அது அந்தப் பெருநகரத்தின் மிகப்பெரிய கடைவீதி. அவ்வீதியின் அகலமும் 100 அடிக்கு மேலாகவே இருக்கும். ஆனால் நடைபாதைகளிலும், சாலை ஓரங்களிலும் ‘ஆக்கிர மித்து’ இருக்கும் கடைகளினால் மக்கள் நடப்பதற்கு வாகனங்களுடன் போட்டியிட வேண்டி இருந்தது. வாகனங்களும் மக்களின் நடமாட்டத்தை அனுசரித்து மெதுவாகவே செல்ல வேண்டி இருந்தது. நடப்பவர்களும், வாகனங்களில் செல் பவர்களும், நடைபாதைக் கடைக்காரர்கள் மக்களுக்கு ஏற்படுத்தும் ‘தொல்லை’களைப் பற்றியும், அரசாங்கம் இவர் களை அப்புறப்படுத்தாமல் இருப்பது பற்றியும் மனதிற்குள் திட்டியவாறே சென்று கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அவ்வீதியில் உள்ள ஒரு கடையில் உள்ளே சென்று பொருள்களை வாங்க முயன்ற ஒரு வாடிக்கையாளர், மிகவும் சிரமப்பட்டே கடைக்குள் செல்ல வேண்டி நேர்ந்த்து. அப்படி உள்ளே சென்ற அவருக்கு, தான் என்ன வாங்க வந்தோம் என்ற நினைவும், மனநிலையும் வருவதற்கே ஒரு நிமிடம் ஆனது.

 

“நாம எப்பவாச்சிலும் ஒரு தடவை வர்றோம். எங்களுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே? நீங்க எப்படி சார் தினம் தினம் சமாளிக்கிறீங்க?” என்று அவர் கேட்டார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு வாடிக்கையாளர் “அது இவங்களுக்குப் பழகிப் போயிருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூற, “அட! நீங்க வேறே, நீங்க இவங்களாலே ஏற்பட்ற நெரிசல மட்டும் தான் பாக்குறீங்க. நமக்கோ இவங்களாலே வியாபாரமே கெடுது. கடைக்கு ஜனங்க வரமுடியாத மாதிரி வழியெ அடைச்சி இருந்துடறாங்க. நாம கடைக்கு வாடகை கொடுக்கிறோம். இவங் களுக்கு அதெல்லாம் இல்லே.

அதனாலே பாதி விலையிலே விக்கிறாங்க. அதனாலே வேறெ எங்க வியாபாரம் கெடுது” என்று கடை முதலாளி பொரித்து தள்ளினார். சிறிது நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி, வாங்குபவர்கள் வாங்குவதி லும், விற்பவர்கள் விற்பதிலும் ஈடுபட்டனர்.

ஆனால் அந்தக் கடையில் வேலை பார்க்கும் மருது மட்டும் நடைபாதைக் கடைகளால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றி மறக்க முடியாமல் இருந்தான். மருது தனது பத்தாவது வயதில் இக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். நடை பாதையில் கடைகளை வைப்பது சட்ட விரோதம் என்று நினைக்கும் முதலாளி, குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்வது சட்ட விரோதம் என்று நினைக்கவில்லை.

அப்படியே இருந்தாலும், வேறு வழியில்லாத மருதுவின் குடும்பத்திற்கு உதவி செய்யும் புண்ணியம், தனது சட்ட விரோத நடவடிக்கையைச் சமன் செய்துவிடும் என்று நினைத்தாரோ என்னவோ? பத்து வயதிலிருந்தே முதலாளியின் அரவணைப்பிலேயே வளர்ந்த மருதுவிற்கு முதலாளிக்குப் பிடிக்காதது அனைத்தும் தனக்கும் பிடிக்காது; பிடிக்கக் கூடாது என்ற மனநிலையே இருந்தது. மருது உண்மையாக உழைத்ததாலும், முதலாளிக்கு விசுவாசமாகவே இருந்த தாலும், குழந்தையாகவே இருந்ததாலும் முதலாளி தொழி லாளி உறவில் ஏற்படும் வேற்றுமைகள் துளிர்விடாமலேயே இருந்தன.

மருதுவிற்கு இப்பொழுது இருபத்து மூன்று வயது ஆகிறது. இவ்வயதில் வழக்கமாக ஏற்படும் திருமண ஆசை மருதுவிற்கும் ஏற்பட்டது. மருதுவின் தாயாரும் திருமணம் செய்துவிட வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால், அவன் திருமணம் செய்து கொண்டால், சம்பள உயர்வு கேட்பான் என்று எதிர்பார்த்த முதலாளி, முடிந்த மட்டும் அதைத் தள்ளிப் போட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மருதுவின் தாயாரிடம் அந்த வகையிலேயே அறிவுரைத்தார். தன் மகன் மருதுவைவிட இரண்டு ஆண்டுகள் மூத்தவன் என்பதைச் சுட்டிக்காட்டி, அவனுக்கே இன்னும் திருமணம் ஆகாத போது மருதுவிற்குத் திருமணம் செய்வதற்கு அவசரப்பட வேண்டாம் என்று கூறினார். இதைக் கேட்ட மருதுவின் மனதில் சிறிது வருத்தம் ஏற்பட்டாலும், அவன் முதலாளியின் மேல் வைத்திருந்த அளவற்ற மதிப்பும் மரியாதையும் முதலாளி சரியாகத்தான் சொல்கிறார் என நினைக்க வைத்தன.

முதலாளியின் நலனே தன் நலன் என நினைத்த மருது, நடைபாதைக் கடைகளால் ஏற்படும் தொல்லைகளை மிகவும் வெறுத்தான். நடைபாதைக் கடைக்காரர்களிடம் பொருட்களை வாங்குபவர்களைப் பார்த்தாலே அவனுக்கு எரிச்சலாக இருக்கும். அதுவும் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு சாப் பாடு, சிற்றுண்டிகளைவிற்கும் அன்னம்மாளைப் பார்க்கும் போது வெறுப்பின் உச்சிக்கே போய்விடுவான்.

அதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, சற்று அதிகமாக நடக்க வேண்டினாலும் பரவாயில்லை என்று சுற்றுப்பாதையில் செல்வதும் உண்டு. பிற தரமற்ற பொருட்களை நடைபாதைக் கடைகளில் இருந்து வாங்குபவர்கள் சாதாரண நட்டங்களையே அடைகின்றனர். ஆனால் அன்னம்மாளிடம் சுகாதாரமற்ற உணவை வாங்கிச் சாப்பிடுபவர்கள் உடல் நலத்தையும் அல்லவா கெடுத்துக் கொள்கிறார்கள்?

ஒரு நாள் மருது மனம் மகிழும் படியான நிகழ்வு நடந்தது. காவல்துறையினரின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் நடைபாதையையும், சாலையையும் ‘ஆக்கிர மித்துக் கொண்டு’ இருக்கும் கடைகளை அகற்றிக் கொண்டு இருந்தார்கள். கடைக்காரர்களின் அழுகையும் புலம்பலும் எவ்விதமான பயனையும் விளைவிக்கவில்லை. இக்காட்சி யை மருது தன் மனம் மகிழப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுடைய மனதில் அன்னம்மாவின் உணவுக் கடை அகற்றப்படுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற் பட்டது. ஆனால் கடையை விட்டு வெளியே போக முடியா தல்லவா? இருந்தாலும் மதிய உணவு இடைவேளையின் போது போய்ப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டான். அவ்வாறே சென்று, அந்த உணவுக் கடை அகற்றப்பட்டதைப் பார்த்து மனநிறைவும் கொண்டான்.

நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டபின் அந்தக் கடைவீதியே வெறிச்சோடிக் கிடந்தது. நடைபாதைக் கடைகள் இல்லை என்றால் “முறையான” கடைகளில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்ற நினைப்பிற்கு மாறாக, அக்கடை களில் வியாபாரம் குறைந்தது. சில நாள்கள் அப்படி இருக்கும் என்றும், அதன்பின் வியாபாரம் சூடு பிடிக்கும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் ஒரு வாரம் கழிந் தது. மீண்டும் நடைபாதையில் கடைகள்.

அன்னம்மாளின் உணவுக் கடையும் சேர்த்துத்தான் போடப்பட்டன. இதைக் கண்ட மருது எரிச்சல் அடைந்தான். இந்த நாட்டைத் திருத்தவே முடியாது என மனதில் கறுவிக் கொண்டான்.

மதிய உணவு இடைவேளையின் போது, நடைபாதைக் கடைகள் மீண்டும் தோன்றுவதை மருது சுற்றிப்பார்த்தான். அப்பொழுது நடைபாதைக் கடைக்காரர்களுக்கு ஆதரவாகக் கையில் உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த சிலரைப் பார்த்தான். அவர்களில் ஒருவனை எங்கோ பார்த்தது போல் இருந்தது. நினைவுபடுத்திப் பார்க்கையில் அவன் தன் இளவயது நண்பன் சாமுவேல் என்று தெரிந்தது. அவனைக் கண்டு பேச்சுக் கொடுத்ததும், சாமுவேலும் மருதுவை அடையாளம் கண்டு கொண்டான்.

சாமுவேல் தான் சார்ந் திருக்கும் பொதுவுடைமைக் கட்சியின் போராட்டத்தினால் நடைபாதைக் கடைக்காரர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினான். உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபாதைக் கடைகள் மீண்டும் திறக்கப் படுவதாகவும், இனி யாரும் இக்கடைகளை அகற்ற முயலக் கூடாது என்றும் தெரிவிக்கும் எச்சரிக்கை அறிவிப்புத் தாளை எல்லாக் கடைக்காரர்களும் வைத்துக் கொள்ளும்படி கூறி, ஒவ்வொருவருக்கும் அதன் நகலை, சாமுவேல் அளித்துக் கொண்டு இருந்தான்.

நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கடைகளை வைப்பது எப்படி சட்டப்படிச் சரியாகும்? மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் யாரோ சிலர் கடைகளை வைக்க உயர்நீதிமன்றம் எப்படி அனுமதிக்க முடியும்? இதைப் பெரிய வெற்றி என்று சாமுவேலும், அவன் சார்ந்திருக்கும் பொதுவுடைமைக் கட்சியினரும் கொண்டாடுகிறார்களே? மருதுவின் மனதைக் குடைந்து கொண்டிருந்த இவ்வினாக்களை, சாமுவேலிடம் வினவவும், அவனுடைய மனநிலையை நன்றாகப் புரிந்து கொண்டான்.

இவ்வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடை யளிக்க முடியாது என்றும், ஒரு விடுமுறை நாளில் தன்னை வந்து சந்திக்கும் படியும், அல்லது தான் வந்து சந்திப்ப தாகவும் கூறிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான் சாமுவேல்.

மருதுவிற்குக் கோபம் கோபமாக வந்தது. “நடப்பதற் காக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதைகளையும், வாக னங்கள் போவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாலைகளையும் ஆக்கிரமித்துக் கடைகள் வைப்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஆதரவாக எப்படித் தீர்ப்பளிக்க முடியும்? இந்த மாதிரியான ஒழுங் கின்மையால் தான் நாடே கெட்டுப் போகிறது. இதைப் பற்றி விளக்கம் கேட்டால் விடுமுறை நாளில் வர வேண்டுமாம்” என்றெல்லாம் மனதில் கறுவிக் கொண்டான். ஆனால் மறுபடியும் சாமுவேலைப் பார்க்க அவன் முயலவில்லை.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த மருதுவின் வாழ்க் கையில் இடி விழுந்தது போன்ற திடீர்த் திருப்பம் ஏற்பட்டது. அவனுடைய முதலாளியின் இரு மகன்களும் நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென முதலாளி மாரடைப்பால் காலமாகிவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு வந்த அவரது மகன்கள், தங்க ளால் கடையை நடத்த முடியாது என்று கூறி வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். கடை ஊழியர்கள் அனைவரும் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். மருதுவும் அதில் ஒருவன்.

வேலையை விட்டு நிறுத்துவதற்கு ஈடாக ஏதோ பணத்தை அவர்கள் கொடுக்கத் தான் செய்தனர். ஆனால் அது எந்த அளவில் பயனாக இருக்க முடியும்? வேலையை விட்டு விரட்டப்பட்ட ஊழியர்களில் சிலருக்கு வேறு கடைகளில் வேலை கிடைத்தது. சிலருக்குக் கிடைக்கவில்லை. வேலை கிடைக்காதவர்களின் பட்டியலில் மருது இருந்தான். வேலையைத் தேடி கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டு இருந்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்னம்மாள் உணவுக் கடையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சாமுவேலைப் பார்த்தான்.

நடைபாதைக் கடைகள், அவை அகற்றப்பட்ட நடவடிக்கை, மீண்டும் அக்கடைகள் அமைய நீதிமன்ற உத்தரவு, இதைப் பற்றி சாமுவேலிடம் பேசிய போது, அவன் சாவகாசமாக விளக்கம் சொல்வதாகக் கூறியது அனைத்தும் மருதுவின் நினைவிற்கு வந்தன.

ஆனால் அதைப்பற்றி விளக்கம் கேட்கும் மனநிலையில் அவன் இப்பொழுது இல்லை. ஆகவே அவனைப் பார்க்காதது போலவே சென்றுவிட எத்தனித்த போது, சாமுவேல் அவனைப் பார்த்து அழைத்துவிட்டான். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மருதுவிற்கு வேலை போனதையும், அவன் வேலை தேடிக் கொண்டு இருப்ப தையும் சாமுவேல் தெரிந்து கொண்டான். எங்கும் வேலை கிடைக்காத நிலையில் என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டு இருப்பதையும் தெரிந்து கொண்டான்.

நண்பனுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று நினைத்து “ஏன் மருது! நீ இந்த ஏரியா விலே ஏதாச்சிலும் ஒரு கடையை வச்சுக்கலாமே? எங்க யூனியன் சப்போர்ட் இருந்தா உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டங்க” என்று சாமுவேல் கேட்டவுடன் மருது விற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நடை பாதைக் கடைகள் இருக்கவே கூடாது என்ற கொள்கை உடைய அவனிடம், சாமுவேல் வேறொரு சூழ்நிலையில் கேட்டிருந்தால் கோபப்பட்டு இருப்பான். ஆனால் இப்பொழுது அவனால் கோபப்பட முடியவில்லை. ஆனால் வெறுப்பைக் காட்ட முடிந்தது. அது சட்ட விரோதமானது என்றும், அப் படிப்பட்ட சட்ட விரோதச் செயலைச் செய்யத் தன் மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறினான்.

சாமுவேல் மெதுவாகச் சிரித்தான். “நீ வேலை பார்த்த கடையிலே எல்லாம் சட்டப்படி நடந்துகிட்டு இருந்துச்சா?” என்று சாமுவேல் கேட்ட போது, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மருது விழித்தான். சாமுவேல் தொடர்ந்தான். “உங்க முதலாளி டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் எல்லாம் சரியாக் கட்டினாரா?” மருது மவுனம் சாதித்தான். “உங்க கடை இருந்துச்சே? அது கார்ப்பரேஷன் அப்ரூவல்படி கட்டுனதா?” மருதுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அவனை மேலும் சங்கடத்தில் தள்ள வேண்டாம் என்று நினைத்த சாமுவேல், “மருது! இப்ப நீ வாழறதுக்கான வழியப் பார்க்கணும். இந்த ப்ளாட்ஃபாரக் கடைங்க எல்லாம் நீ நெனக்கிற எழுதின சட்டத்துக்கு விரோதமா இருக்கலாம். ஆனா இயற்கைச் சட்டத்துக்கு, வாழ்க்கைச் சட்டத்துக்கு, மக்கள் சட்டத்துக்கு இது விரோதமானது இல்லே.” சாமுவேலின் வார்த்தைகள் மருதுவிற்குப் புரியவில்லை.

ஆனால் ஏதோ ஒரு சட்டத்தின்படி நடைபாதைக் கடைகள் சரிதான் என்று சொல்வதாக நினைத் தான். அன்றொரு நாள் நடைபாதைக் கடைகள் தொடர்ந்து இயங்குவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு எப்படிக் கிடைத்தது என்று சாமுவேல் விளக்கம் சொல்வதாகக் கூறியதை நினைவுபடுத்தினான்.

“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே மருது! இந்த ப்ளாட்ஃபாரக் கடைங்களை ரிமூவ் பண்ணி உடனே, இவங்களுக்கு மெடீரியல் சப்ளை பண்றவங்க இண்டஸ்ரீ எல்லாம் நின்னுடிச்சி. அந்த இண்டஸ்ரீக்காரங்களுக்கு மெடீரியல் சப்ளை பண்ற பெரிய இண்டஸ்ரீக்காரங்க, அதோட தாக்கம், தங்களெ பாதிக்கிறதுக்கு முன்னாலேயே பிரச்சினையைத் தீர்க்கணும்னு நெனச்சாங்க. அதோட இல்லாம இந்தக் களேபரம் நடக்குறப்போ, வீட்டு வேலெ பார்க்குற ஏழை ஜனங்க, வேலைக்குப் போக முடியலே.

அதனாலே நெறைய பணக்காரங்க வீடுகள்லே துணி துவைக்கிறதிலே இருந்து, பாத்திரம் தேய்க்கிற வேலை வரைக்கும் நடக்காம, வீடே நாறிப்போச்சு. அப்படி நாறப் போன வீடுகள்லே பல வக்கீலுங்க வீடுகளும், ஜட்ஜுங்க வீடுகளும் இருந்துச்சி. எங்க வேலை ரொம்ப சுளுவாச்சி. கடகளெ மறுபடியும் போடலாம்னு சொல்ல ஆர்டர் குடுத்துட்டாங்க” என்று சாமுவேல் சிரித்துக் கொண்டே கூறினான்.

“இருந்தாலும், கார்ப்பரேஷன் லாண்ட்லெ, மத்தவங்க கடை போடலாம்னு எப்படி ஆர்டர் கொடுக்க முடியும்? சட்டப் படி இது தப்பு இல்லே?” மருது மென்று விழுங்கிக் கொண்டே கேட்டான்.

“இதென்ன பிரம்மாதம்? இவங்களுக்கு வேறு இடத்திலே கடைங்க வைக்க இடம் குடுத்துட்டு, இங்கே இருந்து காலி பண்ண வைக்கணும்னு கண்டிஷன் போட்டா சட்டத்தைக் காப்பாத்தின மாதிரி ஆயிட்டுப் போகுது” என்று கூறிய சாமுவேலைப் பார்த்து, “அப்படி ஆல்டர்நேடிவ் சைட்டைக் காட்டிட்டா அங்கே போகணுமில்லே?” என்று மருது கேட்க, “அதுக்கு ரெண்டு மூணு ஜெனரேஷன் பிடிக்கும். அப்ப நானும் இருக்கமாட்டேன். நீயும் இருக்கமாட்டே. அதைப் பத்தி ஏன் கவலைப் படணும்?” என்று சாமுவேல் பதிலளித்தான்.

“அப்படீன்னா இந்தப் பிரச்சினைக்கு முடிவே இல்லியா?” என்று மருது கேட்க “எந்தப் பிரச்சினைக்கு?” என்று சாமுவேல் எதிர் வினாத் தொடுத்தான். “அதுதான் ப்ளாட்ஃபாரத்திலே ஜனங்க நடக்க முடியாமப் போறது; ரோட்லெ வண்டி ஓட்ட முடியாம போறது...” என்று மருது கேட்கவும், “அதெல்லாம் பெரிய விஷயம் மருது. நீ இப்பத்தான் இவங்க பிரச்சினங்களைப் புரிஞ்சிக்க ஆரம்பிச்சு இருக்கே. எங்க கட்சியிலே இதைப்பத்தி எல்லாம் கிளாஸ் எடுப்பாங்க. முடிஞ்சா வந்து கேளு. சோஷியலிசம் வந்தாத்தான் நம்மளெப் போன்ற ஜனங்களுக்கு விடிவு காலம்னு புரியும். இப்ப உனக்கு ஒரு வேலெ வேணும். அதுக்குத்தான் வழி சொல்றேன். இந்த ஏரியாவிலேயே ஒரு கடையைப் போட்டுக்கோ. நான் உனக்கு எல்லா உதவியும் செய்றேன்” என்று சாமுவேல் கூறினான்.

பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் களைத்துப் போயிருந்த மருது, சாமுவேலின் யோசனை தான் சரியான வழி என்று நினைக்க ஆரம்பித்தான். அவன் அப்படி நினைப்பதைக் குறிப்பால் உணர்ந்த சாமுவேல் “ரொம்ப யோசிக்காதே மருது! உடனே முடிவு பண்ணு. உனக்குப் பழக்கமான ரெடிமேட் டிரெஸ் கடையைக் கூடப் போட்டுக்கலாம்” என்று கூறினான்.

இவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அன்னம்மாள் “அது அவ்வளவு நல்லாப் போகாது தம்பி! என்னை மாதிரி சாப்பாட்டுக் கடையைப் போட்டுக்கோ. இந்த ஏரியாவிலேயே நான் மட்டும் தான் சாப்பாட்டுக் கடையை வச்சுருக்கேன். நெறைய ஜனங்க இந்த மாதிரி இன்னொரு கடை இருந்தா நல்ல துன்னு நெனைக்கிறாங்க” என்று யோசனை கூறினாள். இதைக் கேட்ட சாமுவேலும் அன்னம்மாளின் யோசனையை ஆமோதித்தான். எதைப் பார்த்தால் தனக்குப் பற்றி எரிந்து கொண்டு இருந்ததோ, அதே தொழிலில் இறங்குவதா என்று மருது யோசித்தான். அவன் யோசிப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்த அன்னம்மாள் “தம்பி! மத்த கடைங்களை விட இதுலே கொறஞ்ச மொதல் போதும். ரெடிமேட் டிரஸ்ஸுன்னா ரொம்ப மொதல் தேவையா இருக்கும்” என்று கூறியதைக் கேட்ட மருது, அவளைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்தான்.

முன்பெல்லாம் அவளைப் பற்றி நினைத்தாலே அவனுக்குப் பற்றி எரியும். ஆனால் இப்பொழுது கஷ்டத்தில் இருக்கும் போது கைதூக்கி விட வேண்டும் என்ற குணம் அவளிடம் இருப்பதைப் பார்த்த போது, பழைய வெறுப்பு மறைந்து போயிற்று. மெதுவாக “சாப்பாட்டுக் கடையை நடத்த எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே?” என்றான். “என்னா பொல்லாத எக்ஸ்பீரியன்சு. நம்ம சாமுவேல் தம்பியோட சிநேகிதன்னா நாம எல்லாம் ஹெல்ப் பண் ணாமப் போயிடுவோமா?” என்று அன்னம்மாள் கூறிய வுடன், இதுவரைக்கும் தன் வாழ்க்கையில் அனுபவித்து அறியாத தோழமை உணர்வை உணர்ந்தான். உடனே சாப்பாட்டுக் கடையை வைக்க ஒப்புக் கொண்டான்.

Pin It