள்கை முற்பட்ட வகுப்பினருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருத்தல், பொருளாதார ரீதியில் பெரும்பாலான முற்பட்ட வகுப்பினர் பாதுகாப்பான நிலையிலிருத்தல், அய்ம்பதாண்டிற்கும் மேலாக இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்ற பின்தங்கிய வகுப்புகளிலி ருந்து உயர் தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை உயர் வடைந்திருத்தல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் காரணங்களால் பெரும்பாலான இடங்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பின்தங்கிய வகுப்பினருக்கே கிடைக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

இத்தருணத்தில், பொதுப்போட்டி இடங்களில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இடம் பெறுவதை முற்பட்ட வகுப்பினருக்கு இடையூறாக எவரேனும் கருதினால், காலங் காலமாக ஒடுக்கப்பட்டிருந்த சமூகங்கள் பாதிப்படைந்தாலும் முற்பட்ட வகுப்பினருக்கு பாதிப்பேற்படக்கூடாது என்ற முறை யில், அரசமைப்புச் சட்டம் வழங்கிடாத இடஒதுக்கீட்டை அவ் வகுப்பினருக்கு வழங்கிடத் துணிவதற்கு ஒப்பானதாகும்.

முரண்பாடுகளைக் களைந்து எல்லாச் சமூகத்தினரும் ஒருமித்த வளர்ச்சி காண வேண்டும் எனில், தற்போதுள்ள பொதுப்போட்டி என்ற முறை ஒழிக்கப்பட்டுப் புதிதாக எடுக்கப் படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், பல்வேறு சமுதாயத்தினரின் சமூக-பொருளாதார மற்றும் கல்வித் தரம் குறித்த நிலையினைக் கருத்தில் கொண்டு, பல வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, அவ்வவ்வகுப்புகளின் மக்கள் தொகையின் விகிதாசாரத்தின்படி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதனால், அனைத்துச் சமூகத்தினரும் சமச்சீராகப் பயன்பெற இயலும். ஆனால், இவ்வாறு விகிதா சார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் பொருளாதார ரீதியில் அந்தந்த வகுப்புகளுக்குள் பின்னடைவு பெற்றவர்கள் பாதிப்படைவார்கள் என்றும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் என்றும் விவாதிக்க இயலும். இவ்வாறான, ஏற்றத்தாழ்வுகள் எழாதவண்ணம் அந்தந்த வகுப்புகளுக்குள் சமூக ரீதியாகப் பின்னடைந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கியோ, சிறப்பு நலத் திட்டங்கள் மூலம் பலனளித்தோ உயர வழிவகுக்கலாம். இம்முறையைச் செயல்முறைப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தரமான சமூகச் சான்று அல்லது சாதிச் சான்று பிறக்கும்போதே வழங் கப்பட வேண்டும். அவ்வப்பொழுது தேர்வுகளில் போட்டியிடும் போது அந்தந்த ஆண்டில் அக்குடிமகனின் பொருளாதார நிலையைக் காட்டும் சான்று வழங்கப்பட வேண்டும்.

இந்நாட்டில் பொதுப்போட்டி முறையால் சாதி-சமூக வேறுபாடுகள் மேலும் அதிகரித்திட வாய்ப்புகள் உள்ளனவே தவிரத் தளர்ந்திடும் வாய்ப்புகள் வெகு குறைவே. குறுகிய காலத்தில் மேற்கூறிய புதிய விகிதாசார இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட்டால் பொருளாதாரச் சமச்சீர்மையை வெகுவிரைவில் எட்ட இயலும். பல்வேறு வகுப்பினரிடையே யான ஒருமித்த பொருளாதார முன்னேற்றம் கலப்பு மணத்தை மேலும் ஊக்குவிக்கும். உச்சநீதிமன்றம் எதிர்பார்க்கும் சாதி-சமூக பேதமில்லாத சமுதாயம் விரைவில் அமைய வழி வகுக்கும்.

Pin It