அய்.நா. மன்றத்தின் கல்வி, அறிவியல் கலாச்சார அமைப்பான ‘யுனஸ்கோ’, அண்மையில், மக்கள் தங்கள் வாழிடத்திலிருந்து வெளி இடங்களுக்கு இடம் பெயர்தலும், அதன் காரணங்கள் குறித்தும் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது. இந்திய தேசியம் உள் ளிட்ட எந்தத் தேசியம் பேசுவோரும், நாட்டை வல்லர சாக்க இளைஞர்களைக் கனவுகாணச் சொல்பவர் களும், ஊழலை ஒழிக்காமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டேன் என்கிற காந்திய வழித் தரகர்களும், நாளைய இந்தியப் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் போட்டியில் முட்டிக் கொண்டு நிற்பவர்களும், இனம், மொழி, மண்ணின் பெருமை பேசுகிற தலை மகன்களும் சற்றுப் பொறுமையுடன் நின்று இவ்வறிக்கையினைப் படித்துப் பார்த்து, இதற்கான தீர்வு என்னவென்று சொல்லட்டும். நாமும் இத்தகவல் குறித்து சிந்திப்போம். பேசுவோம்.

அறிக்கை சொல்வது என்ன? “தங்களது சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர். உள்நாட்டுப் போர், இன, மத, கலவரம்; அரசியல் உள்ளிட்ட காரணங்களினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நாடுகளின் முதல் பன்னிரெண்டு நாடுகளில் இந்தியா 11ஆம் இடத்தில் இருக்கிறது” என்கிறது. மதவெறி பிடித்த நாடு என்று அன்றாடம் படம் பிடித்து காட்டப்படுகிற பாகிஸ்தான் கூட 13ஆம் இடத்தில்தான் இருக்கிறது. இதற்கான காரணத்தை அறிக்கையாக அளித்திருக்கும் “சமூகவியல் ஆய்வு மையம்”, விவசாயம் குறைந்து வருவதும், கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட விருப்பமில்லாமல் இருப்பதும்தான். என்றும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கோ, பிற மாநிலங் களுக்கோ இடம்பெயர்வதால், தங்களது சாதிய அடை யாளங்கள் அழிந்துவிடும் என்று இளைய தலைமுறை நம்புகிறது என்று இவ்வாய்வு அறிக்கை கூறுகிறது.

யார் அந்த இளைய தலைமுறையினர்? தலித்துகள் தான். அவர்களென்று, ஒவ்வொரு இந்தியக் குடிமக னுக்கும் தெரியும். 2011 மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி தலித் மக்களின் எண்ணிக்கை 20 கோடிக்கு மேல் (20, 13, 78, 86). மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு பேர் தலித் மக்கள். இதில் 15 கோடிப் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். இடப்பெயர்வு இவர்களுக்குக் கட்டாயமாகிறது. நில மற்ற, உடைமையற்ற, கல்வியற்ற, சுகாதாரமற்ற மற்றும் அடக்குமுறை, சமூகச்சூழல் போன்ற காரணங்களி னால் வெளியூர்களுக்கு வெளியேறுதல் என்பது வாழ் வாதாரம் தேடி மட்டும் காரணமின்றி, சுயமரியா தையும் ஒரு காரணம்.

உள்நாட்டிலே இடம் பெயர்ந்தால் இதை இடப் பெயர்வு என்றும், வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்தால் புலம் பெயர்வு என்றும் சொல்கிறோம். உலக வழக்கில் வெளிநாட்டுப் புலம் பெயர்வில் இருப்பவர்களை நான்கு வகையினராகச் சொல்கிறார்கள். 1. நாடு கடத்தப்பட்ட வர்கள், 2. குடிபெயர்ந்தோர், 3. அகதிகள், 4. புகலிகள் அதாவது தற்காலிகமாகக் குடிபெயர்ந்தோர். நாகரிகம், தனியுடைமை, அரசு தோன்றிய காலத்திலிருந்தே மேற்சொன்ன நாக்கு வகையான இடம்பெயர்வுகள் நடக்க ஆரம்பித்திருக்கும். உள்நாட்டு இடம்பெயர்வில் ஆப்பிரிக்க நாடான சோமாலியா, காங்கோ, சூடான் போன்ற நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

யாருக்குத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ அதுவே நாடு கடத்தல். உலக வரலாற்றை உற்றுப்பார்த்தால் நாடு கடத்தல் இன்றுவரை அரசியல் காரணங்களாலேயே நடக் கின்றது. பெரும்பாலும் சமூகச் சிந்தனையாளர்கள் தங்களது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்போது அரசால் நாடு கடத்தப்படுகிறார்கள். தற்காலிகக் குடி பெயர்வு பொருளாதார மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கானது. முதல் உலகப்போருக்குப்பின் உலகம் முழுக்க இது நடந்து கொண்டிருக்கிறது. மலையாளிகள் கூட கடந்த அய்ம்பது ஆண்டுகளாக வளைகுடா நாடு களுக்குச் சென்ற வண்ணம் உள்ளது இவ்வகையைச் சார்ந்ததுதான்.

குடிபெயர்வு காலனியத்தோடு தொடர்புடையது. நாடு பிடிக்கும் நோயின் வெளிப்பாடு. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி இதில் முதன்மையான நாடுகள். பதினெட் டாம் நூற்றாண்டிலிருந்து இவர்களின் அதிகாரச் சுரண்டல்களின் எல்லை நீண்டுகொண்டே போனது. தனித்த இறையாண்மை, பொருளாதாரச் சுதந்தரத் துடன் வாழ்ந்த பல நாடுகள் இவர்களிடம் காலனி நாடுகளானதால், அடிமைப்பட்ட நாடுகளுக்குள் இடம் பெயர்தல் நடந்தது. கறுப்பு இனத்தைச் சேர்ந்த அல்ஜீ ரியத் தொழிலாளர் பிரான்சுக்கும், ஆப்பிரிக்கர், எகிப்தி யர், யூதர் மற்றும் இத்தாலியர்கள் அமெரிக்காவுக்கும், குடியேற்றம் செய்திருக்கிறார்கள். மேலும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழர் களைத் தங்களது காலனி நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக் குத் தொழிலாளர்களாகக் குடியேற்றம் செய்திருக்கிறார் கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வெள்ளைக் காரன் வெளியேறிய காலகட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட இடப்பெயர்வு என்பது இடப்பெயர்வு வரலாற்றில் மிகவும் கொடூரமானது; கொடுமையானது. பீகார், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலிருந்து நேர் எதிர்த்திசையை நோக்கி இடம்பெயர வைத்தது காலனியம், சமூகப் பிரிவினை, இந்துத்துவம் ஆகியவையே.

போர் செய்து நாடு பிடிக்கும் வெறி என்றைக்கு அரசுக்குத் தோன்றியதோ, அன்றைக்குத் தொடங்கியது தான் அகதிகளின் அத்தியாயம். அதேபோல் தங்களது தேவைகளுக்காகக் காலனிய நாடுகளுக்குள் அடிமைப் பட்ட மக்களை இடப்பெயர்வு செய்தது. இடப்பெயர்வுக் குள்ளான அம்மக்கள் அம்மண்ணிலே மூன்று நான்கு தலைமுறைகளாக நான்காம் தர மக்களாக நடத்தப் பட்டதன் விளைவு, கொஞ்சம், கொஞ்சமாக இப்போது அந்நாடுகள் அதன் எதிர் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதில் அதிகமான பாதிப்புக்குள்ளான மக்கள் கறுப்பின மக்களும் தமிழர்களும் தான். தமிழர்கள் என்றால் அதில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான்.

இரண்டாம் உலகப் போரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பிரான்சு இழந்தது. தனது நாட்டுப் புனரமைப்புக்காகவும், கடினமான வேலைகளைச் செய்வதற்கும், தங்களது ஆப்பிரிக்கக் காலனி நாடு களிலிருந்து ஆயிரக்கணக்கான கறுப்பர்களை ‘விருந்து தொழிலாளர்களாக’ வரவழைத்தது பிரான்சு. இதில் பெரும்பாலானவர்கள் அரபி மொழி பேசும் இசுலாமியர். தெற்கு அய்ரோப்பிய நாடுகளிலேயே அதிகமான இசுலாமியர் வாழும் நாடு (50 இலட்சத்திற்கு மேல்) பிரான்சுதான். இவர்களில் பெரும்பாலானோர் பெரு நகர் புறங்களில் குடியிருக்கின்றனர். தொடக்க காலங் களில் மிகவும் பயனுள்ளவர்களாகக் கருதப்பட்ட இம் மக்களைப் பின்னர் அவ்வரசானது கல்வி, சமூக முன் னேற்றங்களில் மிகவும் அலட்சிய மனப்பான்மையுடன் நடத்தியது.

நான்கு தலைமுறைக்குப் பிறகு, பிரெஞ்சு மொழியைப் புறக்கணித்து, அரபு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள், கறுப்பு இசுலாமியர் பிறருடன் கலந்து பழகு வதில்லை என்றும், சமூக விரோதச் செயல்களான வன்முறைகள், திருட்டுகள், போதை பொருள் கடத்தல், மத அடிப்படை வாதம் வளர்த்தல் என்ற அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது சுமத்தி, இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த ஆரம்பித்தனர். இன அடிப்படையிலான இந்த வெறுப்பு இவர்கள் மீது மட்டுமல்லாமல், இவர்களுக்கு முன்னதாக 15ஆம் நூற்றாண்டிலேயே குடியேற்றத்திற்குள்ளான யூதர் களுக்கெதிராகவும் நடத்தப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், குடியாட்சி, நீதி, மனித உரிமை, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற உயர்ந்த கொள் கைகளை உலகுக்குப் பறைசாற்றியவர்கள். புகழ் பெற்ற அரசியல் மேதைகளான வால்டேர், ரூசோ, மான்டெஸ்கு போன்றவர்களைப் பெற்றவர்கள் என்று பெருமைபடும் இந்நாடு, குடியேற்றம் பெற்ற கறுப்பு மனிதர்களிடம் இப்போது வேறு முகம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கறுப்பு மனிதர்களின் நிலை எப்படி மிகப் பெரிய கேள்விக்குள்ளாகி நிற்கிறதோ; அதே நிலைதான் திராவிடர் களாகிய தமிழர்களின் நிலையும், பல நாடுகளில் அடிமைகளாக, கூலிகளாகக் கடல் கடந்து கூட்டம் கூட்ட மாக ஓட்டிச் bச்லலப்பட்ட இவ்வினத்தார் எல்லா நிலை யிலும் வஞ்சிக்கப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற போர்வையால் போர்த்தப்பட்டிருக்கிறார்கள். இதிலே கூட வர்ணாசிரமம் எட்டிப் பார்க்கிறது. அயல் நாடுகளுக்கு இரண்டு வகைகளில் தமிழர் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். வணிகம் தொடர்பாகப் போன வர்கள் எல்லாம் இந்து மதத்தின் மேல்சாதியைச் சேர்ந்த வர்கள். உழைப்பதற்காக அடிமைகளாகவும், கூலி களாகவும் போனவர்கள் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் கள். முதலில் வணிகத் தமிழர்கள், அடுத்ததாகக் கூலித் தமிழர்களின் புலம்பெயர்வுகள். இது பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை தொடர்கிறது. “தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்று ஒரு நாடில்லை” என்று நம் மேடைப்பேச்சு வீரத்தலைவர் கள் மேடைகளில் முழங்குவதை நாம் பார்திருப்போம். எந்த நாட்டில் தமிழன் வாழ்ந்தாலும் இரண்டு வகை யில்தான் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பர். ஒன்று ப. சிதம்பரம் வகை வட்டிக்கடை தமிழர்கள், மற்றொன்று கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் தமிழர்கள். இருவரும் புலம்பெயர்ந்து போனது ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்குமா? இருவருமே ஒரே மாதிரியான தமிழர்களா?

தமிழர்கள் வாழும் நாடுகள் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் நாடுகள் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ரீயூனியன், கரீபிய நாடு, சிங்கப்பூர், சீசெலசு, தாய்லாந்து, தென்ஆப்பிரிக்கா, பிஜி, மியான் மார், மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகள் ஆகும். மேற்குறிப்பிட்ட நாடுகள் எல்லாம் பிரிட்டிஷ்காரர், பிரெஞ்சுக்காரர்களின் காலனி நாடுகள். இவர்களின் நாடுகளுக்குத் தேவையான காப்பி, தேயிலை, சர்க்கரை, பருத்தி நூல் போன்றவைகளை அந்தந்தக் காலனி நாடுகளின் இயற்கை வளங்களான அடர்ந்த காடுகளை அழித்துவிட்டு அங்கு அவற்றை உற்பத்தியாக்கத் தொடங்கினர். மற்றும் அந்தந்த நாடுகளில் தங்களின் வணிகத் தேவைக்காக உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தத் தொடங்கினர். அதற்குத்தான் அவர்களுக்கு இரண்டு வகை தமிழர்கள் தேவைப்பட்டனர். முதல் வகையினர் தங்களுக்கு முகவர்களாகச் செயல்பட்ட பார்ப்பனர்களும், செட்டிமார்களும், முதலியார்களு மான மேல்சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வாழ்க்கைத்தரம் வெள்ளையர்களின் வாழ்க்கைத் தரத்தை ஒட்டியது என்றால் மிகையல்ல. இரண்டாவது வகை தமிழர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வர்கள், தொழிலாளிகள், அடிமைகள், கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே கடல்கடந்து வணிகம் செய்யத் தொடங்கிவிட்டனர் தமிழர்கள். இந்த வணிகத்திற்காகப் புலம்பெயர்ந்த இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை செல்வச் செழிப்பில் வாழ் கின்றனர். அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றத னால் ஆட்சியில் கூடப் பங்கு பெறுகின்றனர். காட்டிக் கொடுக்கும் கங்காணி வேலை பார்க்கும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த இந்தத் தமிழர்கள் இன்றும் தன் நிலையைத் தக்க வைத்திருக்கின்றனர். ஆனால் பத் தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளைக் காரர்களால் கூட்டிச்செல்லப்பட்ட தமிழர்கள், காப்பி, தேயிலை, கரும்பு, பாக்குத் தோட்டங்களில் பண்ணை அடிமை வேலை பார்ப்பவர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களா கவும், சமையல் வேலை பார்ப்பவர்களாகவும், உள் கட்டமைப்பு வசதிகளுக்கான சாலை, சாக்கடை, பாலங்கள், இருப்புப்பாதைகள், அரசு கட்டடங்கள் கட்டு வது எல்லாம் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் இவர்கள் செய்ததுதான். ஆனால் இன்றளவும் இவர்கள் நல்ல நிலையில் இல்லை.

அடிமைத்தனமான, கொடுந்துயரமான இன்னல்களையெல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்டு இம்மக்கள் ஏன் அங்குச் சென்றார்கள்?

தமிழகத்தின் 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கராட்சி முடிவுக்கு வருகிறது. தென் தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 72 பாளையக்காரர்களுடன் வெள்ளையர்களான ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மற்றும் ஆர்க்காட்டு நவாப்புகளும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டேயிருந்தனர். இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியது. தொடர்ந்து நிலவிய பஞ்சம், வறுமை, சாதிக்கொடுமை, வட்டிக்கடைக்காரர்களின் பொருளாதாரச் சுரண்டல், கிராமப்புறங்களில் போதிய தொழில் வளர்ச்சியின்மை, நிலப்பிரபுக்களின் கொடுமை, கொத்தடிமைத்தனம், அடிமை முறை போன்றவற்றால் தாங்க முடியாமல் தத்தளித்தனர். சொந்த மண்ணில் இவ்வளவு கொடு மைகள் அனுபவிப்பதை விட, ஒன்று கூண்டோடு சாக வேண்டும். இல்லையேல் எங்காவது ஓடவேண்டும். அப்போதுதான் புலம்பெயர்கிறார்கள். குறிப்பாகத் தஞ்சை, திருச்சி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் வேறுநாட்டுக்குக் குடிபெயர்ந்தனர்.

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து கிழக்கு அய்ரோப்பாவிலிருந்து ஏராளமானோர் வெளியேறி யதைத் தொடர்ந்தே “அகதிகளை” ஒரு சட்டபூர்வ மான குழுவாக ஐ.நா. அறிவித்தது. அகதிகள் யார், அகதிகளின் நிலை போன்றவைகளை வரையறை செய்து, 1951ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் ஒரு உடன்பாடு செய்கிறது. இது “சொந்த நாட்டில் இடம் பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரண மாக நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் தான் அகதிகள்” என வரையறை செய்கிறது. அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) என்ற அமைப்பு அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்கிறது. இந்நிறுவனம் 2006இல் உலகிலுள்ள மொத்த மக்கள் தொகையை 8.4 பில்லியன் என்று கணக்கிட்டுள்ளது. உலகின் மொத்த அகதிகள் தொகை 12,019,700 என்றும், உள்நாட்டிலேயே அகதி யானோர் உட்படப் போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34,000,000 எனவும் இக்குழு மதிப்பிடு கிறது. 2005ஆம் ஆண்டு நிலையின்படி மிக அதிகமான அகதிகள் யார் என்றால் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், மியான்மார், சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த வர்கள்தான்.

அய்.நா. அகதிகள் ஆணையர் உருவாக்கிய “உலகில் எந்த நாட்டில் அகதிகள் உருவானாலும் அவர்களுடைய துயர்துடைக்கும் பணியில் இவ்வாணையம் முழுமையாக ஈடுபடும்” என்ற பட்டயத்தில், 125 நாடு கள் கையெழுத்திட்டன. ஆனால் இந்தியாவும், இலங் கையும் இதில் கையெழுத்திடவில்லை. ஆனால் இதே அய்.நா. வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப் பிரகடனம் என்ன சொல்கிறது என்றால், ‘சொந்த நாட்டில் வாழ இயலாத நிலையில் அனனிய நாடுகளில் அடைக்கம் புகுவது சட்டரீதியாக ஏற்கத்தக்கது’. இது இந்தியாவுக்கும் தெரியும். இலங்கைக்கும் தெரியும். இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மேற்சொன்னபடி முறையாக இந்தியா நடத்து வது உலகநாடுகள் அறிந்ததுதான்.

ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அய்.நா. சொன் னால் என்ன? யார் சொன்னால் என்ன? எதுவும் கண்டுகொள்ளப்போவதில்லை. இந்தியாவுக்குத் தமிழர் கள் என்றாலே எட்டிக்காய்தான். அதுவும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்றால் குமட்டிக் கொண்டு வரும். அதை விட ஈழத்தமிழ் அகதிகள் என்றால் நடுக்கடலிலே செத்தொழிய வேண்டும் என நினைப்பார்கள். இந்த அகதிகள் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் அடைக் கலம் என்றால், இந்திய ஆளும் வர்க்கமான பார்ப் பனர்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஒடுக்கப் பட்ட தமிழனையும், அவர்கள் ஒரு பெரியாராகத்தான் பார்ப்பார்கள்; பார்க்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலை என்ற சொத்தைக் காரணம் கிடைத்ததிலிருந்து, கீழ்ச்சாதி தமிழர்கள் என்றவுடன் அவர்களுக்குக் ‘கிலி’ ஏற்பட்டு, அவர்களைப் பழிவாங்க நினைக்கின்றனர்.

நாம் தமிழர்கள், நாம் திராவிடர்கள், நாம் இந்தச் சாதியர்கள், நாம் இந்தியர்கள். இந்த முழக்கங்கள் எல்லாம் அடையாள அரசியல் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத, அதிகாரப் பசிகொண்ட வர்களுக்குக் கைவந்த கலை. இப்படிப்பட்ட மோ(ச)டிக் காரர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது எல்லாம் நீலிக்கண்ணீரே. கண்ணெதிரில் சேரிக்குள் முடக்கப்பட்டு, வல்லரசு என்று வர்ணிக்கப் படும் நாட்டில் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கால் பாகத் தமிழர்களை, கண்டும் காணாமல், இரசித்துக் கொண்டிருக்கும் இவர்கள்; ‘முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்களே தமிழர்கள்!’ என்று ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. இந்தியச் சூழலில் எந்த ஒரு மனிதனையும், உயர்த்துவதும் தாழ்த்துவதும், வர்க்கமும் வருணமும் தானே தவிர வேறு ஒரு வெங்காயமும் இல்லை. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சரி! தாய் மண்ணோடு வாழ்ந்தாலும் சரி! நிலைமை ஒன்றுதான்.

Pin It