தமிழின மேம்பாட்டிற்குத் தம்மாலான பணிகளைச் செய்வது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர் இயக்குநர் மணிவண்ணன்!

இயக்குநராகவும் நடிகராகவும் அடையாளம் காணப்பட்ட அவர், தோழர் மணிவண்ணனாகவே வாழ்வைத் தொடர்ந்தார்.

கோவை நகரைச் சேர்ந்த சூலூர் அவரை வழங்கியது. சூலூர் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்த வர் அவர் தந்தையார் இரா.சு.மணியம்.

பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர் முதலிய திராவிடர் இயக்கத் தலைவர்களும் நூல்களும் இளமையி லேயே அவருக்கு அறிமுகமாகக் குடும்பச்சூழல் காரண மானது. நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் சூலூரில் இயங்கி வந்த ‘நாவலர் மன்றம்’ மணிவண்ணன் இயங்கத் தொடங்கிய முதல் அமைப்பு!

பள்ளிப் பருவத்திலேயே மார்க்சிய நூல்களின் தோழமை கிடைத்தது. பள்ளி ஆசிரியர் சூ.மீ.காளிமுத்து, ‘செவ்வானம் புத்தக நிலையம்’ தோழர் அ.வள்ளுவராசன் வழியாகப் பெற்ற மார்க்சிய நூல்கள் இவர் வாசிப்புப் பரப்பை விரிவாக்கின.

தந்தையார் ஏற்றிய தி.மு.கழகக் கொடியும், மகன் மணிவண்ணன் ஏற்றிய பொதுவுடைமை இயக்கக் கொடியும் வீட்டின் கூரையில் இணைந்து பறந்த காலமும் வந்தது. பெரியாரிய, மார்க்சிய சிந்தனைகளை எளிய நடையில் விளக்கும் ஆற்றல் அவரிடம் இளமையிலேயே இருந்தது. சூலூரில் அவர் நடத்திய ‘அறைகூவல்’, ‘வைகறை’ இதழ் களில் அரும்பிய ஆற்றல், திரையுலகப் புகழுக்குப் பின் ‘நீதியின் போர்வாள்’ எனும் இதழை நடத்த வைத்தது.

தந்தையார் இரா.சு.மணியம் தம் மக்கள் சாதி கடந்த மனிதர்களாக வளரவேண்டும் என விரும்பினார். அதனால், மணிவண்ணனும் அவர் தமக்கை பரிமளமுத்துவும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயிலும் சூலூர் சி.எஸ்.அய். பள்ளியிலேயே தொடக்கக் கல்வியைப் பெற்றனர். தந்தை யாரின் திராவிடர் இயக்கத் தொடர்பு, சாதி அழுக்குப்படாத வராக அவரை வளர்த்தது.

திரையுலகக் கலைஞராகப் புகழ்பெற்றபின் மணிவண்ணன் செய்து கொண்டது சாதிமறுப்புத் திருமணம். மகள் சோதிக்குச் செய்ததும் சாதி மறுப்புத் திருமணம். மகன் இரகுவண்ண னுக்கும் அதேமுறையில் மணமுடிக்க விரும்பிய மணி வண்ணன் 15.6.2013ஆம் நாள் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டது, அறிவுலகிற்குப் பேரிழப்பு!

பாரதிராசாவின் உதவி இயக்குநராகப் பன்னிரண்டு திரைப்படங்களில் பணியாற்றித் தன் கலைத்திறனை வளர்த்துக் கொண்டவர் அவர்.

‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் பாரதிராசாவிடம் பணி யாற்றத் தொடங்கியவர் ‘காதல் ஓவியம்’ படம் வரை தொடர்ந் தார். இயக்குநராகும் வாய்ப்பைக் ‘கோபுரங்கள் சாய்வ தில்லை’ படம் கொடுத்தது.

‘நிழல்கள்’ படத்திற்குக்கான உரையாடல் எழுதும் வாய்ப்பை வழங்கிய பாரதிராசா, ‘கொடி பறக்குது’ படத்தில் நடிகராக்கினார்.

நடிப்பு வாய்ப்பு மிகுந்ததால், 400 படங்களுக்கு மேல் பன்முக நடிப்புத்திறனை அவர் வழங்க முடிந்தது.

பெரியாரியச் சிந்தனையாலும், மார்க்சியப் பயிற்சி யாலும் புடம் போடப்பட்ட மணிவண்ணன், தமிழ்த் தேசியப் போர்க்குணத்துடன் வாழ்ந்தார்.

நடிகவேள் எம்.ஆர்.இராதாவுக்குப்பின் பகுத்தறிவுக் கருத்துகளைத் திரையிலும் மேடையிலும் வெளிப்படுத்தும் ஆழமும் துணிவும் அவரிடம் இருந்தன.

‘சூலூர் வரலாறு’ நூல் வெளியீட்டுவிழா 17.1.1996 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருவிழாவாகச் சூலூரில் நிகழ்ந்தது. நூலை வெளியிட்டவர் தோழர் வே.முனைமுத்து. பாரதிராசா, மணிவண்ணன், புலமைப் பித்தன், அய்.ஏ.எஸ். அலுவலர் எஸ்.ஆர்.கருப்பண்ணன் முதலிய பலரும் அவ்விழாவில் பங்கேற்றனர்.

‘வாழும் பொரியார்’ என அவ்விழாவில் தோழர் வே.ஆனைமுத்து அவர்களை விளித்தார் மணிவண்ணன்! அந்த உணர்வு மாறாத மனநிலை இறுதிவரை அவரிடம் இருந்தது. தமிழினப் போராளியாக வாழ்ந்த அவர், பெரியா ரையும் மார்க்சையும் ஏந்துவதற்கே என தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டுவார். அத்துறையில் ஈடுபட்டு உழைக்கும் அறிவாளர்களின் நூல்களைத் தேடித்தேடிப் பயில்வார்.

புத்தகங்களுக்கு நடுவேதான் அவர் உயிர் பிறந்தது. இறுதி வணக்கம் செலுத்த வந்த திரையுலகினர் அவர் இருந்த அறையைப் பார்த்துவிட்டு “புத்தகங்களுக்கு நடுவே வாழ்ந்த ஒரே இயக்குநர்” எனச் சிலிர்த்துப் பேசினர்.

செல்பேசியில் சூலூர்த் தோழர்களோடு பேசும்போது, புத்தகங்களைப் பற்றியதாகவே அவர் பேச்சு இருக்கும். மாற்றுக் கருத்தினர் நூல்களையும் வாங்கிப் படிப்பதோடு, அதில் உள்ள சிறந்த கூறுகளையும் தயக்கமின்றி வெளிப் படுத்துவார்.

அறிவைத் தேடியவர் அவர்! தேடிய அறிவை மக் களுக்குப் பயன்படுத்தியவர் அவர்! மக்களைச் சார்ந்து உழைப்போருக்குத் தாம் தேடிய அறிவுச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் வழங்குபவராக வாழ்ந்தவர் மணிவண்ணன். அவர் வாழ்வு, நெடுங்காலத்திற்கு வழி காட்டும்!

- செந்தலை ந.கவுதமன், சூலூர், பாவேந்தர் பேரவை

Pin It